குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்திஸ்யாம்
காலடி திருத்தலத்துக்கு அருகில் இருந்த பெரும்பாவூர் என்ற கிராமத்தில் ஸ்வாமிகள் தங்கியிருந்தபோது, அவருடைய கனவில் வைதவ்ய கோலத்தில் தோன்றிய அந்தப் பெண்மணி யாராக இருக்கும் என்ற சிந்தனையே ஸ்வாமிகளின் மனதை ஆக்ரமித்து இருந்தது. மறுநாள் காலையில், காலடி திருத்தலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி ஸ்வாமிகளிடம் தெரிவிப்பதற்காக, ஸ்ரீமடத்தின் ஸர்வாதிகாரி ஸ்ரீகண்ட சாஸ்திரிகளும், ஏ.ராமசந்திர ஐயரும் பெரும்பாவூருக்கு வந்து, ஸ்வாமிகளை தரிசித்தார்கள்.
காலடி க்ஷேத்திர கும்பாபிஷேக ஏற்பாடுகளைப் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட ஸ்வாமிகள், அவர்களிடம் முந்தின இரவு தம்முடைய கனவில் தோன்றிய பெண்மணி பற்றியும், தம்மை அழைப்பதற்காகவே அவர் வந்ததாகக் கூறியது பற்றியும் தெரிவித்தவர், அதுபற்றி அவர்களுக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டார். முதலில் அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்றுப் பொறுத்து ராமசந்திர ஐயர், ''காலடியில், ஆதிசங்கர பகவத்பாதரின் ஆலயத்துக்கு அருகில் ஓர் அசோக விருட்சம் இருக்கிறது. அந்த விருட்சத்தின் அருகில் ஆதிசங்கரருடைய மாதாவின் சம்ஸ்கார ஸ்தலம் அமைந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

அதைக் கேட்டதுமே ஸ்வாமிகளுக்குத் தம் கனவில் வந்த பெண்மணி யார் என்பது விளங்கிவிட்டது. சாட்சாத் ஆதிகுருவான சங்கர பகவத்பாதரின் தாயாரே தம்மைத் தேடி வந்து ஆசீர்வதித்ததாக உணர்ந்து, சற்று நேரம் எதுவும் பேசத் தோன்றாமல் அசைவற்று நின்றுவிட்டார்கள். பிறகு, தம்முடைய காலடி க்ஷேத்திர கும்பாபிஷேகத்துக்கு ஆசார்ய மாதாவின் பரிபூரண அனுக்கிரஹம் கிடைத்திருப்பதை உறுதி செய்துகொண்டவராக, விஷயத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் உற்சாகப்படுத்தினார்கள்.
மறுநாள் காலை 8 மணிக்கு, காலடிக்கு விஜயம் செய்த ஸ்வாமிகள், முதலில் அசோக மரத்துக்கு அருகில் இருந்த மாதாவின் சம்ஸ்கார ஸ்தலத்துக்குச் சென்று, நமஸ்காரம் செய்துவிட்டு, அந்தி சாயும் வேளையில் அங்கிருந்து புறப்பட்டார். கும்பாபிஷேகத்துக்காக நிர்மாணிக்கப் பெற்றிருந்த யாகசாலைகளுக்குச் சென்று பார்வையிட்டார். கும்பாபிஷேகத்துக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்குவதற்கான வசதி, அவர்களுக்கான உணவு வசதி போன்ற ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்யப்பட்டு இருக்கின்றன என்பன போன்ற விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டதுடன், தாமே நேரில் சென்றும் பார்வையிட்டார். அத்தனை ஏற்பாடுகளும் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருப்பது கண்டு மிகுந்த சந்தோஷம் அடைந்த ஸ்வாமிகள், அனைவரையும் ஆசீர்வதித்து அனுக்கிரஹித்தார்.
யாகசாலையில் நடக்கவேண்டிய சகல காரியங்களையும் கவனித்துக்கொள்வதற்காக குனிகல் ராம சாஸ்திரிகளையும், அப்போது திருநெல்வேலியில் பிரபல வக்கீலாகவும்,ஸ்ரீமடம் தர்மாதிகாரியாகவும் இருந்த ஏ.கிருஷ்ணஸ்வாமி ஐயரையும் நியமித்தார்.
முதலில், கோயிலில் ஆதிசங்கரரின் மூர்த்தத்தை மட்டும்தான் பிரதிஷ்டை செய்வதாக இருந்தது. ஆனால், ஆதிசங்கரர் ஸ்ரீசாரதாம்பாளை தம்முடைய தாயாராகச் சொல்லி இருந்தபடியால், இரண்டு ஆலயங் களும் கட்டி முடிக்கப் பெற்று, கும்பாபிஷேகத் துக்குத் தயார் நிலையில் இருந்தன.

அடர்ந்த காடுபோல் இருந்த அந்தப் பிரதேசத்தை மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு சுத்தப்படுத்தி, இரண்டு கோயில்கள், ஸ்ரீமடம், அருகில் இருந்த ஆற்றில் ஸ்நானம் செய்வதற்கு வசதியாக படித்துறை, ஸ்ரீமட காரியஸ்தர்கள் வந்தால் தங்குவதற்குச் சில கட்டடங்கள் மற்றும் உற்ஸவக் காலங்களில் வரக்கூடிய பக்தர்கள் தங்குவதற்காக சுமார் 600 வீடுகள், இரவைப் பகலாக்கும்படியாகச் செய்யப்பட்டிருந்த விளக்கு வசதிகள் அனைத்தையும் சுற்றிவந்து பார்த்த ஸ்வாமிகள், இத்தனை காரியங்களையும் சிரமேற்கொண்டு சிரத்தையுடனும் சிறப்பாகவும் செய்திருந்த கல்லிடைக்குறிச்சி சிஷ்யர்களை விசேஷமாக அனுக்கிரஹம் செய்து அருளினார்.
14.2.1910 அன்று ஸ்வாமிகள் கிரமப்படி யாகசாலைக்கு விஜயம் செய்து, சங்கல்பம் செய்வித்துக்கொண்டார். அன்றுமுதல் தொடர்ந்து ஏழு தினங்கள் பிரதிஷ்டைக்கான சம்பிரதாயங்கள் சிரத்தையாக நிறைவேறின. 21.2.1910 அன்று பிரம்ம முகூர்த்த வேளையில், விக்கிரஹ பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் கிரமப்படி நடைபெற்றன. ஸ்வாமிகள் விசேஷ பூஜைகள் செய்து, ஆலயங்களுக்கு சாந்நித்தியம் நிலைத்திருக்கும்படி செய்தார்கள்.பின்னர், வந்திருந்த சிஷ்யர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுத்து அனுக்கிரஹம் செய்தார்கள்.
இந்த மகத்தான வைபவத்தில், மைசூர் சிவகங்கா மடாதிபதி ஸ்ரீஸுப்ரமணிய அபிநவ சச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள், சிதம்பரம் ஹரிஹர சாஸ்திரிகள், மைசூர் திவான் வி.பி.மாதவராவ், திருவனந்தபுரம் திவான் சர்.பி.ராஜகோபாலாசாரியார், மைசூர் கவுன்சில் மெம்பர் ஹெச்.வி.நஞ்சுண்டய்யர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பிற்பகலில், பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
அன்று மாலைப் பொழுதில் ஸ்ரீமடத்தில் ஆசார்ய பீடத்தில் அமர்ந்த ஸ்வாமிகள், அங்கிருந்த பக்தர்களும் சிஷ்யர்களும் பரவசப்படும்படியாக ஸ்ரீமத் சங்கரபகவத்பாதரின் திவ்வியமான சரிதத்தை விஸ்தாரமாக எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து, எல்லா சிஷ்யர்களும் அடிக்கடி காலடி க்ஷேத்திரத்துக்கு வந்து தரிசித்து வணங்கவேண்டும் என்று ஆக்ஞாபித்தார்கள்.

சுமார் இரண்டு வருஷ காலமாக இப்புனிதப் பணியை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்து தம்முடைய குருபக்தியை வெளிப்படுத்திய ராமசந்திர ஐயருக்கு, 'குருபக்த கேஸரி’ என்ற பட்டம் வழங்கியதுடன், ரத்தினங்களால் ஆன ருத்ராக்ஷகண்டி, சால்வை போன்றவற்றை வழங்கி ஆசீர்வதித்த ஸ்வாமிகள், ராமசந்திர ஐயரின் குருசேவையில் மிகவும் உபகாரமாக இருந்து, தன்னுடைய சிற்பக்கலை ஞானத்தை வெளிப்படுத்திய இ.ஆர்.சுப்பராயரையும், ஸ்ரீசங்கர கிரந்தாவளியை அழகான முறையில் அச்சிட்டுத் தந்த ரங்கம் வாணிவிலாஸ் பிரஸ் உரிமையாளர் டி.கே.பாலசுப்ரமணிய ஐயரையும் பாராட்டி கெளரவித்தார்கள்
கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, சிஷ்யர்களுக்கும் தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு, சுமார் மூன்று மாத காலம் காலடி க்ஷேத்திரத்தில் தங்கியிருந்த ஸ்வாமிகளை, அவரின் ஆத்ம பக்தர்களான கொச்சி மகாராஜா, மைசூர் மகாராஜா போன்றோர் வந்து தரிசித்து வணங்கி, ஆசி பெற்றுச் சென்றார்கள்.
பிறகு ஸ்வாமிகள், கிராம ரக்ஷைக்காக கோயிலுக்கு அருகில் இருந்த ஓர் அரச மரத்தில் ஆஞ்சநேயரையும், அசோக மரத்தில் கார்த்தவீர்யாஜுனரையும் ஆவாஹநம் செய்து, சனி மற்றும் வியாழக்கிழமைகளில் கிரமப்படி பூஜைகள் செய்யும்படியாகக் கூறிவிட்டு, காலடி க்ஷேத்திரத்தில் ஆதி குருநாதருக்கும் ஸ்ரீசாரதாம்பிகைக்கும் ஆலயம் நிர்மாணித்துவிட்ட ஆத்ம திருப்தியுடன் அங்கிருந்து சிருங்கேரிக்குப் புறப்பட்டார்.
அப்போது அவர் மனதில், அதுவரை சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த மஹான்களைப் பற்றிய நினைவுகள் எழுந்து பரவசப்படுத்தின. அந்த மஹான்கள்...
தொடரும்...
தொகுப்பு: க.புவனேஸ்வரி
படம்: ஜெ.வேங்கடராஜ்