நட்சத்திர நாளில் பிரார்த்தித்தால் பிரிந்த தம்பதி சேருவர்!

##~## |
மயிலாடுதுறை- நன்னிலம் வழித்தடத்தில், பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது முடிகொண்டான். கடும் தவம் புரிந்த பரத்வாஜ முனிவருக்கு, ஸ்ரீராமபிரான் தன்னுடைய பட்டாபிஷேகத் திருக்கோலத்தைக் காட்டியருளிய திருத்தலம்; எனவே, முடிகொண்டான் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!
ராவண வதம் முடிந்து அயோத்தி நோக்கிச் செல்லும் போது, தண்டகாரண்யமாகத் திகழ்ந்த இந்தத் திருவிடத்தில், சில நாட்கள் தங்கிச் சென்றனராம், ஸ்ரீசீதா- ஸ்ரீராமன் தம்பதி! அன்று முதல் இங்கே குடிகொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீகோதண்ட ராமர். ஸ்ரீசீதாபிராட்டி, ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீஅனுமன் சமேதராக அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீகோதண்டராமர். பங்குனியில் திருவிழாவும் திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதம் வந்துவிட்டால், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர் என்கிறார் கோயிலின் சீனிவாச பட்டாச்சார்யர்.

புரட்டாசி புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீகோதண்டராமருக்குச் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள் என அமர்க்களப்படுமாம்! முடிகொண்டான் ஆலயத்துக்கு மூன்று சனிக் கிழமைகள் தொடர்ந்து வந்து, ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீகோதண்டராமரை அர்ச்சித்து வழிபட, திருமண பாக்கியம் கைகூடும் கணவன் அல்லது மனைவியின் நட்சத்திர நாளில், ஸ்ரீகோதண்டராமரை வழிபட்டால், பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவர் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பெண்கள்.
- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா