Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 7

சரணம்... சாயி சரணம்...எஸ்.கண்ணன்கோபாலன்படங்கள்: ஜெ.பி.

ஸ்ரீசாயிநாதர் ஷீர்டி கிராமத்துக்கு வந்து சேர்ந்த சில நாட்கள் வரையிலும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதில் யாரும் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் காலையில், ஊரின் எல்லையில் இருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் பதினாறு அல்லது பதினேழு வயதே ஆன ஓர் இளைஞன் வந்து அமர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கே சென்று பார்த்தபோது, அந்த இளைஞனாகிய பாபா கண்களை மூடியபடி தியான நிலையில் இருந்தார். ஷீர்டி மக்கள் முதலில் அவரை யாரோ ஒரு வழிப்போக்கராகவே நினைத்துப் பேசாமல் தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார்கள். 

பாபாவை தவத்தில் சிறந்த யோகி என முதலில் உணர்ந்து தெளிந்தவர் மஹல்சாபதி என்பவர்தான். அவர், தாம் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், தம்முடைய நண்பர்களிடமும் பாபா ஒப்பற்ற மகான் என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களையும் பாபாவிடம் அழைத்துச் சென்றார். நாளடைவில் ஷீர்டி மக்களும் பாபாவின் தேஜஸினால் கவரப்பட்டவர்களாக அவரிடம் வரத் தொடங்கினர். தங்கள் நோய்களையும் துன்பங்களையும் பற்றி பாபாவிடம் முறையிட்டனர். பாபா அவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களின் துயரங்களைப் போக்கினார். இப்படியாக, ஷீர்டி கிராம மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டபோது பாதுகாவலராகவும், அவர்கள் தடம் மாறித் தடுமாறாமல் இருப்பதற்காகச் சிறந்த வழித்துணையாகவும் திகழ்ந்த பாபா, ஒருநாள் யாதொரு சுவடும் தெரியாதபடி காணாமல் போனார்.

தங்களின் கிராமத்துக்கு 'வாராது போல் வந்த மாமணி’யாய் வந்துதித்த சாயிநாதரைக் காணாமல் ஷீர்டி மக்கள் கலங்கி நின்றனர். அவர்களின் கலக்கம் தீரும் விதமாக, மிகக் குறுகிய காலத்திலேயே ஷீர்டிக்கு வந்த ஒரு கல்யாண கோஷ்டியுடன் பாபா மீண்டும் திரும்பி வந்தபோது, ஊரின் எல்லையிலேயே அவரை அடையாளம் கண்டுகொண்ட மஹல்சாபதி அவரை, 'யா சாயி’ என்று அன்புடன் வரவேற்றார். பாபா வழக்கம்போலவே ஊரின் எல்லையில் இருந்த அதே வேப்பமரத்தின் அடியில் சென்று அமர்ந்துகொண்டார். ஷீர்டி கிராம மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். பாபா அவர்களுடைய துன்ப நோய்களுக்கெல்லாம் அருமருந்தாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 7

இந்நிலையில், ஒருநாள் மாலையில் இருந்தே சூறைக்காற்றுடன் பெருமழையும் பிடித்துக்கொண்டது. வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே கிராம மக்கள் அச்சம் கொண்டனர். இரவெல்லாம் நீடித்த பெருமழை ஊரையே வெள்ளக்காடாக்கி,  காலையில்தான் ஓய்ந்தது. அப்போதுதான் மஹல்சாபதிக்கு பாபாவின் நினைவு வந்தது. தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு, பாபா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கே நம்முடைய பாபா, மரத்தில் சாய்ந்தபடி தியானத்தில் இருந்தார். அவரை இலைச்சருகுகளும் மணலும் மூடியிருந்தன. மஹல்சாபதி குரல் கொடுத்தும்கூட பாபாவிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. 'சரி, வெள்ளம் வடிந்த பிறகு வந்து பார்க்கலாம்’ என்று நினைத்தவர்களாகத் திரும்பிவிட்டனர். சில மணி நேரம் பொறுத்து மீண்டும் வந்து பார்த்தபோது, பாபாவின் உடலெங்கும் மணல் மூடியிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். தங்களுக்குத் துன்பம் நேர்ந்தபோதெல்லாம் துன்பம் நீக்கி இன்பம் சேர்த்த அந்த மகானை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று தங்களையே கோபித்துக்கொண்டனர். அவரை இனியேனும் ஊருக்குள் அழைத்துச் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்யவேண்டும் என்று நினைத்த மஹல்சாபதியும் கிராம மக்களும் பாபாவிடம் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தனர். வழக்கம்போல் முதலில் மறுத்த பாபா, அவர்களுடைய தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். இப்படியாக, ஊருக்குள் இருந்த ஒரு பாழடைந்த மசூதியான துவாரகாமாயிக்கு வந்து சேர்ந்தார் பாபா.

ஆக, அடிக்கும் புயலும் சரி, கொட்டும் மழையும் சரி, தகிக்கும் கோடையும் சரி... தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதையும், இயற்கையின் எந்த ஒரு மாற்றமும் தன்னை எள்ளளவும் பாதிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார் பாபா. இவ்விதமாக காலத்தை வென்றவராகத் திகழ்ந்ததால்தான் பாபா, 'கால காலாய நம:’ என்று போற்றப்படுகிறார்.

காலனுக்குக் காலனாக பாபா திகழ்கிறார் என்பதை விவரிக்கும் மற்றொரு சம்பவத்தையும் நாம் இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.

ஒருநாள், மாலை 7 மணி இருக்கும். பாபாவின் நெருங்கிய பக்தரும் செல்லப்பிள்ளையுமான மாதவராவ் என்ற சாமாவை கொடிய விஷம் கொண்ட நாகம் தீண்டிவிட்டது. அந்த நொடியே சாமாவின் உடலில் விஷம் மளமளவென ஏறத் தொடங்கிவிட்டது. உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். பாம்பு கடித்தவர்களை உடனடியாக ஷீர்டியில் உள்ள விரோபா என்ற சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றால் பிழைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தபடியால், சாமாவை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல நினைத்தனர். ஆனால், பாபாவின் மற்றொரு பக்தரான நிமோண்கர் என்பவர், பாபாவிடம் சென்று 'உதி’ பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி, சாமாவை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 7

அவர்கள் துவாரகாமாயியை நெருங்கியபோது, உள்ளே இருந்து வெளியில் வந்த பாபா, ''ஏய், மேலே ஏறாதே, கீழே இறங்கி, அப்பால் போய்விடு. மீறி ஏறினால் தெரியும் சேதி. போ, போ, போய்விடு. என் முன்னாலேயே நீ நிற்கக்கூடாது!'' என்று கடுமையான வார்த்தைகளால் திட்டத் தொடங்கிவிட்டார்.

சாமாவும் உடன் வந்தவரும் திடுக்கிட்டு அச்சம் கொண்டவர்களாக அப்படியே நின்றுவிட்டனர். யாரை தன்னுடைய முதலும் கடைசியுமான புகலிடமாகக் கொண்டிருந்தோமோ, அந்தச் சாயிநாதரே தன்னைக் கைவிட்டுவிட்ட பிறகு தான் பிழைக்கவே முடியாது என்று நினைத்துச் சோர்ந்துபோன சாமா, 'தான் பாபாவிடம் கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கையும் பக்தியும் இந்த விதத்திலா முடிவுக்கு வரவேண்டும்’ என்று கண்கலங்கினார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பாபா திட்டுவதை நிறுத்தியதும், சாமா சற்றே தைரியம் பெற்றவராக, மெள்ளப் படியேறி பாபாவிடம் சென்றார். அவரை அன்பும் கனிவுமாகப் பார்த்த பாபா அவரிடம், ''நீ ஏன் பயப்படுகிறாய்? உனக்கு ஆபத்து எதுவும் வந்துவிடாது. பக்கீர் கருணையே உருவானவர். அவர் எப்போதும் உனக்கு நன்மையே செய்வார். கலக்கம் கொள்ளாதே! நீ இப்போது வீட்டுக்குச் செல்லலாம். ஆனால், வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது. வீட்டுக்குள்ளேயே, தூங்காமல் நடமாடிக்கொண்டே இரு. உனக்கு விருப்பமானதைச் சாப்பிடலாம். ஆனால், கண்டிப்பாக நீ தூங்கமட்டும் கூடாது!'' என்று ஆறுதல் சொல்லி, உதி பிரசாதமும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

சாமாவும் பாபா சொன்னபடியே வீட்டுக்கு வந்து சேரவும், விஷத்தின் கடுமை இறங்கவும் சரியாக இருந்தது. பாம்பு கடித்த இடத்தில் மட்டும் சிறிதளவு இருந்த வலியும்கூட போகப்போக மறைந்துவிட்டது.

சாமாவிடம் அன்பும் கருணையும் கொண்டிருந்த பாபா, தம்முடைய நடவடிக்கையால், சாமா தம்மிடம் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்குமாறு ஏன் செய்யவேண்டும்? பாம்பினால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஏறிக்கொண்டிருந்த நிலையில், தன்னையே அடைக்கலமாக எண்ணி வந்த சாமாவிடம் பாபா ஏன் இப்படிக் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?

பாபாவின் இந்தச் செயலுக்கான காரணம் என்ன? இதற்கும் பாபாவின் 'கால காலாய நம:’ என்ற நாமாவளிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மைப் பொருள்தான் என்ன?

பிரசாதம் பெருகும்