சிறப்பு கட்டுரை
Published:Updated:

மண் மணக்கும் தரிசனம்!

அண்ணன்-தங்கை சாமிகள்!

திருநெல்வேலி, பாளையங்கோட்டையின் மையப்பகுதியில், மனகாவலம்பிள்ளை சாலையில் இருந்தபடி, நெல்லைச் சீமை மக்களைக் காத்தருள்கிறாள், ஸ்ரீவண்டி மலைச்சியம்மன். சுமார் 200 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் இது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வாணிபம் செய்வதற்காக இந்தப் பகுதிக்கு வரும்போது, அங்கிருந்து அம்மன் விக்கிரகத்தையும் எடுத்து வந்தார்கள் வணிகர்கள். அப்போது ஓரிடத்தில் வண்டி ஒன்று மறித்து நின்றதாம். தொடர்ந்து, 'இங்கேயே கோயில் கட்டு’ என்றும் அசரீரி ஒலிக்கவே, மலைத்துப்போன வியாபாரிகள் அந்த இடத்திலேயே கோயில் எழுப்பினார்கள். இதனால் அம்மனுக்கு 'வண்டி மறிச்ச அம்மன்’ என்று பெயர் உண்டாகி, அது பின்னர் 'வண்டி மலைச்சியம்மன்’ என்று மருவியதாகச் சொல்வர்.

இங்கே, வண்டி மலைச்சியம்மனுடன் சுவாமி வண்டிமலையனும் அருள்பாலிக்கிறார். இவர், அம்மனின் அண்ணன் என்கிறார்கள் பக்தர்கள். சிவலிங்கம், காலபைரவர், சுடலைமாடன் கல்பீடம் ஆகிய தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம்.

மண் மணக்கும் தரிசனம்!

கோயிலில், அம்மன் மற்றும் சுவாமிக்குப் பட்டுப்புடவையும் பட்டு அங்கவஸ்திரமும் மரப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் நூறு ஆண்டுப் பழைமை வாய்ந்த வஸ்திரங்கள் இவை. வருடந்தோறும் தை மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் இந்த வஸ்திரங்களை எடுத்து, தெருமுனைப் பிள்ளையார் கோயிலில் வைத்துப் பூஜித்து, பிறகு அம்மனுக்கும் சுவாமிக்கும் சார்த்தப்படுகிற வைபவம் நடைபெறும். முன்னதாக, அந்த வஸ்திரப் பெட்டியை, ஏழு நாள் விரதம் இருந்து இரண்டு பேர் எடுத்து வருவது காணக் கண்கொள்ளாக் காட்சி!

தங்கை வண்டி மலைச்சியம்மனும், அண்ணன் வண்டிமலைசுவாமியும் கிடந்த திருக்கோலத்தில், அதாவது படுத்த நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். கோயில் கொடைவிழாவின்போது மட்டுமே வீதியுலா வருவாள் அன்னை.  

மண் மணக்கும் தரிசனம்!

மேலும், பாளையங்கோட்டையில் தசரா விழா நடைபெறும்போது, 12 சப்பரங்கள் கொண்டு, அசுரனை வதம் செய்யக் கிளம்பும் வைபவம் நடைபெறும். அப்போது, வண்டிமலைச்சியம்மன் கோயிலின் முன்னே 12 சப்பரங்களும் அணிவகுத்து நிற்க, அவற்றுக்கு ஒரே நேரத்தில் இங்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெறும்.

வண்டி மலைச்சியம்மனிடம் வேண்டிக்கொண்டால், நீண்ட காலம் அவதிப்படுத்திய நோயும் காணாமல் போகும்; சகல ஐஸ்வரியங்களுடன் நிம்மதியாக வாழச் செய்வாள் அன்னை என்கின்றனர், பக்தர்கள்.

  ஆ.நல்லசிவன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்