முதலில் வரைந்த முருகன் படம்ஓவியர் பத்மவாசனுடன் வாசகர்கள் கலந்துரையாடல்...படங்கள்: ஆர்.யோகேஸ்வரன்
'ஆயிரம் வார்த்தைகளால் சொல்லமுடியாததை ஓர் ஓவியம் சொல்லிவிடும்’ என்பார்கள். அந்த அளவுக்கு உயர்வான ஒரு கலைஓவியக்கலை. ஓவியத்துக்குச் சித்திரம் என்றும் ஒரு பெயர் உண்டு. சித்திரத்துக்கு, 'அதிசயம்’, 'அழகு’, 'சிறப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. நம்முடைய சிந்தனையில் அழகுணர்ச்சியை ஏற்படுத்தி, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவதுடன், நம்முடைய சிந்தனையைச் செழுமைப்படுத்துவதில் ஓவியத்துக்கு நிகர் ஓவியம்தான். ஓவியக்கலைக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துக்கொண்டு, பெயரும் புகழும் பெற்று விளங்குபவர் ஓவியர் பத்மவாசன். 'சக்தி சங்கமம்’ நிகழ்ச்சிக்காக சக்திவிகடன் வாசகர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும், உடனே ஒப்புக்கொண்டதுடன், தனது ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கே வாசகர்களை அழைத்துவந்துவிடும்படி தெரிவித்தார்.
அதன்படி, வாசகர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த 'ஃபார்ச்சூன்’ ஓட்டலுக்குச் (பழைய சோழா ஓட்டல்) சென்றோம். நம்மை வரவேற்றவர், முதலில் வாசகர்களுக்கு கண்காட்சியைச் சுற்றிக் காண்பித்தார். பின்னர், பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், 'நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக,விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தலாம்’ என்று சொல்லியவர் மனதுக்குள், த்ரயம்பக மந்த்ரம் சொல்ல... வாசகர்களும் அவருடன் இணைந்து மெளன அஞ்சலி செலுத்தினர். பின்னர், உரையாடல் தொடங்கியது.
'ஒருவர் ஒரு துறையில் பிரகாசிக்கிறார் என்றால், அந்தத் துறையில் அவருக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?’ என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும் என்ற இலக்கணப்படி, வாசகர் மணிகண்டன் கேட்டார்...

''உங்களுக்கு ஓவியக் கலையில் ஆர்வம் ஏற்பட்ட தற்குக் காரணம் என்ன?'
''என்னுடைய அப்பா சங்கீத பூஷணம். தண்டபாணி தேசிகரிடம் சங்கீதம் கற்றவர். அவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வமும் திறமையும் இருந்தாலும், சங்கீதத்திலேயே முழுக் கவனம் செலுத்தினார். என் தாத்தா அம்மாவின் அப்பா அந்தக் காலத்தில் விகடனின் தீவிரமான வாசகராக இருந்தவர். தீபாவளி மலர்களைத் தவறாமல் வாங்கி, பீரோவில் வைத்து பூட்டிவிடுவார். 'எல்லோர் வீட்டிலும் பீரோவைத் திறந்தால் நகைகள்தான் இருக்கும். ஆனால், தாத்தா வீட்டு பீரோவைத் திறந்தால் பொக்கிஷம்தான் இருக்கும்’ என்று நான்கூட வேடிக்கையாகச் சொல்வது உண்டு. சுலபத்தில் யாருக்கும் கொடுத்துவிடமாட்டார். நான் பார்க்கவேண்டும் என்றால்கூட, என் கையில் கொடுக்காமல், என் அப்பாவிடம் கொடுத்து எனக்குக் காட்டச்சொல்லுவார். மலரில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைவிட, ஓவியங்களில்தான் என் கவனம் செல்லும். சில்பி, கோபுலு, மாதவன் போன்றவர்களின் ஓவியங்களை நான் வியப்புடன் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, சில்பியின் ஓவியங்கள் என்றால், எனக்குக் கொள்ளைப் பிரியம். அவருடைய ஓவியங்களுக்கென்றே எத்தனையோ தனிச்சிறப்புகள் உள்ளன. உலோகங்களுக்கான வண்ணங்களைக்கூட தத்ரூபமாக வரைந்திருப்பார். தங்கம், பித்தளை இரண்டுமே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ஆனால், அவருடைய ஓவியத்தைப் பார்த்தால், இது தங்கம், இது பித்தளை என்று துல்லியமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு வண்ணங்களைக் கையாளுவதில் தனித் திறமை பெற்றிருந்தார். அவருடைய ஓவியங்களைப் பார்க்கப் பார்க்க, 'நாமும் ஏன் இப்படி வரையக்கூடாது?’ என்ற கேள்வி என் மனதில் தோன்ற, ஓவியம் வரைவதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.''
''உங்களுக்கு பத்மவாசன் என்ற பெயர் பெற்றோர் வைத்ததா அல்லது புனைபெயரா?'' கேட்டார் பத்மா.
''பெற்றோர் வைத்த பெயர் கிரிதரன். சில்பிதான் எனக்கு பத்மவாசன் என்று பெயர் வைத்தார். சில்பி விகடனில் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்த்து, அப்படியே வரையப் பழகினேன். சில்பியின் ஓவியங்களைப் பார்த்து நான் வரைந்த படங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு மயிலாப்பூருக்கு வந்தார் அப்பா. அப்போது, சில்பி யாரென்றே எங்களுக்குத் தெரியாது. அதுவரை நான் அவரை நேரில் பார்த்தது இல்லை.
தினமணியில் ஆசிரியராக இருந்த வாசுதேவன், அப்போது மயிலாப்பூரில் இருந்தார். அவர் என்னையும் அப்பாவையும் சந்தோஷமாக வரவேற்று, சாப்பாடு போட்டு, ஒரு ரிக்ஷாவில் ஏற்றி, சில்பி வீட்டுக்கு அனுப்பிவைத்தார். நாங்கள் அங்கே சென்றபோது, அவர் பூஜை செய்துகொண்டிருந்தார். பூஜை முடிந்ததும், எங்களை மலர்ச்சியோடு வரவேற்று அமரச் செய்த ஓவியர் சில்பியிடம், என் தந்தை நான் வரைந்த படங்களைக் காட்டினார்.

அதுவரை சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த சில்பி சட்டென நிமிர்ந்து, எழுந்து வந்து என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, 'அட, நான் வரைந்ததுபோலவே இருக்கிறதே!’ என்று பிரமிப்புடன் கூறினார். சிலிர்த்துப்போன என் தந்தை அவரிடம், 'என் பிள்ளையைத் தங்களின் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதுவரை யாரையும் தனக்கு சீடனாகவோ வாரிசாகவோ ஏற்றுக்கொள்ளாதவர், முதலும் கடைசியுமாக என்னையே தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். சில்பியின் நிஜப்பெயர் நிவாசன். அவருடைய மனைவியின் பெயர் பத்மாவதி. இரண்டு பெயர்களையும் இணைத்து, அவர்தான் எனக்கு பத்மவாசன் என்று பெயர் வைத்தார்.''
''ஸ்ரீநிவாசன் சில்பியானது எப்படி?'' என்று கேட்டார் விக்னேஷ்.
''ஆனந்த விகடன் அலுவலகத்தில் பணியாற்றிய ஓவியர் மாலிதான் நிவாசனிடம், 'சிற்பங்களைச் செதுக்குபவர்களைச் சிற்பி என்று அழைப்பார்கள். நீ அவற்றையே வரைவதால், உனக்கு 'சில்பி’ என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்' என்று சொன்னார். இப்படித்தான் நிவாசன் சில்பியாக மாறினார்.''
''உங்கள் குருநாதரிடம் உங்களைக் கவர்ந்த அம்சம் எதுவென்று சொல்லமுடியுமா?'' என்று கேட்டார் வாசகர் அஜய்.
''என்னுடைய குருவை நேரில் பார்க்கும் முன்பே, அவரைப் பற்றி மிகவும் உயர்வாக உள்ளத்தில் வைத்துப் போற்றிக் கொண்டிருந்தேன். 'நீ அவரை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறாய். ஆனால், அவரிடம் வெற்றிலை, புகையிலை போடுவது போன்ற உனக்குப் பிடிக்காத பழக்கங்கள் இருந்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார் அப்பா. 'அப்படியெல்லாம் எந்தப் பழக்கமும் அவரிடம் இருக்காது’ என்று உறுதியாகச் சொன்னேன். அதேபோல், அவரிடம் எந்த ஒரு தேவையற்ற பழக்கமும் இல்லை என்பதை என் அப்பா அவரை நேரில் பார்த்ததும் புரிந்துகொண்டார். வெற்றிலை பாக்கு போடுவதுகூட சில்பிக்கு பிடிக்காது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கும்கூட அப்படிப்பட்ட பழக்கங்கள் இல்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.''

''நீங்கள் பொதுவாக ஆன்மிகம் சார்ந்த ஓவியங்களைத்தான் வரைகிறீர்களே தவிர, மற்றபடி கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருப்பதாகத் தெரியவில்லையே..?'' பழனியின் கேள்விக்குப் பளிச்சென்று பதில் சொன்னார் பத்மவாசன்.
''ஆரம்பத்தில் இருந்தே சில்பியின் தெய்விகமான ஓவியங்களே என் மனதில் பதிந்துவிட்டதால், நானும் அப்படியே பழகிவிட்டேன். கதைகளுக்குப் படம் வரையவேண்டுமானால், கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வரையவேண்டும். அப்படி வரையும்போது சமயங்களில் அந்த ஓவியங்களில் விரசம் வெளிப்பட்டுவிடுவதைத் தவிர்க்கமுடியாது. அப்படியான ஓவியங்கள் வரைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெய்விகமான ஓவியங்களை மட்டுமே வரைவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். எந்தக் காரணம் கொண்டும் இந்த விஷயத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
அதற்காக, நான் கதைகளுக்கு ஓவியமே வரையவில்லை என்று சொல்லமுடியாது. ஒருமுறை, கல்கியின் சரித்திரத் தொடர் ஒன்றுக்கு படங்கள் வரையக்கூடிய வாய்ப்பு வந்தது. முதலில், எங்கே நம் கொள்கைக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று நான் சற்றுத் தயங்கவே செய்தேன். ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று, என் தயக்கத்தை ஸ்வாமிஜியிடம் தெரிவித்தேன். 'கல்கியின் கதைகளில் விரசம் என்பது கொஞ்சம்கூட இருக்காது. எனவே, நீ தாராளமாக வரையலாம்’ என்று சொல்லி, கல்கியின் கதைகளுக்கு என்னைப் படம் வரையத் தூண்டி உற்சாகப்படுத்தினார் அவர். சரித்திரக் கதையாக இருந்தாலும் சரி, சமூகக் கதையாக இருந்தாலும் சரி... கல்கியின் எழுத்துக்களில் கண்ணியமும் சமூகப் பொறுப்பு உணர்வும் நிறைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.'

''நீங்கள் முதன்முதலில் வரைந்த ஓவியம் எது? அது பற்றிய நினைவுகளைக் கொஞ்சம் சொல்லுங்களேன்...'' என்று கேட்டார் வாசகர் பிரசாத்.
'ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் ஓவியர் மாதவன் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து வரைந்த முருகன் படம்தான் நான் வரைந்த முதல் படம். அதைப் பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள். முருகன் நேராக நிற்காமல் ஒருபக்கமாகச் சாய்ந்திருப்பார்'' என்று சொல்லி பத்மவாசன் சிரிக்க, வாசகர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.
வாசகர் பிரசாத்தே மீண்டும் கேட்டார். ''நீங்கள் வரைந்த அந்த முருகன் ஓவியத்தைப் பார்த்து உங்கள் தந்தை என்ன சொன்னார்?''
''என் முதுகில் தட்டிக்கொடுத்து, என்னை உற்சாகப்படுத்தினார். பிறகு, அதில் இருந்த சின்னச் சின்ன தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளச் செய்தார். மாதவனின் ஓவியங்கள் என்றால், அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். 'மாதவன் வெளிநாட்டில் பிறந்திருந்தால் பெரிய அளவில் புகழ்பெற்று இருப்பார்’ என்று அடிக்கடி சொல்வார் அப்பா.'

''சிறிய வயதிலேயே நீங்கள் முருகன் படத்தை வரைந்ததற்குக் காரணம், முருகன் உங்களுடைய இஷ்ட தெய்வம் என்பதாலா?'' என்று கேட்டார் வாசகர் அஜய்.
''நான் முதன்முதலில் ஓவியம் வரைய நினைத்தபோது, எனக்குக் கிடைத்தது மாதவன் வரைந்த அந்த முருகன் ஓவியம்தான். எனவேதான், நான் முருகன் படத்தை வரைந்தேன். மற்றபடி, என்னுடைய இஷ்ட தெய்வம் அம்பாள். இருந்தாலும், முருகன்தான் எங்களுடைய குலதெய்வம் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.''
''நீங்கள் படம் வரைவதற்கு நேரம் காலம் பார்ப்பது உண்டா? ஒரு படம் வரைய எத்தனை நாள் ஆகும்?'' என்று கேட்டார் வாசகர் மணிகண்டன்.
''படம் வரையவேண்டும் என்பதற்காக மனதளவில் நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. நினைத்தபோது வரைய உட்கார்ந்துவிடுவேன். சமயங்களில் இரவு முழுக்கவும் நான் வரைந்திருக்கிறேன்.''

''நீங்கள் படம் வரையும்போது, சோர்வு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?'' இது பத்மா.
''நான் படம் வரைய ஆரம்பித்துவிட்டால், சோர்வோ களைப்போ கொஞ்சம்கூடத் தெரியாது. படங்களை வரைவதை ஒரு வேள்வியாக நினைத்துச் செய்கிறேன். நான் வரைவதற்கு உட்காரும்போது, பக்கத்தில் ரேடியோவை வைத்துக்கொண்டு, கர்னாடக சங்கீதம் அல்லது பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்பது வழக்கம். எனக்குச் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்கு இதுவும்கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.''
''நீங்கள் விரும்பி வரைந்த படங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...'' என்று அஜய் கேட்டார்.
'ஒரு படைப்பாளியின் படைப்புகள் எல்லாமே அவனுடைய விருப்பத்தில் உருவானவைதான். உண்மையான படைப்பாளி விருப்பம் இல்லாமல் ஓவியமோ, கவிதையோ, கதையோ, எதையும் படைப்பது இல்லை. நான் வரைவது எந்தப் படமாக இருந்தாலும், அதை முழு விருப்பத்துடன்தான் வரைவேனே தவிர, கடமைக்காக கடனே என்று வரையமாட்டேன். எந்த ஒரு நிலையிலும் என் மனதுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை நான் செய்யவேமாட்டேன்.''
''இந்தக் கண்காட்சியில் நடராஜர் ஓவியங்கள் நிறைய இருக்கிறதே... நடராஜரை வரைவது என்றால், உங்களுக்கு ரொம்பவும் பிடிக்குமோ?'' முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வி இருந்தாலும், நடராஜரின் தத்துவத்தைப் பற்றி அழகாக விளக்கினார் பத்மவாசன்.
''பொதுவாக, திறமைக்குச் சவாலான வேலைகளை எடுத்துச் செய்வது என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நடராஜர் வடிவத்தை வரைவது மிகவும் கஷ்டமான வேலை. எனவேதான், நான் அடிக்கடி நடராஜரின் ஓவியங்களை வரைகிறேன். நடராஜரின் நடனக்கோல நெளிவு சுளிவுகளை ஓவியத்தில் துல்லியமாகக் கொண்டுவரவேண்டும். கொஞ்சம் தவறினால்கூடப் படம் சிறப்பாக அமையாது. நடராஜரின் அந்த நடனத் தத்துவம் பிரபஞ்ச இயக்கத்தைக் குறிப்பிடுவதாகும். நடராஜரின் ஓவியம் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில்கூட நடராஜரின் திருவுருவம் இடம் பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் அடிக்கடி சிதம்பரம் கோயிலுக்குச் செல்வது உண்டு. அங்கே உள்ள சிற்பங்கள் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டன.''

''நீங்கள் வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றிருக்கிறீர்களா?'' மணிகண்டன் கேட்டு முடிப்பதற்குள் வேகமாக பதில் வருகிறது பத்மவாசனிடம் இருந்து.
''இதுவரை நான் எந்த ஒரு வெளிமாநிலத் துக்கோ வெளிநாட்டுக்கோ சென்றதே இல்லை. அதில் எனக்குப் பெரிதாக ஆர்வமோ விருப்பமோ இல்லை. காரணம், நம்முடைய தமிழ்நாட்டில் இல்லாதது எதுவுமே இல்லை. கும்பகோணத்தில் இல்லாத கோயில்களா? அந்தக் கோயில்களில் இல்லாத அதிசயங்களா? இங்குள்ள கட்டடக் கலைக்கும் சரி, சிற்பக்கலைக்கும் சரி... எந்த உலக அதிசயமும் ஈடாகாது என்றே சொல்வேன். தமிழ்நாட்டிலேயே எனக்குத் தேவையானவை எல்லாம் கிடைத்துவிடும்போது நான் எதற்காக வெளிமாநிலங்களுக்கோ வெளிநாடு களுக்கோ செல்லவேண்டும்?''
''ஓவியர் என்ற முறையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நிறம் என்ன?''
வாசகர் பழனி கேட்டு முடிப்பதற் குள், ''கறுப்புதான்'' என்றவர், வாசகர்களைப் பார்த்து, 'உங்களுக்கு காக்கையின் நிறம் என்னவென்று தெரியுமா?’ என்று கேட்க, 'இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. விடையை அவரே சொல்லட்டும்’ என்று நினைத்தவர்களாக, பேசாமல் இருந்தார்கள் வாசகர்கள். பத்மவாசனே தொடர்ந்தார்... ''பொதுவாக எல்லோருமே காக்கையின் நிறம் கறுப்பு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், அது உண்மை இல்லை. காக்கையின் முகம் மட்டும்தான் கறுப்பு நிறத்தில் இருக்கும். அதனுடைய கழுத்து சாம்பல் நிறத்தில் இருக்கும். அதன் இறகுகளை உன்னிப்பாகப் பார்த்தால், அந்தக் கரிய நிறத்தில் பல வண்ணங்களின் கலவை இருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் பாரதியார்கூட, 'கண்ணுக்கு இனிய காக்கை’ என்று பாடியிருக்கிறார்.'
''உங்களுக்கு ஸ்வாமி விவேகானந்தரிடம் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?'' என்று வாசகர் அஜய் கேட்க, ''இளைஞர் என்ற முறையில் பொருத்தமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள்' என்று புன்னகைத்தார் பத்மவாசன்.
தொடர்ந்து, 'ஸ்வாமி விவேகானந்தரைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்கமுடியாது. தம்முடைய குறுகிய ஆயுள் காலத்திலேயே அவர் எத்தனையோ பல சாதனைகளை நம்முடைய தேச நலனுக்காகச் செய்திருக்கிறார். மதம் என்பதை மனிதநேயத்துடன் அணுகிய ஒப்பற்ற மகான் அவர். இந்தியாவின் மதிப்பையும் சரி, இந்துமதத்தின் சிறப்புகளையும் சரி... வெளிநாடுகளில் மிகச் சரியான நேரத்தில் மிக மிகச் சரியான முறையில் வெளிப்படுத்திய யுக புருஷர் அவர். இந்திய இளைஞர்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை அளவில்லாதது. இந்தியாவின் வலிமையையும் பெருமையையும் இன்னும் இன்னும் உயர்த்தவேண்டும் என்பதற்கு அவர் இந்திய இளைஞர்களைத்தான் பெரிதும் நம்பியிருந்தார். இளைஞர்களிடம் அவர் அந்த அளவுக்கு அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்ததால்தான், அவருடைய பிறந்த தினத்தை தேசிய இளைஞர்கள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். அவருடைய நம்பிக்கையைக் காப்பாற்றுவதும், அவருடைய எதிர்பார்ப்பின்படி செயல்படுவதும்தான், உலக நாடுகளில் பெருமையுடன் நம்மைத் தலைநிமிரச் செய்த அந்த மகானுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றிக் காணிக்கையாகும்.''
''இப்படிக் கேட்பதைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இதன்மூலம் மற்றவர்களுக்கு ஓவியக்கலையின் சிறப்பும் மதிப்பும் தெரியவேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன். இங்குள்ள ஓவியங்களைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதைப்போலவே, ஓவியங்களின் அடியில் குறிப்பிட்டிருக்கும் விலையும்கூட எங்களைப் பிரமிக்க வைப்பதாக இருக்கிறதே?''
''பூர்வஜென்மம் என்பதில் உடன்பாடு உண்டா?''
''தஞ்சைக் கோயில், காஞ்சி கயிலாயநாதர் கோயில் போன்ற கோயில்களில் உள்ள சித்திரங்களின் வண்ணங்கள் இன்னும் அப்படியே இருப்பதன் ரகசியம் என்ன?''
இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பத்மவாசனின் பதில்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிய, அடுத்த இதழ் வரை ஆவலோடு காத்திருங்கள்.