Published:Updated:

கேள்வி - பதில்

தலைசிறந்த குரு...தனி மனிதனா? கல்வியா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

தலைசிறந்த குரு...தனி மனிதனா? கல்வியா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? ந்தவொரு விஷயமாக இருந்தாலும் வழிகாட்ட ஒருவர் தேவைப்படுகிறது. ஆனால், அப்படி வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களோ, தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தங்கள் வாழ்வை செம்மைப்படுத்துவதிலும்தான் கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை. ஆன்மிகமோ, லோகாயதமோ... நாம் பின்பற்றுவதற்கு ஒரு தலைமை அல்லது ஒரு தலைவன் அவசியம்தானா? 

- ஆ.வேங்கடசுப்ரமணியம், திருப்பூர்

முதல் கோணம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அறிவு அடக்கத்தையும், ஒழுக்கத்தையும் அளிக்கும். இந்த இரண்டும் மனித வளத்தைப் பெற்று தனது தகுதியை உயர்த்தும். அந்த உயர்வானது வாழத் தேவையான பொருளை ஈட்டித் தரும். பொருள் அற வழி இன்பத்தை எட்டவைக்கும்’ என்கிறது  ஸனாதனம் (வித்யாததாதி விநயம்...).

கல்வி வழியில் படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றி

பெறலாம். பண்டைய முடியரசில், கல்வி கற்று சுயமாக தங்களை உயர்த்திக்கொண்டவர்கள் இருந்தார்கள். மக்களுக்குக் கல்வியையும், மன வளத்தையும், மனித வளத்தையும் முழுமையாக அளித்து, அவர்களுக்கு ஒரு தந்தையைப் போன்று அரசர்கள் திகழ்ந்தார்கள் என்று காளிதாசன் ரகுவம்சத்தில் குறிப்பிடுவார் (ப்ரஜானாம் வினயாதானாத்). கல்வி கற்கத் தவறியவர்களுக்கு முதியோர் கல்வி என்றெல்லாம் ஒப்புக்குச் செயல்படவில்லை. சிறுவயதிலேயே அனைவருக்கும் கல்வி கிடைத்தது. பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் மட்டுமே சுதந்திரம் ஆகிவிடாது. பிறரது சிந்தனைக்கு அடிமையாகி ஸ்வாபிமானத்தை (சுய மரியாதையை) இழக்கக் கூடாது.

கேள்வி - பதில்

? கேள்விக்கும் விளக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. கல்வி கட்டாயம் என்பதற்கும், தலைமை அவசியமா என்பதற்கும் என்ன தொடர்பு?

சுயமாகச் சிந்திக்கும் அறிவை கல்வி நல்கும். அப்போது மற்றொருவரின் வழிகாட்டலை ஏற்கும் அவசியம் ஏற்படாது என்று சொல்லவருகிறோம்.

கல்வி வழியில் சிந்தனை வளம் பெற்று, ஆராய்ச்சியில் திறமை வளர்ந்தால் உண்மையான சுதந்திரத்தை உணரலாம். அதைப் பெறுவதற்கு ஸனாதனம் ஒத்துழைக்கும். ஆனால், அதற்கு ஈடாக ஸனாதனம் எதையும் எதிர்பார்க்காது; சுயநலம் பெறுவதற்காக மற்றவர்களை அடிமை ஆக்காது. அப்பாவி மக்களின் ஒத்துழைப்பில் ஒருவன் தலைவன் ஆகிறான். ஏழ்மையிலும் துயரத்திலும் வாடும் மக்களின் சிந்தனை முட்டுச்சந்தில் முடங்கிக் கிடக்கும்போது, பிறர் சொல்லும் தகவலை, கொள்கைகளை ஆராயாமல் ஏற்றுக்கொண்டு விடும். படுத்துவிட்ட சிந்தனையை திசைதிருப்பி எழுப்புவது அப்படியான தகவல்களே!

? மக்களின் இயலாமையே ஒரு தலைவனை உருவாக்குகிறது என்கிறீர்களா?

சரியாகப் புரிந்துகொண்டீர்கள். வாழ்வில் தன்னுடைய முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கும்போது, மற்றவர்களது உதவியை மனம் எதிர்பார்க்கும். அந்தத் தருணத்தில் சிந்தனை முடங்கிக்கிடப்பதால், எதையும் ஆராயாமல் உதவிக்கு வந்தவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டுவிடும். அப்போது அவர்களுடைய சிந்தனை, உதவிக்கு வந்தவனின் சிந்தனையாக மாறிவிடும். இவர்களின் இணைப்பில் அவன் தலைவனாக மாறிவிடுவான். இவர்கள், தங்களுடைய பாதுகாப்புக்காக தலைவனின் பாதுகாவலர்களாகி விடுவார்கள். இதுபோன்ற சுழலில், அந்தத் தலைவனுக்கு அவனது புகழ்பாட நிரந்தர சேவகர்கள் கிடைத்துவிடுவார்கள். மக்களின் பங்களிப்பால் தலைவனுக்கான வாழ்க்கைத் தேவைகள் அத்தனையும் தானாக வந்துசேர்ந்துவிடும். சமூக அங்கீகாரமும் கிடைத்துவிடும். செல்வம் சேரும்; வாழ்க்கையும் செழிப்புறும். மக்களின் பின்புலத்தாலும் பலத்தாலும் ஊக்கம் பெற்று, மக்களுக்காக வாதாடும் திறனும் வளர்ந்துகொண்டு வரும். சமுதாயமும் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளும்.

?   பாமர மக்களுக்கு வழிகாட்டும் ஒருவனை அவர்கள் தலைவனாக ஏற்பதில் தவறு என்ன இருக்கிறது?

கேள்வி - பதில்

அந்தத் தலைவன், அவர்களின்மீது கொள்ளும் அக்கறை சந்தேகத்துக்கு உரியதே. அவன் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு, தன் சேவகர்களுக்கு ஊண்உறைவிடத்தைப் போராடிப் பெற்றுக் கொடுப்பான். அதேநேரம், அந்த சேவகர்களிடம் கல்வி அறிவும், சுயசிந்தனையும் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வதும் உண்டு. வாழ்நாள் முழுதும் தான் நிம்மதியாக இருக்க சிலருக்கு அது கட்டாயமாகிறது. மக்கள் விழித்துக்கொண்டால் தலைவன் பதவி பறிபோகும்.

இப்படி, மக்களுக்குச் சேவை செய்த தலைவன் மறைந்தபிறகு, அடுத்தவன் பொறுப்பேற்பான். மறைந்த தலைவனின் பெருமைகளைப் பறைசாற்றுவதே இந்தப் புதிய தலைவனின் வேலையாக இருக்கும். பழைய தலைவனின் துதிப்பாடலில் லயித்திருக்கும் பழைய சேவகர்கள் புதியவனையும் தலைவனாக ஏற்றுக்கொள்வர். இந்தப் புது தலைவனுக்குக் கொள்கையில் பற்று இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மண் மறைந்த தலைவனை விண்ணளவு புகழ் பாடினால் போதும்!

அவரது பிறந்த நாள் கொண்டாட்டம், நினைவு தினம், சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்குவது, தலைவர் குடும்பத்துக்கு வசதி செய்து கொடுப்பது, உலகம் அழியும் வரை அவர் புகழ் நிலைக்க மணிமண்டபம் கட்டி, அதில் அவரது திருவுருவத்தை அமைத்து வழிபடுவது, அவ்வப்போது பிரச்னைகள் எழுப்பி தலைவர் பெயரில் போராடுவது, தலைவரின் சிலைக்கு முன்னால் அமர்ந்து தொண்டர்களோடு பட்டினிப் போராட்டம் நடத்துவது, தொண்டர்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்வது, நிறைவேறாவிட்டால் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் போராடுவது... இவை அத்தனையும் அவனது அலுவல்களாக மாறிவிடும். நாட்டில் ஏழைகளும் படிப்பறிவு அற்றவர்களும் நிரம்பியிருக்கும்போது, தொண்டர்கள் எண்ணிக்கை பெருகும். 'மக்கள் பணிவிடையில் உயிர் நீத்த மகான்’ என்ற பெருமை தலைவனைத் தேடி வரும்.

இப்படியிருக்க, புதிய தலைமுறைக்கு மறைந்த தலைவரைப் பற்றி எதுவும் தெரியாததால், அவர்களையும் தொண்டர்களாக இணைப்பது சுலபமாகிவிடும். குடியரசில் மக்கள் பலம் பெரிதாக இருப்பதால், இந்தத் தலைவர்களுக்கு எல்லாவிதமான பட்டமும் பதவியும் தேடி வந்துவிடும். இப்படியே அடுத்தடுத்து தலைமை பதவிக்கு வருபவருக்கும் முந்தைய தலைவரின் புகழைப் பாடுவதே கொள்கையாக மாறிவிடும்.

? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஜனநாயகம் என்ற கோட்பாடே தவறு என்பதுபோல் உள்ளதே?

ஜனநாயகம், உயர்வான குடியரசுக் கொள்கையில் இப்படியொரு பக்க விளைவு இருக்கும் என்று ஆரம்பத்தில் எவருக்கும் தெரியாது. இப்போது அனுபவத்தில் தெரிந்தபிறகும், அதை மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்களும் உண்டு பொதுநலப் போர்வையில் சுயநலம் செழிப்புற்று விளங்குவதை அறிந்தும், தலைவர்களுக்கு இந்த வழியைத் துறக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

இப்படியான நடைமுறையும் மனோபாவமும் ஆன்மிகவாதிகளிடமும் இருக்கும், லோகாயதவாதிகளிடமும் இருக்கும். எதிரிடையான இவர்கள் இந்த விஷயத்தில் மட்டும்  ஒத்துப் போவார்கள். வேற்றுமையில் ஒற்றுமை சிறப்பம்சம் என்று தங்களது கொள்கைக்குப் பெருமை சேர்ப்பார்கள்!

?  எனில், சமுதாயம் சிறப்படைய மாற்றுவழிதான் என்ன?

எவர் ஒருவரும் ஏழைகளையும் அப்பாவிகளையும் கைதூக்கி விட்டு, அவர்களது வாழ்க்கைக்கு நிரந்தர காவலர்களாக தங்களை அறிமுகம் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்கு உரிய கல்வியறிவை அளித்து, அவர்களது சிந்தனை வளத்தைப் பெருக்கி, சுய முயற்சியில் தானாகவே முன்னேறும் திறமையை வளர்த்துவிட்டால் போதும். அவர்கள் எவரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று, வாழ்க்கை வளத்தை அடைந்துவிடுவார்கள். அது நாட்டின் ஆரோக்கியத்துக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளித்துவிடும்.

'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் வடித்தது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. அது நம்மில் நடைமுறையாகிவிடக் கூடாது. பிறந்த உயிரினங்கள் அத்தனைக்கும் இயற்கையின் செல்வங்களில் பங்கு உண்டு என்பதை மனதில்கொள்ள வேண்டும். எல்லோரையும் வாழ விடும் எண்ணம் மனதில் பதிய வேண்டும். சுதந்திரம் அடைந்த பிறகும், தன்னிச்சையாகவே சுதந்திரத்தை அடகுவைப்பது தவறு. மனம் படைத்த மனிதன், சிந்தனை வளம் பெற்றுத் திகழ வேண்டும். அப்போது தலைவர்களின் பரம்பரை தானாகவே மறைந்து விடும்.

இரண்டாவது கோணம்

தங்களது விளக்கம் உள்நோக்கம் கொண்டது. பிறப்புரிமை பறிக்கப்படும்போது, அதை ஈட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது சிறப்பு. சக மனிதன் தடுமாறும்போது உதவிக்கரம் நீட்டுவது மனிதப் பண்பு. அப்படி, தங்களின் பிறப்பு உரிமையை  மீட்டுத் தந்தவர்களை தலைவனாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவன் தன்னைத்தானே தலைவனாக பறைசாற்றிக் கொள்ளவில்லை.

ஏழைகள் படும் பாட்டை மற்றவர்கள் பார்த்துக்கொண்டு மெளனமாக இருக்க, துணிந்து செயல்பட்டு அவர்களை முன்னேற்றப் பாதையில் இழுத்துச் செல்லும் மனித மாணிக்கத்தை தலைவன் என்று சொல்வதில் தவறு இல்லை. கடவுள், தனது படைப்புகள் சிக்கலில் தவிக்கும்போது, அவதாரம் எடுத்து வந்து  அவர்களின் துயர் துடைத்து வழிகாட்டினார். இந்தப் பணியையே  தலைவர்களும் ஏற்கிறார்கள்.

? சுயமாகச் சிந்திக்கும் அறிவும் ஆற்றலும் இருந்தால், தடுமாற்றமே நிகழாதே?

சுய சிந்தனையின் சிறப்பு எல்லா வேளைகளிலும் கைகொடுக்காது. தலைமை, தலைவன் என்பதெல்லாம் ஏதோ இப்போதுதான் தோன்றியது என்று  கூற முடியாது.

உலகம் தோன்றிய நாளில் அரசன் இல்லை; அமைச்சர்களும் இல்லை. அறம் ஆட்சி செய்தது. எல்லோரும் மகிழ்ந்தார்கள். காலப்போக்கில்  பலவீனமானவர்களை பலசாலிகள் அடிமையாக்கி அடக்கி ஆளும் திறமை வளர்ந்துவிட்டது. அந்த அடிமைகளை விடுவிக்க தலைவன் ஒருவன் தேவைப்பட்டான். அவனே பிற்பாடு அரசனாக உருவெடுத்தான். அதை மக்களும் ஏற்றார்கள். பெரிய மீன், சின்ன மீனை விழுங்கும். சின்ன மீனைக் காப்பாற்ற முயற்சி தேவைப்படும். இதை 'மத்ஸ்ய ந்யாயம்’ எனக் குறிப்பிட்டு, முதன் முதலில் அரசன் தோன்றியதை விளக்குவார் சாணக்கியன். அப்படிக் காப்பாற்றத் துணிந்த தலைவனை சுயநலவாதியாகச் சித்திரிக்கக்கூடாது.

முடியரசு மறைந்து குடியரசு கோலோச்சும் இந்நாளில் அரசன் என்ற அந்தஸ்தில் தோன்றியவர் தலைவர். படிப்பறிவும் இல்லைதகுதியும் இல்லை என்றாலும், பாமரர்களின் பிறப்பு உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, படித்தவர்களுக்கும் தகுதி பெற்றவர்களுக்கும் இணையாக அவர்களை உயர்த்துவதில் என்ன தவறு. கல்வியில் தவறியவர்களையும், தகுதியை எட்ட இயலாதவர்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? அவர்களுக்கு விதிவிலக்கு அளித்து, படித்தவர்களுக்குச் சமமாக அவர்களை

நாம் உயர்த்தவேண்டும். குடியரசில் படிப்பு முதலான தகுதி இல்லாதவரும் தலைவன் ஆகலாம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அடித்தட்டில் இருப்பவனும் ஜனாதிபதியாகலாம், பிரதம மந்திரியாகலாம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கல்வியின் வழியில் அவர்களைப் படிப்படியாக சிந்தனை வளம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும். அப்படி மாறினால்தான் ஏற்க முடியும் என்ற கூற்று சரியல்ல.

? எனில், மக்களை ஆட்டு மந்தைகளாகவே பாவிக்க விரும்புகிறீர்களா?

இல்லை. எத்தகைய அறிவுசார்ந்த கூட்டம் என்றாலும் ஒருங்கிணைக்க தலைமை அவசியம் என்றுதான் சொல்லவருகிறோம். குடியரசில் மக்கள் தலைவன் சட்டம் இயற்றுகிறான். மக்களின் எண்ணத்தைச் சட்டமாக்குகிறான். ஏழைகள், அப்பாவி மக்கள், படிப்பறிவு அற்றவர்கள் போன்றவர்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாக வைத்து சட்டம் உருவெடுக்கும்.

சுய முயற்சியில் முன்னேற முடியாதவர் களையும், சட்டத்தில் அவர்களுக்கு விலக்கு அளித்து, உரிய தகுதி இல்லையானாலும் இருப்பதாக பாவித்து அவர்களை முன்னேற்று வதில் என்ன தவறு இருக்கிறது? ஊனமுற்றோருக்கு விலக்கு அளிக்கிறோம். தகுதி இன்மையும் ஊனத்தில் அடங்கும். ஆக அவர்களும் முன்னேற வேண்டும். பெரும் முயற்சியில் விடுதலை பெற்ற நாம், மக்களின் ஒட்டுமொத்த உயர்வுக்கும் உகந்த வகையில், காலத்துக்கும் சூழலுக்கும் அனுசரணையாக தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவன் வாயிலாக  சுலபமாக வாழ்க்கையைச் சுவைக்கும் தகுதியை எட்டிவிடமுடியும்.

இப்படியிருக்க, மக்களை கட்டாயக் கல்வி வாயிலாக சுய சிந்தனை பெற்று, தலைவன் ஒருவனின் துணையை எதிர்பார்க்காமல், தன் முன்னேற்றத்தை தானே எட்ட வழிவகை தேட வேண்டும் என்ற கருத்து, கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல் இருக்கிறது!

மூன்றாவது கோணம்...

தங்களின் சொல்விளக்கம் அருமை. ஆனால், செயலில் ஏற்கும் அளவுக்கு தகுதி இல்லை. உயர்ந்த சிந்தனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்த நாடு பாரதம். அதன் சொத்து, பெருமை, உயர்வு எல்லாம் சிந்தனை வளம்தான். ஆதிசங்கரர், புத்தர், மஹாவீரர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், தேசப்பிதா காந்தி ஆகிய அத்தனைபேரும் சிந்தனைச் சிற்பிகள். அந்தப் பெருமிதத்துடன் உலக நாடுகளில் தலைநிமிர்ந்து நிற்கிறது நம் பாரதம். லோகாயதமும் ஆன்மிகமும் இணைந்து செழிப்புற்ற பாரதமாக விளங்குகிறது. இத்தனை பெருமைக்கும் மனித சிந்தனையின் செழிப்பே காரணம்.

இங்கு குறிப்பிடப்பட்ட அத்தனைபேரும் மற்றவர்களின் சிந்தனைக்கு அடிமையாகவில்லை. தலைவன் ஒருவனின் தயவில் அவல வாழ்க்கையை ஏற்கவில்லை. சுதந்திரத்தை அடமானம் வைத்து, தனது தரத்தை தாழ்த்திக்கொள்ளவில்லை. 'இந்த தேசத்தில் தோன்றிய சிந்தனையாளரிடம் இருந்து, தங்களின் வாழ்க்கை நடைமுறையை அந்தந்த நாடுகளில் இருப்பவர்கள் கற்றுத் தெரிந்துகொள்ளலாம்’ என்று சிந்தனை வளத்தின் எல்லையை எட்டியவர்களை சுட்டிக்காட்டுகிறார் மனு (எகத்தேசப்ரசூதஸ்ய ஸகாசாத் அக்ரஜன்மன:...).

? கல்வி கற்பதாக இருந்தாலும் அதற்கும் ஒரு வழிகாட்டி அவசியம் அல்லவா?

உண்மைதான். நாங்கள் சொல்ல வருவது தகுதியில்லாத தலைமையும் தலைவனும் தேவையில்லை என்றுதான். கல்வியின் வழியில் ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றுவிட்டால், தகுதியற்ற தலைமை தேவையிருக்காது அல்லவா?

காட்டில் இருக்கும் விலங்கினங்களுக்கு குடியரசு மீது ஆர்வம் வந்தது. தங்களின் அரசரான சிங்கத்தை அகற்றிவிட்டு, அதே இனத்தைச் சேர்ந்த ஒரு நாயை அரியாசனத்தில் அமர்த்தின. அதற்கு, பிடரி மயிர்களை செயற்கையாக ஏற்படுத்தின. பார்வைக்கு சிங்கம் போல் தோன்றும்படி செய்தன. அந்த நாய் சிம்மாசனத்தில் இருக்கும் வேளையில், அவைக்கு வந்த யானை ஒன்று பிளிறியது. ஆனால், அந்த நாயால் சிங்க கர்ஜனை செய்ய இயலவில்லை. பர்த்ருஹரி விளக்குவார் (ஆபத்தக்ருத்ரிம ஜடாஜடிலா...).

நமக்கு ஆறாவது அறிவை இணைத்த கடவுள், 'சிந்தனை வளத்தில் முன்னேறவேண்டும்’ என்று சொல்லாமல் சொல்கிறார். கட்டாயக் கல்வி அளித்து கண் திறந்துவிடுவது மக்கள் சேவையாகும். கல்வியில் மன வளம் பெற்ற மக்கள் பெருகினால் நாடு ஆரோக்கியமாக இருக்கும். நாடு முன்னேறும். கல்வி அளிக்காமல் ஏமாறச் செய்தால், ஆறாவது அறிவுக்கு வேலை இல்லாமல் விலங்கினமாக மக்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். ஊண், உறைவிடம், வேலை ஆகியவற்றை மட்டும் அளித்து அவர்களை என்றென்றைக்கும் ஊனமுற்றவர்களாக இருக்கும்படி மாற்றிவிடக்கூடாது.

? அப்படியெனில், குருமார்களும் அநாவசியம் என்று சொல்ல வருகிறீர்களா?

கல்விதான் குருவுக்கும் குரு (வித்யாகுரூணாம் குரு). மனிதவடிவில் வளையவரும் குருக்களில் நம்பகத்தன்மை குறைந்திருக்கும். கல்வி அறியாமையை அகற்றி, அறிவுத் திறனால் தேவையை எட்டவைத்து, பிறப்பின் குறிக்கோளை அடையவைக்கும்.

'வாழ்க்கைத் தேவைகளை தலைவனிடம் இருந்து இனாமாகப் பெறுவது இழுக்கு’ என்ற எண்ணம் வேண்டும். அது, கல்வியறிவால் சிந்தனை வளம் பெற்றால்தான் தோன்றும். மக்களின் குடும்பத்தேவைகளை தலைவனே ஏற்றுச் செயல்படக்கூடாது. அதேபோன்று இக்கட்டான சூழலில் கிட்டும் உதவியை உரிமையாகக் கொண்டாடக் கூடாது. கல்விக்குப் பதிலாக மாற்று வழிகளில் மக்களை முன்னேற்ற நினைப்பவன், மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குபவன் ஆவான். அப்பாவி மக்களின் அறிவீனத்தைப் பயன்படுத்தி, தலைவர் பதவியைத் தக்கவைக்கும் எண்ணம் வரக்கூடாது. இது தொடர்ந்தால் திரும்பவும் ஏழ்மை தலைதூக்கும். பெற்ற சுதந்திரம் பறிபோகும். பாரதத்தின் பெருமை ஏட்டில் மட்டுமே நிலைக்கும்.

தாயும் தாய்நாடும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று ஸனாதனம் சொல்லும் (ஜனனீஜன்மபூமி: ச....). அந்த தாய்நாட்டை நரகமாக்கிவிடக்கூடாது. அதற்கு கட்டாயக் கல்வி அளித்து சிந்தனை வளம் பெறவைப்பதைத் தவிர, வேறு மாற்று வழி இல்லை. தலைவர்கள் சொல்லும் மாற்று வழிகள் எல்லாம் மக்களை முன்னேற்றப் பயன்படாது. அது அந்தத் தலைவர்கள் முன்னேற மட்டுமே பயன்படும். அப்படியானவர் தலைவரும் அல்ல. தலைவர் பரம்பரை முடிவுக்கு வர, மக்கள் கல்வியறிவு பெற வேண்டும். இதை திரும்ப திரும்பச் சொல்கிறது ஸனாதனம் (வித்யாததா திவிநயம் வினயாத்யாதி பாத்ரதாம் பாத்ரத்வாத் தனமாப்னோதி, தனாத்தர்மம் தத: சுகம்).

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

தன்னால் இயலாதவன் மற்றவரின் உதவியை நாடலாம். கல்வி கற்றலை சுயமாக சாதிக்கமுடியும். அது கிடைத்துவிட்டால் முன்னேற்றப் பாதை தெரியும். அதில் பயணித்தால் இலக்கை எட்டலாம். அதை விட்டுவிட்டு, யாரோ ஒரு தலைவனுக்கு அடிமையாகி, அவனுடைய தயவில் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது சிறப்பல்ல. 'புத்தகத்தில் இருக்கும் கல்வியும், பிறரிடம் கொடுத்த பணமும் தேவை வரும்போது பயன்பெறாமல் போய்விடும்’ என்று சொல்லும் ஸனாதனம். மக்கள் விழிப்புடன் இருந்து கல்வியும் பணமும் தன்னிடமே இருக்கும்படி செய்தால், ஏமாற இடம் இருக்காது. ஆகவே, தன்னிடம் இருக்கும் திறமையை மறந்து சலுகையில் முன்னேற எண்ணுவது அறியாமை. அது அகன்றால் ஒரு தலைமையை, தலைவரை எதிர்பார்க்கும் தேவை இல்லாமல் போகும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:
'கேள்வி பதில்',
சக்தி விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism