சிறப்பு கட்டுரை
Published:Updated:

நடுகற்கள்...விசிறிப் பாறை!

ஸ்ரீதரன்படங்கள்: மீ.நிவேதன்

''நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கிய பாமர மக்கள் யாவரும் அந்நாளில் ஏட்டில் எழுதி வைக்கும் அளவுக்குக் கல்வி அறிவு பெறவில்லை. கல்வெட்டில் பொறித்து வைக்கும் தொலைநோக்குப் பார்வையும் அன்று யாரிடத்திலும் இல்லை. ஆனால், நாட்டுப்புறத் தெய்வங்களோடு தொடர்புடைய ஒருவகையான நடுகல் வழிபாட்டு முறைகள் குறித்துக் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ளன'' என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தமிழக தொல்லியல்துறை முன்னாள் துணை இயக்குநருமான ஸ்ரீதரன். 

''தமிழக கிராமங்களில், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள், அதாவது சிறுதெய்வ வழிபாடுகள் இன்றைக்கும் சிறப்பாக நடந்து வருகின்றன. இவர்களை வழிபட ஆகம விதிகளெல்லாம் இல்லை. மாறாக, நம்பிக்கையின்பால் பூஜைகள் நடந்தேறுகின்றன. கல்வெட்டுகள் ஓரளவும், சிற்பங்கள் முழுமையாகவும் சிறுதெய்வ சரிதங்களைப் பறைசாற்றுகின்றன.

நடுகற்கள்...விசிறிப் பாறை!

ஊரைப் பாதுகாக்கும்போது, வீரன் ஒருவன் புலி அடித்து இறந்துவிட்டாலோ, எதிரிகளிடம் சண்டையிட்டு இறந்தாலோ, ஊர் எல்லையில் அவனுக்குச் சிலை வைத்து, காவல்தெய்வமாகவே வழிபடத் துவங்கினார்கள். அந்தச் சிலைக்குச் சில அடி தூரத்தில், வேல் நட்டு வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதாவது, பருவ வயதுப் பெண்களும், திருமணமான பெண்களும் அந்த வேல் வரை சென்று வழிபடலாம். அதைக் கடந்து செல்லக்கூடாது என்பதை இப்படி சூசகமாக வலியுறுத்தி உள்ளனர். இப்படியான வழிபாடுகள், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாகவே இங்கே இருந்துள்ளன. பெண்களே பிரதானம், அவர்களே சக்தி என்பதை வலியுறுத்தும் வகையில், பெண்ணின் வயிற்றுப் பகுதியை (கர்ப்பப்பை இருப்பதால்), பெரிதாக அமைத்துச் சிலைகள் அமைத்தார்கள். ஊரின் நலனுக்காக, இறந்த கன்னியர்களையும் கிராம தேவதைகளாக, தெய்வங்களாகவே வழிபட்டார்கள். இப்போதும் எவ்வளவு பெரிய விழா நடந்தாலும், கிராம தெய்வங்களை முதலில் வணங்கிய பிறகே அடுத்த காரியத்தில் ஈடுபடுகிறார்கள். விழுப்புரம், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி முதலான மாவட்டங்களில் நடுகல் வழிபாடு குறித்த சான்றுகள் இன்றைக்கும் உள்ளன. விழுப்புரம் அருகே உடையார்நத்தம் பகுதியின் மலைப் பகுதியில் பாறை ஒன்று உள்ளது. இதை 'விசிறிப் பாறை’ என்கிறார்கள். தாய் தெய்வ வழிபாடான கொற்றவை வழிபாட்டுக்கு முன்னோடி இதுவே என்கின்றனர்.

சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடுகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு. போரில்

நடுகற்கள்...விசிறிப் பாறை!

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட தகவலை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் காணப்படும் நவிரமலை பகுதியில், நடுகற்கள் மராமரத்தின் கீழ் எழுப்பப் பட்டுள்ளன. இதனை கூத்தரும், விறலியரும் யாழ்கொண்டு பாடி மகிழ்ந்து வணங்கினார்கள் என மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

செங்கல்பட்டு அருகே உள்ள உத்திரமேரூர், 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஊர். எந்தெந்த இடங்களில் என்னென்ன கோயில்கள் அமைக்க வேண்டும் என்று ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஊருக்கு வடக்கே துர்கையம்மன் ஆலயம் உண்டு. இவளை வடவாயிற்செல்வி என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இங்கிருந்து வடகிழக்கில், 'சப்தமாதர் கோயில்’ உள்ளது. தற்போது, 'மாதிரிஅம்மன் கோயில்’ என்கின்றனர். ஊரின் தெற்குப் பகுதியில் 'அய்யன் மகா சாஸ்தா கோயில்’ அமைந்துள்ளது. இந்தக் கோயில் குறித்த கல்வெட்டுகளும் உள்ளன. மேலும், சேட்டையார் கோயில், குமணப்பாடி கோனேரி நங்கை கோயில், மாத்ருஸ்தானம், வடவாயிற் செல்வி  துர்்கை, வாஸ்து பிடாரிமார் முதலான கோயில்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

நடுகற்கள்...விசிறிப் பாறை!

நாகாலம்மன், தர்மராஜா, நடுத்தெரு மாரியம்மன், திரௌபதி அம்மன், அங்காள பரமேஸ்வரி, கங்கையம்மன், ரேணுகா தேவி என சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரச குடும்பத்துக்காக கட்டப்பட்ட கோயில்கள், பார்த்திபேந்திரவர்மன் காலத்தில் மக்களின் வழிபாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன. பல்லவர்கள் காலத்துக்கு முன்பு வரை, கல்வெட்டுத் தகவல்கள் பெருமளவில் இல்லை. அரைகுறையான உருவம் கொண்ட கற்களும் தூண்களும் சிற்பங்களுமே ஆவணங்களாகப் போற்றப்படுகின்றன. 9ம் நூற்றாண்டில், சோழர்களின் காலத்தில்தான் கல்வெட்டில் குறிப்புகள் பதிகிற பாணி அதிக அளவில் வரத் துவங்கியது.

கல்வெட்டில் நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பது ஒரு ஆதாரம்தான். ஆனால், தெய்வ வழிபாட்டுக்கு ஆதாரங்களைக் காட்டிலும் இறை நம்பிக்கை என்பதே முக்கியம்!'' என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் ஸ்ரீதரன்..