சிறப்பு கட்டுரை
Published:Updated:

நாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு

‘மீனாட்சியம்மனுக்கு மூக்குத்தி நீதானோ..!’படங்கள் : சசி மாரீஸ்

''நாட்டுப்புறப் பாடல்களின் தனிச்சிறப்பே, அதன் அழகியலும் எளிமையும்தான். அவற்றுக்கெல்லாம் தாய் பாரம்பரியம் மிக்க நமது வில்லுப்பாட்டு எனப்படும் வில்லிசை. கதாகாலட்சேபம், கதைப்பாட்டு, இசைப்பேருரை என எல்லாவற்றுக்குமே ஆதாரம் வில்லிசை என்றே சொல்லலாம்!'' என்கிறார் பாரதி திருமகன்.

புகழ்பெற்ற வில்லுப்பாட்டு இசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளான பாரதி திருமகன், மண்மணக்கும் நமது கிராமியப் பாடல்கள் மீது ஆழ்ந்த பற்றும் ஈர்ப்பும் கொண்டவர்.

'கிராமியப் பாடல்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள்’ குறித்து  சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் இவர்.

''வயல்வெளிகளில் வியர்வை சிந்த உழைத்த உழைப்பாளிகளில், பாடும் திறமை கொண்ட கிராமியக் கலைஞன், உழைத்த களைப்பு நீங்குவதற்காகவும், சுறுசுறுப்பாக வேலை செய்யவும் வேண்டி, உண்மையும் கற்பனையும் சேர்த்துப் பாடிய வில்லிசைப் பாடல்களில் இறை வழிபாடும் சேர்ந்தே இருந்தது. ஆதிகாலத்தில் இயற்கையின் ஆற்றலையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சிய காரணத்தால், அவன் சூரியனை வழிபடவும், சூரியனைப் பற்றி வில்லிசையில் பாடவும் செய்தான். அதன் தொடர்ச்சியாக சிறு தெய்வ வழிபாடும் தோன்றியது. தர்மநெறிகளின்படி வாழ்ந்து மறைந்த பெரியவர்கள், திருமணம் ஆகாமலேயே இறந்துபோன கன்னிப் பெண்கள் ஆகியோர் தங்களைச் சேர்ந்தோரின் கனவில் வந்து, தமக்குக் கோயில் கட்டி வழிபடும்படியாகச் சொன்னதன் காரணமாக, பல்வேறு சிறுதெய்வக் கோயில்கள் உருவானதாகச் சொல்வார்கள். ஊருக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும், தியாகப் பெண்மணிகளையும்கூட தெய்வமாக்கிக் கொண்டாடியிருக்கிறார்கள் நம் முன்னோர். சிவபார்வதியரையும்கூட சொக்கன்  சொக்கி என்று வழிபட்டிருக்கிறார்கள். இப்படியான தெய்வங்களின் கதைகள் நாட்டுப்புறப் பாடல்களில் மெள்ள மெள்ள இடம் பெறலாயின. நாட்டுப்புறப் பாடல்களில் கும்மிப் பாட்டு என்று ஒரு வகை உண்டு. பெண்கள் வட்டமாகச் சுற்றி வந்து, கைகளைக் கொட்டியபடி கும்மியடித்துப் பாடுவதே கும்மிப்பாடல்கள். அதில் மாரியம்மன் குறித்த ஒரு கும்மிப்பாட்டு...'' என்றவர், அழகாகப் பாடிக் காட்டுகிறார்.

நாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு

கும்மியடியுங்கள் பெண்டுகளா நீங்கள்

நாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு

கூடியே கும்மி அடியுங்கடி

நம்மை ஆளும் நல்ல மாரித்தாயை

நாடிக் கும்மி அடியுங்கடி

மகமாயித் தாயே உன்

மகிமையை அறிந்த

மனுசங்க ஆருமே இல்லையடி

பகவதி, காளியும்

காமாட்சியும் நீயே

பார்வதியே என்னைக் காப்பாற்றடி!

''கும்மிப் பாடல்கள் மட்டுமா? தாலாட்டுப் பாடல்களிலும் தெய்வங்கள் இடம் பெற்றிருந்தன.

காமாட்சி அம்மனுக்கு கண்ணுக்கு மை நீதானோ!

மீனாட்சி அம்மனுக்கு மூக்குத்தி நீதானோ!

காந்திமதி அம்மனுக்கு கை வளையல் நீதானோ!

கன்னியாகுமரி அம்மனுக்கு கால்கொலுசு நீதானோ!

இதுபோன்று உள்ளத்தை உருக்கும் பாடல்கள் பல உண்டு. மண் மணக்க நம் மக்கள் பாடிவைத்த அந்தப் பாடல்களில் அந்தந்தப் பகுதிகளின் கலாசாரம், பழக்க வழக்கங்கள் பிரதிபலிக்கும். இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப பாடப்பட்ட இந்தப் பாடல்கள் வேடிக்கைப் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, பக்திப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, விடுகதைப் பாட்டு, நடவுப் பாட்டு, கும்மிப் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு எனப் பலவகையாகப்

பரிணமிக்கும். உழவர் திருநாளில் தொடர்புடையவை மழைப் பாட்டு, உழவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு போன்றவை. சூரியனைப் பற்றியும் நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய உண்டு.

உழவர் திருநாளில், 'வானவர் காவலன் இருந்தான் இருந்த திசை போற்றி...’ என முதலில் சூரியனை வழிபட்டு, பொங்கல் இட்டு, நாட்டுப்புறத் தெய்வங்களான ஐயனார், மதுரை வீரன், சாத்தையன், அம்மன் போன்ற சாமிகளுக்குப் படையலிட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பாடல்கள் பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள். இன்றைக்கும் தமிழில் கிராமிய மணம் வீசக் காரணம், இப்படியான கொண்டாட்டங்களே!

கும்மியடி பெண்ணே கும்மியடி

குனிஞ்சு கொட்டி கும்மியடி

கண்ட கண்ட தெய்வமெல்லாம் தெய்வமல்ல

கொண்ட கணவனே தெய்வமடி!

என கணவனையே தெய்வமாக வழிபட்ட நம் குலப் பெண்களின் வாழ்வு முறைகளைக் காட்டும் பாடல் இது. இன்னொரு பாடல் இசக்கியை எப்படி வேண்டுகிறது பாருங்கள்...

மா இசக்கி

வவுரு பசிக்கி

குடல் துடிக்கி

அன்னம் போடம்மா

நீ என்னைப் பாரம்மா

ஆராய்ச்சி மணி கட்டி

அடிக்கச் சொன்னான் ஒரு ராஜா

மணி சத்தம் கேட்டுத்துண்ணா

மக்கள் குறையின்னு அர்த்தம்

ஆராய்ச்சி மணிச் சத்தம்

அடிக்கடியும் கேட்குதுங்கோ

அப்படியின்னா என்ன அர்த்தம்?

அம்மா நீ சொல்லுவாயே,

ஏன் அம்மா..?              (மா இசக்கி)

  இப்படி சமூகச் சூழலைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நாட்டுப்புறப் பாடல்கள், எழுதியவர் யார் என்று பதிவு செய்யப்படாமலேயே போயிருப்பது காலம் செய்த கோலம்தான்.

வரலாற்றில் புகழ்பெறப் பாடி வாழ்ந்தவர் களைக் காட்டிலும், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் பாடிச் சென்ற நம் முன்னோர்களால்தான் இன்றளவும் நம்முடைய பண்பாடு மற்றும் கலாசாரம் நிலைபெற்று இருக்கிறது என்றால் மிகையாகாது. நாட்டுப்புறப் பாடல்கள் அருகி வரும் இன்றையச் சூழலில் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, கிராமங்களில் மட்டும் இல்லாமல் நகர்ப்புறங்களிலும் ஒலிக்கச் செய்யவேண்டும். இதைக் கடமையாக ஏற்றுச் செயல்படுவது ஒன்றே நாம் நம் முன்னோருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்!'' என்கிறார் பாரதி திருமகன்.

               தொகுப்பு: இளந்தமிழருவி