இருமுடி சுமந்து, 18 படியேறி...பெண்கள் தரிசிக்கும் ஐயப்பன் கோயில்!வி.ராம்ஜி, படங்கள்: ச.வெங்கடேசன்
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 46 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தூர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூருக்குள் நுழையும் போதே, புதிய கலெக்டர் அலுவலகமும் ராஜசேகர ரெட்டியின் சிலையும் கண்ணில்படும். அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், சிறியதொரு மலைப்பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தாகிரி ஸ்ரீஐயப்ப ஸ்வாமி திருக்கோயில். சாஸ்தா குடிகொண்டிருப்பதால் அந்த மலைக்கு சாஸ்தா கிரி என்று பெயர். மலையேறி உள்ளே நுழைந்ததும், 'சபரிமலைக்கே வந்துவிட்டோமா!’ என்று நம்மை ஒரு கணம் வியப்பில் திக்குமுக்காடச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிற பதினெட்டுப்படி நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது.
'இருமுடி கட்டி வந்தால்தான் பதினெட்டுப் படி ஏறமுடியும்’ என்றார்கள் கோயில் நிர்வாகத்தினர். மாற்றுவழியில் உள்ளே சென்றால், முழுக்க முழுக்கக் கேரள பாணியில், அதே கலைத்திறனுடன் கட்டப்பட்டுள்ளது ஐயப்பன் ஆலயம்.

'சபரிமலையில் இப்போது நாம் தரிசிக்கிறோமே... அந்த மணிகண்ட ஸ்வாமியை அட்சரம் பிசகாமல் அதே அளவு, அதே உயரம், அதே எடை எனத் துல்லியமாக வடிவமைத்திருக்கிறோம், இங்கே!’ என்கிறார் சித்தூர் கோயிலின் தந்திரி வாசுதேவ நம்பூதிரி.

''கடந்த 20 வருடங்களாக, சபரீஷ் சேவா சங்கம் எனும் பெயரில், ஊரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய மண்டபத்தில், வருடந்தோறும் சபரிமலை ஐயப்பனை வேண்டி மிகப் பெரிய அளவில் பூஜைகள், இன்னிசைக் கச்சேரி, அன்னதானம் என நடத்தி வந்தோம். அதையடுத்து, 'நம்மூரில் ஐயப்பனுக்குக் கோயில் கட்டினால் என்ன’ எனும் கேள்வியும் ஆசையும் எங்களுக்குள் எழுந்தன. உடனே, கேரளாவில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஹரிதாஸ் நம்பூதிரியை அணுகி, எங்கள் விருப்பத்தைச் சொன்னோம். சபரிமலை ஆலயத்துக்கு பிரஸ்னம் பார்த்த பரம்பரை இவர். இங்கு வந்து, இந்த மலையைப் பார்த்த ஹரிதாஸ் நம்பூதிரி, 'இது மகா சக்தி குடிகொண்டிருக்கும் இடம். சுமார் 350 வருடங்களாக சித்த புருஷர் ஒருவர் இங்கே காளியை நோக்கிக் கடும் தவம் செய்திருக்கிறார். எனவே, சாஸ்தாவுக்கு இங்கு கோயில் கட்டுங்கள். பிறகு, இந்த இடத்தின் சாந்நித்தியம் பல்கிப் பெருகும்’ என அருளினார். அதன் பிறகு, சபரீஷ் டெம்பிள் டிரஸ்ட் எனும் அமைப்பை உருவாக்கி, இந்த ஆலயத்தை எழுப்பினோம்'' என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள்.
சபரிமலையில் உள்ளது போலவே துவஜ ஸ்தம்பம். பதினெட்டுப் படிகள், அதையொட்டிக் கருப்பர் சந்நிதி. உள்ளே நுழைந்தால், கருவறையில் சபரிமலையில் உள்ளது போலவே கிழக்கு நோக்கி அருளும் ஐயப்ப ஸ்வாமி! குறிப்பாக, ஐயப்ப மலையில் நிர்வகிப்பது போலவே, தந்திரி, மேல் சாந்தி ஆகியோரும் இங்கு உண்டு. தந்திரியாக வாசுதேவ நம்பூதிரியும், மேல்சாந்தியாக சசி நம்பூதிரியும் கேரள தாந்த்ரீக, ஆகம விதிகளின்படி, பூஜைகளைச் செய்து வருகின்றனர்.

''சபரிமலை போலவே ஷடாதாரப் பிரதிஷ்டை. பஞ்சலோக விக்கிரகம். பத்மபீடத்தில், சின்முத்திரையுடன் காட்சி தரும் அழகு ஐயப்ப ஸ்வாமி. அங்கே உள்ள பிரதிஷ்டை தின விழாவும் இங்கே பிரதிஷ்டை தின விழாவும் மட்டுமே மாறுபடும். தவிர, சித்திரை அட்டத் திருநாள் பூஜை இங்கே இல்லை. மற்றபடி, மகர ஜோதி தரிசனம் உட்பட அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் உண்டு'' என்கிறார் தந்திரி வாசுதேவ நம்பூதிரி.
சித்தபுருஷருக்காக தினமும் காலையில் சிறப்பு பூஜை நடை பெறுகிறது. பிறகு, மகா காளிக்காகவும் நாகருக்காகவும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சபரிமலை போலவே அஷ்டாபிஷேக பூஜை, புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியனவும் நடத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம், கல்யாண வரம், சத்ருக்களிடம் இருந்து விடுதலை, வீடு வாங்கும் யோகம் என வேண்டுவோர், படி பூஜை, அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் என பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். விரைவில் காரியம் நிறைவேறியதும், விரதமிருந்து, இருமுடி சுமந்து, பதினெட்டுப் படியேறி வந்து மணிகண்ட ஸ்வாமியை தரிசித்துச் செல்கிறார்கள்.

''காளி குடிகொண்டிருக்கும் தலம் இது. எனவே, பெண்கள் 18 நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து வந்தால் நல்லது. அதில் குளிர்ந்து போய், காளிதேவியும் ஐயப்ப ஸ்வாமியும் அருள்புரிவார்கள்'' என தந்திரி வாசுதேவ நம்பூதிரியும் மேல்சாந்தியும் தெரிவிக்க, கோயிலையும் அதன் சாந்நித்தியத்தையும் உணர்ந்த பெண்கள், விரதமிருந்து இருமுடியுடன் வருகின்றனர்.

''கருப்பர், பகவதியம்மன், நாகர் ஆகியோரின் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சபரிமலை போலவே நடை திறப்பு செய்து, பூஜை செய்வதால், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் இருந்து ஏராளமான அன்பர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். குறிப்பாக, சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு அனுமதி கிடைப்பது கடினம். அதற்கு பதிலாக, இங்கு வந்து படிபூஜையும் தினசரி யாகமும் செய்தால், ஐயப்ப ஸ்வாமியின் பரிபூரண அருள் கிடைத்து, சகல ஐஸ்வரியங்களுடன் இருப்பதாக, சந்தோஷத்துடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். எங்கே இருந்தால் என்ன, எந்த மலையாக இருந்தால் என்ன... ஐயனின் அருளாட்சி இருந்தால், அங்கே ஆனந்தம் நிச்சயம்!'' என்கிறார் மேல்சாந்தி சசி நம்பூதிரி.
சாஸ்தாகிரி நாயகனே... சரணம்!
எங்கே இருக்கிறது?
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள சித்தூர் வேலூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது, இங்கு, புதிய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு.