Published:Updated:

அருட்களஞ்சியம்

தமிழோடு வளர்ந்த ஆலயங்கள்...சுந்தரம்தகவல் உதவி: ‘திருக்கோயில்

அருட்களஞ்சியம்

தமிழோடு வளர்ந்த ஆலயங்கள்...சுந்தரம்தகவல் உதவி: ‘திருக்கோயில்

Published:Updated:

கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி வரும்படி அழைக்கிறோம். பதினான்காம் நூற்றாண்டு வந்தாயிற்று. நில்லுங்கள் இங்கே!

 நம் கண்ணுக்குத் தெரிவது...

பிரமாண்டமான அரண்மனையின் ஓர் அறைக்குள்ளே மரணப்படுக்கையில் படுத்திருக்கிறார் அரசர். அவருடைய அமைச்சர்களும், இதர அரசாங்க அதிகாரிகளும் கவலையோடு நிற்கிறார்கள். சிலர், இருக்கின்ற துன்பத்தைக் குறைக்க, குறுக்கும் நெடுக்குமாக நடைபோடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிற்காலப் பாண்டிய மன்னர்களிலே பராக்கிரம பாண்டியன் என்ற அந்த மன்னர், மகத்தான காரியம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார். கட்டி முடிக்க 117 ஆண்டுகள் பிடித்த தென்காசி விசுவநாதர் கோயிலைப் பாதி கட்டிக் கொண்டிருக்கையிலேயே படுத்த படுக்கையாகிவிட்டார். மன்னரின் கை அசைகிறது. அத்தனை அமைச்சர்களும் மன்னரைச் சூழ்ந்து நிற்கிறார்கள். எதையோ எழுத விரும்புகிறார் மன்னர். 'ஏடு’ கொண்டு வரப்படுகிறது. அதிவீரப்பாண்டியரின் வழி வந்த அந்த மன்னர், தன் இறுதி ஆசையைக் கவிதையாக எழுதுகிறார்.

''தென்காசிக் கோயிலை நான் கட்டவில்லை. தெய்வச் செயலாலே சமைந்த கோயில் இது. கோயிலை முழுக்கக் கட்டி முடிக்காமல் போகிறேன் நான். இந்தக் கோயிலை இதோடு நிறுத்திவிடாமல், இன்னும் விரிவுபடுத்தி, யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் காலில் இதோ இப்போதே விழுந்து வணங்குகிறேன். அவர்களுக்கு வேலைக்காரனாகக் குற்றேவல் செய்வதாக நினைக்கட்டும்.''

அருட்களஞ்சியம்

மன்னர் எழுதுகின்றார். அமைச்சர்களுடன் அதனைக் காண்கின்ற நம் கண்களும் கண்ணீரை வடிக்கும்.

இந்த மன்னரைப் போல, தன் புகழை நிலை நிறுத்துவதற்காக என்பதல்லாமல், எத்தனையோ மன்னர்கள் பல்லாயிரக்கணக்கில் கட்டி முடித்த கோயில்கள் நிறைந்துள்ள அழகிய தமிழ்நாட்டில் நாம் வாழ்கிறோம்.

சில கோயில்கள் தங்கள் கதையினைச் சொல்ல முடியாதபடி சிதறுண்டு போயிருக்க லாம். உண்மையில் இந்தத் தென்காசி கோயிலே இப்போது இருப்பதைவிட இன்னும் பெரிதாக இருந்தது. நவாப் மன்னர் கையில் இந்தக் கோயில் சிக்கியபோது தீப்பற்றி எரிந்து, பல பகுதிகள் அழிந்தன. தென்காசி கோயில் கோபுரத்துக்குக் கீழே பராக்கிரமப் பாண்டியனின் இறுதி ஆசை பதிய வைக்கப் பட்டிருப்பதை இன்றும் காணலாம்.

உலகின் பல்வேறு இயல்புகளைச் சுருக்கி விளக்கும் முறையில் கோயில்கள் அமைந்திருக் கின்றன. கடவுள் 'நுண்ணியான்’ என்பதை, மூலத்தான உருவம் காட்டும். கடவுள் 'பரந்தவன்’ என்பதைக் கோபுரம் காட்டும். சில கோயில்களில் சூரியனுடைய ஒளி 'ரத சப்தமி’ அன்று மூலத்தான திருவுருவங்களில் விழும்படிக் கணக்கிட்டு அமைத்திருக்கிறார்கள்.

அருட்களஞ்சியம்

'திருவிடைமருதூர் உலா’ என்ற நூலில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஓர் அருமையான காட்சியைச் சொல்லுகிறார். ஒரு கோயிலுக்குள்ளே நாம் காணுகின்ற பல்வேறு வடிவம் கொண்டுள்ள இறைவனை, பல கோயில்களில் அடுத்தடுத்துக் காணும்படி ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியையே பெரும் கோயிலாக அமைத்து இருப்பதைச் சொல்லுகிறார் அவர்.

திருவிடைமருதூரில் மகாலிங்கத்தைக் காணலாம். திருவலஞ்சுழியில் விநாயகரைப் பார்க்கலாம். சுவாமிமலையில் முருகனைப் பார்க்கலாம். திருவாரூரில் சோமாஸ்கந்தரைப் பார்க்கலாம். ஆலங்குடியில் தட்சிணா மூர்த்தியைப் பார்க்கலாம். ஆடுதுறை சூரியனார்கோவில் நவகிரகத்தைத் தரிசிக்கலாம். திருநள்ளாற்றில் சனிபகவானைக் காணலாம். சிதம்பரத்தில் சபாநாயகரைக் காணலாம்.  இயற்கையிலேயே அமைந்துவிட்ட இந்தப் பெருங்கோயிலை ஒருசேரப் பார்த்தவர்கள் பெரும்பேறு செய்தவர்கள்!

பஞ்ச பூதத்திலும் இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர். திருவாரூர் ஈசன், புற்றிலே (மண்)

அருட்களஞ்சியம்

உருவானவர். கச்சி ஏகாம்பரேஸ்வரர் மண்ணிலே உருவானவர். சுற்றிலும் தண்ணீர் ஊற்றெடுத்திருக்க, அதன் நடுவில் விளங்குகிறார் திருவானைக் காவலில். நெருப்பு மலையாக நிற்கின்றார் திருவண்ணாமலையில். காளத்தியில் வாயு உருவாக நிற்கின்றார். மூலத்தானத்தில், சாதாரணமாகக் காற்றே இராது. காளத்திநாதர் மூலத்தானத்தில் ஓயாத காற்றிலே தீபம் அசைந்தாடுவதைப் பார்க்கலாம்! சிதம்பரத்தில், வானவெளியில் இறைவனைப் பார்க்கின்றோம்.

அனைத்திலும் தன்னைக் கண்டு போற்றிய தமிழர்களுக்கு, அவர்களுடைய மொழிக்கு ஏற்றம் கொடுத்துத் தனது நன்றியைக் காட்டினான் இறைவன். தமிழ் மொழிக்குக் கட்டுண்டு கிடப்பதில் இறைவனுக்குப் பேரானந்தம். அந்தப் பேரானந்தத்தில் இன்பத் தமிழ் வளர்ந்தது.

தமிழ் வளர்க்க நினைத்த இறைவனின் திருப்பார்வை முழுவதும் மதுரையில் விழுந்தது. மதுரையில் தமிழ் வளர்ந்த கதை யைச் சொல்லவும் வேண்டுமா?

திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சியில், மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழை மீனாட்சியின் சந்நிதியில் குமரகுருபரர் அரங்கேற்றினார். 'தொடுக்குங் கடவுட் பழம் பாடல்’ என்ற பாடலைக் குமரகுருபரர் பாடி முடித்தபோது, நாயக்கர் மன்னரின் மடியில் அதுவரை பெண் குழந்தையாக அமர்ந்து ரசித்த மீனாட்சி, மன்னர் கழுத்தில் இருந்த முத்தாரத்தை எடுத்துக் குமரகுருபரர் கழுத்தில் போட்டு மறைந்தாள்.

அருட்களஞ்சியம்

இந்த மதுரைக்கு வந்தபோதுதான் 'நம் பெருமான் திருவிளை யாடலைப் பாடுவாயாக’ என்று பரஞ்சோதி முனிவருக்கு மீனாட்சியம்மை உத்தரவிட்டாள். திருவிளையாடற் புராணம் இங்கே அரங்கேறியது.

'உலகெலாம்’ என்று தில்லைக் கூத்தனே அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழாரின் பெரிய புராணம் சிதம்பரம் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேறியது. சைவத் திருமுறைகளைக் காத்தளித்த பெருமையும் தில்லைக்கு உண்டு. இறைவனே ஏட்டில் எழுதிய மாணிக்கவாசகரின் பாடல் உட்படப் பல பாடல்கள் இங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. சோழ அரசர் ஒருவர் இந்தச் செய்தியை நம்பியாண்டார் நம்பி மூலமாக அறிந்து, அவற்றைத் தருமாறு தில்லைவாழ் அந்தணர் களைக் கேட்டுக்கொண்டார்.

''அடியார்களே திரும்பி வந்து கேட்டால் தருகிறோம்'' என்றார்கள் அந்தணர்கள். கெட்டிக்காரரான அந்த அரசர், சமயக்குரவர்களின் திருவுருவங்களைப் பல்லக்கில் வைத்துக்கொண்டு வந்தார். உடனே, ஏடுகள் இருந்த அறை அந்தணர்களால் திறக்கப்பட்டது. கறையான் புற்றுகளால் மூடப்பட்ட பாடல்களை வெளிப்படுத்தி, நாடெங்கும் அந்தப் பாடல்கள் பரப்பப்பட்டன. கோயில் களின் பண்ணோடு அந்தப் பாடல்கள் ஓதப்பட்டன. சைவத் திருமுறைகள் 12ல் முதல் எட்டும் தில்லையில் கிடைத்தன.

அருட்களஞ்சியம்

திருவரங்கம் கோயிலில் மேட்டழகிய சிங்கர் திருமுன்னிலையில், கம்பரின் கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்டது. ராமாயணத்தைக் கம்பர் அரங்கேற்றிக் கொண்டு வந்தபோது, இரணியன் வதைப் படலத்தில் 'சிரித்தது செங்கட்சீயம்’ என்ற பாடலைச் சொன்னபோது, அழகியசிங்கர் (நரசிங்கப் பெருமாள்) உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சிரித்திருக்கிறார்!

பக்திப் பெருக்கெடுத்தோட இறைவனை நாடிக் கால் நடையாகவே பல கோயில்களுக்குச் சென்ற நாயன்மார்களும், ஆழ்வார்களும் இனிய தமிழ்ப் பாடல்களால் அவனுக்குப் பாமாலை சூட்டினார்கள். எங்கேனும் ஒரு கோயிலில் அவர்கள் பாடாமல் போனால், இறைவனே தடுத்து 'என்னை மறந்தாயோ?’ என்று கேட்டுப் பாட வைத்தான்.

சீர்காழியில் மூன்று வயதுக் குழந்தையான திருஞானசம்பந்தரைக் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, குளத்தில் இறங்கிக் குளிக்கிறார் தந்தை சிவபாத இருதயர். 'அம்மையே!... அப்பா’ என்று சம்பந்தர் அழுதார். அம்மையும், அப்பனும் காளையின்மீது தோன்றுகின்றனர். பெரியநாயகி, சம்பந்தருக்குத் தன் பாலையே ஞானப் பாலாக ஊட்டுகிறாள். பிறகு தந்தை வந்தபோது, சம்பந்தரின் உதட்டில், பால் துளி இருப்பதைக் கண்டு, 'ஏது பால்?’ என்று அதட்டுகிறார் சிறு கோலைக் கையில் எடுத்தபடி, 'தோடுடைய செவியன்’ என்ற பாடலைப் பாடி, வானவெளியைச் சுட்டிக்காட்டுகிறார் சம்பந்தர். இவரே பின்னர் மயிலாப்பூர் கபாலி கோயில் முன், தன் பாட்டால் 'பூம்பாவை’யை, அவள் எலும்புகளில் இருந்து எழுப்புகிறார்.

திருவெண்ணெய்நல்லூர் கோயில் நீதிமன்றமாக மாறிற்று ஒரு முறை. திருமணக் கோலத்தில் இருந்த சுந்தரரை 'என் அடிமை’ என்று சொல்லிச் சான்றாக ஓலையைக் காட்ட, அங்கே அழைத்து வருகிறார் ஒரு கிழவர். கோயிலினுள் நுழைந்து மறைகிறார். ''என் மேல் தமிழ் பாடு'' என்கிறான் இறைவன். ''பித்தன் என்று ஏசினாயே, அப்படியே பாடு'' என்றும் சொல்கிறான். 'பித்தா பிறைசூடி பெருமானே’ என்ற பாடல் உருவாகிறது.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் கோயிலில், நாயன்மார்களின் வரலாறுகள் அழகிய சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. சேக்கிழாரே இதைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறுவர்!

இப்படி நாயன்மார்களுக்கு இறைவன் பணிந்ததுபோல, ஆழ்வார்களின் அன்புப் பிடியிலே சிக்கிய திருமால், தமிழ் மூலம் அவர்கள் இட்ட ஆணைக்கெல்லாம் கீழ்ப்படிந்தார்.

அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!