Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 20

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

துங்கா நதி தீரத்தில்... - 20

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

Published:Updated:

ஸ்ரீசச்சிதானந்த சிவ அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள், காலடிக்கு விஜயம் செய்து, அங்கே ஸ்ரீசங்கர பகவத்பாதருக்கு ஆலயம் நிர்மாணிக்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு,ஸ்ரீமடத்தில் இருந்து வெளியில் வந்தபோது, சிருங்கேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோருமே அங்கே வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோருக்குமே ஸ்ரீஸ்வாமிகளை விட்டுப் பிரிவதில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. 

தங்களின் வருத்தத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்ததுடன், அவர் தங்களைவிட்டுப் பிரியக்கூடாது என்று உரிமையுடன் கோபித்துக் கொள்ளவும் செய்தார்கள். அவர்களின் கள்ளம் இல்லாத அன்பில் மனம் நெகிழ்ந்து போன ஸ்வாமிகள், தாம் காலடிக்கு விஜயம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறி, சமாதானம் செய்ததுடன், தங்கப் பல்லக்கில் இருந்த தெய்வ மூர்த்தங்களுடன் சிருங்கேரி கிராமத்தை பிரதட்சிணமாக வலம் வந்து, தமது அருள்திறனால் கிராமத்துக்குப் பாதுகாப்பு ரக்ஷையை ஏற்படுத்தினார். பின்னர், ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிரத்யேகமாக விஜயம் செய்து அனுக்கிரஹிக்கவும் செய்தார். இதனால் ஸ்வாமிகள் புறப்படுவதற்கு மாலை 6 மணிக்கும் மேல் ஆகிவிட்டது.

துங்கா நதி தீரத்தில்... - 20

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று இரவு, ஹுலுகாரு என்ற கிராமத்தில், சென்ன கேசவராயர் என்பவரின் இல்லத்தில் தங்கியிருந்த ஸ்வாமிகள், மறுநாள் ரிஷ்யசிருங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த கிக்க என்ற இடத்துக்குப் புறப்பட்டபோது, சென்ன கேசவராயர், தம்முடைய எளிய காணிக்கையாக 2,000 ரூபாயைக் கொடுத்து, காலடி க்ஷேத்திரத்தில் ஸ்வாமிகள் நிர்மாணிக்க உத்தேசித்து இருந்த சங்கர பகவத்பாதரின் ஆலயப் பணிக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு விண்ணப்பித்துக் கொண்டார். தாம் மேற்கொண்டிருந்த திருப்பணிக்கு அதை சுபசகுனமாக எண்ணிச் சந்தோஷம் கொண்ட ஸ்வாமிகள், சென்ன கேசவராயருக்கு மந்திராட்சதைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார்.

பின்னர் ரிஷ்யசிருங்கர் ஆசிரமத்துக்குச் சென்ற ஸ்வாமிகள் ரிஷ்யசிருங்கேஸ் வரரை தம் திருக்கரங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். மறுநாள், நரஸிம்ம பர்வதத்தை அடைந்தார். அவ்விடத்தில் சில நாட்கள் ஆத்ம தியானத்தில் ஈடுபட்ட ஸ்வாமிகள், மைசூர் மகாராஜா தம்மை தரிசிக்க சிருங்கேரிக்கு வர இருக்கிறார் என்று தகவல் கிடைக்கவே, நரஸிம்ம பர்வதத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் சிருங்கேரிக்கு வருகை புரிந்தார்.  

துங்கா நதி தீரத்தில்... - 20

ஸ்வாமிகளை தரிசிக்க, மகாராஜா தன்னுடைய தாயார், மனைவி மற்றும் சகோதரருடன் சிருங்கேரிக்கு வந்தார். முறைப்படி அவர்களை வரவேற்ற ஸ்வாமிகள், அவர்களுக்கு சிவ பஞ்சாக்ஷரி மந்திரத்தை உபதேசித்து, ஒரு ஸ்ரீசக்ர யந்த்ரத்தையும் சிவலிங்கத்தையும் கொடுத்து அருள்புரிந்தார். ஸ்வாமிகள் காலடிக்குக் கிளம்பும்போது, தன்னுடைய சமஸ்தானத்துக்கும் விஜயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மகாராஜா. ஸ்வாமிகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, மகாராஜா புறப்படுவதற்கு உத்தரவு கொடுத்தார்.

பிறகு, மகா சிவராத்திரி வைபவத்தையும் சிருங்கேரியிலேயே நடத்திய ஸ்வாமிகள், கடூர், ஹாஸன், தும்கூர் வழியாக பெங்களூரை அடைந்தார். முதலில், மைசூர் மந்திராலோசனை சபையிலும், பின்னர் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் திவானாக இருந்து காலடி ஸ்தலம் விஷயமாக உபகாரம் செய்தவருமான மாதவராவ் அப்போது மைசூர் திவானாகவே இருந்தபடியால், ஸ்வாமிகளை ராஜமரியாதைகளுடன் வரவேற்று உபசரித்தார்.

ஸ்வாமிகளை நமஸ்கரித்த மாதவராவ், வேத வித்யா பிரசாரத்துக்காக பெங்களூரில் ஒரு மடம் அமைக்கவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது

துங்கா நதி தீரத்தில்... - 20

ஸ்வாமி களை தரிசிக்க வந்த ஜட்ஜ் ராமசந்திர ஐயர் தன்னுடைய பெரிய பங்களாவையோ, அது வசதிப்படாமல் புதிய இடத்தில் கட்டுவதாக இருந்தால், அதற்கு தன் பங்காக 20 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்துக் கொண்டார். முதலில்ஸ்ரீசங்கர பகவத்பாதருக்குக் கோயில் கட்டிவிட்டு, அதன்பிறகு மடம் கட்டலாம்என்று தெரிவித்த ஸ்வாமிகள், அது தொடர்பான பொறுப்பை மாதவராவிடமே ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

பிடதி, குளோஸ்பேட்டை, சென்னப்பட்டணம் வழியாக மைசூரை அடைந்த ஸ்வாமிகளை ராஜ மரியாதைகளுடன் வரவேற்ற மகாராஜா, அவருக்குக் கிரமப்படி பாதபூஜையும் செய்து வழிபட்டார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த ஸ்வாமிகள், பின்னர் பல ஊர்களின் வழியாக நெரூருக்கு சென்ற ஸ்வாமிகள், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதன் பிறகு, கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியார் முன்பே கேட்டுக்கொண்டபடி, கும்பாபிஷேக நேரத்தில் திருவானைக்கா திருத்தலத்துக்கு விஜயம் செய்த ஸ்வாமிகள், ஜம்புகேஸ்வரரையும் அன்னை அகிலாண்டேஸ் வரியையும் தரிசனம் செய்து, செட்டியாருடைய திருப்பணிகளைப் பாராட்டி அனுக்கிரஹம் செய்தார்கள். அப்போது, சாரதா தேவாலய திருப்பணிகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக சிதம்பரம் செட்டியாரும், அவருடைய மகன் ராமசுவாமி செட்டியாரும் தெரிவிக்க, ஸ்வாமி களும் மிகவும் சந்தோஷம் கொண்டவராக அவர் களுக்குச் சம்மதம் கொடுத்து அனுக்கிரஹம் செய்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்ட ஸ்வாமிகள், தாண்டவராயன் பிள்ளை என்ற பக்தரின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக அய்யம்பாளையம் வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் சங்கர பகவத்பாதரின் விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்வித்தார்கள். ஸ்வாமிகளுக்கு அப்போது 50 வயது பூர்த்தியாகி இருந்தபடியால், அதன் நினைவாக, தாண்டவராயன் பிள்ளை கேட்டுக் கொண்டபடி, ஸ்வாமிகளின் அனுமதியுடன் ஸ்ரீசங்கர பகவத்பாதரின் விக்கிரஹத்துக்கு வலப்புறத்தில் ஸ்ரீஸ்வாமிகளின் விக்கிரஹமும் வடிக்கப்பட்டு, ஸ்ரீகண்ட சாஸ்திரிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பின்னர் கானாடுகாத்தான், காரைக்குடி, தேவகோட்டை, வழியாக ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு விஜயம் செய்தார். அவரை முத்துராமலிங்க ராஜராஜேசுவர சேதுபதி உரிய மரியாதைகளுடன் வரவேற்றார். தொடர்ந்து, பாம்பன் வழியாக ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் விஜயம் செய்தார் ஸ்வாமிகள். அதன் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழியாக புண்ணிய நதியாகப் போற்றப்பெறும் தாமிரபரணி நதி தீரத்தை அடைந்தார்.பாபநாச க்ஷேத்திரத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்தார். அங்கிருந்து புறப்பட்ட ஸ்வாமிகள், திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் அமைந்திருந்த தோவாழக்கோட்டை கிராமத்தில் பிரவேசித்தார். அவரின் விஜயம் குறித்து முன்பே அறிந்திருந்த திருவனந்தபுரம் மகாராஜா, ஸ்வாமிகளை ராஜ மரியாதைகளுடன் வரவேற்றார்.

தொடர்ந்து, கன்னியாகுமரிக்குச் சென்று மூன்று நாட்கள் பகவதி அம்மனை தரிசித்த ஸ்வாமிகள், 26.12.1909 அன்று காலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். மகாராஜாவும் மந்திரிப் பிரதானிகளும் ஸ்வாமிகளை உரிய மரியாதைகளுடன் வரவேற்றார்கள். அரண்மனையில் சில நாட்கள் தங்கி இருந்த ஸ்வாமிகள், அரச குடும்பத்தினருக்கு அனுக்கிரஹம் செய்துவிட்டு, தமது யாத்திரையைத் தொடர்ந்தார். வர்க்கலை வழியாக, காலடி கிராமத்துக்கு அருகில் இருந்த பெரும்பாவூர் என்ற கிராமத்துக்கு வந்து தங்கினார்.

ஸ்வாமிகள் அங்கிருந்தபோது, ஒருநாள் அவரின் கனவில் வைதவ்ய (விதவை) கோலத் தில் தோன்றிய பெண்மணி ஒருவர், தான் மரத்தடியிலேயே இருப்பதாகவும், ஸ்வாமிகளை அழைப்பதற்கே தாம் வந்ததாகவும் தெரிவித்தார்.

வைதவ்ய கோலத்தில் தம்முடைய கனவில் தோன்றிய பெண்மணி யார் என்று ஸ்வாமி களுக்குத் தெரியவில்லை.

அந்தப் பெண்மணி யார் என்று தெரிய வந்தபோது...    

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism