மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?  இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம் எனில், கடவுளும் அவருக்கான வழிபாடுகளும் எதற்கு? கடவுள் கருணையின் வடிவம் என்கிறீர்கள்; எனில், ஒருவர் இன்புற்றிருக்க, மற்றொருவர் துயரத்தில் ஆழ்வது ஏன்? லீலைகள் எனும் பெயரில் புராணங்கள் விவரிக்கும் நியாயமற்ற சம்பவங்களை எங்ஙனம் ஏற்பது? என் பேரனும், அவனுடைய நண்பர் குழாமும் தொடுத்த கேள்விக் கணைகள் இவை. கடவுள் தத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவான விளக்கத்தை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.  

பி.சேதுராமலிங்கம், மானாமதுரை

சகுனியின் வார்த்தையைக் கேட்டான் துரியோதனன்; வாழ்வை இழந்தான். மந்தரையின் வார்த்தையைக் கேட்ட கைகேயியும் வாழ்வை இழந்தாள். இந்திரனின் வார்த்தையைக் கேட்ட மன்மதன், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பால் வாழ்வை இழந்தான். விஸ்வாமித்திரரின் வார்த்தையைக் கேட்டார் திரிசங்கு. அதனால் பூமியும் இல்லாமல் ஸ்வர்க்கமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கினார். அதேபோல், துரியோதனின் வார்த்தையைக் கேட்ட கர்ணன், கம்சனின் வார்த்தையைக் கேட்டுச் செயல்பட்ட பூதனை ஆகியோரும் தங்களின் வாழ்வை இழந்தனர்.

பிறிதொருவரின் பேச்சைக் கேட்டு நன்மை பெற்றவர்களும் உண்டு. தந்தையின் வார்த்தையைக் கேட்டான் பரசுராமன்; சிரஞ் ஜீவியாக விளங்குகிறான். இன்னொரு பட்டியல் உண்டு. ைகேயியின் வார்த்தையை பரதன் கேட்கவில்லை; வாழ்வில் பெருமை அடைந்தான். தகப்பனின் வார்த்தையை பிரகலாதன் கேட்கவில்லை; பரமபக்தன் என்று புகழ்பெற்றான். சாவித்திரி நாரதரின் வார்த்தையை கேட்கவில்லை; பதிவிரதை என்று புகழ்பெற்றாள்.

அடுத்த பட்டியல்... ஈசனின் வார்த்தையை கேட்காத தாட்சாயினி தட்சனின் யாகத்தில் வாழ்வை இழந்தாள். அதேபோல், விபீஷணன் வார்த்தையை கேட்காத ராவணன், அழிவைச் சந்தித்தான்.

கேள்வி - பதில்

? இவை அனைத்தும் தெரிந்த கதைகளே! இதன் மூலம் தாங்கள் சொல்லவருவது என்ன?

கடவுளின் சாந்நித்தியத்தில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனச் சொல்ல வருகிறோம். பரம்பொருளின் ஸாந்நித்யத்தில் காற்று, சூரியன், அக்னி, இந்திரன் முதலானவர்கள் தானாகவே செயல்பட ஆரம்பித்து விடுவார்கள் என்கிறது புராணம். கடவுளின் வழிகாட்டல்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எல்லோருக்கும் கிட்டும். அதை நாடாதவர்கள், ஏற்றுச் செயல்பட்டவர்கள், ஏற்காமல் அலட்சியம் செய்தவர்களுக்குக் கிடைத்த பலாபலனை மேற்கண்ட உதாரணங்கள் விளக்குகின்றன. ஆனால், பாமரர்களுக்கு இவை வெறும் கதைகளாக கற்பனைகளாகவே தோன்றும்.

கடவுள் குறித்த கண்ணோட்டமும் அப்படித்தான்; சாதாரண மனித சிந்தனைக்கு அவை கற்பனையாக இருக்கலாம்; கதையாக இருக்கலாம்; சுமையாகத் தோன்றலாம். ஆனால், எவராலும் இயலாத... அத்தனை தொல்லைகளுக்கும் காரணமான பயத்தை மனதில் இருந்து விரட்டியடிக்கும் தகுதி, கடவுள் ஒருவருக்கே உண்டு என்பதால்தான் அவர் பரம்பொருள்; எல்லாவற்றிலும் உயர்ந்தவர் என்பது உண்மையாகிறது.

? பயம் என்று எதைச் சொல்ல வருகிறீர்கள்?

சிங்கப்பெருமாளைக் கண்டவுடன் பயந்தான் ஹிரண்யகசிபு; உயிரைத் துறந்தான். சீதையைக் கவர்ந்து ராமனின் பகையை வளர்த்த ராவணன், வாழ்வை இழந்தான். ராமனிடம் நட்பை வளர்த்த விபீஷணன் அழியா வரம் பெற்றான். பாண்டவர்கள் மீதான பகை துரியோத னனை அழித்தது. பக்தியால் ஏற்பட்ட நட்பு அர்ஜுனனுக்கு வெற்றி அளித்தது. யம பயம் விலக ஈசனை அணுகினான் மார்க்கண்டேயன். ஆஞ்சநேயனை ஆழ்கடலைத் தாண்டவைத்தது ராமனின் நினைவு. நாராயணன் குறித்த நினைவு பிரகலாதனை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது. கிருஷ்ணனிடம் பகையை வளர்த்த சிசுபாலன் அழிவைத் தேடிக்கொண்டான். மரண பயம் விலக ஆன்மாவைப் பிடித்துக்கொண்டார் ஆதிசங்கரர்; ஜகத் குருவானார். அறிவை எட்ட ஆசையைத் துறந்தார் புத்த பகவான்.

? கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் இந்தப் பட்டியலில் நாமும் இடம்பிடிக்கலாம் என்கிறீர்களா?

கடவுள் நினைவு சிந்தனையை வளப்படுத்தும்; அதன் மூலம் செயல்கள் செம்மைப்படும் எனச் சொல்லவருகிறோம்.

அத்தனை நிகழ்வுகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயமே காரணமாகிறது. பயம்

கேள்வி - பதில்

மனதில் பற்றிக்கொண்டால், சிந்தனை விடுபடும். மனம், பயத்தை அசைபோட்டு அசைபோட்டு அதன் விளைவுகளை விரிவாக்கி, அதுகுறித்த சிந்தனையிலேயே சுற்றிச் சுற்றி வரும். அதிலிருந்து விடுபடாமல் தவிக்கும். பயத்திலிருந்து வெளிவருவதற்கான அருமருந்து, பரம்பொருள் குறித்த நினைவு. 'பயத்தை அகற்றி அடைக்கலம் அளிப்பவர்’ என்கிறது வேதம் (பீஷாஸ்காத்வாத, பவத...). நம் இதயத்தில் ஆன்ம வடிவில் அவர் இருக்கிறார். அவர் குறித்த நினைவு பயத்தை அகற்றும். அதன் மூலம் நல்ல சிந்தனை வெளிப்பட்டு, ஆபத்திலிருந்து விடுதலை கிடைக்கச் செய்யும். ஆக, இறைவனின் நினைவு இல்லாத மனம் உண்மை யான மகிழ்ச்சியை எட்டாது. போலி மகிழ்ச்சியில் நாடகமாடாமல் உண்மையை ஏற்பது சிறப்பு.

இரண்டாவது பார்வை...

இயற்கை, தான் படைத்த உயிரினங்களுக்கு இனாமாக நுகர் பொருள்களை அள்ளிக் கொடுத்துள்ளது. அதற்கு இணையாக புலன் களையும் தந்துள்ளது. இதில், மூன்றாவது ஒருவரின் வழிகாட்டல் தேவை இல்லை. கடவுள் கற்பனையில் தோன்றியவர். அதனால்தான் அவரைக் கண்ணுக்குப் புலப்படாதவன் என்கிறார்கள்.

? எனில், உலகில் தோன்றிய அனைத்தும் சுயம்பு என்பதுதான் உங்கள் கருத்தா?

அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன்! நமது இன்ப துன்பங்கள் எல்லாம் நாமே வரவழைத்துக் கொண்டவை. அவை எப்படி கடவுளின் பங்காக மாறும்?! உழைப்பால் கிடைத்த பெருமையை கடவுளின் வெகுமதியாக எப்படிச் சொல்ல முடியும்? புராணங்கள், இல்லாத ஒருவரின் புகழைப் பாடிக் கொண்டிருக் கின்றன. உருவம் இல்லாதவர் என்று சொல்லிக்கொண்டு பல உருவங்களில் அவர் தென்படுவதாகச் சித்திரிக்கின்றன. கடவுள் கருணைக்கடல் என்கின்றன. ஆனால், அவர் படைத்த ஒரு சாரார் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்க, மற்றொரு சாரார் துயரத்தில் துவண்டுபோவது ஏன்? பிரகலாதன் அழைத்தால், அந்த நொடியிலேயே கண்முன் தோன்றுகிறார். ஆதிமூலமே என்று அழைத்தால், விலங்கினத் தையும் ஆட்கொண்டு அருள் பாலிக்கிறார். ஆனால், நாம் அழைத்தால் வருவதில்லையே, ஏன்? கண்ணன், ராதையைப் பெருமைப்படுத்துகிறான். ஆனால், பிருந்தாவை இழிவுபடுத்து கிறான். அர்ஜுனனுக்கு வழிகாட்டு கிறான். துரியோதனனைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணன் தம்பி சண்டையில் அழையாத விருந்தாளியாக வந்து, அர்ஜுனனுக்குத் திரைமறைவில் உதவுகிறான். போரில் இணையமாட்டேன் என்று உறுதிமொழி அளித்தவன், போரில் அர்ஜுனனைக் காப்பாற்றுகிறான்.

? எதையும் மேலோட்டமாக ஆய்வு செய்தால், தகுந்த தெளிவு கிடைக்காதே..?

பொறுங்கள்! இன்னும் சில உதாரணங்களைப் பார்த்தால், எந்த ஆய்வுக்கும் அவசியம் இருக்காது.

கேள்வி - பதில்

அரசவையில் சிசுபாலனைச் சக்கரத்தால் அழிக்கிறார்; ஜராசந்தனைப் பார்த்து ஓடி ஒளிகிறார். இலக்குவனுக்குப் பார்த்த பெண்ணை அபிமன்யுவுக்கு மணம் முடிக்கிறார். சுக்ரீவனின் நட்புக்காக வாலியை அழிக்கிறார். பூதனை, சகடாசுரன், த்ருணா வர்த்தன், கம்சன், காளியன் ஆகியோரின் அழிவை அவனது விளையாட்டாக எடுத்துக்கொள்வதும், அவன் நிகழ்த்தும் அகட விகடங்களுக்கு லீலை என்றும், அருள்பாலிப்பு என்றும் விளக்கம் அளிப்பதும் சரியானதா? தன்னுடைய மனைவி, அவளாகவே ஏற்றுக்கொண்ட இழப்புக்கு, மாமனாருக்கு தண்டனை அளிக்கிறார் ஈசன். இதை எப்படி ஏற்பது? பிக்ஷாண்டியாக அறிமுகம் செய்துவிட்டு, அவரையே நமக்கு ஐஸ்வரியத்தை அள்ளி அளிப்பவராகவும் சொல்வதை எப்படி ஏற்கமுடியும்?

அதுமட்டுமா? கல்லையும் (சாளக்கிராமம், சிவலிங்கம்) மண்ணையும் (மிருத்லிங்கம்) வழிபடுவது இறைவழிபாடாக மாறும் என்கிறார் கள். 'அரசமரத்தடியில் போகாதே பேய்பிசாசுகள் இருக்கும்’ என்பவர்களே, மும்மூர்த்திகளும் அரச மரத்தில் உறைந் திருப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். கேட்டால்... 'ஆமாம், அவர் எங்கும் நிறைந்திருப்பார். எவர் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்திருக்கிறார்’ என்பார்கள். கேள்விக்கு உரிய விடை கிடைக்காது.

பக்தி வழி என்பது, தெளிவான தீர்வு காண முடியாத அளவுக்கு பாரபட்சம் மிகுந்தது என்பதே எங்களது கருத்து!

திரெளபதியின் மானம் காக்க ஓடிவந்து சேலையை அளித்தார் நாராயணன். ஆலகால விஷம் தோன்றியதும், அண்டத்தைக் காக்க ஓடி வந்து ஈசன் அதை விழுங்கினார். உத்தரையின் உதரத்தில் இருக்கும் பாண்டவ வம்சத்தில் மிஞ்சிய வாரிசை, தனது சக்கரத்தால் காப்பாற்றினார் விஷ்ணு. கர்ணனின் பாணத்துக்கு இலக்காகாமல் இருக்க தேரை அழுத்தி அர்ஜுனனைக் காப்பாற்றினார். துர்வாச முனிவரிடம் மாட்டிக்கொண்டு திரெளபதி விழிபிதுங்கி நின்றபோது, பிஷாபாத்திரத்தில் இருக்கும் உணவை ஏற்று அவளை காப்பாற்றினார். குசேலனிடம் அவல் பெற்றவர், அவர் கேட்காமலேயே அவரது ஏழ்மையை விரட்டியருள்கிறார். ஆனால், மாமனையும் மாமல்லர்களையும் அழிக்கிறார். விதுரரையும் அக்ரூரரையும் அருள்கிறார். ராவணனை அழிக்கிறார். கடோத்கஜனை வாழ்த்துகிறார். அவரைப்போய் ஆபத்பாந்தவன் என்று கொண்டாடுகிறார்கள். தினம் தினம் செத்துப் பிழைக்கும் மக்களை ஏன் அவர் கண்டு கொள்ளவில்லை? மக்களது ஏழ்மையை ஏன் அகற்றவில்லை? அவர்களை துயரத்தில் இருந்து விடுவிக்காதது ஏன்? விடுவித்தால்தானே அவர் ஆபத்பாந்தவன்?!

ஆக, அன்றாடம் அலுவல்களின் சுமை போதாதென்று கடவுளையும் வீணாகச் சுமக்க வேண்டுமா? அலுவல் சுமையை இறக்கிவைக்க இயலாது. கடவுளை இறக்கி வைக்கலாம். இல்லாதவனை இறக்கி வைப்பது எளிது!

மூன்றாவது பார்வை...

அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லோரிடமும் கலந்துரையாடும் ஆர்வம், எந்தத் தகவலையும் சுய சிந்தனையில் ஆராய்ந்து மதிப்பிட்டு ஏற்கும் பக்குவம், ஏற்றுக்

கொண்ட செயலில் இறுதிவரையிலும் முனைப்பான ஈடுபாடு, தகவலின் உட்கருத்தை ஊடுருவி ஆராய்ந்து, தகவல் அளித்தவனின் எண்ணத்தை உள்ளபடி கண்டுகொள்ளும் சிந்தனை வளம்... இவை நான்கும் சுயநலம், பொறாமை, காழ்ப்பு உணர்ச்சி, பகை, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றில் மாட்டிக்கொண்ட மனதில் தலையெடுக்காது.

? இயல்பில் குறைபாடுகள் சகஜம். அதற்காக அவர்களின் கருத்தைத் தவிர்ப்பது நியாயமா?

அவர்களின் கருத்து பயனுள்ளதாக இருக்காது. சுயநலம் மேலோங்கி இருந்தால், எல்லா தகவல்களையும் சுய நலத்தின் அடிப்படையிலேயே சிந்தித்து ஏற்கவும், துறக்கவும் செய்யும். பொறாமை இருந்தால் அவர்களின் அணுகுமுறை ஏற்கும்படி இருக்காது; காழ்ப்பு உணர்ச்சி இருந்தால் பேச்சில் இனிமை இருக்காது; எதிர்ப்புச் சிந்தனையே மேலோங்கியிருக்கும். பகை இருந்தால், வார்த்தைகள் உதட்டளவிலேயே இருக்கும்; உள்ளத்தின் தொடர்பு இருக்காது. தாழ்வு மனப்பான்மை இருந்தால், தரம் தாழ்ந்த நிலை யில் மதிப்பீடு செய்யும் விதத்தில் அவர்களின் பேச்சு அமைந்திருக்கும். ஆக, இந்தப் பண்புகள் எல்லாம் கடவுளை மறைக்கும் திரைகள்.

ஆன்மிகமும், பக்தியும், கடவுள் ஆராதனை யும் வளர்ந்தோங்கினால், அதில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கைத் தரம் பெருமைப்படுத்தப்படும். அப்போது அவர்களின் தரத்துக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள இயலாத நிலையில், அவர்களை எதிர்க்கத் துணிவு இல்லாமல், அவர்கள் வணங்கும் தெய்வத்தை எதிர்க்கும் செயலின் வாயிலாக, அவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்கிறார்கள் சிலர். தத்துவ விளக்கத்தோடு 'கடவுள் இல்லை’ எனும் வாதத்தை முன்வைக்கும் தகுதி படைத்தவர்கள் இன்றைய நாளில் இல்லை. 'உயர்ந்த பதவியை எட்ட முடியாமல் தகுதி இழந்த ஒருவன், அந்தப் பதவியைக் குறை கூறுவான்’ என்கிறது சாஸ்திரம் (அசகத்: தத்பதம் கந்தும் தத்ர நிந்்தாம் ப்ரகுர்வதெ).

? எனில், கடவுள் மறுப்பை உளமார ஏற்றுக் கொண்டவர்கள் எவரும் இல்லை என்கிறீர்களா?

கேள்வி - பதில்

ஆமாம்! இன்றைய நாளில், 'கடவுள் இல்லை’ என்று சொல்பவர் அனுதாபத்துக்கு உரியவர்களே! ஆத்திரத்துக்கு உரியவர்கள் அல்ல. இளமையில் தென்படும் இந்த முடிவு, அவர்கள் முதுமையை எட்டியதும் மறைந்துவிடும். நம் நாட்டில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தையும் பக்தியையும் ஒதுக்கிவிட்டு வாழ்க்கை நடத்த முடியாது. அந்த அளவுக்கு ஆன்மிகமும் பக்தியும் வாழ்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன. தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல் ஆகியவை அவ்வப்போது தென்பட்டு மறைவது உண்டு. அதுபோல்தான் கடவுள் மறுப்பு வாதமும் அவ்வப்போது தோன்றும்; அல்பாயுசில் மறைந்துவிடும்!

பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் ஆன்மிகத்தோடும் பக்தியோடும் இணைந் திருக்கும். கோயில்கள் நிறைந்தது நம் தேசம். ஆன்மிகவாதிகளும் மகான்களும் நிறைந்திருக்கும் நாடு. உலக நாடுகளில் இருப்பவர்கள் ஆன்மிக வழியைப் பின்பற்ற அடிக்கடி வந்து போகும் நாடு. இங்கே கடவுள் வழிபாடு இணையாத எந்தப் பண்டிகையும் இல்லை. இங்கு இருப்பவர்களின் பெயரும் ஊரும் தெய்வத் திருவுருவங்களை நினைவில் வைக்கும் அளவுக்குப் பெருமை பெற்றவையாகத் திகழும். அண்ணாமலையும், உண்ணாமுலையும் ஆயிரம் கதைகளைச் சொல்லும். பரந்தாமனின் அவதாரத் திருவுருவங்களின் பெயர்களைக் கொண்டவர்கள் ஏராளம். மதுரையில் மீனாட்சியும், திருமயிலையில் கபாலியும் நிறைய இருப்பார்கள். ஆக, குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதுபோல், அவ்வப்போது நாத்திகவாதத்தை சிறுவர் விளையாட்டுபோல் கையாளலாமே தவிர, அதைத் தத்துவரீதியாக விளக்கும் தகுதி எவருக்கும் இல்லை. இந்த யுகம் முடிந்து புது படைப்பு துவங்கும்போது வேண்டுமானால், ஒருவேளை அந்த வாதத்துக்கு மறுஜன்மம் இருக்கலாம்.

? மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை என்கிறீர்களா?

அவர்கள் மிக விழிப்புடன் இருக்கிறார்கள். ஆகவேதான், இந்த விஷயத்தைப் பொழுது போக்காகவே பார்க்கிறார்கள். ஜோதிடம் மூட நம்பிக்கையாகக் கருதப்பட்டது. தற்போது அது வேலைவாய்ப்பாகவே மாறிவிட்டது. எல்லா நாளேடுகளிலும், எல்லா சேனல்களிலும் பெரும்பாலும் ஜோதிடம் இடம் பிடித்திருக்கிறது. குழந்தைகள் பாலுக்கு ஏங்கும் நிலையில், குடம் குடமாகச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது தவறாகப்பட்டது. தற்போது அதுவே பால் ஒதுக்குவது சரியாகப்படுகிறது. கடவுள் உருவத்தை அலைக்கழிப்பது தவறில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தற்போது பூசாரி வேலைக்கு மனுப் போடுவது சரியாகப்படுகிறது. தெய்வத் திருவுருவங்களுக்கு நிகழும் அன்றாட பூஜைகள், உற்சவங்கள், தேரோட்டங்கள், நேர்த்திக்கடன்கள், தீபாராதனைகள், பக்திப் பாடல்கள், திரு அவதாரங்களின் கதைகள், பக்திச் சொற்பொழிவுகள், காலட்சேபங்கள்... அத்தனையையும் வீட்டிலிருந்தபடியே டி.வி. சேனல்களில் நாத்திகவாதம் பேசுபவர்களும் கண்டுகளிக்கிறார்கள். ராமாயணமும், மகாபாரதமும் புதிது புதிதாக சேனல்களில் வந்துகொண்டிருக்கின்றன. அவை அத்தனையை இயக்குவதிலும் வெளியிடுவதிலும்கூட அவர்களுக்குப் பங்கு உண்டு.

இப்படியான விஷயங்கள், அவர்களது மனத் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. பொறாமை, பயம், தாழ்வு மனப்பான்மை, பகை ஆகியவற்றைத் தழுவிக்கொண்டு ஒரு போராட்டமான வாழ்க்கையை அவர்கள் நிர்பந்தமாக ஏற்கிறார்கள். எனவே, கடவுள் நினைவு மனதில் தோன்றினால், அவர்களும் உண்மையான வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்வார்கள். அந்த எண்ணத்தை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்.

? கடவுள் மறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பது 'நிர்பந்தம்’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

கடவுளை வணங்காதவன், காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக அவ்வப்போது அற்பமானவர்களையும் விழுந்து வணங்கவேண்டியது இருக்கும். எதிரியின் எதிரியை நண்பனாக்கிக் கொள்ளும் கட்டாயம் வரும். பிறப்பில் கிடைத்த சுதந்திரத்தை இழக்க நேரிடும். தனது கொள்கைக்கு ஆள் சேர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியது இருக்கும். சபரிமலை, திருமலை, பழநி, குருவாயூர், காசி, ராமேஸ்வரம், ஹரித்வார், ரிஷிகேசம் ஆகிய இடங்களுக்குத் தொண்டர்கள் போய்விடுவார்கள். அவர்களை ஈர்ப்பதும், மீண்டும் ஒன்று சேர்ப்பதும் பெரும்பாடாக இருக்கும். கல்வியை இழந்தவர்களும், சிந்தனை வளம் குன்றியவர்களுமே ஒத்தாசையாக இருப்பார்கள். பக்தர்கள் தினமும் கடவுள் புகழ் பாடுவார்கள்; இவர்களோ நிந்தனை எனும் பெயரில் தினமும் கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். பிரகலாதனைவிட நாராயண நாமத்தை அதிகம் உருப்போட்டவன் ஹிரண்யகசிபு என்ற தகவல் உண்டு.

கடவுளை மறுப்பார்கள். ஆனால், அறங்காவலர் பதவியில் அமர்ந்து சேவார்த்திகளுக்கு உதவும் நிலை சிலருக்கு உண்டு. உற்ஸவ காலங்களில் கோயில் வளாகத்தில் கடை பரத்துவார்கள். மதிய உணவுக்குக் கடவுள் பிரசாதத்தை ஏற்பவர்களும் உண்டு. எனினும், கொள்கை மனதை விட்டு அகலாமல் இருக்க, அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும் கட்டாயத்தில் இருப்பார்கள். அவர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள்தானே? பரம்பரைப்பண்பு அவர்கள் ரத்தத்திலும் ஊடுறுவியிருக்கும் அல்லவா? பெருங்காய சொப்பு காலியாக இருந்தாலும், மணம் தொடரும் அல்லவா? ஆக, இவர்களா லும் கொள்கையைப் பிடித்துக்கொண்டிருக்க இயலாது. இன்னல் இறுக்கிப் பிடிக்கும்போது, தன்னையும் மறந்து 'கடவுளே’ என்று கதறிவிடுவார்கள்!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

இனப் பகையில் ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டான்; போராடிக் கொண்டே இருக்கிறான். நட்பில் தன்னை உயர்த்திக்கொண்டான் ஒருவன்; அமைதியோடு வாழ்கிறான். ஆசை ஆட்சி செய்கிறது நாத்திகத்தில்; அறிவு ஆட்சி செய்கிறது ஆன்மிகத்தில்! பேரறிவை கடவுள் என்கிறோம். சிற்றின்பத் துக்கும் பேரின்பத்துக்குமான பாகுபாட்டை அறிந்தவன் பகுத்தறிவுவாதி. உண்மை, பொய், நல்லது, கெட்டது, ஏற்க வேண்டியவை, தள்ள வேண்டியவை ஆகியவற்றைப் பகுத்தறிந்தவன் ஆன்மிகவாதி. உலக ரகசியத்தை ஆராய்வதில் இறங்கியவன், பாதி வழியில் உலக சுகபோகங்களில் ஏற்பட்ட ஈர்ப்பில் நிறைவடைந்து, ஆராய்ச்சியின் எல்லையை எட்டிவிட்டதாகக் கருதினால், அவன் மனவளர்ச்சி குன்றியவனே! வெண்ணெயைப் பெற முயன்றவன், தானாகவே கிடைக்கும் மோரில் திருப்தி அடைந்துவிடுவது உண்டு. நாம் அப்படி இருக்கக்கூடாது.

தாழ்வு மனப்பான்மையில் தோய்ந்த மனம், ஆசைகளை ஏற்கும்; அறிவுரையை ஏற்காது. ஓர் ஆசை நிறைவேறினால், மற்றொன்று முளைக்கும்; எல்லையே இருக்காது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே அறிவு!

பதில்கள் தொடரும்...