சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!
புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!
புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!

'உலகளந்த நாயகனாம் திருமாலுக்கு இந்தப் பூவுலகில்தான் எத்தனையெத்தனை க்ஷேத்திரங்கள்? அவற்றுள் முக்கியமான ஒரு தலம், திருமலை என்றும் திருப்பதி என்றும் புகழப்படுகிற திருவேங்கடம்!'' என்று சொல்லும்போதே கண்கள் மூடி, திருவேங்கடவனை நினைத்துச் சிலிர்க்கிறார் ஸ்தலசயனத் துறைவார் ஸ்வாமி.

''அடேங்கப்பா, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள திவ்விய தேசம் இது! 'வைகுந்தத்துக்கும் மண்ணவர்க்கும் இதுவொரு வைப்பு’ என வைஷ்ணவ ஆச்சார்யப் பெருமக்களால் போற்றப்படும் அற்புதத் தலம். அதாவது, விண்ணுலக தேவர்கள் மட்டுமின்றி, மண்ணுலக உயிர்கள் அனைத்தும் பரந்தாமனுக்குக் கைங்கர்யம் செய்யக்கூடிய திருவிடம் என்று அர்த்தம். வேம் கடம் = வேங்கடம்; 'வேம்’ என்றால், வினைகள்; 'கடம்’ என்றால், கடந்து செல்வது. திருமலைக்குச் சென்று திருவேங்கடத்தானைத் தரிசித்தால், வினைகள் (பாவங்கள்) யாவும்

நம்மைக் கடந்துசெல்லும் என்பது சத்தியவாக்கு! கம்பர், தான் எழுதிய ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், திருமலையை சிலாகித்துள்ளார்'' என விவரிக்கிறார் ஸ்தலசயனத் துறைவார் ஸ்வாமி.

''அளவற்ற கருணை கொண்டவன் வேங்கடத்தான். அவனுடைய பெருமை, அவனைவிடப் பெரிது. அத்தகைய பெருமானுக்கு முன்னே நாம் வெறும் துரும்பு. வைகுந்தத்தில் இருந்து நமக்காக மண்ணில் வந்து கோயில்கொண்டிருக்கும் பெருமாளுக்கு திருஷ்டி ஏதும் படாதிருக்க வேண்டும் அல்லவா?! அதற்காக, மங்களகரமாகப் பாசுரம் பாடினார்கள் ஆழ்வார்கள். அதனால்தான் அவற்றை மங்களாசாசனம் எனப் போற்றுகிறோம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோர் மங்களாசாசனம் செய்தருளிய திருத்தலம், திருமலை! இங்கே குடிகொண்டிருக்கும் வேங்கடவனை ஸ்ரீதியாகையர், ஸ்ரீஅன்னமாச்சார்யர், புரந்தரதாசர் ஆகியோர் தங்களது இசையால் பாடிப் பரவினார்கள். இவர்களில் ஸ்ரீஅன்னமாச்சார்யர், 32-க்கும் மேற்பட்ட சங்கீர்த்தனங்களைத் தந்துள்ளார். அதுமட்டுமா?! 'வேங்கடேச சதகம்’ எனும் நூலையும் இயற்றியுள்ளார்'' என வைணவப் பெரியவர்களை ஆராதித்தவர், திருவேங்கடவனின் விழாக்கள் குறித்து விவரித்தார்.

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!

''ஊழிகள் பல கடந்த திருமாலை... எல்லா நாளிலும் எந்த நட்சத்திரத்தில் வேண்டுமாயினும், எந்த மாதமாக இருப்பினும் அவனைக் கொண்டாடலாம். பன்னிரண்டு மாதங்களிலும் திருவிழா எடுத்து வழிபடலாம். 'நாளும் கோளும் அவனிட்ட வழக்கு’ என்பார்கள். அத்தகைய பெருமாளை, அடியவர்கள் பலரும் இணைந்து துதிக்கவும், தங்களுடைய ஆசையையும் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்கிற விதமாக, குறிப்பிட்ட நாட்களில், உத்ஸவங்களையும் விழாக்களையும் வைத்துக் கொண்டாடினார்கள். அப்படிக் கொண்டாடப் படுவதற்கு, அது எம்பெருமானின் திருஅவதார தினமாகவும் இருக்கலாம்; அவரின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்த நாளாகவும் இருக்கலாம். ஆக, எல்லா மாதங்களிலும், திருமாலுக்கு விழா எடுக்கலாம். ஆனாலும், புரட்டாசியில் கொண்டாடப்படுகிற உத்ஸவ- விழாக்கள் தனிச்சிறப்பு கொண்டவை.

##~##
கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்- புரட்டாசி. இந்த மாதம் பௌர்ணமிக்குப் பிறகு வருகிற பிரதமை முதல் மஹாளயம் என்பார்கள். இந்த நாட்கள், பித்ருக்கள் எனப்படும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் தேவதைகளுக்கு உரிய புண்ணிய காரியங்களைச் செய்வதற்கு உகந்த அருமையான நாட்கள். பிரதமை முதல் அமாவாசை வரை இவற்றைக் கொண்டாடலாம். அமாவாசையை அடுத்து வருகிற நாட்கள் மட்டும் என்ன... அப்போதுதானே நவராத்திரி கொண்டாடப்படுகிறது?! அந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீமகாலட்சுமி எனும் பெரிய பிராட்டியாருக்கு உகந்த நாட்கள் என்கின்றனர், வைணவர்கள். அதனால்தான் பெரியபிராட்டியார் குடிகொண்டிருக்கும் திருமலையில், திருவேங்கடத்தானுக்கு பிரம்மோத்ஸவ வைபவம் சிறப்புற நடைபெறுகிறது.

திருமணமாகாத பெண்கள், இந்த மாதத்தில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் சுபவேளை கைகூடும் என்பது உறுதி. இதனால்தான், புரட்டாசி மாதத்தை 'கன்யா மாதம்’ என்றும் சொல்வார்கள்.

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!

புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலையில் ஸ்நானம் செய்து, பூஜையறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, நம் மனதுக்குப் பிரியமான பெருமாளின் திருவுருவத்தை துடைத்துப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், சுத்தமான அரிசியை இடித்து மாவெடுத்து, அதனுடன் வெல்லம் கலந்து  இரண்டாகப் பிடித்துவைக்க வேண்டும். இதில், திரியிட்டு நெய்விளக்கேற்றி, மலர், துளசி கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரது நாமாவளிகளை மனதாரச் சொல்லி வழிபட, அவ்விடத்தில் சாட்சாத் அந்தப் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.  திருப்பதியில் இப்படியரு வழிபாட்டினை, கோயிலின் பல இடங்களில் செய்வார்கள் பக்தர்கள். ஆனால், உத்ஸவ காலமான பத்து நாட்கள் மட்டும், பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடத்தில்தான் மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டுமாம்! காலை நேரத்தில், வீடுகளில் 'திருவிளக்குமாவு’ கொண்டு மாலவனை வழிபட்டுவிட்டு, மாலையில் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

சென்னை- திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில், புரட்டாசி சனிக் கிழமைகளில், 'ஸ்ரீநரசிம்மர் திருவீதி புறப்பாடு’ வைபவம் நடப்பது விசேஷம். புரட்டாசி சனிக் கிழமை மட்டுமின்றி, எல்லா சனிக் கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, ஸ்ரீமந் நாராயணனை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

'பெருமாளே! கோவிந்தா! நாராயணா! ராமா!’ எனத் திருமாலின் எந்தத் திருநாமத்தைச் சொல்லி அழைத்தாலும், அவன் ஓடோடி வருவான். 'நம்பினவர்க்கு நாராயணன்’ என்று சும்மாவா சொன்னார்கள்?!

எனவே, புண்ணிய புரட்டாசியில், திருமாலை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அவனது திருநாமங்களை இடைவிடாது ஜபியுங்கள். பூஜைக்கு மலர்கள், நைவேத்தியத்துக்கு உணவு என எதுவுமே இல்லையாயினும், தூய்மையான சிறிதளவு தண்ணீரே போதுமானது. நாம் முழு பக்தியுடன் தருகின்ற எதையும் ஏற்றுக் கொள்வான். அந்தத் தூயவனை வணங்கி, அவனுடைய திருவடியைத் தொழுதால், நிம்மதியுடன் உங்களை வாழச் செய்வான், திருவேங்கடத்தான்!'' என்று கூறிவிட்டுக் கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்துச் சொன்னார்... 'ஓம் நமோ நாராயணா!’