சிறப்பு கட்டுரை
Published:Updated:

சிலம்பும்...சிறு தெய்வங்களும்!

சிலம்பும்...சிறு தெய்வங்களும்!

மிழ்கூறும் நல்லுலகில், நாட்டுப்புறத் தெய்வங்களுக்குத் தனி இடம் உண்டு. சொல்லப்போனால், நம் கலாசாரத்தின் மிகப்பெரிய அடையாளமாகவே இந்த வழிபாடு இருக்கிறது. நாட்டுப்புற வழிபாடுகளில், பெண் தெய்வங்களே அதிகம் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களே குலதெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் போற்றப்படுகிறார்கள்.

சிலம்பும்...சிறு தெய்வங்களும்!

கிராமத்தின் எல்லைப் பகுதியில், பொதுவான குளத்தின் கரையில், பல்லாண்டுகளாக வேர்விட்டு நிற்கிற மரத்தடியில், நாட்டுப்புற தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்து, வழிபட்டு வருகிறார்கள் மக்கள்.

மாரியம்மன், நாடியம்மன், பேச்சியம்மன், செல்லியம்மன், கடும்பாடியம்மன், நாகாத்தம்மன், காளியம்மன், மீனாட்சியம்மன், என்று பெண்தெய்வங்கள் பலரும் கிராமங்களில் அருளாட்சி நடத்த, அய்யனார், கருப்பசாமி, மதுரைவீரன், சுடலைமாடன் என்று ஆண் தெய்வங்களும் அருள்பாலித்து வருகிறார்கள்.

பழங்காலத் தமிழ் இலக்கிய ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான டாக்டர் சங்கர சரவணன், இலக்கியங்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள் குறித்து விவரித்தார்.

''தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குச் சற்றும் குறைவில்லாமல் நாட்டுப்புற தெய்வ வழிபாடும் உள்ளது. பண்பாட்டு ஆய்வாளர்கள் தமிழ்நாட்டின் சிறுதெய்வ வழிபாட்டு முறையோடு பெருந்தெய்வ வழிபாட்டு முறைகள் ஒன்றிய விதத்தை வரலாறுபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் பல உதாரணங்கள் உண்டு. சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில், குறவர்களின் குலதெய்வமான முருகப்பெருமான், பேய் (சாமியாடும்) மகளிரால் துணங்கைக்கூத்து ஆடி வணங்கப்படுவது விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றுதோறாடலில் குரவைக் கூத்து ஆடி, குறவர்கள் முருகனை வழிபடுவதையும் அந்த நூல் சொல்கிறது.

நாட்டுப்புறத் தெய்வங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டும் முறை, அந்தக் காலத்திலேயே வந்துவிட்டது. தனக்கும் மாதவிக்கும் பிறந்த மகளுக்குத் தன் குலதெய்வமான மணிமேகலையின் பெயரையே சூட்டினான் கோவலன்.  

நாட்டுப்புறத் தெய்வங்களின் கோயில்களில், சாமி கொண்டாடுதலும், இறையருள் பெற்று

சிலம்பும்...சிறு தெய்வங்களும்!

அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் உண்டு. சிலப்பதிகாரத்திலும் இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது. கண்ணகி, கோவலனுடன் மதுரைக்கு வரும் வழியில், ஐயைக்கோட்டம் எனும் இடத்தில் அமைந்த கொற்றவைக் கோயிலில், சாலினி என்ற பெண்மணி, கொற்றவையின் அருளால் சாமியாடுகிறாள். கண்ணகியிடம் அவள், 'ஒரு மாமணியாய் உலகுக்கு ஓங்கிய திருமாமணியாகத் திகழ்வாய்’ என்று கூறுகிறாள். சாலினி சாமியாடுவதை கூறும் இளங்கோவடிகள் 'தெய்வமுறுதல்’ என்ற பெயரால் இதைத் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் சுடலைமாடன், அய்யனார் போன்றோர் காவல் தெய்வங்களாக வணங்கப்படுவது சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையைக் காக்கும் ஊர் தெய்வத்தை இளங்கோவடிகள் மதுராபதித் தெய்வம் என்றே குறிப்பிடுகிறார். கொற்றவை வழிபாடு குறித்தும் பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உண்டு.

சேரர்கள் அயிரை மலையில் அமைந்திருந்த கொற்றவையை வழிபட்டதை பதிற்றுப்பத்து பதிவு செய்திருக்கிறது. அதேபோல், சிலப்பதிகாரத்தில் எழுவரின் இளைய நங்கையான பிடாரியும் குறிப்பிடப்படுகிறாள்.

தமிழ்நாட்டில் பல்வேறு சிற்றூர்களில் காணப்படும் இசக்கிஅம்மன், பேச்சியம்மன், முத்து மாரியம்மன் உள்ளிட்ட பல பெண் தெய்வங்கள் கொற்றவையின் பல்வேறு வடிவங்களாகவே அழகுறக் காட்சி தருகிறார்கள்.

சிலம்பும்...சிறு தெய்வங்களும்!

'பேராசை பெருநஷ்டம்’ என்பார்கள். ஆனால், ஒரு மனிதனின் பேராசைக்கான வளம்கூட இந்த பூமியில் இல்லை என்பது காந்தியக் கொள்கைகளில் ஒன்று. சுடலைமாடன் கதையில் வரும் பெரும்புலையன், தன் குடும்பத்தோடு அழிவது, இந்தக் கொள்கையையேநமக்கு நினைவூட்டுகிறது. பகவதி அம்மன் கோயில் நகைகளைக் கொள்ளையடித்த மந்திரவாதி பெரும்புலையனின் குடும்பத்தைச் சுடலைமாடன் பழிதீர்ப்பது, கோயில் சொத்தை தன் சொத்தாக்கிக் கொள்ளத் துடிப்பவர்களுக்கு தக்கதொரு பாடமாகும்!  

அறத்தைத் தொலைத்துவிட்டுப் பாவம் செய்து, பிறகு கடவுளிடம் மண்டியிட்டால் மன்னிப்புக் கிடைக்கும் என்ற தீயவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்குகிறார் சுடலைமாடன். நாட்டுப்புறக் கலைகளான மகுடாட்டம், வில்லிசை போன்றவற்றில் கதைப்பாடல்களாக நாட்டுப்புறத் தெய்வங்களின் மகிமைகள் இடம்பெறுகின்றன. பாடலின் மூலமாக மதுரைவீரன், அய்யனார், சுடலைமாடன் முதலானோரின் கதைகளைச் சொல்லி, பக்தி வளர்த்த வரலாறு வியப்புக்குரியது!'' என்கிறார் சங்கர சரவணன்.