மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

கோதை பிறந்த ஊர்!கே.சுந்தரம்

பெரிய பெருமாள்.  

பெரிய ஆழ்வார்.

பெரிய கோபுரம்.

பெரிய தேர்.

இப்படிப் பல பெருமைகளைப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழும் ஊர். அங்கேபெரியாழ்வார் வாழ்ந்த திருமாளிகையைக் கற்பனையில் கொண்டு வாருங்கள். அதோ, கழுத்திலே துளசி மணி மாலை, காதிலே குண்டலங்கள். நெற்றியிலும் மார்பிலும் அழகாய் அமைந்த திருச்சின்னங்கள். தோளில் பூக்குடலை, நாவிலோ பக்தி வெள்ளத்தில் கற்கண்டாய்க் கரைந்து வரும் பாசுரங்கள்.

தன்னை ஒரு தாயாகப் பாவித்துக் கொண்டு கண்ணனுக்காக அம்புலியைக் கூப்பிடுவார். அமுது ஊட்டுவார்; தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார்.  இப்படிக் கண்ணனைக் கற்பனையில் தாயன்போடு நோக்கிய பெரியாழ்வார், கண்ணனுடைய பாடல்களையும், லீலைகளையும், கதைகளையும், திருத்துழாய்ச் செடியின் கீழ் தெய்வ மலராய்த் தோன்றிய பூமகள் கோதைக்குச் சொல்லித் தந்தார்.

தந்தை பெரியாழ்வாருக்குக் கண்ணன் குழந்தையாய், பால கோபாலனாய்,வெண்ணெய் திருடும் விளையாட்டுப் பிள்ளையாய் காட்சியளிக்கிறான். ஆனால், மகள் கோதையின் கனவிலோ, வசீகர வேணு கோபாலனாக அற்புதமாய்க் குழலிசைத்து, காதலிக்கு 'அல்லல் விளைத்த’ காதலனாகத் தோன்றுகிறான்.அவனுக்கென்று தந்தை தொடுத்து வைத்த பூமாலையை எடுத்து, தான் அணிந்து கண்ணாடியில் அழகு பார்க்கிறாள் கோதை.

அருட்களஞ்சியம்

இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்க்கும் பெரியாழ்வார் திடுக்கிடுகிறார்; மகளைக் கடிந்துகொள்கிறார். புதியதொரு மாலை தொடுத்து ஆண்டவனுக்குச் சேர்ப்பிக்கிறார். ஆனால், ஆண்டவனோ, 'கோதை சூடிய மாலைதான் எனக்கு வேண்டும்’ என்று திருவாய் மலர்ந்தருள, மெய்சிலிர்த்துப் போன பெரியாழ்வார், 'என்னைப் பக்தியால் ஆண்டு கொண்ட இவள் ஆண்டாள்...’ என்று பெயர் சூட்டுகிறார்.

ஆயர்பாடி பற்றியும், ஆயர்பாடியில் ஆய்ச்சியர் உத்தம கணவனை அடைய பாவைநோன்பினை நோற்ற கதையையும், செவிவழியாகக் கேட்ட ஆண்டாள், மனத் தினாலேயே ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடி ஆக்கினாள்; தன்னையும் தோழிகளையும் இடையர்குலப் பெண்களாகப் பாவித்தாள்; வடபத்ர சாயி கோயிலை, கண்ணன் வளர்ந்த நந்தகோபனின் இல்லமாக்கினாள். வடபத்ரசாயி பெருமாளை, கண்ணனாகப் பார்த்தாள்.

மார்கழித் திங்களில், மதி நிறைந்த நன்னாளில் தோழியரோடு நீராடப் புறப்படுகிறாள் ஆண்டாள். இப்படி மானசீகமாகக் கண்ணனோடு கூடியிருந்து மனம் குளிர, அவள் திருவாயிலிருந்து முப்பதுபாசுரங்கள் புறப்படுகின்றன; அத்தனையும் உபநிஷத்துகளின் சாரமாய், முத்துக் குவிய லாய், பொன்சரமாய் வந்து பொழிகின்றன. ஆண்டாள் தன் ஆர்வப் பெருக்கைத் திருவாய்மொழி மூலமாகவும் கொட்டித் தீர்க்கிறாள்.

கண்ணன் மீது காதல் கொண்டு பித்தாய்த்திரியும் தன் மகளைக் கண்டு பெருமை கொள்ளும் பெரியாழ்வார், அவனுடைய கோயிலுக்குள் சென்றால், இவள் அங்கேயே தங்கிவிடுவாளோ என்று கூடவேகவலையும் கொள்கிறாராம். அதன் விளைவாக, வடபத்ரசாயி கோயில் காவலாளிகளிடம், 'ஆண்டாள்கோவிலுக்குள் வந்தால் விடாதீர்கள்’ என்று உத்தரவு போடுகிறாராம்!

'நம் பெருமான் ஆண்டாளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?’ என்று ஒரு நாள் அவர் கவலை கொள்ள, திருவரங்கனோ ஆழ்வாரின் கனவில், ஆண்டாளை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வரும்படி பணித்தார்.

'மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.’

என்று தான் கண்ட கனவுப்படியே அரங்கனோடு சேர்ந்தாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள்.

இவ்வரிய காட்சியைக் கண்டு களிப்புற்ற ஆழ்வாரை அருகில் அழைத்த அரங்கன், 'நீரும் நமக்கு மாமனாராய்விட்டீர்’ என்று கூறி, தமது தீர்த்தம், பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியவற்றைத் தந்து, 'வில்லிபுத்தூருறைவானுக்கே தொண்டு பூண்டிரும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆழ்வாரும் வடபத்ரசாயி பெருமானுக்குத் தொடர்ந்து மாலை சூட்டித் தொண்டாற்றியதோடு, இக்கோயிலின் முதல் தர்மகர்த்தாவாகவும் விளங்கினார்.

அருட்களஞ்சியம்

அவரின் வழிமுறை, வாழையடி வாழை யாக வந்த அந்த திருத்தொண்டு இன்னும் தொடர்ந்து நடந்து வர, திருப்பாவை தனுர் மாதத்தில் ஒலிக்க... சில்லென்று வீசுகின்ற பனிக்காற்று... வாரி வீசுகின்ற குளிரைப் பொருட்படுத்தாது, பெரியவரும் பெண்டிரு மாய்... சிறுவர்களும், குழந்தைகளுமாய்... 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்...’ திருப்பாவையை பக்திப் பரவசத்தோடு பாடியபடி பக்தர் திருக்கூட்டம் அருள்மிகு நாச்சியார் திருக்கோயிலுக்குள் நுழைகிறது.

தற்போது ஸ்ரீஆண்டாள் உறையும் நாச்சியார் திருக்கோயில் என்றழைக்கப்படும் இடமே, முன்பு பெரியாழ்வாரின் திருமாளி கையாக இருந்ததென்பதை அங்கே அறிகிறோம்.

இங்கே அமைந்துள்ள திருமஞ்சனக் குறட்டின் அருகே ஓர் அதிசயம்! கீழ்ப்புறம் சற்று எட்டிப் பார்த்தால் ஒரு கிணறு! அவ்வளவு ஆழத்திலும், தெள்ளிய நீரில் நம் பிம்பங்களைக் கண்ணாடி போல் காட்டுகிறது கிணற்றுத் தண்ணீர் நம் கற்பனை பின்னே பாய்கிறது  ஆண்டவனுக்குத் தொடுத்த மாலையைச் சூடிக்கொண்டு ஒருவேளை இந்தக் கண்ணாடிக் கிணற்றில்தான் ஆண்டாள் தன்னை அழகு பார்த்துக் கொண்டாளோ?

'டாண்... டாண்’ என்று கோயில் மணி கம்பீரமாக முழங்குகிறது. கோஷ்டி சேவா காலத்துக்காகப் பக்தர்கள் இரண்டு வரிசையாக நிற்கிறார்கள். முன்னால் பதின்மூன்று தீர்த்தக்காரர்கள். ஆண்டாளை யும் ஸ்ரீரங்கமன்னாரையும் துயிலிலிருந்து எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாட அரையர் காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஆழ்வார் வழியில் வந்த வேதபிரான் பட்டர்கள்.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் பத்து பாசுரங்களையும், திருப்பள்ளி எழுச்சியையும் அரையர் பாட, தூப, தீபாராதனைகளுடன் திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது. அதே நேரத்தில் பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவையும் நடக்கிறது. ஸாத்வி கமான ஆகாரம் என்பதற்காகப் பூசணிக்காய் மசியலும், பாசிப்பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது. திரை விலகு கிறது. உள்ளே கர்ப்பக்கிரகத்தில், திருமுகத்தில் தெய்விகப் பேரொளியும், புன்முறுவலும், சாய்ந்த கொண்டையும், கையில் தாங்கிய கிளியும், சர்வாபரண அலங்காரத்துடன் நிற்கும் ஸ்ரீஆண்டாளின் திவ்ய தோற்றம் தெவிட்டாத தெள்ளமுதாய், கண்களுக்கு விருந்தாய் உள்ளத்தைத் தித்திக்கச் செய்கிறது.

அருட்களஞ்சியம்

பக்கத்தில் மணவாளனாகச் செங்கோல் தாங்கி, கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீரங்கமன்னார். அவருக்குப் பக்கத்திலோ, தான் அடைந்த ஸ்தானத்துக்காகப் பெருமிதம் கொண்டு அஞ்சலி செய்தவண்ணம் கருடாழ்வார் காட்சி தருகிறார்.

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தின பத்து நாள் பகல்பத்து உற்சவம் திருமொழித் திருநாள் என்றும், பின்னால் வரும் பத்து நாட்களை ராப்பத்து திருவாய்மொழித் திருநாள் உற்சவம் என்றும் கொண்டாடுவது வழக்கம். இந்த ராப்பத்து உற்சவத்தில், ஸ்ரீஆண்டாளின் எண்ணெய்க் காப்பு உற்சவம் பார்க்க வேண்டிய ஒன்று. ஆண்டாள் கண்ணனாய், கள்ளழகராய், சுந்தரராஜனாய் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோலம் பூண்டு திருமுக்குளத்துக்குத் தனியாகச் சென்று தினமும் எண்ணெய்க் காப்பிட்டு, பகவானை அடைய நோன்பு இருக்கிற இந்த உற்ஸவ தரிசனம் கண்ணுக்கு விருந்தாக அமையும். மார்கழியில் நோன்பு நோற்று, பங்குனியில் ஸ்ரீரங்கமன்னாரின் கரம் பிடிக்கிறாள் ஆண்டாள்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் சூடிய மாலைக்கு இன்றைக்கும் மகத்துவம் இருக்கிறது. திருப்பதியில் வேங்கடவனின் திருக்கல்யாணத்தின் போதும் சரி, சித்திரை மாதம் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பும் சரி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீஆண்டாள் சூடிய மாலை அங்கே போய் வேங்கடவரும், கள்ளழகரும் சூடிய பிறகுதான் விழாவே தொடருமாம். அத்தனை சிறப்பு ஆண்டாள் சூடிக் கொடுக்கும் அந்தப் பூ மாலைக்கு!

பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணைகின்ற அந்த தத்துவத்தை எடுத்துக் காட்டத்தானே பூதேவி ஸ்ரீஆண்டாளாக அவதாரம் செய்தாள்? அதோடு உபநிஷத்சாரத்தை எளிய தமிழில் பாசுரங்களாகத் தந்து அவற்றை மார்கழி மாதத்தில் பாடி 'என்னைப் போல இறைவனுடன் ஐக்கியமாகுங்கள்’ என்றல்லவோ திருப்பாவையை நமக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறாள் அந்த தெய்விகப் பாவை!

கே.சுந்தரம்

19.12.1982 ஆனந்த விகடன் இதழில் இருந்து.

ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு

61 வகை மூலிகைகள் அடங்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகுமாம். நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் போன்றவை எல்லாம் இதில் சேரும். ஏழு படி எண்ணெய் விட்டு இரண்டு பேர், நாற்பது நாட்கள் காய்ச்சுகிறார்கள். இதில் நாலு படி தைலம் கிடைக்குமாம். இந்தத்

தைலத்தைதான் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களும் ஆண்டாளுக்குத் தேய்த்து விடுவார்கள். ஆண்டாள் தடவிக்கொண்ட இந்த தைலப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தருகிறார்கள். இந்தத் தைலம் ஒரு சர்வரோக நிவாரணி என்று நம்புகிறார்கள்.