சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

நினைத்தது நிறைவேற... 'தோசை' பிரசாதம்! -

நினைத்தது நிறைவேற... 'தோசை' பிரசாதம்! -

நினைத்தது நிறைவேற... 'தோசை' பிரசாதம்! -
நினைத்தது நிறைவேற... 'தோசை' பிரசாதம்! -

கல்யாணத் தடை நீங்கும்!

##~##
துரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலம்! அப்போது அமைச்சராக இருந்த வரத வேங்கட நாயக்கர், ஸ்ரீரங்கம் அரங்கனைத் தரிசிக்கப் பயணப்பட்டார். வழியில், குளத்தூர் மன்னன் நமன தொண்டமானின் வரவேற்பை ஏற்றார்.

''இந்த ஊரில் பெருமாளின் திருத்தலம் ஏதும் உள்ளதா? அவரைத் தரிசித்துவிட்டு, அரங்கன் தரிசனப் பயணத்தைத் தொடர விரும்புகிறேன்'' என்று தொண்டமானிடம் தெரிவித்தார் வரத நாயக்கர். ''மன்னிக் கவும்! எங்கள் ஊரில் திருமாலுக்கான ஆலயம் எதுவும் இல்லையே..!'' என வருந்தினார் மன்னர். அதையடுத்து, வரத நாயக்கரின் வேண்டுகோளின்படி, அந்த ஊரில் அழகியதொரு பெருமாள் திருக்கோயிலைக் கட்டினார் நமன தொண்டமான்!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குளத்தூர். இங்கே, ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள் புரிகிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். திருமண தோஷத்தால் கலங்கித் தவிப்போருக்குக் கல்யாண வரம் தரும் ஸ்ரீகல்யாண அனுமன் இத்தலத்தின் விசேஷம் என்கிறார் கோயிலின் வெங்கட்ராகவ பட்டாச் சார்யர். ஆழ்வார்களுக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.

ஸ்ரீவரதராஜரின் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கியது, ஓர் அஸ்த நட்சத்திர நாளில். எனவே, அஸ்த நட்சத்திர நாளன்று, அந்த நட்சத்திரக்காரர்கள் பெருமாளுக்குப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபட, கூடுதல் பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்!

அமைச்சர் வரத நாயக்கர் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் வழியில் வழிபடுவதற்குக் கோயில் இல்லையே என வருந்தினார் அல்லவா?! அவரது ஏக்கத்தைப் போக்கும் விதமாக, ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் வைபவங்கள் எப்போது நடைபெறுகின்றனவோ, அப்போதெல்லாம் இங்கும் விழாக்கள் குறைவின்றி நடைபெறுகின்றன.

ஆடி மாதம் இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு பெருமாளை வழிபட, கல்யாண மாலை தோள் வந்து சேரும்; பிள்ளை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்கின்றனர், பெண்கள்! அதேபோல், புரட்டாசியில், ஸ்ரீவரதராஜ பெருமாளுக்குத் திருக் கல்யாண வைபவம் செய்து பிரார்த்திக்க, கல்யாணத் தடை அகலும்; நல்ல கணவன் வாய்ப்பார் என்பது நம்பிக்கை!

புரட்டாசியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவார் ஸ்ரீவரதர். தீபாவளியன்று, ஸ்ரீவரதருக்கு தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. தோசைப் பிரசாதம் செய்து வழிபட, நினைத்த காரியங்கள் நிறைவேறுமாம்!

நினைத்தது நிறைவேற... 'தோசை' பிரசாதம்! -


தென்னை நட்டால்... பிள்ளை!

புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பிரசன்ன ரகுநாதபுரம். இங்கே, ஸ்ரீராமபிரான் ஸ்ரீபிரசன்ன ரகுநாத ராகக் கோயில் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த ரகுநாத தொண்டமானுக்கு, ஒரேயரு குறை... கொஞ்சி விளையாட ஒரு வாரிசு இல்லையே என்று! இதில் கலங்கித் தவித்த மன்னருக்கு, 'சேது சமுத்திரத்தில் நீராடிவிட்டு, அரண்மனையின் தெற்கு எல்லைப் பகுதியில், வெள்ளாற்றுக்கும் குண்டாற்றுக்கும் நடுவில் உள்ள இடத்தில், ஸ்ரீராமருக்குக் கோயில் கட்டு; குழந்தை பிறக்கும்’ என அருளினாராம் வைஷ்ணவப் பெரியவர் ஒருவர்.

அதன்படி, ராமேஸ்வரத்தில் நீராடிவிட்டு, கடையக்குடிக்கு அருகில் உள்ள வனத்தில் அழகிய கோயிலைக் கட்டினார் மன்னர். அடுத்த வருடமே அவருக்கு வாரிசு உருவானது என்கிறது ஸ்தல வரலாறு. பிறந்த ஆண் குழந்தைக்கு ராமச்சந்திர தொண்டமான் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர், கோயில் பகுதியை விஸ்தரித்து, நிலங்களை தானமாகத் தந்தார். அது மட்டுமா? இங்கேயுள்ள ஸ்ரீராமரின் திருநாமத்தையே ஊரின் பெயராகவும் சூட்டி மகிழ்ந்தார். அன்று முதல் இன்றளவும், பிள்ளைச் செல்வம் இல்லையே எனக் கலங்குவோருக்கு, மழலைச் செல்வம் அருளி ஆசீர்வதிக்கிறார் ஸ்ரீபிரசன்ன ரகுநாத பெருமாள்.

ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோ ருடன் கருவறையில் தரிசனம் தருகிறார் ஸ்ரீபிரசன்ன ரகுநாத பெருமாள். ஸ்ரீகாளிங்க நர்த்தனர், ஸ்ரீசந்தானகிருஷ்ணர், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர், தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீராமரின் திருநட்சத்திரமான புனர்பூச நாளில், பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடுவது நன்மை பயக்கும். ஸ்ரீராமநவமியின்போது பிரம்மோத்ஸவம் சிறப்புற நடைபெறும். ஏழாம் நாள் விழாவில், திருக்கல்யாணம்; அந்த நாளில், ஸ்ரீபிரசன்ன ரகுநாதரை வழிபட்டால், கல்யாண யோகம் கூடி வரும் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்களாம். அன்று மாலை, திருமயம் பெருமாள், புதுக்கோட்டை வரதராஜ பெரு மாள், ஸ்ரீபிரசன்ன ரகுநாத பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களில் ஒருசேரக் காட்சி தருவதைக் காணக் கண்கோடி வேண்டும்!  

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், ஸ்வாமிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்திப் பிரார்த்திக்க, இல்லறம் சிறக்கும்; நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது உறுதி எனப் பூரிக்கின்றனர் பக்தர்கள். கோயிலின் ஸ்தல விருட்சம் தென்னை. எனவே, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தென்னங்கன்றை நட்டு வைத்துப் பிரார்த்திக்க, குழந்தை பாக்கியம் தந்தருள்வாராம் பெருமாள்!

  - பெ.தேவராஜ்
படங்கள்: பா.காளிமுத்து