மூன்று வகை தீட்சைகளைச் சொல்லி, அதைத் தொடர்ந்து, ''பிறவித் துன்பத்தை நீக்கும் வழி ஒன்று சொல்வேன். அதன்படி நடந்தால், உன் பிறவித் துயர் நீங்கும்' என சீடனிடம் குருநாதர் தெரிவித்ததைப் பார்த்தோம், அல்லவா! 

மனிதனும் தெய்வமாகலாம்! - 6

ஒருவருக்கு ஒரு பெரிய பிரச்னை. 10 லட்சம் ரூபாய் பணம் உடனடியாகத் தேவை. யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அப்போது, 'உனக்குத் தேவையான பணத்தைத் தந்து, உன் துயரத்தை நான் தீர்க்கிறேன். கவலையை விடு!’ என்று யாரேனும் சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோல, பிறவித் துயர் தீர வழிதெரியாமல் தவிக்கும்போது, 'நான் வழிகாட்டுகிறேன், வா!’ என்று குருநாதர் சொன்னால், மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டதும், சீடனுக்கு அளவில்லாத ஆனந்தம் உண்டானது. தலையில் தீப்பிடித்தவன், குளிர்ச்சியான நீர் நிறைந்த குளத்தில் விழுந்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட நிலையில் திளைத்துப் போனான் சீடன். அவனுடைய உடலும் உள்ளமும் குளிர்ந்தன.  

அவன் குருநாதரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ''தாங்கள் சொன்ன தைக் கேட்டால் துயரம் தீரும் என்று சொன்னீர்கள். சொன்னதைக் கேட்காத வனாக இருந்தாலும், அடிமையான என்னைத் தாங்கள் கருணையால் தடுத்து ஆட்கொள்ளக் கூடாதா? பிறவித் துயரைப் போக்கும் வழி ஒன்று இருக்கிறது என்றீர்களே... அது என்ன என்பதைக் காட்டி, அடியேனைக் காப்பாற்ற வேண்டும்'' என வேண்டினான்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 6

சீடனின் இந்த வார்த்தைகளைப் பார்த்தால், தனது துயரத்தை சீக்கிரம் போக்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் தெரியும். அதே வேளையில், பிறவித் துயரைப் போக்கும் வழியை குருநாதரால் மட்டுமே காண்பிக்க முடியும் என்ற தகவலும் அழுத்தமாகப் பதியும்.

சீடன் கேட்ட பிறகு, குருநாதர் சும்மா இருப்பாரா? அவனுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார். 'ஏன்? அவர் மறுக்கக்கூடாதா?’ என்று கேட்டால், மறுக்கக்கூடாது என்பதுதான் பதில். எவன் ஒருவன் தனக்குத் தெரிந்த வித்தையை, கல்வியை தகுதி வாய்ந்த ஒருவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல் இறக்கிறானோ, அவன் பிரம்ம ராட்சஸனாகப் பிறப்பான் என எச்சரிக்கிறது சாஸ்திரம். ஆகவே, நல்லதை நாம் தெரிந்துகொண்டு, அனுபவத்திலும் கொண்டு வரவேண்டும். அதை அடுத்தவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம்... தகுதி வாய்ந்தவருக்குத்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஐ.ஏ.எஸ். பாடம் நடத்தக் கூடாது; ஐ.ஏ.எஸ். படிப்பவருக்கு இரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்தக் கூடாது. அதன்படி, தகுதி வாய்ந்த சீடன் கேட்டதும், உபதேசம் செய்யத் தொடங்கினார் குருநாதர்.

அடங்கிய விருத்தியான் என்று

அறிந்தபின் செறிந்த மண்ணின்

குடம்பையுள் புழுமுன் ஊதும்

குளவியின் கொள்கை போலத்

தொடங்கிய குருவும் ஆன்ம

சொரூபமே மருவ வேண்டி

உடம்பினுள் சீவனைப் பார்த்து

உபதேசம் ஓதுவாரே

(கைவல்லிய நவநீதம்-11)

அதாவது... சீடன் ஆசைகளை அடக்கிவிட்டான் என்பதை குருநாதர் அறிந்துகொண்டார். சீடன் ஆத்ம ஸ்வரூபத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அந்த ஜீவனுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மேலும் மேலும் அதிகரிக்கும் ஆசைகளை அப்படியே அடக்கியவன் சீடன் என்பதை அறிந்த பிறகே அவனுக்கு உபதேசம் செய்கிறார் குரு. 'அடங்கிய விருத்தியான் என்று அறிந்த பின்’.

இப்படி அறிந்த பின், உபதேசம் செய்தார் எனக் கூறினாலும், அறிந்ததற்கும் உபதேசம் செய்த தற்கும் நடுவில், குளவிக்கதை ஒன்று இருக்கிறது. ஆனால், அது ஓர் உதாரணமாகத்தான் இடம் பெற்றிருக்கிறது.

ஒரு சிறிய மண் கூட்டுக்குள் புழு ஒன்றை வைத்துவிட்டு, குளவி அதைக் கொட்டும்.வலி தாங்காத புழு, அதன்பின் குளவியின் ரீங்காரத் தைக் கேட்டாலே, குளவியைத்தான் நினைக்கும். இப்படியே நாளாக நாளாக, புழு குளவியாக மாறிவிடும். அதுபோல, குருநாதர் சீடன் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அவனுக்கு ஞான உபதேசம் செய்து, அவனையும் தன் நிலைக்கு உயர்த்துவார். இதை, 'மண்ணின் குடம்பையுள் புழு முன் ஊதும் குளவியின் கொள்கைபோல’ எனும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

இந்தக் குளவிக் கதையை, பாடலின் அடுத்த வரியான 'உடம்பினுள் சீவனைப் பார்த்து உபதேசம் ஓதுவாரே’ என்பதுடன் சேர்த்துப் பார்க்கும்போது, இன்னொரு அற்புதமான தகவ லும் நமக்குக் கிடைக்கும்.

குளவி, கூட்டுக்குள் இருக்கும் புழுவை முன்னிட்டுத்தான் ரீங்காரம் இடுமே தவிர, கூட்டை முன்னிட்டு அல்ல. அதுபோல, குருநாதரும்உடம்புக்குள் இருக்கும் சீவனை முன்னிட்டுத்தான் உபதேசம் செய்கிறாரே தவிர, உடம்பை முன்னிட்டு அல்ல. அப்படிப்பட்ட உன்னதமான குரு, தன் உபதேசத்தை இன்னும் வழங்குகிறார்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism