சிறப்பு கட்டுரை
Published:Updated:

மண் மணக்கும் தரிசனம்!

புன்னை மரம்...பிள்ளை வரம்!ர.ரஞ்சிதாபடங்கள்: எம்.திலீபன்

பெரம்பலூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கல்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது தொட்டியத்தான்  ஐயனார் கோயில். பழைமை வாய்ந்த ஆலயத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால், கையில் துப்பாக்கியுடன் காட்சி தரும் தொட்டியத்தான் சுவாமியை தரிசிக்கலாம். இந்த ஊரையே காவல் காக்கும் தெய்வம் என்று தொட்டியத்தான் சுவாமியை போற்றுகின்றனர் பக்தர்கள்!

மண் மணக்கும் தரிசனம்!

ஐயனார் சுவாமியின் அருளைப் பெற்று, அவரையே தன் கட்டுக்குள் வைத்திருந்தானாம் ஒருவன். தவிர, ஊர்மக்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில், ஒருநாள் கொல்லிமலையில் இருந்து வேட்டைக்குக் கிளம்பிய தொட்டியத்தான் சுவாமி, புது கருப்பையா, செங்காமுனி, மண்டபத்து முத்துசாமி, சங்கிலி கருப்பு, சோழ முத்து ஆகியோர் இவ்வழியே வந்தனர். அன்று இரவு கோயிலில் தங்கிக்கொள்ள ஐயனாரிடம் அனுமதி வேண்டினர். ஐயனார், அங்குள்ள நிலைமையை அவர்களிடம் விவரித்தார். அதையடுத்து, 'கொடுமைக்காரனை ஒருகை பார்த்துவிடலாம்’ என்று வாக்குக் கொடுத்தார் தொட்டியத்தான் சுவாமி. அதன்படி அன்றிரவு தமது துப்பாக்கியால் ஐயனாரை தன் கட்டுக்குள் வைத்திருந்தவனை சுட்டுக் கொன்றார். இதில் மகிழ்ந்த ஐயனார், 'இனி, நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். இங்கு என்னுடனே இருந்துவிடுங்கள். எனக்கு நடப்பது போல் வழிபாடுகள் உங்களுக்கும் நடக்கும்’ என அருளினார். அன்று முதல் தொட்டியத்தான் சுவாமி அங்கே கோயில் கொண்டு, ஊரையும் மக்களையும் காத்து வருகிறார் என்கிறது ஸ்தல வரலாறு. கோயிலில் உள்ள புன்னை மரத்தில், ஒரு துணியில் கல்லையும் விபூதியையும் வைத்து அதில் சில்லறைக் காசுகளையும் வளையல்களையும் சேர்த்து வைத்துக் கட்டி வேண்டிக் கொண்டால், பிள்ளை வரம் கிடைக்கும்! வீட்டில் எந்த சுபகாரியம் நடப்பதாக இருந்தாலும் முன்னதாக தொட்டியத்தான் சுவாமியிடம் குறி கேட்டுவிட்டே துவங்குகிறார்கள், ஊர்மக்கள்.

மண் மணக்கும் தரிசனம்!

பொதுவாக ஐயனார் கோயிலில், குதிரை, யானை முதலான கற்சிலைகள் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இங்கே, மனித உருவிலான சிலைகளையும் நேர்த்திக்கடனாக வைத்துள்ளனர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவேண்டும் என்பதற்கான பிரார்த்தனையாம் இது.

கொசவன் கருப்பு, செங்காமுனி என பரிவார தெய்வங்களுக்கும் இங்கு சந்நிதி உள்ளது. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் திருவிழாவின்போது வீதியுலா, பாரிவேட்டை என களைகட்டும் விழா வைபங்களைக் காணக் கண்கோடி வேண்டும்!