சிறப்பு கட்டுரை
Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

னுசு அல்லது மீன ராசியில் பிறந்தவேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இணைந்திருக்கும்போது, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அறவழியில் வாழ்க்கைப் பயணத்தை ஏற்பதில் ஆர்வமுள்ளவளாகத் திகழ்வாள். சிற்பம், சித்திரம், பாட்டு, வாத்தியம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடும் தேர்ச்சியும் பெற்று விளங்குவாள். சாஸ்திரங்களில் நுணுக்கமான அறிவுபெற்று, அதைப் பலருக்குப் பகிர்ந்தளித்து மகிழ்வாள் என்கிறது ஜோதிடம். 

மென்மையான கலைகள் அனைத்தையும் கசடறக் கற்றுப் பெருமை சேர்த்த பெண்ணினம், அவற்றை அழியாமல் பாது காத்து வந்தது. தாண்டவம், லாஸ்யம் என்ற இரு பகுதிகளாகப் பிரிந்த நாட்டிய சாஸ்திரத்தில் 'லாஸ்யம்’ (மென்மையான) பகுதியை அறிமுகம் செய்தவள் பார்வதி என்கிறது சாஸ்திரம். தாண்டவத்தை ஈசன் கையாண்டான், லாஸ்யத்தை அன்னை சர்வாணி கையாண்டாள் என்று தசரூபகம் எனும் நூல் விளக்கும் (தாண்டவம் நீலகண்ட: சர்வாணீலாஸ்ய மஸ்ய).

காலக் கணிதத்தின் சூத்திரம்

அறம் வளர்க்கும் பெண்கள்

கைவண்ணமும் குரல்வளமும் பெண்ணினத்துக்கு இயல்பாகவே இருக்கும். அன்றைய நாளில், பெண் பார்க்கும் படலத்தில் பெண் சமையல் செய்வாளா, பாட்டுப் பாடுவாளா என்ற கேள்விகள் கேட்கப்படும். அறுசுவைகளுக்கும் தனிச் சுவை சேர்ப்பவள் பெண். பாடல்களுக்குக் குரல்வளத்தால் இனிமை சேர்ப்பவள். அணிகலன்களுக்கு அழகு சேர்ப்பவள். அவள் கையாளும் கலைகள் மெருகேறி விளங்கும். சாஸ்திர நுணுக்கங்களை அறிந்து, பண்பான வாழ்க்கைக்கு உதவுபவள் என்கிறது ஜோதிடம் (பிரம்மவாதின்யபி). தான் அறத்தைக் கடைப்பிடிப்பதுடன் நில்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையே அறவழியில் அழைத்துச் செல்பவள் பெண். உடல் சுகாதாரம், மனமகிழ்ச்சி, பண்பான வாழ்க்கை ஆகியன தாம்பத்தியத்தின் அடிப்படைத் தேவைகள். இவற்றைப் பெண்ணினம் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, தாம்பத்தியத்தின் நிறைவை எட்டவைக்கிறது. தாம்பத்தியத்தின் சிறப்புக்கு இருவருக்கும் சமபங்கு இருந்தாலும், சுவையூட்டும் பங்கு பெண்ணினத்துக்கே உரியது என்பது சாஸ்திரத்தின் கணிப்பு. இனப்பெருக்கம், குழந்தை வளர்ப்பு, குடும்பப் பராமரிப்பு, கணவனுக்கு உணவோடு நிற்காமல் இன்பத்தின் நிறைவையும் அளித்து அவனது மகிழ்ச்சியில் நிறைவை எட்டுபவள் பெண். அவள் இல்லை என்றால், உலகம் இல்லை.

நம் நாட்டில் ஒரு சாரார் மனைவியை 'சம்சாரம்’ என்பார்கள். ஆம்! அவள்தான் உலகம் என்று

காலக் கணிதத்தின் சூத்திரம்

பொருள். புதுச் சிந்தனையில் நமது பண்புகள் தூசி படிந்து மங்கினாலும், பெண்ணினத்தில் அவ்வப்போது தோன்றும் மாதரசிகள் அந்தத் தூசியை அகற்றி புதுப் பொலிவை ஏற்படுத்திவிடுவார்கள். இங்ஙனம் நல்ல பண்புகளோடு, குறிப்பிட்டவேளையில் பிறக்கும் பெண்கள் எக்காலத்திலும் உண்டு. அவர்கள் இழந்த பண்பை மீட்டு, உரிய இடத்தில் அமர்த்துவார்கள். தெய்வ நிந்தையும், பெரியோர்களை அவமதிப்பதுமான செயல்கள் பெருகி வரும் இன்னாளில், மார்கழி உத்ஸவத்தில் மன மகிழ்ச்சியும், பண்பின் பெருமையும் உணரப்படுவதைக் காண்கிறோம். நவரஸமும் அறுசுவையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவன, கலையும் பண்பும் அழியாவரம் பெற்றன என்பதை நன்கு உணரமுடிகிறது.

சிந்தனையைச் செழிப்பாக்கும் புதன்!

இப்படியிருக்க, தாம்பத்தியத்தின் நிறைவுக்கான அடிப்படைத் தகுதிகளை அறவே அகற்றிவிட்டு, நிலையில்லா அழகு, செல்வம், பதவி, பெருமை ஆகியவற்றையே நம்பி அதில் இணைந்து தவிப்பவர்கள் ஏராளம். பரிணாம வளர்ச்சியில் அழகு தினம் தினம் தேய்ந்துகொண்டே போகும். மற்ற விஷயங்களிலும் ஏற்றத் தாழ்வு நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொன்றிலும் சரிவு ஏற்படும் வேளையில், அழகு சாதனங்களை ஒட்டவைத்தும், கடன்பட்டும் சரிவைத் தடுக்க முயன்றாலும், வெற்றி என்பது பகல்கனவுதான். இப்படியானவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு ஜோதிட மேதைகளுக்கு இருக்க வேண்டும்.

இன்றைக்கு அரசியலைவிட தாம்பத்திய வாழ்க்கை சிதைந்து காணப்படுகிறது. இதற்கு மருந்து மனமாற்றமே! அதை ஏற்படுத்துப வன் புதன். அவன் சிந்தனை வளத்தை ஊக்குவிப்பவன்; திறமையை விரிவாக்கம் பெறச்செய்து வெற்றியை எட்டவைப்பவன்; கல்வியில் ஆர்வத்தை வரவழைப்பவன்; இக்கட்டான சூழலில் இன்னலில் இருந்து விடுபட வழிகாட்டுபவன். ஜராசந்தனிடம் மாட்டிக்கொண்ட கண்ணன், பீமசேனனின் ஒத்துழைப்பில் வெளிவந்தான். யமதருமனிடம் சிக்கிய சாவித்திரி, தனது சிந்தனை வளத்தால் வெற்றிபெற்றாள். சாபத்தில் சிக்கிய கணவனுக்காகத் தனது சிந்தனைத் தெளிவால் சூரியனையே உதிக்கவிடாமல் தடுத்து வெற்றிபெற்றாள் நளாயினி. புராணங்கள் கதைகள் வாயிலாகத்தான் சிந்தனை வளத்தின் சிறப்பை எடுத்துரைக்கும். கண்களுக்குப் புலப்படாத சிந்தனையின் தரத்தை கதை வாயிலாகவே வெளிப்படுத்த இயலும்.

புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தால்...

ஒற்றைப்படை ராசியில் 18 பாகைக்கு மேல் 7 பாகைகளும், இரட்டைப்படை ராசியில் 5 பாகைக்கு மேல் 7 பாகைகள் வரையிலும் புதன் த்ரிம்சாம்சகம் இருக்கும். குருவுக்கு அடுத்தபடியாக புதனுக்கு அதிக பாகைகள் உண்டு. ஒற்றைப்படை ராசியில் 3வது த்ரேக்காணமும், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணமும் இருக்கும். இரண்டு ஹோரைகளிலும் சந்திரனின் பங்கு இருக்கும். ராசி முழுவதும் குருவின் பங்கு உண்டு. த்ரேக்காணத்தில் சூரியனும் குருவும் இருப்பார்கள். குரு, சந்திரன் ஆகியோரது பங்கில் (ராசி முழுவதும் குரு, ஹோரையில் சந்திரன், த்ரேக்காணத்தில் குரு, சூரியன்), புதன் த்ரிம்சாம்சகம் தன்னில் பிறந்தவளை சிந்தனைவளம் பெற்ற காரிகையாக (அவளது கர்மவினைக்கு உகந்த வகையில்) உருவாக்குகிறான். மனம் சார்ந்தது மண வாழ்க்கை; பணம் சார்ந்தது உலக வாழ்க்கை. இரண்டையும் உணர்ந்து சேவை செய்தால் ஜோதிடமும் செழிக்கும்; மக்களும் மகிழ்வார்கள். 'புதன்’ என்ற சொல்லுக்கு அறிஞன், கல்வி கற்றவன், நல்லவன், ஒழுக்கம் உடையவன், விவேகி (பகுத்தறிவாளன்) போன்ற பல அர்த்தங்கள் உண்டு. புதன் என்றால் அறிவாளி. 'புத அவகமான’ என்ற தாதுவில் இருந்து வெளிவந்த சொல். அவக மனம் அறிவை அடைத்தல்.  

விண்வெளியில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன் ஆகியோர் அடுத்தடுத்த பயணப் பாதையில் வளைய வருவர். ராசிச் சக்கரத்திலும் சூரியனோடும், சந்திரனோடும் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பார்கள். த்ரிம்சாம்சகத்தில் அந்த இணைப்பானது, ராசிபேதத்தில் முன்பின்னாக இருக்கும். சூரியன், சந்திரன் ஆகியோருடன் மற்ற கிரகங்களைவிடவும் புதன், சந்திரன் ஆகியோருக்கு நெருக்கம் அதிகம். சூரிய கிரணத்தின் தொடர்பில் சந்திரன் பலம் பெறுகிறான்; சந்திரனின் தொடர்பில் புதன் பலம் பெறுகிறான். சூரிய கிரணத்தின் தொடர்பில், சந்திரனில் எண்ணங்கள் உதயமாகும் (சூரியன் ஆன்மா; சந்திரன் மனம்). அந்த எண்ணங்களை ஆராய்ந்து, ஏற்பது அல்லது துறப்பது என்ற முடிவை புதன் நிர்ணயிப்பான். அதன் பரிந்துரையில் மனம் செயல்படும்.

சந்திரனும் புதனும்!

காலக் கணிதத்தின் சூத்திரம்

சந்திரனுக்கும் புதனுக்கும் தொடர்பு உண்டு. அவனை சந்திரனின் புதல்வனாக ஜோதிடம் சித்திரிக்கும். பிறக்கும் தறுவாயில் இருக்கும் சிந்தனை வளத்தை வளர்ப்பவன் புதன். அறிவு மனிதனின் இலக்கணம். மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது, அவனிடமுள்ள ஆறாம் அறிவுதான். 'மஸ்திக்ஷகம்’ (மூளை) எல்லோருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்தும் இயல்புள்ளவனே அறிவாளி. அந்த இயல்பை உறுதிப்படுத்துபவன் புதன். அறிவு இருந்தும் பயன்பாட்டை அறியாதவனையும் முட்டாள் என்று சொல்வது உண்டு. காலத்தின் வரைபடத்தில் (ஜாதகம்) வலுவிழந்த புதன் (நீசம் பெற்றவன்), செயல்பட முடியாமல் தடுக்கப் பட்டவன் (மௌட்யம்), வெப்பக் கிரகங்களின் சேர்க்கையில் இயல்பை மாற்றிக்கொள்ள நிர்பந்தப்படுத்தப்பட்டவன் (பாபக் கிரகங்களோடு இணைந்தவன்), சிந்தனையை திசைதிருப்பி விருப்பம் இல்லாவிட்டாலும் ஏற்கவைத்து, தவறான வழியில் பயணிக்க வைப்பவன்... இப்படி, தகுதி இழந்த புதனின் செயல்பாட்டை ஜோதிடம் விளக்கும். ஆனால், அவனது த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள், அவனது மாறாத இயல்பைச் சுட்டிக்காட்டுபவளாக மாறுவாள்.

அறவழியில் செயல்படும் திடமான அறிவு, மற்ற சிந்தனைகளுக்கு இரையாகாது. உள்ளதை உள்ளபடி உணரவைக்கும் அது ஏமாற்றம் அடையாது. அறிவில் கிடைத்த ஆதாயத்தைப் பகிர்ந்தளிக்கும் பாங்கு இருக்கும். கலைகளில் இருக்கும் ஆற்றலை மற்றவர்களை மகிழ்விப்பதற்காகப் பயன்படுத்த முற்படுவர். அதன்மூலம் அவர்களிடமும் அதாவது ரசித்து மகிழ்பவர்களுக்கும் கலைகளின் மீதான ஆர்வத்தை வரவழைக்கும். உடல் வளம், உள்ளத் தூய்மை, உயிரினங்களோடு இணைந்து வாழும் பாங்கு, உலக இயக்கத்துக்கு ஊக்கமளிக்கும் சிந்தனை ஆகியன புதன் கிரகத்தின் பெருமையில் வெளிவரும். பிறக்கும்தறுவாயில் அறிவின் செழிப்பு இயல்பாகத் தென்படாதவனை அறிவாளியாக மாற்ற இயலாது. இதுபோன்றவர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ப வாழ்வில் முழு மகிழ்ச்சியை அடையவைத்தார்கள், அன்றைய சிந்தனையாளர்கள்.

'திரிசங்கு’ சிந்தனையாளர்கள்!

வசிஷ்டரை அணுகினான் திரிசங்கு. 'என்னை இந்த உடலோடு சொர்க்கத்துக்கு அனுப்பிவையுங்கள்’ என்று வேண்டினான். 'இயற்கைக்கு மாறுபட்ட செயல் வெற்றிபெறாது. அது என்னால் இயலாது’ என்றார் முனிவர். மனமொடிந்து திரும்பிய திரிசங்கு, தன்னை வசிஷ்டர் நிராகரித்ததை விசுவாமித்திரரிடம் தெரிவித்தான். வசிஷ்டரிடம் இருக்கும் விசுவாமித்திரரின் பகை விஸ்வரூபம் எடுத்தது. பகை மூண்டால், சிந்தனை மங்கிவிடும். இப்போது வசிஷ்டரைத் தலைகுனிய வைப்பது ஒன்றே விசுவாமித்திரரின் சிந்தனையானது. தனது தவ வலிமையால் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்பினார் விசுவாமித்திரர். ஆனால், இந்திரன் திரிசங்குவுக்கு அனுமதி அளிக்கவில்லை. பூமிக்குத் திரும்பி வரும் திரிசங்குவை தனது தவத்தால் தடுத்தார் விசுவாமித்திரர். அந்தரத்தில் நின்றான் திரிசங்கு. அவனுக்கு இரு உலகங்களும் கிடைக்காமல் போயின.

மன வளம் குன்றிய குழந்தைகளுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம் அமைத்துக் கொடுப்பார்கள். மனவளம் பெற்ற குழந்தைகளோடு இணைந்து படிக்க அனுமதிக்கமாட்டார்கள். இரு சாராருக்கும் நன்மை பயக்காது என்பதை அறிந்த சிந்தனையாளர்கள் இருவரையும் வாழவைக்க தனித்தனி வழியைக் காட்டினார்கள். இரு பிரிவு மக்களையும் இணைக்க முற்பட்ட சில சீர்திருத்தவாதிகள், அவர்களை திரிசங்குபோல் அந்தரத்தில் நிற்கவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். பெரிய பதவியை ஏற்றும் பதற்றம் அடைந்த மனம் பதவி சுகத்தை உணர முடியாமல் தவிக்கிறது. மேலே ஏறிய பிறகு கீழே இறங்கி வரவும் இயலாது. இனிப்பு என்பதால் உமிழவும் முடியவில்லை; கசப்பு என்பதால் விழுங்கவும் முடியவில்லை! இந்த மாதிரி சிந்தனைகள் புதன் த்ரிம்சாம்சத்தில் பிறந்தவனிடம் இருக்காது.

காலக் கணிதத்தின் சூத்திரம்

துரியோதனின் நிலை...

துரியோதனன், சிந்தனை விஷயத்தில் மாற்றுத்திறனாளி. பாண்டவர்களிடம் ஏற்பட்ட பகையால் அவனுடைய சிந்தனை திசைதிரும்பியது. சகுனி, கர்ணன், தம்பிகள், தகப்பன் அத்தனை பேரும் அவனது விருப்பத்துக்கு இணங்க பகையை வளர்த்து விட்டார்கள். அப்படியான பகையின் காரணத்தால் விதுரர், பீஷ்மர் முதலானோரின் நல்லுரைகளாலும் அவனிடம் விழிப்பு ஏற்படுத்த இயலவில்லை. சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். ஆனால் பகையின் பளு, சிம்மாசன சுகத்தை உணரவிடாமல் தடுத்தது. அவன் இறுதிவரை போராடிக்கொண்டே இருந்து உயிர் துறந்தான். சுய சிந்தனையின் தரம் குன்றியிருப்பது, பகையால் பிற சிந்தனைகளை ஆராயாமல் ஏற்பது ஆகிய இரண்டும் அவனை அலைக்கழித்தன.

புதல்வன் கம்சனை அரியாசனத்தில் அமர்த்தினார் உக்ரசேனர். கம்சனின் ஆட்சி அவலத்தில் அல்லல்பட்ட மக்கள் உக்ரசேனரிடம் முறையிட்டார்கள். எனவே, அவர் தனயனிடம் இருந்து ஆட்சியைத் திரும்பப் பெற்றார். ருசி கண்ட பூனை சுவையை இழக்க விரும்பவில்லை. பகையுணர்ச்சி தோன்றியது. அவனது நண்பர்கள் அதற்கு தூபம் போட்டார்கள். தாய்தந்தையைச் சிறையில் தள்ளி, சிம்மாசனத்தைப் பிடித்தான். தனது எதிரியாக கண்ணன் தோன்றிவிட்டான் என்ற எண்ணம் அவனை நிலைகுலைய வைத்தது. கண்ணனை அழிக்கும் முயற்சியில் போராடிக்கொண்டு இருந்தவன், இறுதியில் உயிர்நீத்தான்.

புதனின் த்ரிம்சாம்சகத்தில் உதித்தவரிடம் இந்தக் கோளாறு தென்படாது. பகையுணர்வு பகுத்தறிவை முடக்கும். புதன் வலுவாக இருந்தால், பகுத்தறிவில் பகை முடங்கிவிடும். மற்ற கிரகங்களின் பங்கில் வலுப்பெற்ற புதன் நீதி, நெறி, நட்பு ஆகியவற்றுடன் இணையும்போது, அறம், கலைகள், சாஸ்திர நுணுக்கங்களில் தெளிவு ஆகியன நிறைவை எட்டும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்

மனித வளமும் மனவளமும்!

புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், மற்றவர்களுக்கு நல் வழிகாட்டியாகவும் மாறுவாள் என்பதை உணரவைக்கிறது ஜோதிடம். தவம் வாயிலாகக் கடவுளை மகிழவைத்து வரம் பெற்றனர் அசுரர்கள். ஆனால், அவர்களிடம் சிந்தனை வளம் குன்றியிருப்பதால், அவர்களது கால வரைபடத்தில் புதனின் பங்கு போதுமான அளவை எட்டாததால், பகை, போராட்டம் ஆகியவற்றைக் கையாண்டு தவ முயற்சியில் அடைந்த பலனையும் இழந்து தவித்தார்கள். மனித வளம் என்பது ஒரு கோணத்தில் மன வளம்தான். பாரதம் ஆன்மிக வழியில் தலைசிறந்து விளங்கு வதற்கு, அதை வளர்க்கும் மக்களின் சிந்தனைவளமே காரணம்.

மனிதர்கள் அனைவரிடமும் போதுமான சிந்தனை வளம் உண்டு. எனினும், பிறரது சிந்தனைக்கு அடிமையாகி, தனது சிந்தனை வளத்தை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையே, ஒவ்வொருவரும் உணரும் இன்னலுக்குக் காரணம். பல்வேறு மாறுபட்ட சிந்தனையின் தாக்கத்தை முறியடிக்கும் அளவுக்கு, முறையாக சிந்தனையை வளப்படுத்துபவன் புதன். அவனுடைய வெளிப்பாட்டில், அவனது த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளை உதாரணமாகக் காட்டி, புதனின் தனித்தன்மையை வரையறுக்கிறது ஜோதிடம். புதன் எந்தக் கிரகத்தோடு இணைந்தாலும் அதன் பங்கை அடைந்து, தனது திறமையை இழக்கவிடாமல், பூர்வ புண்ணியத்துக்கு இணங்க சிந்தனைவளத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை எட்டவைத்துவிடுவான் என்பது ஜோதிடத்தின் கணிப்பு.

          சிந்திப்போம்...