Published:Updated:

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

அத்தாளநல்லூரில் அவதரித்த அருளாளன்!எஸ்.கண்ணன்கோபாலன்

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

அத்தாளநல்லூரில் அவதரித்த அருளாளன்!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

யானைக்கு அத்தி என்றும் ஒரு பெயர் உண்டு. எனவே, யானையைக் காத்த ஊர் என்ற பொருளில், இத்தலத்துக்கு அத்தாளநல்லூர் என்ற பெயர் அமைந்தது.  

இதிகாசங்களும், புராணங்களும், காவியங்களும், இலக்கியங்களும் ஒருசேரப் போற்றிப் புகழும் பெருமைக்குரிய தேன்தமிழ் நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் இன்றைய நிலையை நேரில் காணச் சென்றிருந்தபோது, நம்மைப் பற்றிக் கேள்விப்பட்டு, நெல்லையப்பர் கோயிலில் நம்மை வந்து சந்தித்தார் ஒரு பெண்மணி. தன் பெயர் லக்ஷ்மி என்றும், ஆரம்பத்திலிருந்தே சக்தி விகடனை தொடர்ந்து படித்துவருவதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்...

''உண்மையிலேயே இந்தியாவின் வற்றாத ஜீவநதி எது என்று உங்களால் சொல்லமுடியுமா?''

அவர் கேட்ட விதத்தில் ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதாகத் தெரியவே, ''நீங்களே சொல்லுங்களேன்'' என்றோம்.

''இந்தியாவின் வற்றாத ஜீவநதிகளாக கங்கை, யமுனை போன்ற வடஇந்திய நதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லுவார்கள். அந்த நதிகள் வற்றாமல் இருப்பதற்கு மழைக்காலத்தில் பெய்யும் மழையும், கோடையில் இமயப் பனிமலையில் உருகும் பனியும்தான் காரணம். எனவே, அவை வற்றாத ஜீவநதிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால், கோடையில் உருகுவதற்குக் கொஞ்சமும் பனியே இல்லாத பொதிகைமலையில் தோன்றும் எங்கள் தாமிரபரணியோ கோடையிலும் வற்றாத ஜீவநதியாகத் திகழ்கிறது. அப்படிப் பார்த்தால், உண்மையான ஜீவநதி என்றால், அது எங்கள் தாமிரபரணிதான். இதற்காக கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளை நான் குறை சொல்லுவதாக அர்த்தம் இல்லை. தாமிரபரணியின் மகிமையையும் மகத்துவத்தையும் மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்'' என்றார் முகத்தில் பரவசம் பொங்க.

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

தொடர்ந்து, ''தாமிரபரணியின் இன்றைய நிலையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, இந்த நதிக்கரையில் உள்ள முக்கிய கோயில்களைப் பற்றியும், தாமிரபரணி நதிக்கே உரிய சிறப்புக்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்'' என்று சொல்லி, அவற்றை விவரித்துச் சொன்னார்.

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

தாமிரபரணி நதிக்கே உரிய தனிச்சிறப்புகளாக அவர் குறிப்பிட்ட விஷயங்களில் முதன்மையானது, தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள தீர்த்தக்கட்டங்கள்தான். ஒவ்வொரு தீர்த்தக்கட்டமும் ஒவ்வொரு வகையில் விசேஷ சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது. முதலில்,ஸ்ரீவிஷ்ணு துர்கை கோயில் கொண்டிருக்கும் சீவலப்பேரி திருத்தலத்துக்குச் சென்றோம்.

ஸ்ரீதுர்காம்பிகா தேவி அருளாட்சி புரியும் விஷ்ணுவனம் எனப்படும் சீவலப்பேரி திருத்தலத்தில், தாமிரபரணி தட்சிணவாகினியாக வடக்கில் இருந்து தெற்காகப் பாய்கிறாள். இங்கே தாமிரபரணி நதிக்கரையில் கோ தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், குசஸ்தம்ப தீர்த்தம், மிருத்யுஞ்சய தீர்த்தம், தைத்தரீய தீர்த்தம், ராஜசூய தீர்த்தம், மகா விரத தீர்த்தம் போன்ற தீர்த்தக் கட்டங்கள் அமைந்துள்ளன.

இந்த தீர்த்தக்கட்டங்களில், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் ஸ்நானம் செய்து ஸ்ரீதுர்காம்பிகா தேவியை வழிபட்டால், மகா விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும் என்று, தாமிரபரணி மஹாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சீவலப்பேரியில் இருந்து புறப்பட்ட நாம் அடுத்துச் சென்றது தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கு. திருச்செந்தூர் முருகன் கோயில் தோன்றுவதற்கு முன்பே குறுக்குத்துறை முருகன் கோயில் தோன்றிவிட்டதாகவும், திருச்செந்தூர் முருகனின் திருவுருவச்சிலை இங்கேதான் வடிவமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே, ஆற்றின் நடுவில் அழகன் முருகன் கோயில் கொண்டிருப்பதால், தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலுமாக மூழ்கிவிடும். பின்னர் வெள்ளம் வடிந்த பின்புதான் பக்தர்கள் தரிசிக்க இயலும்.

அடுத்து நாம் சென்றது அத்தாளநல்லூர் திருத்தலத்துக்கு. இங்கே பெருமாள் கஜேந்திர வரதராக அருள்புரிகிறார்.

இந்திரத்துய்மன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணுபக்தன். தினமும் தவறாமல்

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

விஷ்ணுபூஜை செய்த பிறகே மற்ற பணிகளில் ஈடுபடுவான். அப்படி ஒருநாள் அவன் பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, அகத்திய முனிவர் அவனுடைய அரண்மனைக்கு வருகை புரிந்தார். பூஜையில் ஈடுபட்டிருந்ததால், குரு அகத்தியரை முறைப்படி வரவேற்று உபசரிக்க முடியாமல் போக, அதனால் குரு அபசாரத்துக்கு ஆளாகி, அவன் யானையாக மாற நேர்ந்தது.

கஜேந்திரன் என்ற பெயருடன் பொதிகைமலைக் காடுகளில் யானைகளின் அரசனாகத் திகழ்ந்தான் இந்திரதுய்மன். பூர்வஜன்ம வாசனையின் காரணமாக, அவன் தினமும் தாமிரபரணி நதியில் நீராடி, திருக்குற்றாலநாதரை வழிபட்டுவிட்டு, விஷ்ணுவை பூஜிப்பதற்காக அத்தாளநல்லூருக்கு வந்து, தாமரைப் புஷ்பங்களைப் பறித்து இறைவனை வழிபடுவது வழக்கம். அந்த இடத்தில், நாரதரின் சாபத்தினால் ஒரு கந்தர்வன் முதலையாக மாறி, அட்டகாசம் செய்துகொண்டிருந்தான்.

அப்படி ஒருநாள் கஜேந்திரன் அத்தாளநல்லூர் தாமிரபரணியில் நீராடி, இறைவனுக்குச்

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

சமர்ப்பிக்க தாமரை மலரைப் பறித்தபோது, முதலையானது கஜேந்திரனின் காலைப் பிடித்துக்கொண்டது. அனாத ரட்சகா, ஆபத்பாந்தவா, ஆதி மூலமே என்று மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தித்துக் கதறியது கஜேந்திரன்.

கஜேந்திர யானையின் கதறல் கேட்டதுமே, கருட வாகனமேறி அங்கு தோன்றிய விஷ்ணுமூர்த்தி, தம்முடைய சக்ராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்து, யானைக்கு அருள் புரிந்தார். யானைக்கு அத்தி என்றும் ஒரு பெயர் உண்டு. எனவே, யானையைக் காத்த ஊர் என்ற பொருளில், இத்தலத்துக்கு அத்தாளநல்லூர் என்ற பெயர் அமைந்தது.

தமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமிரபரணி-2

விஷ்ணுமூர்த்தி கஜேந்திர யானைக்கு அருள்புரிந்த திருத்தலமாக இந்தியா முழுவதிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் சொல்லப்பட்டுள்ளன. எனினும், ஸ்ரீமத் பாகவதத்தில் 8வது ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்சம் பற்றிக் குறிப்பிடும்போது, திரிகூடமலைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து, அத்தாளநல்லூர் திருத்தலத்தில்தான் கஜேந்திரனுக்கு விஷ்ணுமூர்த்தி அருள் புரிந்திருக்கிறார் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. இத்தலத்தில், நின்ற கோலத்தில் அருளும் கஜேந்திரவரதரை தரிசித்து வழிபட்டால், திருப்பதி பெருமாளை வழிபட்ட பலனைத் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அத்தாளநல்லூரில், தாமிரபரணி உத்தரவாகினியாக தெற்கில் இருந்து வடக்காகப் பாய்கிறாள். இது மிகவும் விசேஷமான அமைப்பாகும். இந்தத் தலத்தில் விஷ்ணுபாத தீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தக் கட்டங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள கஜேந்திரமோட்ச தீர்த்தத்தில், வைகாசி மாதம் துவாதசி அல்லது சிராவண துவாதசி நாளில் புனித நீராடி, கஜேந்திர வரதரை வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும், ஆயிரம் சாந்திராயன விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சாந்திராயன விரதம் பற்றியும், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இன்னும் சில முக்கியமான தீர்த்தக் கட்டங்கள் பற்றியும் அடுத்த இதழில் காண்போம்.

படங்கள்: எல்.ராஜேந்திரன்