வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்படங்கள் :சே.சின்னதுரை
மண்ணட்பார் மண்ணிற்பார் மருமலர்
அணிபுனை சென்னைச்சேய்
விண்ணட்பார் விண்ணிற்பார் விமல
அமுதமது கொன்னிக்காய்
உண்ணப்பாய் கண்ணிற்பார் உலகம்
தவரவிர் கண்ணிற்கோர்
விண்ணொப்பாய் மன்னற்கோர்
மடிஇலை இடர்இலை நன்நட்பீர்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளச்ர்
(ஸ்ரீமத் குமார சுவாமியம்)
ஆங்கிலேயர்கள் ஆண்ட அக்காலத்தில் சென்னை, எழும்பூர் பகுதியில் பெரிய தறிகளில் நெசவுத் தொழில் செய்வது வழக்கம். பின்னாளில் அவற்றின் அளவைக் குறைத்து, சிறிய தறிகளாக அமைத்து நெசவு செய்தார்கள். சிறிய தறிகள் நிறைந்த பேட்டை என்பதுதான் சின்னதறிப்பேட்டை என்றாகி, சிந்தாதிரிப்பேட்டை என்று மருவியதாகக் கூறுகிறார்கள்.
சிந்தாதிரிப்பேட்டையைப் பற்றிச் சிந்திக்கும்போது, உடனே நமது நினைவில் வருபவர் '64வது நாயன்மார்’ என்று போற்றப்பெறும் வான்கலந்த திருமுருக வாரியார் சுவாமிகள் ஆவார். அவர் சென்னையில் பல்லாண்டுகள் வாழ்ந்தது சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சிங்கண்ணச் செட்டித் தெருவில்தான்.

இங்கு, பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சீடர் அத்யாச்ரம பாலசுந்தர சுவாமிகள் தலைமையில், முருகன் அடியார்கள் சபை ஒன்று நிறுவப் பெற்றது. அச்சபைக்கு 'சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம்’ என்று பெயர் (இந்த வரி, கந்தர் அலங்காரம் 49வது பாடலின் முதல் அடியாகும்). சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்த இச்சபையில் அக்காலத்தில் (192930களில்) மாதம்தோறும் கடைசி சனி, ஞாயிறு நாட்களில் வாரியார் சுவாமிகள் திருப்புகழ் விரிவுரை செய்வாராம். ஒருமுறை, சென்னை (ஜார்ஜ் டவுன் பகுதியில்) நம்புலய்யர் தெருவில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளை வாரியார் சுவாமிகள் தரிசித்தபோது, அவர் 'அசோக கால வாசம்’ என்ற நூலை அடியார்களுக்கு விரிவுரை செய்துகொண்டிருந்தாராம்.
சென்னை கந்தகோட்டம் என வழங்கும் கந்தசாமிக் கோயிலை (1921லச்ர்ச்ரமத் பாம்பன் சுவாமிகள் தரிசித்துள்ளார். அந்த முத்துக்குமாரசுவாமிமீது பதிகங்களும் பாடியுள்ளார். 'யோக மிக்குற்ற நாத! பத்தர்க் கொள்யூக! வெற்றிக் கைவேல! வெற்பத்த என்ன ஓதி மாக முப்பது மூவர் அர்ச்சிக்கும் மாசில் முத்துக்குமாரன் இச்சித்த சென்னை ஈதே’ என, முத்துக்குமரன் விரும்பி உறையும் சென்னை கந்தசாமி கோயில் அருகில் அமைந்ததுதான் சிந்தாதிரிப்பேட்டை. அங்கு, ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள் முருகன் ஆலயத்தை தரிசித்தார்கள். ஐயா முதலி தெரு (மார்க்கெட் பின்புறம்) அமைந்துள்ள முருகவேள் திருக்கோயிலில் அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க 'ஞானவேல்’ ஒன்றை அவர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அவர் திருக்கரங்களால் கடம்ப மரக்கன்று ஒன்று நடப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடம்ப மலர் முருகனுக்கு மிகவும் உகந்த மலர் அல்லவா! அந்த ஞானவேலுக்குத் திருநீறு (விபூதி) அபிஷேகம் செய்து, அடியார்களுக்கு அருட்பிரசாதமாக இன்றும் வழங்கப்படுகிறது. அந்த ஞானவேல் பிரசாதம் அன்பர்களது மனக் கவலைகளை நீக்கி, நோய் தீர்த்து, மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு அருகில் திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன்பேட்டையிலுள்ள முருகனையும் தரிசித்து,ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பதிகம் பாடியுள்ளார்.
புத்தாண்டு, ஸ்கந்தசஷ்டி போன்ற விசேஷ நாட்களில் சிந்தாதிரிப்பேட்டை முருகன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் திருமுருக வாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு பக்திப் பேருரை ஆற்றுவது வழக்கம். காஞ்சி மகாசுவாமிகளும் வழிபட்டுப் பெருமை பெற்றது இத்திருக்கோயில். கோயிலில் நுழைந்தவுடன், இடப்புறம் விநாயகர் அருட்காட்சி வழங்குவார். மூலஸ்தானத்தில் வேழமங்கை, வேட மங்கையுடன் வேல்விநோதன் அருட்பிரவாகமாக நம்மை ஈர்க்கிறார். தன்னை வழிபட வரும் அன்பர்களுக்கு வேண்டியவற்றை அருளக் காத்திருக்கிறார். அடியவர் இச்சையில் எவையெவை உற்றனவோ அவற்றைத் தருவித்து அருளும் கருணைக்கடல் அவர்.
ஆதிசங்கரர் வழிகாட்டியபடி அறுவகை சமய வழிபாடும் நடைபெறும் அழகுத் திருக்கோயில் இது. அபிராமி சமேத அமிர்தகடேசர், வேங்கட மலையான், கனகதுர்கை, காயத்ரிதேவி, ஐயப்பன், ஆஞ்சநேயர், காலபைரவர் மற்றும் நவகிரகங்களுக்கும் இங்கே சந்நிதிகள் அமைந்துள்ளன. அத்துடன் அருணகிரிநாத முனீந்திரர்,ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஷீர்டி சாயிபாபா, ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் முதலான அருட்செல்வர்களும் காட்சியளிக்கிறார்கள். மூலவர் சந்நிதி கோஷ்டத்தில் முறையே கணபதி, ஆலமர்செல்வர், மகாவிஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, லக்ஷ்மி ஆகியோருக்கான சந்நிதிகள் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தில் பிரம்மோற்சவப் பெருவிழா, ஐப்பசி மாதம் ஸ்கந்த சஷ்டியையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி, மஹாஸ்கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் நிறைவுபெறுகிறது. மேலும், வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை தீபத் திருவிழா, பங்குனி உத்திரம் பால்குட ஊர்வலம் முதலான விழாக்களும் உண்டு. பிரதிமாதம் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம் முதலான சிறப்பு நாட்களில் வழிபாடுகளும், பௌர்ணமி பூஜை, ராகுகால பூஜை, அஷ்டமி பூஜை போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் 'சபரி சாஸ்தா சேவா சங்க’த்தினரால் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை, அன்னதானம், திருவீதி உலா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சங்கத்தாரும் முருகவேள் அடியார் மன்றத்தாரும் பெரும் முயற்சி எடுத்து, மிகுந்த கலைநயத்துடன் ராஜகோபுரம், கொடி மரம் முதலியன அமைத்து, 2012ம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். புத்தம் புதுப் பொலிவோடு சித்தத்தில் இனிது உறையும் சீலமிகு முருகன் திருக்கோயில் இது.

'வேலோய், வேலோய்! வீடருள் வேலோய்!’ என்ற ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாக்கிற்கிணங்க, வேலிறைவன் அடியார்க்கெளியன்! சிந்தாதிரிப்பேட்டை முருகன் கோயில் என்பதை 'சிந்தை முருகன் கோயில்’ என்றே அழைக்கிறார்கள். ஆம்! சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடிகொண்ட சிவனருட் செல்வன் அல்லவா அவன்! சிந்தை முருகனை வணங்கிச் சீரும் சிறப்போடும் வாழ்வோம்!