''இந்த மெகா சக்தி சங்கமம், உண்மையிலேயே சக்தி சங்கமம்தான். வந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஒரு எனர்ஜியை, சக்தியை, தெளிவை, உறுதியைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த ஹரிஹரபுத்திரனின் அருட்கடாட்சம் உங்கள் எல்லோருக்கும் உண்டு என்பது சத்தியம்'' என்று வீரமணி ராஜூ, நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் சொல்ல... வந்திருந்த அனைவரும் பாட்டிலும் பேச்சிலுமாக சொக்கிப் போனார்கள்.
சக்திவிகடனும் ஆர்.கே.ஜி. நெய் நிறுவனமும் இணைந்து நடத்திய மெகா சக்தி சங்கமம், கடந்த 14.12.14 அன்று சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் உள்ள சாரதாம்பாள் கோயிலில், நடந்தது.
காலை 9 மணிக்கு விழா துவக்கம் என அறிவித்திருந்ததால், முன்னதாகவே வரத்துவங்கிவிட்டார்கள் முன்பதிவுசெய்திருந்த வாசகர்கள். சாஸ்தாவின் சரிதத்தையும் அவரின் அருளாடல் களையும் அகிலம் முழுவதும் பரப்பி வரும் அரவிந்த் சுப்ரமண்யமும் பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூவும் தன் இசைக்குழுவினருடன் 8.40க்கெல்லாம் வந்துவிட... விழா பரபரப்பு, வாசகர்களிடம் தொற்றிக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, தேனாம்பேட்டை ஸ்ரீஹரிஹர புத்ரன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில்,முக்கியப் பொறுப்பாளரான பாலா தலைமையில், ஐயப்ப ஸ்வாமியின் அழகு விக்கிரகம், வீரவாள், பீடம், பதினெட்டுப்படி ஆகியவைகொண்டுவரப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மேடை யில் வைக்கப் பட... கேரள பாணியிலான மூன்று விளக்கு களில் தீபமேற்றி, விழா இனிதே துவங்கியது.
பிச்சுமணி குருசாமிகள், சென்னையில் இருந்து சபரிமலைக்கு நடைப்பயண மாகவே சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். தற்போது 96 வயதாகும் அவர் விளக்கேற்றி, மெகா சக்தி சங்கமத்தைத் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிநாயகர் ஸ்தோத்திரப் பாடலைப் பாடிவிட்டு, அதைத் தொடர்ந்து, பிரபலமான 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...’ பாடலை வீரமணி ராஜூ தமக்கே உரிய கம்பீரக் குரலில் பாட, கீபோர்டும் தபேலாவும் அற்புதமாக ஒத்துழைத்து மெருகேற்ற... அரங்கம் அதிர்ந்தது; கச்சேரி களை கட்டியது. அதைத் தொடர்ந்து, அரவிந்த் சுப்ரமண்யம் ஐயன் அருளாடல்கள் பற்றிப் பேசினார்.

''கலியுக தெய்வம் ஐயன் ஐயப்ப ஸ்வாமி என்பதில் சந்தேகமே இல்லை. அச்சங்கோயில் வனப்பகுதியெல்லாம் ஹரிஹரபுத்திரனுக்கே சொந்தம். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சிலர் வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டி, திருடிச் சென்றார்கள். ஆனால், ஆங்கில அரசாங்கமோ சபரிமலை ஸ்ரீகாரியத்தின்மீது குற்றம் சுமத்தியது. மனம் நொறுங்கிப் போன காரியம், 'இத்தனை கொடுமைகள் நடக்கின்றன. பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறாயே! உனக்கு உத்ஸவம் ஒரு கேடா? அபிஷேகம் தேவையா?’ என்று ஆவேசமாகி, வாயில் மென்றுகொண்டிருந்த வெற்றிலை எச்சிலை, ஐயப்பன் மீது துப்பினார். அன்று இரவு, 'கவலை வேண்டாம். தைரியமாகப் போ! நீ குற்றவாளி இல்லை என்று சாட்சி சொல்ல நானே வருகிறேன்’ என்று அசரீரியாகச் சொன்ன ஐயப்பன், ஆதி மணிகண்டன் எனும் திருநாமத்துடன், திருநெல்வேலி கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வந்தார். அவரின் உருவம் நீதிபதியின்
கண்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது; வேறு எவருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து ஆதாரபூர்வமாக இன்றைக்கும் ரெக்கார்ட் இருக்கிறது. உண்மையான பக்தி இருந்தால்பகவான் நம்மைத் தேடி வருவான், நமக்காக எதையும் செய்வான் '' என்று அரவிந்த் சுப்ரண்யம்சொல்ல, சிலிர்த்துப் போனார்கள் வாசகர்கள்.
''சபரிமலைக்குப் போயிட்டு வந்தவங்க நிறையப் பேர், நான் நாலு தடவை ஸ்வாமி யைப் பார்த்தேன், ஏழு தடவை தரிசனம் பண்ணேன்னெல்லாம் சொல்லுவாங்க. அவனை நாம பார்க்கணும்கிறது இல்லை; அவன் நம்மளைப் பார்க்கணும். அதுதான் முக்கியம். அதை உணர்ந்து, மலையேறுங்க. கண்கண்ட தெய்வம் ஐயப்ப ஸ்வாமி, நம்ம கண் முன்னாடி வருவான். சந்தேகமே வேணாம்'' என்று வீரமணி ராஜூ சொல்ல, அரவிந்த் சுப்ரமண்யம் தொடர்ந்தார்...
''எரிமேலியில் பேட்டைத்துள்ளல் எனும் நிகழ்ச்சி நடக்கும். அப்ப, 'ஸ்வாமி திந்தகத்தோம்... ஐயப்ப திந்தகத்தோம்’னு பாடி ஆடுவோம். 'ஸ்வாமி நின் அகத்தும், ஐயப்பன் என் அகத்தும்... அதாவது, ஐயப்பன் எனக்குள்ளேயும் இருக்கிறான், உனக்குள்ளேயும் இருக்கிறான்னு அர்த்தம். அது மருவி, திந்தகத்தோம்னு ஆகிருச்சு. பதினெட்டாம்படியை சாதாரணமான படின்னு நினைச்சுக்காதீங்க. படியேறும் போது, என்ன கேட்டாலும் கேட்டதைக் கேட்டபடி தந்தருள்வான் ஐயப்ப ஸ்வாமி.
நிஜமா நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். ஒரு குரூப், சபரிமலைக்கு யாத்திரை போச்சு. அந்தக் காலத்தில் எரிமேலிக்கு அப்புறம் சாப்பாடு கிடைக்கறது கஷ்டம். ஆனா, ஒரேயொரு சாமி மட்டும், சாப்பாடு பத்தி குறைப்பட்டுக்கிட்டே வந்தார். குருசாமி என்ன சொன்னாலும், இவர் மட்டும் சாப்பாட்டிலேயே குறியா இருந்தார்.
18ம் படியையும் அடைஞ்சாச்சு! 'படியேறும்போது எல்லாரும் நல்லா வேண்டிக்கோங்க. இது சத்திய மான பொன்னுபதினெட்டாம்படி. நீங்க என்ன கேக்கறீங்களோ, அதைத் தருவான் ஐயப்பன்’னு குருசாமி சொன்னார். உடனே சாப்பாட்டுச் சாமிகேலியா, 'அப்படின்னா, எனக்கு ஒரு நெய் ரோஸ்ட் கொடுக்கச் சொல்லுங்க!’ன்னு சொன்னார்.

தரிசனம் முடிஞ்சு, கீழே வந்துட்டிருக்கும்போது, ஒரு சின்ன ஹோட்டல். எல்லாரும் அங்கே போனாங்க. 'ரொம்பப் பசிக்குது. சாப்பாடு இருக்குமா?’ன்னு கேட்டார் நம்ம சாப்பாட்டு சாமி. 'மன்னிக்கணும். மளிகைச் சாமானெல்லாம் தீர்ந்துருச்சு. ஆனா, மாவு இருக்கு; அமுல் பட்டர் இருக்கு. அஞ்சு நிமிஷம் இருந்தீங்கன்னா, நெய்ரோஸ்ட் ரெடி பண்ணித் தரேன்’னு கடைக்காரர் சொல்ல... சாப்பாட்டு சாமி உள்பட, எல்லாருமே ஆடிப்போயிட்டாங்க. ஆக, கொடுக்கறதுக்கு ஐயப்பன் தயாரா இருக்கான். என்ன கேக்கணும்னு நமக்குத்தான் தெரியலை'' என்று அரவிந்த் சுப்ரமண்யம் சொல்ல, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
இடையே, பிச்சுமணி குருசாமிகள் பேசினார். தான் 60 வருடங்களாக மகர ஜோதியை தரிசனம் செய்ததையும், அதில் கடந்த 40 வருடங்களாக மலைக்கு நடந்தே செல்வதையும் சொன்னவர், தான் ஒரு காலத்தில் தீவிர நாத்திகனாக இருந்தவர் என்றும், தன்னை ஐயப்பன் ஆட்கொண்டதையும் சொல்ல, நெகிழ்ந்துபோனார்கள் வாசகர்கள்.
பிறகு, வாசகர்களின் கேள்விகளுக்கு அரவிந்த் சுப்ரமண்யம் பதில் சொன்னார்.
'ஐயனாரும் ஐயப்பனும் ஒன்றுதானா?’ என்று வாசகர் பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்

.
''நம்மூரில் அதாவது தமிழில், ஐயன் என்பது மரியாதையான சொல். மரியாதையை அதிகப்படுத்தும் விதமாக 'ஆர்’ விகுதி சேர்ப்பது நம் வழக்கம். அதேபோல், 'அப்பன்’ எனும் சொல்லைச் சேர்த்து மரியாதையுடன் விளிப்பதுகேரள மக்களின் வழக்கம். குருவாயூரப்பன் என்று அதனால்தான் சொல்கிறோம்.ஆக, இங்கே, அய்யனார்; அங்கே ஐயப்பன்! ஐயனார் மொத்தம் எட்டு அவதாரங்கள்எடுத்ததாகச் சொல்கிறது புராணம். எட்டாவது அவதாரம் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி.'
'ஐயப்ப ஸ்வாமி மீதான பக்தி எப்படி இருக்க வேண்டும்?’ என்று வாசகர் ராஜாராம் கேட்டார்.
'பால் பாயசம் செய்கிற முறை என்னவோ ஒன்றுதான். ஆனால், ஒருவர் வைத்த பால் பாயசம் போன்று இன்னொருவர் வைத்தது இருக்காது. பத்து பேர்பால் பாயசம் செய்தால் பத்தும் பத்து வித ருசியுடன் இருக்கும். கடவுள் தரிசனம் என்பதும் அதுபோல்தான். பால் பாயசத்தில் முந்திரி, ஏலக்காய் என்று போடுகிறோமே... அதுதான் நாம் விரதம் அனுஷ்டிப்பது. அந்தப் பொருட்களால் ருசி கூடுகிறது அல்லவா, அதுதான் ஐயப்ப ஸ்வாமியின் அருள்! ஆக, நாம் எப்படிவிரதம் அனுஷ்டிக்கிறோமோ, அதற்குத் தக்க பலனும் அருளும் நிச்சயம் கிடைக்கும்!'
'ஐயப்பனின் வாகனம் புலி. ஆனால், சபரிமலையில் உள்ள கொடிமரத்தில் குதிரை இருக்கிறதே?’ என்று கேட்டார் வாசகர் ராமகிருஷ்ணன்.
'புலியை வாகனமாக்கி, மணிகண்ட ஸ்வாமி வந்தார். ஆனால், அவரின் வாகனம் குதிரைதான்! ஏனென்றால், ஏற்கெனவே சொன்னது போல ஐயனாரின் அவதாரமே மணிகண்ட ஸ்வாமி. ஐயனாரின் வாகனம் குதிரை.'
'ஐயப்ப விரதத்தில், பெண்களுக்கான விரதம் என்று ஏதேனும் தனியே இருக்கிறதா?’ என்று சென்னை வாசகி கல்பனா சீனிவாசன் கேட்டார்.
''பெண்களுக்கென்று நியமங்கள் எதுவும் சாஸ்திரங்களில் சொல்லப்பட வில்லை. அதேநேரம், எந்த விஷயத்தைச் செய்வதாக இருந்தாலும் பெண்ணின் துணையின்றி ஆணால் செய்யமுடியாது என்றும் வலியுறுத்தி உள்ளது. ஒருவர் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிற வேளையில், அந்த வீட்டின் பெண்மணி செய்கிற கைங்கர்யங்களே போதுமானவை. தனியே ஐயப்ப விரதம் என்றெல்லாம் மேற்கொள்ளத் தேவையில்லை.''
'சாதாரணமாக எல்லாக் கோயில்களுக்கும் செல்வதுபோல் சபரிமலைக்கும் சென்று வரலாமா? இருமுடி அணிந்துதான் செல்லவேண்டுமா?’ என்று சென்னை வாசகர் குலசேகர் கேட்டார்.
''சபரிமலை தரிசனத்துக்கான விரத முறைகள், அகத்திய முனிவர் அருளி யவை. அதையே நாம் அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம். இருமுடி எடுத் துச் சென்றால்தான், 18 படி ஏறமுடியும். ஆனால், 18 படிகளை ஏறாமலும் ஐயனை தரிசிக்கலாம். அது அவரவர் விருப்பம்.''
'நான் சர்க்கரை நோயாளி. வெறும் காலுடன் நடக்கவேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். நான் என்ன செய்வது?’ என்று வாசகர் சேதுராம் கேள்வி எழுப்பினார்.
''வேலை நிமித்தமாகவும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் செருப்பு அணியும் நிலை தவிர்க்கமுடியாதது. தொழிற்சாலை மாதிரியான இடங்களில் வேலை செய்பவர்கள் செருப்பு இல்லாமல் நடந்தால், இரும்புத் துகள்கள் குத்தி விடலாம். எனவே, தவிர்க்க முடியாத காரணங்களுக்கு விதிவிலக்கு உண்டு.''
'முதல் முறை மலைக்கு மாலை அணிபவர் கள், வீட்டில் கன்னிபூஜை செய்வது அவசியம் என்கிறார்களே..?’ என்று வாசகர் சுரேஷ்குமார் கேட்டார்.
''அன்னதானப் பிரபு என்று ஐயப்பனைச் சொல்கிறோம். அந்த அன்னதானத்தின் உன்னதத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிற பூஜை இது. ஆனால், கடன் வாங்கியோ கஷ்டப்பட்டோ, படாடோபமாகவோ பிரமாண்டமாகவோ கன்னி பூஜை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஒரே ஒருவரை மட்டுமே அழைத்தும்கூட கன்னிபூஜை செய்யலாம். உண்மையான பக்தியே பிரதானம்!
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். திருவண்ணாமலை சேஷாத்ரிநாத சுவாமிகளிடம் ஒரு அன்பர் வந்தார். தன் நோய் தீர வழியே இல்லையானு கேட்டார். 'ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்’னு சுவாமிகள் சொன்னார். வந்தவர் ஆடிப்போயிட்டார். உடனே சுவாமிகள், 'பக்கத்துல இருக்கிற மளிகைக் கடைக்குப் போய், ஒரு கைப்பிடி சர்க்கரை வாங்கிட்டு வந்து, எறும்புப் புத்துல போடு. அவ்ளோதான்... லட்சம் பேருக்கு சாப்பாடு போட்டாச்சு’ன்னார். ஆக, மனசுதான் முக்கியம்!'
'

என் அம்மாவுக்கு வயது 51. அவர்களை சபரிமலைக்கு அழைத் துச் செல்லலாமா?’ என்று கேட்டார் வாசகர் மணிமாறன்.
''பத்து வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மட்டும்தான் சபரிமலைக்கு வர அனுமதியில்லை. 51 வயது அம்மாவை தாராளமாக அழைத்துச் செல்லலாம். சமீபத் தில், நான் என் 51 வயது அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு போய், ஒன்றாகவே பதினெட்டாம்படி ஏறச் செய்தேன். இது ஐயப்பனின் ஆசீர்வாதம்!''
'நான் ஒரு கார் டிரைவர். சில நேரங்களில் இரவில் சவாரி செல்லவேண்டி இருப்பதால், பூஜை செய்யமுடியாமல் போகிறது. என்ன செய்வது?’ என்று, திருவாரூரில் இருந்து வந்திருந்த வாசகர் தமிழ்வாணன் கேட்டார். இதே கேள்வியை ஐ.டி. நிறுவனத்தில் பணி புரியும் வினோத்குமாரும் எழுப்பினார்.
''வழிபாடும் முக்கியம். வேலையும் முக்கியம். இன்றைக்கு இரவுப் பணி என்பது சர்வசாதாரண மாகிவிட்டது. ஆகவே, இருந்த இடத்தில் இருந்தபடியே மானசீகமாகப் பூஜிக்கலாம். இதை 'மானஸ பூஜை’ என்பார்கள். நேரடியாக பூஜை செய்யும்போது, ஒரு முழம் பூ போடுவோம். ரெண்டு பழங்கள் நைவேத்தியம் செய்வோம். மானசீகமாக பூஜை செய்யும்போது, குடம் குடமாக பால் அபிஷேகம் பண்ணலாமே! கூடை கூடையாக பூக்களைச் சொரியலாம். அண்டா அண்டாவாக நைவேத்தியங்கள் படைக்கலாம். ஆனால், காலமும் நேரமும் இருந்தும் பூஜை செய்யாமல் இருப்பது தவறு.''
'மாலை அணிந்திருப்பவர்கள், சாதாரண உடை அணிந்து, கழுத்தில் மட்டும் கலர் துண்டு போட்டுக் கொள்கிறார்களே... சரிதானா?’ என்று வாசகர் முத்துலிங்கம் கேட்டார்.
''நாம் மாலை போட்டு, காவி, கறுப்பு நிற ஆடை அணிவது, ஒரு அடையாளத்துக்காகவே! கண்டதை யும் பேசுபவர்கள் நம்மிடம் அப்படிப் பேசமாட்டார்கள். நாமும் அப்படிப் பேசுவதை தவிர்ப்போம். மற்றபடி, அலுவலகம் முதலான பல காரணங்களுக்காக சாதாரண உடை அணிந்து, விரதம் இருப்பது தவறில்லை.
அந்தக் காலத்தில், புனலூர் தாத்தாவாகட்டும், என்னுடைய தாத்தா கல்பாத்தி சீனிவாச ஐயர் (எல்லோரும் கல்பாத்தி சாமி அண்ணா என்று அழைப்பார்கள்) போன்றவர்களாகட்டும்... இருமுடி கட்டும் வரை காவி, கறுப்பு நிற வேஷ்டி கட்டியிருப்பார்கள். இருமுடிகட்டியதும், வெள்ளை வேஷ்டி அணிந்து மலைக்குக் கிளம்புவார்கள். இதை சுப்ரவஸ்திரம் என்பார்கள். அதாவது, சபரிமலை செல்ல விரதம் இருப்பதை இருமுடி கட்டும் வரை எல்லோருக்கும் உணர்த்தினால் போதும். எனவே, ஆடையில் இல்லை விரதம். ஆத்மார்த்தமான நினைப்பிலும் பக்தியிலும்தான் இருக்கிறது!''
'விரதம் இருப்பவர்கள், இறந்தவர்களின் உடலையோ மாதவிலக்கான பெண்களையோ பார்க்கக்கூடாது என்கிறார்களே... ஏன்?’ இது வாசகர் நாகராஜனின் கேள்வி.
''துளசி மாலை, அதில் ஐயப்பன் டாலர் என்று அணிந்து விரதம் இருக்கத் துவங்கியதுமே, அதில் ஐயப்பனின் சாந்நித்தியம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எனவே, களங்கமின்றி இருப்பதற்காக இப்படிச் சொல்லி வைத்தார்கள். அதேவேளையில், மனிதாபிமானம் பக்தியைவிட உசத்தியானது. இறந்தவர் குடும்பத்தில் உதவிக்கு ஆளில்லை, ஆத்ம பந்தத்துடன் பழகியவர் இறந்த நிலையில், பக்கத்தில் நின்று எல்லா ஈமக்காரியங்களையும் செய்வதற்கு உதவ வேண்டும் எனும் நிலை இருந்தால், குருசாமியிடம் விஷயத்தைச் சொல்லி,
மாலையைக் கழற்றிவிட்டு, எல்லாப் பணிவிடை களையும் செய்துவிட்டு, பிறகு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளலாம். பக்தியும் பகவானும் முக்கியம்தான். அதைவிட, உபகாரமும் மனுஷாளும் ரொம்பவே அவசியம்!'' என்று முடித்தார் அரவிந்த் சுப்ரமணியம்.
அதையடுத்து, திருவாபாரணப் பெட்டிக்கு தென்காசி புளியரையில் பூஜைசெய்யும் பாக்கியம் பெற்றதை இசக்கிமுத்து குருசாமி விவரிக்க, ஆச்சரியப்பட்டுப் போனார்கள் வாசகர்கள்.
பிறகு, மீண்டும் வீரமணி ராஜூவின் இசை ராஜாங்கம். நம்பியார் குருசாமியின் தலைமையில் சிவாஜிகணேசன், கன்னட ராஜ்குமார், ரஜினிகாந்த், அமிதாப் ஆகியோரோடெல்லாம் மலைக்குச் சென்றபோது, அவர்களை நம்பியார் எப்படியெல்லாம் வழிநடத்தினார், அவர்கள் அவரிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை அவரவர் பாணியிலும், உடல் மொழியிலும் வீரமணி ராஜூ விவரித்தது, கூடுதல் மிமிக்ரி கொண்டாட்டம்!
தொடர்ந்து, 'உன்னை தெய்வம் என்பதா. அன்னை என்பதா’ என்ற பாடலை அவர் பாடிய போது, வாசகர்கள் பலரும் உணர்ச்சிமேலிட அழுதேவிட்டார்கள். அதிரும் தபேலா இசையு டன் ஆவேசமும் ஆரவாரமுமாக வீரமணி ராஜூ கருப்பர் பாடலைப் பாடத் துவங்கியதும், மிகப்பெரிய கைத்தட்டல் எழுந்தது அரங்கில்! ஒரு சிலருக்கு 'அருள்’ வந்து உட்கார்ந்த நிலையிலேயே சுழலத் தொடங்கிவிட்டார்கள்.
நிறைவாக, படி பூஜை. தேனாம்பேட்டை ஸ்ரீஹரிஹர புத்திரன் பக்தர்கள் சேவா சங்கத்தைச் சேர்ந்த பாலா பூஜை செய்து, கற்பூர ஆரத்தி காட்ட, பதினெட்டாம்படியும் அதன் உச்சியில் அமர்ந்திருந்த அழகு ஐயப்பனும் தகத்தகாயமாக ஜொலித்தார்கள். அனைவரும் சரணகோஷம் எழுப்பி, வழிபட்டார்கள்.
வாசகர் எழில்வண்ணனும் வாசகர் அருணகிரி யும், வீரமணி ராஜூ, அவரின் இசைக் குழுவினர், அரவிந்த் சுப்ரமண்யம், குருசாமிகள் என அனைவ ருக்கும் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள். சென்னை, காளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர், அனைவருக் கும் அன்னதானம் மற்றும் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு அபிஷேகித்த குங்குமப் பிரசாதம், காளிகாம் பாளின் அழகிய திருவுருவப் படம் ஆகியவற்றை வழங்கி னார். அத்துடன், சபரிமலையில் ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகித்த விபூதி, மாளிகைபுரத்து அம்மனுக்கு அபிஷேகித்த மஞ்சள் பிரசாதமும் வழங்கப்பட்டன.

'இதுவரை யாரும் நடத்திடாத புதுமையான நிகழ்ச்சி இது! இதுவே சர்க்கரைப் பொங்கல் மாதிரி தித்திப்பு. இதுல எங்க கையில கிடைச் சிருக்கிற பிரசாதங்கள், நாங்கள் செய்த கொடுப்பினை!’ என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொன்னார்கள் வாசகர்கள்.
''முதல்ல இந்த விழா, டிசம்பர் 25ம் தேதி நடக்கறதாதான் இருந்துது. அப்புறம் சிலபல காரணங்களால, 14ம் தேதியே நடத்தலாம்னு முடிவு பண்ணி, இதோ... இன்னிக்கி அற்புதமா நடந்து முடிஞ்சுது. இன்னிக்கு இங்கே வந்து கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் தர்மசாஸ்தாவின் அருள் நிச்சயம் உண்டு. ஏன்னா... ஐயப்ப ஸ்வாமியின் உத்திர நட்சத்திரம் இன்னிக்கு!'' என்று முத்தாய்ப்பாக அரவிந்த் சுப்ரமண்யம் சொல்லி முடிக்க...
'ஸ்வாமியே சரணம் ஐயப்பா..!’ என்று வாசகர்கள் அரங்கம் அதிர எழுப்பிய சரண கோஷம் அந்த சபரிகிரிவாசனின் காதுகளிலேயே சென்று விழுந்திருக்கும்!