குலம் காக்கும் கோமாதா...ரெ.சு.வெங்கடேஷ்படங்கள் : க.பாலாஜி
மனித வாழ்க்கை என்பது ஐந்து புலன்களால் மட்டும் இயங்குவது அல்ல. பஞ்ச பூதங்களின் இயக்கத்தின் காரணமாகவே மனித வாழ்க்கை இயங்குகிறது. பஞ்ச பூதங்களே இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் ஆதாரம். இவையே இயற்கையாகவும் இறைவனின் இருப்பாகவும் திகழ்கின்றன. இந்த இயற்கையை எதிர்த்து நிற்கமுடியாது என்ற உண்மையானது மனிதனுக்குப் புரியவந்தபோது, அவன் இயற்கையை சூரியன் என்றும், வருணன் என்றும், வாயு என்றும் வழிபடத் தொடங்கினான்.

மனிதனால் கட்டுப்படுத்தவோ நெருங்கவோ முடியாதவையான ஜடப்பொருள்களை மட்டுமின்றி, அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து, காலமெல்லாம் அவனுக்கு அளவற்ற நன்மைகளையும் அள்ளி வழங்கும் உயிருள்ள ஒரு ஜீவனையும் அவன் தெய்வமாக எண்ணி வழிபட்டான்.
மனிதன் போற்றிப் பாராட்டிய அந்த ஜீவன் எது தெரியுமா? சுயநலமே இல்லாமல் தன் உதிரத்தையே அமுதம் நிகர்த்த பாலாக, தான் வாழும் நாளெல்லாம் நமக்காக வழங்கும் அந்த ஜீவன் பசுவைத் தவிர, வேறு எதுவாக இருக்கமுடியும்? உண்மைதான். ஆதி நாளில் மனிதன் தெய்வமாக எண்ணி வழிபட்ட பசுவைப் பற்றியும், அதன் இன்றைய நிலைமையைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
பசுவுக்கு, 'கோ’ என்றும் ஒரு பெயர் உண்டு. 'கோ’ என்பது பசுவை மட்டும் குறிப்பது அல்ல; அரசனையும், இறைவனையும் கூடக் குறிப்பதாகும். இறைவனின் படைப்பிலேயே அவனுக்கு நிகரான ஒரு படைப்பு என்றால், அது பசுதான். பசுவினிடத்தில் சகல தெய்வங்களும் உறைந்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. 'கோமாதா வழிபாடு’ என்றும், 'கோ பூஜை’ என்றும் பசுவை மனிதன் பயபக்தியோடு வணங்கி வழிபட்டான். துவாபர யுகத்தில் பசுக்களைப் போற்றிப் பாதுகாத்திருக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. அதனாலேயே அவருக்கு 'கோபாலன்’ என்றொரு திருப்பெயரும் உண்டு. நாமும் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பரந்தாமன் இப்படியொரு லீலையைப் புரிந்தார். அவ்வளவு ஏன்... சாட்சாத் அந்த பூமாதேவியே பகவானிடம் பிரார்த்திக்க தன்னுருவில் செல்லாமல், பகவானுக்குப் பிரியமான கோமாதா வடிவில் சென்றதும்கூட துவாபர யுகத்தில் நடந்திருக்கிறது.
நம் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் அத்தனை நல்ல விஷயங்களும் ஒருங்கே பெற்றிருக்கும் ஒரே ஜீவன் பசு மட்டும்தான்.
ஒரு குழந்தைக்கு அதன் தாய்ப்பாலை நிகர்த்த பாலை வழங்குவது பசுதான். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது பசும்பால்.
நாடே வறுமை நிலையில் இருந்தாலும், பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது என்பது பழமொழி. பாலில் இருந்து கிடைக்கும் தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் அனைத்தும் ஊட்டச்சத்துமிக்க பொருட்கள். பசு மாட்டின் கோமியமும் சாணமும் கிருமிநாசினி தன்மை கொண்டவை. இந்த அறிவியல் உண்மையை அன்றே அறிந்திருந்த காரணத்தால்தான், வீட்டு வாசலில் சாணத்தைக் கரைத்து மெழுகினர் நம் முன்னோர். அது வீட்டுக்குள் எந்தவித நோய்க் கிருமிகளும் வரவிடாதபடி தடுத்து, ஆரோக்கிய வாழ்க்கையைத் தந்தது.
கிரகப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களின்போது பசுமாட்டை வீட்டுக்குள் அழைத்து வந்து பூஜை செய்து வழிபட்டு, அந்தப் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளிப்பர். இந்தச் சம்பிரதாயத்தின் மூலம் வீட்டுக்குள் எல்லா தெய்வங்களும் எழுந்தருளியது போலாகும். அது மட்டுமின்றி, சகல கிருமிகளும் அகன்று வீடு தூய்மையாகும்; புனிதமாகும்.

அன்றும் இன்றும் என்றும் கோமாதாவின் முதல் பிள்ளை விவசாயிதான். பசு மற்றும் காளை மாடுகளைக் கொண்டு ஒரு விவசாயி செழிப்பாக விவசாயம் செய்திட முடியும். அதிகாலை எழுந்து, ஏர் பூட்டி உற்சாகப் பாடல் பாடி, களைப்பு தெரியாமல் காளையைக் கொண்டு நிலத்தை உழுதுவிடுவார்கள். காளை மாடுகளிடமிருந்து நமக்கு உழைப்பு வடிவில் உதவி கிடைக்க, பசுவிலிருந்து பஞ்சகவ்யம் கிடைக்கிறது. 'பஞ்ச’ என்றால் ஐந்து; 'கவ்யம்’ என்றால், பசுவிடமிருந்து கிடைக்கும் பொருள். பசுவின் பால், தயிர், சாணம், நெய், கோமியம் ஆகிய ஐந்தையும் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பூச்சிவிரட்டியாகவும், பயிர்களின் உயிர்ப்புத் தன்மை அதிகரிக்க உரமாகவும் இயற்கை விவசாயத்தில் பயன்படுகிறது. தனக்கு உதவும் காளைக்கும் பசுவுக்கும் நன்றி சொல்லவே பொங்கல் திருவிழாவின்போது மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 'பசுவோடு வாழ்க’ என்று வாழ்த்தும் மரபும் முற்காலத்தில் இருந்திருக்கிறது.
பசுவைப் பற்றிப் புராணங்களில் பல இடங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. பாற்கடலைக் கடைந்தபோது, பெண்ணின் முகமும் பசுவின் உடலும் கொண்டு தோன்றியதும், கேட்பதை எல்லாம் அருள்வதுமான காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் போற்றப்படுகின்றன.
பாற்கடலில் தோன்றிய காமதேனுவை வசிஷ்ட மாமுனிவர் போற்றிப் பராமரித்து வளர்த்து வந்தார். ஒருமுறை, கெளசிக மன்னன் வசிஷ்ட முனிவரின் ஆசிரமம் வழியாக வரும்போது, அரசனுக்கு மரியாதை செலுத்தவேண்டியது தனது கடமை என்று நினைத்த வசிஷ்டர், காமதேனுவின் உதவியால் மன்னனுக்கும் அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து வழங்கினார். காமதேனுவின் மகத்துவத்தை அறிந்த மன்னன், அதைத் தனக்கு வழங்கும்படி வசிஷ்டரிடம் கேட்க, அவர் மறுத்துவிட்டார். மன்னன் கேட்டு மறுப்பதா என்று சினம் கொண்ட கெளசிகன், வசிஷ்டரின் மேல் போர் தொடுக்க, காமதேனுவின் உதவியால் அவனைத் தோற்கடித்தார் வசிஷ்டர். துறவின் பெருமையை அறிந்த கெளசிக மன்னன் தானும் துறவு மேற்கொண்டான். அவரே விசுவாமித்திர மகரிஷி எனப் பெயர் பெற்றார்.
காமதேனுவின் அம்சமான பசுக்களிடம் மனிதனுக்கு என்றுமே தணியாத ஆசை இருந்து வந்திருக்கிறது. ஒரு நாட்டைப் போரில் வெல்லும் மன்னன், அந்த நாட்டில் எத்தனை விதமான செல்வங்கள் இருந்தாலும், முதலில் அவன் கவர்ந்துகொள்ள நினைப்பது பசுக்களைத்தான். போரில் தோல்வியுற்று பசுக்களைப் பறிகொடுப்பது என்பது பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. அந்த அளவுக்கு பசுக்கள் கெளரவ அடையாளமாகப் போற்றப்பட்டன.
முற்காலத்தில், கோயில்கள்தோறும் பசுக்களை வளர்த்து வந்திருக்கிறார்கள். கோயில் பசுக்கள் தரும் பாலையே இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தினர். இன்றும் பல கோயில்களில் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. கோயில்களில் விசுவரூப தரிசனத்தின்போது, முதலில் பசுவை அழைத்து வந்து, மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்லப்படும் அதன் பின்புறம் இறைவனின் கருவறையைப் பார்த்து இருப்பதுபோல் நிற்க வைப்பார்கள். இறைவனுக்கு நிகரானதாகவும், சகல தெய்வங்களின் வசிப்பிடமாகவும், மனித குலத்துக்கு அளவற்ற நன்மைகளை அட்சய பாத்திரம்போல் வழங்கக் கூடியதுமான பசுக்களை இன்றைக்கு நாம் எப்படி நடத்திக்கொண்டு இருக்கிறோம்..?
அடுத்த இதழில்