சிறப்பு கட்டுரை
Published:Updated:

கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

சுடச்சுட மெதுபக்கோடா சாப்பிடவேண்டும் என்ற நண்பரின் விருப்பத்தை நிறைவேற்ற, அவரை சபா கேன்டீன் ஒன்றுக்கு அழைத்துப் போனேன். 

அங்கே நாங்கள் இளம் கர்னாடக இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்தோம். அமெரிக்க இறக்குமதி. கீழ்ப் படிப்பு, மேல் படிப்பு என சகலத்தையும் அங்கே முடித்துவிட்டு, கர்னாடக இசை மீது காதலாகிக் கசிந்துருகி, கடல் தாண்டி இங்கே வந்துவிட்டார், அணிந்திருந்த ஜீன்ஸுடன்! சீஸனை முன்னிட்டுத் தாடி வளர்த்திருந்தார். காதுகளில் கடுக்கன். அமெரிக்க வாடை ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தமிழில் பேசச் சிரமப்படுகிறார். ஆனால், பாடுவதற்கு மேடையேறிவிட்டால் சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் என வெளுத்துக் கட்டுகிறார்.

''இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது?'' என்று கேட்டேன்.

''பாட்டையெல்லாம் இங்கிலீஷ் எழுத்துக்கள்லே எழுதி வெச்சுப் படிச்சுக் கத்துப்பேன்...'' என்றார் சிரித்துக்கொண்டே.

''உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாட்டு எது?'' என்று நண்பர் கேட்டார்.

கலகல கடைசி பக்கம்

''அருணாசல கவியின் 'ஏன் பள்ளிகொண்டீர் ஐயா ரங்கநாதரே...’ என்ற பாட்டு...''  பட்டென்று பதில் வந்தது இளைஞரிடமிருந்து.

''வொய்?'' என்றார் நண்பர்.

'ரங்கத்தில் அரங்கேற்றுவதற்காகத் தனது ராம நாடகத்தை எடுத்துச்செல்கிறார் கவிராயர். அங்கே, ரங்கநாதர் சயனக் கோலம் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவருக்கு அரங்கனின் அவதாரமான ராமர் கிருஷ்ணர் நினைவுக்கு வந்துவிட்டது...'

அமெரிக்கப் பாடகர் விவரிக்கத் தொடங்கியதும், நண்பர் மெது பக்கோடாவை மறந்தவராக அரங்கனின் லீலையில் லயித்துவிட்டார்.

''அரங்கன் படுத்திருப்பதன் காரணத்தை கவிராயர் கேட்கிறார். 'தாடகையை வதைத்ததாலா? பரமசிவனின் வில்லையே முறித்து விட்டோம் என்கிற பெருமிதமா? சீதையுடன் காட்டில் நடந்த களைப்பா? கங்கையைக் கடந்த அலுப்பா? சித்திரக்கூட சிகரம் ஏறிப்போன அசதியா? மாரீசனைத் துரத்தி ஓடியதால் ஏற்பட்ட சோர்வா? சீதையை இழந்து தேடிய அயர்ச்சியா? இவை அனைத்துக்கும் மேலாக, ராவணனை குலத்துடன் அழித்துவிட்டோமே என்கிற வேதனையா? அழகிய லங்காபுரியை இடித்துவிட்ட வருத்தமா? எதனால் இப்படிப் படுத்துவிட்டீர்?’ என்று ஒரே சரணத்தில் ராமாயணத்தின் முழு சாராம்சத்தையும் பிழிந்து கொடுத்துவிட்டார் கவிராயர்'' என்று, தனக்கு அந்தப் பாட்டு பிடித்ததற்கான காரணத்தை அந்த இளம் பாடகர் விவரித்ததைக் கேட்டு வியந்து, செவிக்கு உணவாக ராமாயண உபன்யாசம் கேட்ட திருப்தியில் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார் நண்பர்.

'ஏன் மறந்தீர் ஐயா மெதுபக்கோடாவை...’ என்று நானும் அவரைக் கேட்கவில்லை.