சிறப்பு கட்டுரை
Published:Updated:

ஞாயிறு போற்றுதும்...

சூரிய தேவா நமோ நம:படங்கள்: பூசை.ஆட்சிலிங்கம்

உலகில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்பவர் சூரியன். அவராலேயே இரவு பகல் உண்டாகிறது. அவரை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. எல்லையற்ற அண்டப் பெருவெளியில் அவர் காலதேவனாக ஒளிர்கிறார். அவரிடம் இருந்தே உயிர்களுக்கு ஒளியும் வெம்மையும் கிடைக்கின்றன. 

கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறிவு, கவிதை, கணிதம், சிகிச்சை ஆகியவற்றுக்கான கடவுளாக, அப்பல்லோ என்ற பெயரில் சூரியனை வழிபட்டனர். இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகிய தேசங்களில் அவருக்கு 'பெலினஸ்’ என்று பெயர். நமது புராணங்கள் ஞானம், பேராற்றல், அழகு ஆகியவற்றின் உறைவிடமாகவும், பல்வேறு வியாதிகளைப் போக்கி, நீண்ட ஆயுள் தரும் தேவனாகவும் சூரியனைப் போற்றுகின்றன.

இத்தகு சிறப்புமிகு சூரியனுக்கு உகந்த மாதம் தைத் திங்கள். சூரியதேவன் மகர ராசியில் பிரவேசிக்கும்  உத்தராயனமாக வடக்கு நோக்கி அவரது பயணம் துவங்கும் இந்த மாதத்தைப் போற்றும் விதமாக, சில சூரியத் தகவல்கள் இங்கே உங்களுக்காக!

உபநிடதங்கள், தேவாரப் பாடல்களில் சிவ சூரியன்!

ஞாயிறு போற்றுதும்...

சிவனடியார்கள் சூரியனை சிவசூரியன் என்று போற்றுவார்கள். சாந்தோக்ய உபநிஷத்தும், தைத்ரிய சம்ஹிதையும் சிவபெருமான் சூரிய மண்டலத்தில் விளங்குவதைச் சிறப்புடன் குறிப்பிடுகின்றன.

'பொன்வண்ண கேசத்துடனும் தாமரை போன்ற கண்களுடனும் திகழும் புருஷர் ஞாயிறு மத்தியில் விளங்குகிறார்’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். இதில், சிவபெருமானைப் பற்றிய வர்ணனை நேரடியாக இல்லை. ஆனால், தைத்ரிய சம்ஹிதை சிவபெருமானின் நீலகண்டத்தையும் செந்நிறத்தையும் சிறப்புடன் விவரிக்கிறது. 'சூரிய மண்டலத்துள் சூரியோதய அஸ்தமனம் செய்யும்படி தோன்றுகிறார் சிவபெருமான்.  இவர் நீலகண்டமும் செந்நிறமும் கொண்டவர். சூரிய வடிவாக விளங்கும் இவரைக் கோபாலரும், மாலையில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் கண்டார்கள். பசு, எருமை முதலான உயிரினங்களும் அவரைப் பார்க்கின்றன. இத்தகைய இறைவன் எங்களுக்கு ஆனந்தம் விளைவிப்பாராக’ என்கிறது தைத்ரிய சம்ஹிதை.

மாலை நேரத்தில் முனிவர்கள் சூரியனையும், அவனுள் பிரகாசிக்கும் சிவனாரையும் வணங்குவதாக தைத்ரிய சம்ஹிதை சித்திரிக்கும் காட்சியை, தேவாரப் பாடல் எப்படிச் சிறப்பிக்கிறது தெரியுமா?

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்கனாவான் அரன்வுரு அல்லனோ

இருக்கு நான்மறை ஈசனையே தொழும்

கருத்தினை நினையார் கன்மனமாவரே

என்கிறது தேவாரப்பாடல் (திருநாவுக்கரசர்  ஆதிபுராணக் குறுந்தொகை). 'மாலை நேரத்தில் சூரியனை (அருக்கன்  சூரியன்) அனைவரும் வணங்குகின்றனர். அந்தச் சூரியவடிவம் சிவபெருமான் அல்லவோ? ரிக் முதலான நான்கு வேதங்களும் ஈசனையே தொழுகின்றன. இதை அறியாதவர் கல் மனம் கொண்ட மூடர் அல்லவா?’ என்பதே இப்பாடலின் கருத்து.

ஞாயிறு போற்றுதும்...

ஸ்ரீ ஏகதின பிரம்மோற்ஸவம்!

வைணவ மரபில், சூரிய பகவானை சூரியநாரயணராகப் போற்றுவர். தை மாதம் அமாவாசையை அடுத்த ஏழாம் நாளான ரத சப்தமி திருநாளை, இவருக்கு உகந்த நாளாகச் சிறப்பிப்பார்கள். இந்தத் திருநாளன்றுதான் சூரியன் வடக்கு நோக்கிய தமது (உத்த ராயன) பயணத்தைத் துவங்குவதாக ஐதீகம். இந்தத் தினத்தில் பெரும்பாலான பெருமாள் திருத்தலங்களில் ஏகதின பிரம்மோற்ஸவம் நடைபெறும். அன்றைக்கு மட்டுமே ஸ்வாமி ஏழு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தத் திருநாளில் மிகப் பொலிவுடன் திகழும் சூரிய நாராயணரை வழிபடுவது மிக விசேஷம்.

ஸ்ரீ ஆதித்யர் பன்னிருவர்

இரண்டு சுடர்கள், மும்மூர்த்திகள், நான்கு வேதங்கள், பஞ்சபூதங்கள், ஆறு அங்கங்கள், ஏழு மாதர்கள், எட்டு வசுக்கள், ஒன்பது கிரகங்கள் என்பது போன்று, சூரியனைப் பன்னிருவராக விளக்குகின்றன புராணங்கள்.

இவர்கள், சிவனருளால் உதித்த ஆதித் தீ (முதலில் தோன்றிய தீக்கோளம்) எனும் பொருள்பட ஆதித்யர்கள் எனப்பட்டனர். பன்னிருவர் என்பதால் பன்னிரு ஆதித்யர்கள் அல்லது துவாதச ஆதித்யர் என்று அழைப்பர். மாதத்துக்கு ஒருவராக வான மண்டலத்தில் பிரகாசத்துடன் வலம் வந்து, உலகுக்கு ஒளியையும் உயிர்ச் சக்தியையும் அளிக்கின்றனர். அப்படி அவர்கள் வலம் வரும்போது, நாகங்கள் தேரின் வடமாக இருக்கின்றன; இயக்கர்கள் அந்தத் தேர் வடத்தைப் பற்றி இழுக்கின்றனர்;  கந்தர்வர்கள் பாடுகின்றனர்; அரம்பையர்கள் தேரின் முன்பு நடனமாடுகின்றனர்; அரக்கர்கள் காவலாக இருக்கின்றனர்; ஆதித்யர்களை முனிவர்கள் வாழ்த்துகின்றனர் என்று புராணங்கள் விவரிக்கின்றன.

இந்தப் பன்னிரண்டு சூரியர்களின் பெயர்கள் குறித்த விவரம் வெவ்வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. அவை:

* தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், பூஷன், கவித்துரு, துவஷ்டன்.

* அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா.

* விசுவான், அரியமா, பூஷா, துவஷா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன்.

இவை தவிர, வழக்கில் அதிகமாக உள்ள பன்னிரு சூரியர்கள் குறித்த பெயர்கள்: வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி. சைவர்கள் பெரும்பாலும் இந்தச் சூரியர்களையே போற்றி வழிபடுகின்றனர். இவர்கள்  'சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.

வைணவ மரபில் இந்தப் பன்னிருவரை 'கேசவாதித்யர்கள்’ என்று குறிப்பிடுவர். மேலும் ஜைன, பௌத்த சமயங்களில்கூட ஆதித்ய வழிபாடு சிறப்புடன் இருப்பதைக் காணலாம்.

ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய சூரியன் தனது பணியைத் தொடங்கும்போது, அவரை வாழ்த்தி

ஞாயிறு போற்றுதும்...

வரவேற்பதாகவே, தமிழ் மாதத்தின் முதல் நாளில் சூரிய வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இதனை மாத சங்கராந்தி அல்லது மாதப் பிரவேசம் என அழைப்பர் (தை மாதத்தை மகர மாதம் என்பர். ஆகவே, அதன் முதல் நாள் மகரசங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது). இந்த நாளில் சூரியனுக்கும் உலாத்திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

பன்னிரு சூரியர்களும் வழிபட்ட லிங்கங்களே பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் என்றொரு கருத்தும் உண்டு. சோழ நாட்டில் இவர்கள் வழிபட்ட தலங்கள் 'சௌரக்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்பட்டனவாம். ஆனால், சூரிய வழிபாடு நடை பெற்றதாக எண்ணற்ற தலங்களை புராணங்கள் குறிப்பிடுவதால்,  சோழ தேசத்தில் குறிப்பிட்ட பன்னிரு ஆதித்ய தலங்கள் எவை என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.

எனினும், பன்னிரு ஆதித்யர்களும் ஒன்றுகூடி வழிபட்ட தலங்களை அறியமுடிகிறது. அவை: திருக்கழுக்குன்றம், திருச்செம்பொன்பள்ளி ஆகியன.

ஸ்ரீ பன்னிருவர் வழிபட்ட பாஸ்கரபுரி

ஒருமுறை, உலகை ஒளிரச் செய்யும் பணியை யார் செய்வது என்பதில், ஆதித்யர்கள் பன்னிருவருக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. பிரம்மதேவன் அவர்களை ஆற்றுப்படுத்தி, சித்திரை துவங்கி ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொருவர் பணி செய்யும்படி உத்தரவிட்டார்.

அப்படி அவர்கள் பணி செய்யும் காலத்தில், உதயவேளையின்போது, மந்தேகர் முதலான அசுரர்கள் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தினர். எனவே, ஆதித்யர்கள் பிரம்மனைத் தரிசித்து முறையிட்டனர். அவர், அவர்களை திருக்கழுக்குன்றத்துக்குச் சென்று வழிபடும்படி கூறினார். அதன்படியே, அவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்று சிவனாரை வழிபட்டார்கள். அவரும், அசுரர்களால் ஏற்படும் தடைகள் நீங்க அருள்பாலித்ததார். இங்ஙனம் ஆதித்யர்கள் வழிபட்டதால் திருக்கழுக்குன்றத்துக்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டதாக திருக்கழுக்குன்றத்து உலா, திருக்கழுக்குன்ற புராணம் ஆகிய நூல்கள் விவரிக்கின்றன.

ஸ்ரீ ஸ்படிகலிங்கம்

சூரியனுக்கு உரிய கற்களில் தலைசிறந்தது ஸ்படிகம். எனவே, சிவசூரியனாக விளங்கும் சிவபெருமானை ஸ்படிகக் கல்லில் லிங்கமாகச் செய்து வழிபடும் வழக்கம் உண்டு.

ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இம்மையில் ஞானமும், மறுமையில் மோட்சமும் கிடைக்கும். எனவே, ஞானாசார்யராக விளங்கும் துறவிகள் ஸ்படிக லிங்கத்தைப் பூஜை செய்கின்றனர். ஸ்படிக லிங்கத்தை இல்லறத்தார் பூஜித்தால் ஞானமும், பொருட் செல்வமும் உண்டாகும் என்பார்கள். சிதம்பரம், காளஹஸ்தி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் ஸ்படிக லிங்கங்கள் நித்ய பூஜையில் சிறப்புடன் வழிபடப்படுகின்றன.

சூரிய மண்டலத்தில் சிவசக்தி வடிவமாக, அர்த்தநாரீஸ்வர கோலத்தில் சிவனார் அருள்வதாகவும் ஞானநூல்கள் கூறுகின்றன. இதனைக் குறிக்கும் வகையில், பல ஸ்படிக லிங்கங்களில் ஒரு பக்கத்தில் மட்டும் சிவப்பு அல்லது கருநீல நிறம் இயற்கையாகவே படிந்திருக்கும். இவற்றை, அர்த்தநாரீஸ்வர ஸ்படிக லிங்கங்கள் என்று அழைப்பார்கள்.

ஸ்ரீ பரிதி நியமம்

பரிதி என்றால் சூரியன்; நியமம் என்றால் கோயில். சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற கோயில் 'பரிதி நியமம்’ என்று பெயர் பெற்றது. தற்போது 'பருத்தியப்பர் கோயில்’ என வழங்குகிறது. இங்கு அருளும் ஸ்வாமிக்கு பாஸ்கரேஸ்வரர், பருதியப்பர் என்று திருப்பெயர்கள்.

தாங்கமுடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழும் பொருட்டு, சித்ராபெளர்ணமி தினத்தில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட திருத்தலம் இது. சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன் உள்ளது. இன்றைக்கும் பங்குனி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கிரணங்கள் ஸ்வாமியின்மீது படிகின்றன. அம்பிகையின் பெயர் மங்கலநாயகி. இந்தக் கோயில் குறித்து திருநாவுக்கரசர் 'பருதி நியமத்தார் பன்னிரு நாள்’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதையொட்டி, பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன் வழிபட்டான் என்பர்.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஒருகாலத்தில் இது சூரியனின் கோயிலாக இருந்து, பின்னாளில் சிவாலயமாக மாறி யிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஸ்ரீ சூரியன் பூசித்த ஏழு தலங்கள்

சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. திருவேதிக்குடி தல புராணத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல்...

கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்

பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி

பொற்புற வார்பனங்காட் டூர் நெல்லிக் காவேழும்

பொற்பரிதி பூசனை செய்யூர்.

'கண்டியூர், வேதிக்குடி, நல்லகுடந்தைக் கீழ்க்கோட்டம் எனும் கும்பகோணம் நாகேசுவரர் ஆலயம், பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர் கோயில், திருத்தெளிச்சேரியான கோயில் பத்து, பொன்புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா ஆகிய ஏழு திருத்தலங்களும், பொன்போல் பிரகாசிக்கும் சூரியனானவன் சிவனாரை வழிபட்ட திருத்தலங்கள் ஆகும்’ என்பதே இந்தப் பாடலின் கருத்து.