Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

கூடாரையும் கூட வைக்கும் கூடாரவல்லி..!எஸ்.கண்ணன்கோபாலன்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

கூடாரையும் கூட வைக்கும் கூடாரவல்லி..!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

நாம் இறைவனை அடையவேண்டுமானால் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை, 'செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்’ என்று சொல்லி இருக்கிறாள் ஆண்டாள். அதன்படிதான் நாம் வாழவேண்டும்.  

வாழ்க்கை என்பது பல்வேறு சிக்கல்கள் நிறைந்தது. ஒருவர் எத்தனைதான் வசதிகள் பெற்றவராக இருந்தாலும், அவருக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால்தான், 'பிறவாப் பேரின்ப நிலையை அடையவேண்டும்’ என்றனர் ஞானியர். மறுபடி மறுபடி இந்தப் பிறவிப் பெருங்கடலில் வந்து விழாமல், எந்த மூலப் பரம்பொருளிடம் இருந்து வந்தோமோ, அந்தப் பரம்பொருளிடமே ஒன்றிவிடவேண்டும். அதுவே பேரானந்த நிலை!

இதற்குத் தக்கதொரு வழியை நமக்குக் காட்டி அருளவேண்டும் என்பதாக ஓர் ஆசை பிராட்டியாருக்கு ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய விருப்பத்தை பகவான் நாராயணனிடம் தெரிவிக்க, அவரும் இசைவு தெரிவித்தார். பூமியில் லக்ஷ்மிதேவியின் அம்சமாகத் தோன்றப்போகும் பெண்ணைச் சீராட்டி வளர்க்கவேண்டுமானால், அதற்கான தகுதி ஒருவருக்கு இருக்கவேண்டும் அல்லவா? அப்போது, பிராட்டியாருக்கு ஒருவரின் நினைவு வருகிறது. அவர்தான் பெரியாழ்வார். மழலையாய் ஒருவர் கையில் தான் தவழவேண்டுமானால், அவர் பெரியாழ்வாராகத்தான் இருக்கவேண்டும் என்று நிச்சயித்துக்கொண்ட பிராட்டி, அதேபோல் வில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் மழலையாக வந்து அவதரித்தாள்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பெரியாழ்வார்தான் தன்னை மகளாக வளர்க்க வேண்டும் என்று பிராட்டியார் தீர்மானித்ததற்கு என்ன காரணம்? அவருக்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு? இதுபற்றிப் பிறகு பார்ப்போம்.

நாம் எல்லோரும் முறையுடன் வாழ்ந்து, அதன் பயனாக நம்முடைய வினைப்பயன்கள் எல்லாம் அகன்று, நாம் அந்தப் பரம்பொருளுடனே ஐக்கியமாகிவிடவேண்டும் என்பதற்காகவே, பெரியாழ்வாரின் மகளாக வந்து, 'கோதை’ என்றும், 'ஆண்டாள்’ என்றும் பெயர்பெற்று விளங்கி, நமக்கு நல்லதொரு வழியையும் காட்டி அருளியுள்ளாள் லக்ஷ்மி தேவி.

ஆண்டாள் இறைவனிடம் காதல் கொண்டதும் சரி, அவனுடன் சேரவேண்டும் என்று விருப்பம் கொண்டு அதற்காக பாவை நோன்பிருந்ததும் சரி, இறுதியில் அந்த இறைவனுடனே ஐக்கியமானதும் சரி... எல்லாமே நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும், நாம் எப்படி வாழ்ந்தால் இறைவனுடன் கலந்து பிறவாப் பேரின்பநிலையை அடையமுடியும் என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காகவே!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நாம் இறைவனை அடையவேண்டும் என்பதற்காகத்தான் தன்னை முன்னிருத்தி பாவைநோன்பு நோற்றாள் ஆண்டாள். அப்படி அவள் பாடிய திருப்பாவையின் இரண்டாவது பாசுரத்தில், நாம் இறைவனை அடையவேண்டுமானால் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை, 'செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்’ என்று சொல்லியிருக்கிறாள். அதன்படிதான் நாம் வாழவேண்டும். அப்போதுதான் நம்மால் இறைவனை அடையமுடியும்.

திருப்பாவையின் 27வது பாசுரமாக அமைந்திருப்பது, 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்கும் பாசுரமாகும். இந்த 27வது பாசுரத்துக்கு உரிய மார்கழி 27ம் நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில், 'கூடாரவல்லி’ என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தின் நாயகியாம் ஆண்டாளின் அவதார தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற இருக்கும் கூடாரவல்லி வைபவத்தையே நாம் இப்போது தரிசிக்க இருக்கிறோம்.

கூடாரவல்லி வைபவம் எப்போதும் காலை 430 மணிக்கே ஆரம்பித்துவிடுவது நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு நம்மாழ்வார் மோட்ச தினம் வந்துவிட்டபடியால், கூடாரவல்லி வைபவம் காலை 8 மணிக்குத்தான் நடைபெற இருப்பதாகக் கூறினார்கள். நாம் அங்கே சென்றபோது, ஆண்டாளாகிய நாச்சியாரை சேவித்து கூடாரவல்லி வைபவத்தைக் காண, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் கண்டோம்.

அங்கிருந்த ஒரு பட்டரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருடைய உதவியினால் ஆண்டாளின் சந்நிதிக்கு அருகில் சென்றுவிட்டோம். சந்நிதியில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் திருக்காட்சி தந்தாள். அழகு தமிழில் அருமையான பாசுரங்களைப் பாடிக் கொடுத்த ஆண்டாளை மனம் குளிர சேவித்த நம்முடைய பார்வையில், ஆண்டாளுக்கு நைவேத்தியம் செய்வதுபோல் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் தெரிந்தன. மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருந்தன. கூடாரவல்லி வைபவத்தின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல், வெண்ணெய் நைவேத்தியம்தான்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்த வைபவம் நிறைவுபெற 11  மணி ஆகும் என்று தெரியவரவே, பெரியாழ்வார் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்த வடபத்ரசாயியைத் தரிசிக்க நினைத்து, ஆண்டாள் கோயிலுக்கு அருகிலேயே இருந்த வடபத்ரசாயி கோயிலுக்குச் சென்றோம். தமிழக அரசின் சின்னமாகத் திகழும் வடபத்ரசாயி கோயிலின் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்குத் தயார் நிலையில் இருந்ததைக் கண்டோம். பாலாலயம் செய்யப்பட்டு இருப்பதாக அங்கிருந்த ஒருவர் சொல்லவே, நம்மால் பெருமாளை சேவிக்க முடியவில்லை. திருப்பணி தொடர்பான விவரங்களைப் பற்றி அறிய, ஆலயத்தின் தக்காரான ரவிச் சந்திரனைச் சந்தித்தோம். தன்னுடைய படம் வேண்டாம் என்று மறுத்தவர், திருப்பணி குறித்த விவரங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''வடபத்ரசாயி கோயில் திருப்பணி கள் பாலாலயத்துடன், கடந்த ஒரு வருஷத்துக்கு முன்பு தொடங்கப் பட்டது. அதற்கும் முன்பாகவே ஆண்டாள் சந்நிதி விமானத்துக்கு தங்கக்கூரை அமைப்பதற்கான திருப்பணி தொடங்கிவிட்டது. திருப்பணிகளில் 60 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் முடிந்து விரைவிலேயே சம்ப்ரோக்ஷணம் நடைபெறும் என்று நம்புகிறோம்'' என்றார் அவர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மீண்டும் நாம் ஆண்டாள் சந்நிதிக்கு வரவும், அங்கே கூடாரவல்லி வைபவம் தொடங்கவும் சரியாக இருந்தது. ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 27-வது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ பாசுரத்தை சம்பிரதாயப்படி தாள அபிநயத்துடன் பாடிக்கொண்டிருந்தார் ஒருவர். வித்தியாசமான தலைப்பாகையும், தோள்களில் புரளும் அங்கவஸ்திரமுமாக பிரத்தியேகமான உடையலங்காரத்தில் காணப்பட்ட அவரைப் பற்றி விசாரித்ததில், அவர்தான் அரையர் வடபத்ரசாயி சுவாமி என்று தெரிய வந்தது.

பாராயணங்கள் முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஆண்டாளை சேவிக்க பக்தர்கள் நெருக்கித் தள்ளியபடி இருக்க, ஆலயத்தின் நிர்வாக அதிகாரியும் ஊழியர்களும் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். பூஜைகள் முடிந்ததும் வெளியில் வந்த அரையரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரைப் பற்றிய விவரம் கேட்டோம். அரையர் வடபத்ரசாயி சுவாமி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவர் தொடர்ந்து, ''நாங்கள் அரையர் சேவையில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களை பகவான் சந்நிதியில் தாள அபிநயத்துடன் பாடுவதே பகவானுக்கான எங்களுடைய கைங்கர்யம். இதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள சம்பிரதாயப்படி நாங்கள் பிரத்தியேகமான உடைகளை உடுத்திக்கொண்டு, பகவானின் சந்நிதியில் திவ்விய பிரபந்த பாசுரங்களை பாடுவோம்'' என்றார்.

திரும்பவும் ஆண்டாளின் சந்நிதிக்குச் சென்றோம். இப்போது பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்திருந்தது. அப்போதுதான் ஆண்டாளின் உற்ஸவ விக்கிரஹம் சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருந்ததைக் கண்டோம். அதுபற்றியும், கூடாரவல்லி வைபவம் பற்றியும் சந்நிதியில் இருந்து வெளியில் வந்த ஒருவரிடம் விவரம் கேட்டோம்.

முத்துபட்டர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர்,

''மார்கழி மாதத்தின் 27வது நாள் கூடாரவல்லி வைபவம் நடைபெறும். பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். திருவரங்கத்தில் ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமாநுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். அதை நினைவுகூரும் வகையில் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

தன் வேண்டுதலை நிறைவேற்றியதால், ராமாநுஜரை 'அண்ணா’ என்று அழைத்தபடி முன்னே வந்தாளாம் ஆண்டாள். அதனால்தான் ஆண்டாள் சந்நிதிக்குச் சற்று முன்பு உள்ள அர்த்தமண்டபத்துக்கு எழுந்தருளி இருக்கிறாள்'' என்று தெரிவித்தார்.

கூடாரவல்லி வைபவத்தை தரிசித்துவிட்டு வெளியில் வந்தோம். வெளியில் இரண்டு பெண்மணிகள் எதையோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட நாம், என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

''நாங்கள் இன்றைய பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ என்ற பாடலைத்தான் மனதுக்குள் பாராயணம் செய்துகொண்டிருந்தோம். திருப்பாவையிலேயே இந்தப் பாசுரம் ரொம்பவும் விசேஷமானது. இந்தப் பாடலை பாராயணம் செய்து நாச்சியாரை பிரார்த்தித்துக்கொண்டால், கன்னிப்பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அதுமட்டுமல்ல, நமக்குப் பகைவர்கள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.''   என்றார்.

அப்போது அவருடன் இருந்த கோதை நாச்சியார் குறுக்கிட்டு, ''ஆண்டாள், தான் அருளிய திருப்பாவையில் 27வது பாசுரத்தில் இருந்து 29வது பாசுரம் வரை உள்ள மூன்று பாசுரங்களில் மூன்று முறை கோவிந்த நாமத்தைச் சொல்லு கிறாள். 'கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’, 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தா’, 'இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா’ என்று மூன்றுமுறை கோவிந்த நாமத்தைச் சொல்லியிருக்கிறாள். கோவிந்த நாமம் பகையை இல்லாமல் செய்வதுடன், பகவானின் அருளையும் நமக்குப் பெற்றுத்தரக் கூடியது'' என்றார்.

ஆலயத்தில் கூடாரவல்லி வைபவத்தை தரிசித்த பிறகு, வீடுகளில் ஏதேனும் சிறப்பு வழிபாடு நடைபெறுமா என்று அங்கு நாம் சந்தித்த மோகனா கிருஷ்ணசாமி என்பவரிடம் கேட்டோம்.

''மார்கழி மாதம் ரொம்ப விசேஷமானது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். எங்கள்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

வீட்டில் இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, திருப்பாவை முப்பது பாடல்களும் பாடி, ஆண்டாளைப் பிரார்த்திப்போம். கூடாரவல்லி அன்று இந்த முப்பது பாடல்களைப் பாடி முடித்ததும், ஆண்டாளின் திருவுருவப் படத்துக்குப் புதுப் புடைவை சாற்றி, 27வது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ பாடலை மறுபடியும் பாராயணம் செய்து, அக்காரவடிசல் நைவேத்தியம் செய்வோம். இந்த நாளில் ஆண்டாளை வழிபட, அவள் நமக்குச் சகலவிதமான நன்மைகளையும் அருள்வாள். சாட்சாத் அந்த லக்ஷ்மிபிராட்டிதானே நம்மையெல்லாம் கடைத்தேற்ற ஆண்டாளாக அவதரித்தாள்!'' என்று பூரிப்புடன் கூறினார். அவருடைய அந்த பூரிப்பு நம்மையும் தொற்றிக் கொண்டதுடன், 'சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்’ என்று நம்மையும் திருப்பாவைப் பாடலை முணுமுணுக்கச் செய்துவிட்டது.

சரி, லக்ஷ்மி பிராட்டி தான் ஆண்டாளாக அவதரிக்கும்போது தன்னை வளர்க்கும் பொறுப்பை பெரியாழ்வாரிடம் ஒப்படைத்தது ஏன்? இந்தக் கேள்வியுடன் பெரியாழ்வாரின் வம்சத்தில் 225வது தலைமுறையைச் சேர்ந்தவரும், முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும், ஆண்டாளின் கைங்கர்யத்துக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவருமான சுதர்சன் பட்டரைச் சந்தித்தோம்.

''லக்ஷ்மி பிராட்டியார் பூமியில் அவதரிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டபோது, பிராட்டியாரைச் சீராட்டிப் பாராட்டி பாசத்துடன் வளர்க்கவேண்டு மானால், தாய் உள்ளம் கொண்ட ஒருவரால்தானே முடியும்? பெரியாழ் வார்தான் தம்மை யசோதையாகவும், கிருஷ்ணனைக் குழந்தையாகவும் பாவித்து அன்பு செலுத்தியவர். எனவேதான், தாயன்பில் சிறந்த பெரியாழ்வார்தான் தன்னை வளர்க்கவேண்டும் என்று பிராட்டி திருவுள்ளம் கொண்டாள். அதன்படியே பெரியாழ்வாரின் நந்தவனத்தில் அழகியதொரு குழந்தையாகத் தோன்றி, பெரியாழ்வாரால் வளர்க்கப்பெற்று, நாமெல்லாம் நல்லமுறையில் வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமாக நல்லதொரு வழியைக் காட்டிவிட்ட மனநிறைவுடன் அரங்கனுடன் கலந்துவிட்டாள்'' என்றார்.

நாமெல்லாம் உய்யும்படிக்கு நல்லதொரு வழியை வாழ்ந்து காட்டிய ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில் நடைபெற்ற கூடாரவல்லி வைபவத்தைத் தரிசித்துத் திரும்பிய நம் மனதில்...

'திகட்டாத தேன்தமிழ்ப் பாசுரங்களால் நம்முடைய கல்மனதையும் கரையும்படி செய்து, நம்முடைய உள்ளங்களில் பக்திப் பயிர் செழித்து வளரச் செய்த ஆண்டாள் சந்நிதி விமானத்துக்கு வெறும் தங்கக் கூரை மட்டும் போதாது. அந்தத் தங்கக் கூரையும்கூட விலை உயர்ந்த ரத்தினங்களால் இழைக்கப்பட்டு, பிரகாசிக்கும்படி செய்யவேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நம் மனதில் இந்த எண்ணம் தோன்றவும், மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது.

பக்தி மணம் கமழும் தனது பாடல்களால் பரந்தாமனையே கட்டிப்போட்ட ஆண்டாள், நம்மையும் கட்டிப்போட்டு, தன் திருப்பணியை நிறைவேற்றிக்கொள்ள மாட்டாளா என்ன? நிச்சயம் நிறைவேற்றிக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் அவளின் அவதாரத் தலத்தில் இருந்து புறப்படுகிறோம்.

படங்கள்:

ஆர்.எம்.முத்துராஜ்