Published:Updated:

பெற்றோர் மனம் மாற்றிக் காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயர்!

பெற்றோர் மனம் மாற்றிக் காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயர்!
பெற்றோர் மனம் மாற்றிக் காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயர்!

"தோ இந்த சாந்த ஆஞ்சநேயரால்தான், எங்கள் பெற்றோர்களைச் சாந்தப்படுத்த முடிந்தது. அவர் அருளால்தான் எங்களின் காதல், பல்வேறு தடைகளை உடைத்து கல்யாணத்தில் முடிந்திருக்கிறது" - பரசவம் தொனிக்கச் சொல்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரமேஷ். கடந்த வாரம்  திருமணம் முடித்த புது மாப்பிள்ளை.

"புரபோஸ் பண்ணின உடனே, என் ஆள், இந்த ஆஞ்சநேயருக்கிட்டதான் கூட்டிக்கிட்டு வந்தா. 'கண்டிப்பா எங்க வீட்டுல ஏத்துக்கப்போறதில்லை... முதல்லயே இந்த ஆஞ்சநேயர்கிட்ட சரணடைஞ்சிருவோம்... மற்ற எல்லாத்தையும் அவர் பாத்துப்பார்'-ன்னு சொன்னா... அவ சொன்ன மாதிரியே   நிறைய பிரச்னைகள்... காதல், கல்யாணத்துல முடியுமான்னே சந்தேகமாயிடுச்சு. ஒரு கட்டத்துல ரெண்டு பேருமே ரொம்ப மனமுடைஞ்சுட்டோம். அப்பல்லாம் இந்த ஆஞ்சநேயர்தான் நம்பிக்கையா இருந்தார்.  திடீர்ன்னு எங்க பேரன்ட்ஸ் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சாங்க. ஆஞ்சநேயர் கருணையால எல்லாப் பிரச்னையும் தீர்ந்திடுச்சு..." நெகிழ்ந்து போய் சொல்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த இளைஞர். அருகில் மஞ்சள் மணம் மாறாத தாலிக்கயிறுடன் அவர் காதல் மனைவி.      

ஆஞ்சநேயர், வீரத்துக்கு பெயர் போனவர். கட்ட பிரம்மச்சாரி. தைரியம் வேண்டுவோரும், பிரம்மச்சாரியாக வாழ விரும்புவோரும், பெரும்பாலும் ஆஞ்சநேயரைத்தான் தங்களின் இஷ்ட தெய்வமாக  வழிபடுவார்கள். ஆனால், இந்த ஆஞ்சநேயர் காதலர்களுக்கு ஏந்தலாக இருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது தானே..? 

உண்மை தான். இந்த ஆஞ்சநேயர், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இருக்கிறார். அதுவும் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயராக. குடும்ப பிரச்னைகள், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வம்பு தும்புகள், உறவினர்களுடன் மனக்கசப்பு உள்ளவர்கள்  ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயரிடம் வந்து வேண்டிக்கொண்டால் எல்லாம் வெயில் கண்ட பனி போல நீங்கிவிடும். அனைவரையும்  சாந்தப்படுத்தி ஒன்று சேர்த்துவிடுவாராம் இந்த அற்புத ஆஞ்சநேயர்.

 "நானும், கீதாவும் மூன்று வருடங்களாகக் காதலித்தோம். ஒரு கட்டத்தில் வீட்டில்  காதலைத் தெரிவித்தோம். இரண்டு குடும்பத்திலுமே

அதிர்ச்சியாகி விட்டார்கள். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோர்களை சங்கடப்படுத்தி விட்டு திருமணம் செய்து கொள்ள எங்களுக்கும் விருப்பமில்லை. எப்படியாவது இருவர் வீட்டிலும் சம்மதம் வாங்கிட வேண்டும் என்ற முனைப்போடு இருந்தோம். ஆனால், அதற்கான வழி தெரியவில்லை. அப்போதுதான் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயரப் பற்றி கேள்விப்பட்டேன். முதலில் பெரிய அளவில்  நம்பிக்கை இல்லை. எனினும் இதையும் செய்து பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். குருக்கள் ஆலோசனைப்படி,  3 மாதங்கள் அமாவாசை அன்று  தயிர்சாதம் தயார் செய்து ஆஞ்சநேயருக்கு படைத்து வழிபட்டேன். 

வாராவாரம் செவாய்க்கிழமை அன்று  பழங்கள் வாங்கி வைத்து ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தேன். சாந்த ஆஞ்சநேயரின் புண்ணியத்தில் கடந்தவாரம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடைபெற்றது. என்னைப் போல பலருடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இந்த ஆஞ்சநேயர்... " என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் பிஸியோதெரபிஸ்ட் ரமேஷ்.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் ஆஞ்சநேயருக்கு விஷேசமான நாள்கள். மஞ்சள் துணியில் தயிர்சாதம் படைத்து பரிகாரம் செய்கிறார்கள். கோயிலில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் நிறைந்திருக்கிறது.

வீரத்திற்கும் விவேகத்திற்கும் அடையாளமாக இருக்கும் ஆஞ்சநேயர், இங்கே காதலர்களுக்கு கருணை மழை பொழிகிறார். பிறகென்ன... கிளம்ப வேண்டியது தானே!