Election bannerElection banner
Published:Updated:

‘பொம்மை பரமசிவன்’... உடைந்த கொலு பொம்மைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்!

‘பொம்மை பரமசிவன்’... உடைந்த கொலு பொம்மைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்!
‘பொம்மை பரமசிவன்’... உடைந்த கொலு பொம்மைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்!

‘பொம்மை பரமசிவன்’... உடைந்த கொலு பொம்மைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்!

வராத்திரி நெருங்க நெருங்க சூடுபிடிக்கிறது பொம்மைகள் விற்பனை. சென்னை, மாம்பலம் அயோத்தியா மண்டபம் சாலையிலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு அருகிலும் குழுமி இருக்கின்றன, கொலு பொம்மைகள். சென்னை எழிலகம், அண்ணாசாலை காதி கிராஃப்ட், திருவல்லிக்கேணி... என பல இடங்களில் பொம்மைகள் விற்கப்படுகின்றன. சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுதும் இந்த விற்பனை களைகட்டத் தொடங்கியிருக்கிறது. 

நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலுவைப்பது. ஒன்பது நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்துவருகிறவர்களுக்கு பிரசாதமும் தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழ்கிற ஒப்பற்ற நிகழ்ச்சி. கொலு முடிந்ததும், அந்தப் பொம்மைகளை வெகு ஜாக்கிரதையாக எடுத்து பரணிலோ, மரப்பெட்டிகளில் வைத்தோ பாதுகாப்பார்கள். சமயத்தில், சில பொம்மைகள் உடைந்துவிடுவதும் உண்டு. அப்படி உடைந்த பொம்மைகளைச் சரிசெய்து, புதுப் பொலிவுடன் தரும் பணியை ஒரு சேவையாகவே செய்துவருகிறார், பொம்மைக் கலைஞர் பரமசிவன். 

எப்போதும் இல்லாத அளவுக்கு, விதவிதமான அழகழகான பொம்மைகள் விற்பனைக்கு வந்து இறங்கியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், அவற்றின் விலையும் நம்மை மலைக்கவைக்கின்றன. 100 ரூபாயிலிருந்து 2,000, 3,000... 10,000 ரூபாய்க்குக்கூட பொம்மைகள் விற்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி வருகிறது. ஆண்டுதோறும் கொலு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு செட் புது பொம்மையாவது வாங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், எகிறிக்கொண்டே போகும் விலைவாசி அதற்கு இடம் கொடுப்பதில்லை. வீட்டில் வைத்திருக்கும் பழைய பொம்மைகளுக்குத்தான் வர்ணம் தீட்டி, அழகுப்படுத்த முடியும். அதிலும் சில உடைந்து போனால், அதைத் தூக்கிப்போட பலருக்கு மனம் வராது. அழகான ராமர் பொம்மை, மூக்கில் மட்டும் சின்னதாக விரிசல் விட்டிருக்கும். அதை எப்படித் தூக்கிப் போட முடியும்? பல ஆண்டுகளாக பூஜை அறையில் வைத்து வழிபடும் சுவாமி பொம்மைகள், குழந்தைகள் விளையாட வாங்கிக்கொடுத்த விளையாட்டுப் பொம்மைகள், நண்பர்களும் உறவினர்களும் வாங்கிக்கொடுத்து, அவர்களின் நினைவாக வைத்திருப்பவை என இவற்றுக்கும் நமக்குமான உறவு, ஒருவிதத்தில் உணர்வுபூர்வமானதும்கூட. சில வீடுகளில் பல தலைமுறைகளாகக்கூட இவற்றைப் பாதுகாத்துவருகிறார்கள். அப்படிப்பட்ட பொம்மைகள் உடைந்து போனால், அவற்றைச் சீராக்கி, புதிதாக்கித் தருகிறார், மயிலாப்பூரைச் சேர்ந்த பரமசிவன்.  

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் சென்று, `உடைந்த பொம்மைகளைச் சரிசெய்யும் கடை எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், வழிகாட்டுவதோடு, ``அருமையா செஞ்சு குடுப்பாரு பரமசிவன் ஐயா’’ என்று சிபாரிசும் செய்கிறார்கள்.  சித்திரக்குளம் மேற்குத் தெருவில், `ஜெய மாருதி பொம்மை மெனுவல்’ என்ற பெயர்ப்பலகையுடன் காட்சியளிக்கிறது அந்தக் கடை. 

விநாயகர், மேரி மாதா, சாய்பாபா, புத்தர் என `எம்மதமும் சம்மதம்’ என்பதற்கு அடையாளமாக, அத்தனை தெய்வ உருவங்களும் ஒரே வரிசையில் காட்சிதருகிறார்கள்.  மண்ணால் செய்யப்பட்ட வாத்தியக் கலைஞர்களின் பொம்மைகள் தொடங்கி, தோகை விரித்தாடும் மயில்கள் வரை கடை முழுவதும் பொம்மைகள் புடை சூழ நடுவே அமர்ந்து, மும்முரமாக வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தார், பரமசிவன்.  பேச்சுக் கொடுத்தோம். ``அய்யாவுக்கு எந்த ஊர்... எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’’ என்று கேட்டால், மளமளவெனக் கொட்டுகிறார்.

``எனக்கு வயசு 69. திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்குப் பக்கதுல இருக்கிற மடத்தூர் கிராமம்தான் சொந்த ஊர். பொம்மை செய்யுறது எங்க குலத்தொழில் கிடையாது.  அப்பா சுடலைமாடன், ரயில்வே ஊழியர். நடுத்தரக் குடும்பம். ஸ்கூல் படிக்கும்போதே, ஓவியம் வரையறதுல ஈடுபாடு அதிகமா இருந்துச்சு. கூடப் படிக்கிற பசங்களுக்கு நோட்டுல படம் வரைஞ்சு தருவேன். நிறையப் பேருக்கு வரையவும் சொல்லிக் கொடுத்திருக்கேன். வயசாக வயசாக ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகமாயிடுச்சு. பள்ளிப் படிப்பு முடிச்சேன். அப்பா மூலமா ரயில்வே டிபார்ட்மென்ட்லயே உத்தியோகமும் கிடைச்சது. ஆனா, என்னோட எண்ணமெல்லாம் ஓவியம் வரையறதுலயே இருந்துச்சு, அதனால, ஆறு மாசத்துக்கு மேல என்னால அந்த வேலையில இருக்க முடியலை. அப்புறம், அரசு தேர்வுத்துறை நடத்தும் கலைப்பாட தொழில்நுட்பப் பரீட்சையில ஹையர் முடிச்சேன். அந்த நேரத்துல,  கோவில்பட்டியைச் சேர்ந்த கொண்டையராஜுவும் அவருடைய  சிஷ்யர்  ராமலிங்கமும் ஓவியம் வரையிறதுல ரொம்பப் பிரபலமா இருந்தாங்க.  அவங்ககிட்ட முறையா ஓவியம் கத்துக்கிட்டேன்.  அதுக்கப்புறம், என்னோட உறவினர் ஒருத்தர் மூலமா சென்னை வள்ளலார் நகர்ல இருக்கும்  தனியார் நிறுவனத்துல வேலை கிடைச்சது. பெயின்டிங் தொடர்பான வேலைதான். அதுல வருமானம் இருந்தாலும் பெருசா திருப்தி இல்லை. வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இப்பிடி ஒரு கடையை வைக்கலாம்னு தோணுச்சு. கையில இருந்த சொற்பத் தொகையை வெச்சு, இந்தக் கடையை ஆரம்பிச்சேன். 

எதிரே ஒரு  ஆளை உட்காரவெச்சு, அவர் உருவத்தை அப்படியே வரைஞ்சுடுவேன். பொம்மைகள், சிலைகள் செய்வேன். இப்படிப் பல திறமைகள் எனக்கு இருந்தாலும், இப்படி ஒரு கடையை ஆரம்பிக்கணும்கிற எண்ணம்தான் எனக்கு ஆழமா இருந்தது. பொம்மைகள் வெறும் களிமண்ணால், காகிதக் கூழால் செய்யப்பட்ட உருவங்கள் இல்லை. அவை மனிதர்களோட உணர்வோட, வாழ்க்கையோட தொடர்புடையவை. கலை நுணுக்கத்தோட செய்யப்பட்ட பொம்மைகள் உடைஞ்சு போனா, அதை சரிசெய்றதுக்கான இடங்கள் அப்பவுமே ரொம்பக் குறைவாத்தான்  இருந்துச்சு.  வாட்ச், டி.வி., ரேடியோ மாதிரி எலெக்ட்ரானிக் பொருள்களையோ, பைக், கார் மாதிரியான வாகனங்களையோ சரிசெய்றதுக்கு எவ்வளவோ இடம் இருக்கு. ஆனா, நாம ஆசையாகப் பராமரித்து, பாதுகாக்கிற பொம்மைகள் உடைஞ்சு போயிட்டா, அதைத் தூக்கி எறிஞ்சுடுவாங்க. இல்லைனா, பரண்ல போட்டுடுவாங்க. இது மாதிரி உடைஞ்ச பொம்மைகளைச் சரிசெய்யும் கடைகளும் குறைவு. இதையே தொழிலா செய்றவங்களும் குறைவுதான். கிராமங்கள்லகூட பொம்மைக் கலைஞர்களைத் தேடிப்பிடிச்சிடலாம். நகரத்தில் இருக்கிறவங்களுக்கு ரொம்பக் கஷ்டம். அதனாலதான் இந்தக் கடையை ஆரம்பிச்சேன். இதை ஆரம்பிச்சு 20 வருஷங்களுக்கு மேல ஆகிடுச்சு. எனக்குப் பிடிச்ச வேலையைச் செய்யும் திருப்தி கிடைக்குது. சென்னையிலேயே திருமணம் முடிஞ்சு, இங்கேயே செட்டில் ஆயிட்டேன். கடை தொடங்குனதுக்கப்புறம் பல சோதனைகள் வந்தாலும், செய்யிற வேலையில சலிப்பு இல்லாததால, வயசானப்புறமும் இதை விட மனசில்லை. 

பொம்மைகள், பலரின் வாழ்க்கையோட தொடர்புடையது. இப்பவும் சில வீடுகள்ல மூத்த மகளுக்கு கிருஷ்ணர் செட், இளைய மகளுக்கு பட்டாபிஷேக ராமர் செட்னு, சொத்துகளைப் பிரிக்கறது மாதிரி பொம்மைகளைப் பிரிச்சுத் தரும் வழக்கம் இருக்கு. அதை, அவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் பிள்ளைகளுக்கும் கொடுத்துப்பாங்க...’’ பரமசிவன் பேசிக்கொண்டிருக்கும்போது, கடைக்கு எதிரே ஆட்டோ ஒன்று வந்து நின்றது.  அதிலிருந்து கைக்குழந்தையைத் தூக்கி வருவதுபோல, துணியால் சுருட்டிய ஒன்றை நெஞ்சோடு அணைத்தபடி இறங்கினார் ஒரு பெண்மணி. கடைக்குள் வந்தவர், அந்தத் துணிக்குள் இருந்த அம்பாள் பொம்மையைப் பிரித்து, பரமசிவனிடம் கொடுத்தார். ``இது என் அம்மாவுக்கு எங்க பாட்டி சீதனமா கொடுத்தது. அவங்க ஞாபகமாக வெச்சிருந்தேன். நவராத்திரி கொலுவுக்கு வைக்கலாம்னு எடுத்து தொடச்சப்ப, விழுந்து ஒரு கை மட்டும் துண்டாப் போயிடுச்சு. இந்த பொம்மை மேல எனக்கு அவ்வளவு உயிரு.  இந்த வருஷ நவராத்திரிக்கு அம்மா ஊர்ல இருந்து வருவாங்க.  அந்தச் சமயத்துல இப்படி அபசகுனமா நடந்து போயிடுச்சேனு கஷ்டமா இருக்கு. இந்த பொம்மையைப் பழைய மாதிரி ஆக்கித் தர முடியுமா?’’ கண்கலங்காத குறையாக அந்தப் பெண்மணி கேட்டார். 

பரமசிவன் அந்தப்  பொம்மையை எடுத்துப் பார்த்தார். `ஒண்ணும் பிரச்னை இல்லை. சின்னச்சின்ன வேலைகள் செய்யணும். நான் இதை சரிபண்ணிக் கொடுத்திடுறேன். இந்த வருஷ நவராத்திரியை இந்த அம்பாள் பொம்மையோடதான் கொண்டாடுவீங்க’’ என்று ஆறுதலாகச்  சொன்னார். அவ்வளவுதான். அந்தப் பெண் மகிழ்ச்சியோடு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கிளம்பிப்போனார்.  

``இதுதாங்க, என்னோட வேலை. இந்த வேலையைச் சரியா செஞ்சு தர்றப்போ, அவங்களுக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் அளவே இல்லை. ஆண்டவனும் எனக்கு எந்தக் குறையும் வைக்கல. இந்தக் கடையில சம்பாதிச்ச காசைவெச்சுத்தான் என்னோட நாலு பொண்ணுகளையும் நல்ல இடத்துல கட்டிக்கொடுத்தேன். அதுல முதல் பொண்ணை கட்டிக்கிட்டவர்தான் கூடமாட ஒத்தாசையா  இருக்காரு. 

வெறும் நவராத்திரி மாதிரி விசேஷ காலங்கள் மட்டுமில்ல. வருஷம் முழுக்க எனக்கு வேலை இருந்துக்கிட்டேதான் இருக்கும். கடையில வைக்க இடம் இல்லாம வீட்டுலயும் நிறைய பொம்மைகளைவெச்சிருக்கேன்.  சென்னை மட்டுமல்லாம, பக்கத்து மாவட்டம், மாநிலங்கள்ல இருந்தும் கூரியர்ல பொம்மைகள் வருது. அதையும் சரிசெஞ்சு அனுப்புறேன்’’ என்றவர், அனுப்பத் தயாராக இருக்கும் சில பொம்மைகள் அடுக்கியிருக்கும் அட்டைப்பெட்டிகளைக் காட்டினார்.

``ஓவியம் வரையிறதுக்கோ, பெயின்டிங் கத்துக்கணும்னு ஆர்வமாவோ யார் வந்தாலும் அவங்களுக்கு இலவசமாகவே கற்றுத் தர்றேன். வேலையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு திருப்தி வரணும். வர்றவங்க அவசரத்துக்கு செஞ்சு கொடுக்க மாட்டேன். ஏன்னா, உடைஞ்ச பொம்மைகளை ஒட்டுறது ஒரு நாள்ல செஞ்சு முடிக்கிற வேலை இல்லை. நுணுக்கமான வேலை. முதல் நாள், உடைஞ்ச பகுதியை ஒட்டிக் காயவைப்பேன். மறுநாள், அதற்கு ஏத்த மாதிரியான பிரைமரி கலர் அடிச்சு,  எட்டு மணி நேரம் உலர வைப்பேன். அப்புறம், மறுபடியும் இன்னொரு கலர் கொடுப்பேன். இப்படி ஒரு பொம்மையைச் சரிசெய்ய ஒரு வாரத்துல இருந்து, ஒரு மாசம் வரைக்கும்கூட ஆகும். அது, அந்தந்த பொம்மை எப்படி உடைஞ்சிருக்குங்கறதைப் பொறுத்தது. ஒரு பொம்மையைச் சரிசெய்ய இவ்வளவு நாளாகும்னு முதல்லயே சொல்லித்தான் பொம்மைகளை வாங்குகிறேன். அதனால, இரண்டு பேருக்கும் சங்கடமில்லை. சிலர் எவ்வளவு வேணும்னாலும் பணம் தரத் தயாரா இருப்பாங்க. ஆனா, நான் வேலைக்கான கூலியை மட்டும்தான் வாங்குறேன். பணம் வரும், போகும். இப்படி கிருஷ்ணரையோ, ராமரையோ, அம்பாளையோ, சிவலிங்கத்தையோ அழகாக்கித் தரும் பாக்கியம் கிடைக்குமா?’’ என்கிறார் பரமசிவன். அவரைப் பொறுத்தவரை, அவை வெறும் பொம்மைகள் அல்ல. தெய்வாம்சம் பொருந்திய ஜீவன்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு