உன்னை அறிந்தால்..! பி.என்.பரசுராமன்
குருவானவர், தன் சீடனை மகனாகக் கருத வேண்டும் என்பது மரபு. ஆகவே, குரு தொடங்குகிறார் இப்படி...
''மகனே! தன்னைப் பற்றிய உண்மையை அறியாதவன், காற்றில் அகப்பட்ட சருகு சுற்றிச் சுற்றி வருவதைப்போல, மறுபடியும் மறுபடியும் பிறவிப் பெருங்கடலிலேயே பிறந்தும் இறந்தும் சுற்றிக்கொண்டிருப்பான். ஆத்மாவே பிரம்மமென்று உணர்ந்து, தெளிவு பெறும் வரை
காலச் சக்கரத்தின் சுழற்சியில் அவன் இப்படிச் சுற்றித் தவித்துக்கொண்டு இருப்பான்' என்கிறார்.
''ஆகவே, உன்னை நீ அறிந்தால், ஆத்மாவும் பிரம்மமும் ஒன்று எனும் உண்மையை அறிந்தால், முக்தியை அடையலாம். உனக்கு ஒரு கேடும் இல்லை. இதையெல்லாம் நீ கேட்பதாலேயே உனக்கு உபதேசித்தேன்'' என்கிறார் குரு.
'நீ கேட்பதால்’ என்று சொன்னதாலோ என்னவோ, சீடன் 'பளிச்’சென்று ஒரு கேள்வி கேட்டான்.
''குருதேவா! என்னை என்ன, அசடு என்று நினைத்துவிட்டீர்களா? தன்னை, தான் அறியவேண்டும் என்கிறீர்கள். தன்னை தான் அறியாதவன் உலகத்தில் ஒருவன்கூட இல்லை. ஆனாலும், எல்லோரும் பிறவிப் பெருங்கடலில் சிக்கித் தவிப்பது ஏன்? உங்களையே நம்பி வந்த எனக்கு, இதற்கான விளக்கத்தைத் தெளிவாகச் சொல்லி அருளுங்கள்!' என வேண்டினான்.
அதாவது, 'நமக்குள் இருக்கும் ஆத்மாவை அறிய வேண்டும்’ என்கிறார் குருநாதர். அந்த அனுபவம் இல்லாத சீடனோ, 'உடம்பே நான்’ எனக் கருதுகிறான். அதனால்தான் கேள்வி கேட்கிறான். குருநாதர் பதில் சொல்கிறார்... ''சீடனே. எல்லோருமே தன்னை, தான் அறிந்தவர்களாக ஆகிவிட மாட்டார்கள். உடம்பைப் பற்றிய உண்மைத் தன்மையை மட்டுமல்ல, அந்த உடம்புக்குள் இருக்கும் ஆத்மாவின் தன்மையையும் அறிந்தவன் எவனோ, அவனே தன்னை அறிந்தவன்'' என்கிறார்.

இது ஏதோ கேட்கும்போது சற்றுப் புரிவதுபோல இருக்கிறதே தவிர, சுலபத்தில் ஒப்புக்கொள்ள மனம் வராது. உடனே வேறொரு கேள்வி பிறக்கும். சீடனுக்கும் அப்படியொரு கேள்வி தோன்றியது.
''குருநாதரே! உடம்பு வேறு, உடம்பில் உள்ள ஆன்மா வேறு என்று சொன்னீர்கள். அது எப்படி?'' என்றான்.
இந்தச் சீடன் வேறு யாருமல்ல; நாம்தான்! இவன் நம்முடைய பிரதிநிதிதான். கண் பார்க்கிறது, காது கேட்கிறது, மூக்கு நுகர்கிறது. வாய் பேசுகிறது... இவ்வளவும் இடம்பெற்றிருக்கும் உடம்போ, அனுபவிக்கிறது. இப்படி இருக்க, 'ஆன்மாவாம்... ஜீவனாம்... பரப்பிரம்மாம்..! என்ன கதை இது? அவை எல்லாவற்றையும் ஆன்மாவா செய்கிறது? ஆன்மாவை யார் பார்த்தார்கள்?’ என்றெல்லாம் கேள்விகள் எழும்.
ஆனால், கொஞ்சம் விவேகம் இருந்தால், இந்தக் கேள்விகள் எழாது. பதில் தெரிகிறதோ இல்லையோ, விதண்டாவாத வினாக்கள் வெளிப்படாது. நமக்குள்ள பிரச்னை என்னவென்றால், வாழ்வில் சுகம் வேண்டும் என்பதற்காக, ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் சேர்த்துக்கொள்கிறோம். அவற்றால் பிரச்னைகள் முளைக்கும்போது, தப்பிப்பதற்காக மேலும் மேலும் சுமைகளைக் கூட்டிக்கொள்கிறோம்.
நாம் வேறு, நாம் அணிந்திருக்கும் ஆடை வேறு என்று நமக்குத் தெரிகிறதல்லவா? அதுபோல... உடம்பு வேறு, ஆன்மா வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்கிறோமோ இல்லையோ, அந்த நினைப்புகூட வரமாட்டேன் என்கிறதே! இந்த நிலையில்தான் அந்தச் சீடன் இருக்கிறான். அதனால்தான், ''அனைத்தையும் அனுபவிக்கும் கண்களுக்கு எதிரில் தெரிகிற இந்த உடம்பைத் தவிர, வேறு என்ன இருக்கிறது? இந்த உடம்புதானே எல்லாம்?'' என்கிறான். சீடனின் வார்த்தைகளைக் கேட்டதும், குருநாதருக்கு வருத்தமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வந்தன.
'உடம்பே நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே! இவனுக்கு எப்படி ஆன்ம தத்துவத்தைப் புரிய வைப்பது?’ என்று குருநாதருக்கு மனவருத்தம் உண்டானது. அதே நேரம்...
'அப்பாடா! இவன் 'உடம்பே நான்’ என்ற பிடிமானம் கொண்டிருந்தாலும், எதையோ ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறானல்லவா? அது போதும்! உடம்பின்மீது பிடிமானம் கொண்ட இவன் விரைவிலேயே ஆன்மாவின் மீதும் பிடிமானம் கொள்வான்’ என்று மகிழ்ச்சியும் கொண்டார்.
கேள்வி கேட்ட சீடனுக்கு, சில பதில் கேள்விகளை முன்வைத்தார் அவர். அவை...
தொடரும்