'மருந்தே நம் வினைக்கு’ என்று திருவாய்மொழியில் பகவானைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். நம் உடம்புக்கு ஏற்படும் துன்பம் ரோகம்; உள்ளத்துக்கு ஏற்படும் துன்பம் சோகம். இந்த இரண்டு மட்டுமின்றி, ஜீவாத்மாக்களின் துன்பத்துக்குக் காரணமான பிறப்பு இறப்புக்கும் அருமருந்தாகத் திகழ்கிறான் இறைவன் என்பது பெரியோர் வாக்கு. அப்படி, நம் நோய் நீக்கும் அருமருந்தான பரம்பொருளின் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவரே ஸ்ரீதன்வந்திரி என்கின்றன ஞானநூல்கள்.
அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது கற்பகவிருட்சம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, ஐராவதம் எனும் யானை முதலான பல பொக்கிஷங்கள் பாற்கடலில் தோன்றின. திருமகளும் வாருணிதேவியும்கூட பாற்கடலில் தோன்றியவர்களே! நிறைவாக, ஒரு மூர்த்தி தோன்றினார். அவரே தன்வந்திரி பகவான்.
'சுருண்ட கேசம், பலமான புஜங்கள், அகன்ற மார்பு, கூர்மையான நாசி மற்றும் சிவந்த விழிகளுடன், கழுத்தில் மணி ஆரங்களும், மலர் மாலைகளும் துலங்க அற்புத தரிசனம் தந்த அந்த மூர்த்தி, அட்டைப் பூச்சியுடனும், அமிர்த கலசத்துடனும் தோன்றினார்; சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்ச மான அவரே ஸ்ரீதன்வந்திரி பகவான்’ என்று வர்ணிக்கின்றன புராண நூல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆயுர்வேதத்தை வெளியிட்டவர், யாகத்தில் கொடுக்கும் ஹவிஸுக்கு பாகஸ்தராகத் திகழ்பவர்’ என்று ஸ்ரீநாராயணீயத்தில் இவரைச் சிறப்பிக்கிறார் ஸ்ரீநாராயணப் பட்டத்திரி. 'குருவாயூரப்பா... நீருண்ட மேகம் போல் அழகியவரும், அமிர்த கலசத்தை ஏந்திய வருமான ஸ்ரீதன்வந்திரி பகவானாக சமுத்திரத்தில் தோன்றிய நீங்கள், எனது சகலவிதமான பீடைகளையும் போக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார். அவர் வழியில் நாமும் ஸ்ரீதன்வந்திரி பகவானை உள்ளம் உருக வழிபடுவதாலும், அவர் அருளும் ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வருவதாலும் சகல பிணிகளும் நீங்கும்; தேக ஆரோக்கியம் பெருகும்.
ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயங்கள்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் தன்வந்திரி பகவான். இதுவே, தமிழகத்தின் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கான ஆதி சந்நிதியாம்! இவருக்கு உகந்த நைவேத்தியம் தயிர்சாதம். வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம். இந்த பகவானை ஸ்ரீரங்கநாதரின் மருத்துவர் என்று சிலாகிப்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள். காஞ்சி ஸ்ரீதேவராஜ பெருமாள் கோயிலி லும் தனிச் சந்நிதியில் அருள் கிறார் ஸ்ரீதன்வந்திரி பகவான்.
சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அருளும் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை கள் விசேஷமானவை. முந்திரி, கற்கண்டு, உலர் திராட்சை சமர்ப்பித்து வழிபடுவார்கள். ஸ்ரீதன்வந்திரி ஜயந்தி திருநாளில் சுக்கு, மிளகு, வெல்லம் கலந்து செய்யப்படும் பிரசாதத்தை தன்வந்திரி பகவானுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கும் வழங்குவர். 'தன்வந்திரி மருந்து’ என்று சிறப்பிக்கப்படும் இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, நோய்கள் அணுகாது என்பது நம்பிக்கை.
இந்தத் தலங்களுக்கெல்லாம் நேரில் செல்ல இயலாதவர்கள், கீழ்க்காணும் மந்திரத்தை ஜபித்து, ஸ்ரீதன்வந்திரி பகவானை மனதார வழிபட்டுப் பலன் பெறலாம்.
ஸ்ரீதன்வந்திரி மஹா மந்திரம்
ஒம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
இன்னும் அறிவோம்...