Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

'உள்ளேயும் வெளியிலும் பரவியிருப்பான் நாராயணன்’ என்கிறது வேதம் வெளியே செய்யப்படும் அத்தனை வழிபாடுகளும் உள்ளிருக்கும் ஜீவாத்மாவையும் எட்டிவிடும்.

? சிக்கலான வாழ்க்கைச் சூழலில் கடினமான கடவுள் தத்து வமும், வழிபாடுகளும் அவசியம்தானா எனக் கேட்கிறான் நண்பன் ஒருவன். அவனுக்குக் கடவுள் தத்துவம் குறித்து உங்கள் பாணியில் விளக்குங்களேன்.

ப. சீதாராமன், திண்டுக்கல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கோணம்...

'உடல் ஒரு தேவாலயம். உள்ளே கருவறையில் (இதயம்) உறைந்திருக்கும் 'ஜீவாத்மா’ (ஜீவன்) ஆண்டவன். உள்ளே சேர்ந்திருக்கும் அறியாமை என்ற புஷ்பங்களை (நிர்மால்யத்தை) அகற்றி, உள்ளிருக்கும் ஜீவாத்மாவை பரம்பொருளின் அம்சமாக உணர்ந்து, பணிவிடையை நிறைவேற்று’ என்கிறது ஆகமம் (தேஹோதேவாலய:..).

? சரிதான்! கடவுள் தத்துவம் கடினமானதுதான் என்பதை தங்களின் ஆரம்பமே உணர்த்துகிறதே?

எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதும், விளக்க ஆரம்பிப்பதற்கு முன் பொறுமை இழப்பதும் தவறு.

கழுத்துக்கு மேல் இருக்கும் பகுதி, அறிவுப் புலன்களை உள்ள டக்கி இருக்கும். உள்ளே இருக்கும் ஜீவாத்மா அதை இயக்குகிறான். உடல் வெளிப் பிராகாரம். உள்ளே இருக்கும் ஸப்த (ஏழு) தாதுக் களும் ஏழு உள்பிராகாரங்கள். இதயக் குகையில் இருப்பவனின் சாந்நித்தியத்தை நீர், நெருப்பு, காற்று (வாதம், பித்தம், கபம்) ஆகிய மூன்றும் நிரந்தரமாக்கிக் கொண்டிருக்கின்றன.

கோயிலில் அபிஷேகத்துக்கு நீரையும், தீபாராதனைக்கு நெருப்பையும், உயிரோட்டத் துக்குக் காற்றையும் நாம் பயன்படுத்துவது உண்டு. மந்திர ஒலியானது அங்கிருக்கும் கருவறை ஆகாசத்தில் காற்றுவழி பரவி, காது வழியே இதயத்தை எட்டிவிடும். ஐம்பெரும் பூதங்களின் அம்சத்தில் விளைந்தவற்றைக் கோயில் கருவறையில் பயன்படுத்துவோம். அந்தப் பொருட்கள் அத்தனையும் ஆண்டவன் படைத்தவை. ஆராதனை செய்பவனும், அவனுடைய படைப்பே! நாம் செய்யும் ஸ்தோத்திரங்கள் (சகஸ்ரநாமம், அஷ்டோத்தரம், ஷோடச நாமம்) அவனது நித்ய பூஜை. நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் (பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, மஹாநவமி, கந்த சஷ்டி, ஏகாதசி, சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி, சித்ரகுப்த விரதம், துளசி பூஜை போன்ற வழிபாடுகள்) அவனது விசேஷ பூஜைகள். பிரம்மோத்ஸவம், ரதோத்ஸவம் போன்றவை சிறப்பு ஆராதனைகள். ஏகாதசி விரதத்தில் நாம் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்துவோம். உணவு அருந்தமாட்டோம்; உறங்க மாட்டோம்; மனம் அவன் நினைவில் ஊன்றியிருக்கும். அப்போது மனம் தூய்மை பெற்று, நெருடல் இல்லாத சிந்தனையை வரவழைத்து, நமது செயலில் வெற்றியை எட்ட வைத்துவிடும். இங்கே மனதைப் பதப்படுத்தி, செயலில் வெற்றி பெறச் செய்தது அவனது அருள். அறியாமை அகன்றவன், வழிபடும் தகுதியைப் பெறுகிறான். அவன் இறைவனை உணர்ந்து, உலகை உய்யவைக்க வேண்டுகிறான்.

கேள்வி - பதில்

? எனில், வழிபாடு வேண்டாம் என்பவர்களைத் தகுதி இல்லாதவர்கள் எனச் சொல்ல வருகிறீர்களா?

இல்லை. கடவுள் தத்துவத்தைச் சரியாக புரிந்துகொள்ளாதவர்கள் என்று சொல்கிறோம். நீங்கள் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

இறைவனை மனம் நினைத்த பிறகு, அவனது புகழைப் பாட வேண்டும். தியானம் என்று சொல்லி ஒரு செய்யுளைச் சொன்ன பிறகு, அவனது ஆயிரம் நாமங்களை உச்சரிப்போம். 'உலகம் முழுதும் பரவி நிறைவோடு விளங்கும் பரம்பொருளே, தங்களது கருவறைக் கதவுகளைத் திறந்து, பணிவிடையில் ஈடுபடத் தயாராகி விட்டேன்’ என்று சொல்லி, காலையில் கோயில் கருவறைக் கதவைத் திறந்து, கருவறையில் நுழைந்து, இறைவனை உலகம் காக்க வழிபடுவான் (வேதாந்த... கவஸமுத்காடய காலகால). அதேபோல், நாமும் மனக் கதவைத் திறந்து, ஜீவாத்மாவை வழிபட வேண்டும்.

'உள்ளேயும் வெளியிலும் பரவியிருப்பான் நாராயணன்’ என்கிறது வேதம் (அந்தர்பஹிச்ச...). உள்ளேயும் வெளியேயும் ஆகாசத்தில் பரவி யிருப்பதால், நாம் உச்சரிக்கும் மந்திரம் (அவனது புகழ் பாடல்) ஆகாசத்திலிருந்து வெளிப்பட்டு, நம் காதிலும் ஒலிக்கிறது. காதில் விழுந்த ஒலியானது, காது வழியே மனதில் பட்டு, அங்கு உறைந்திருக்கும் பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மாவையும் எட்டிவிடுகிறது. ஆகவே, வெளியே செய்யப்

படும் அத்தனை கடவுள் வழிபாடுகளும் உள்ளி ருக்கும் ஜீவாத்மாவையும் எட்டிவிடும். இப்போது புரிகிறதா, கடவுள் வழிபாட்டின் அவசியம்?

? கடவுள் தத்துவத்தைச் சரியாக விளக்கிவிட்டால், வழிபாடு அவசியமா, அவசியம் இல்லையா என்ற கேள்வியே எழாது அல்லவா?

அழிவில்லாத, இணையில்லாத பெரும் சக்தியின் வடிவம் இறைத் தத்துவம். தான் மட்டுமே தனித்திருந்த பரம்பொருளின் மனம் எண்ணி யது, 'ஏன் நான் ஒருவனாக இல்லாமல், பல இனங்களின் வடிவமாக மாறக்கூடாது?’ என்று. அவர் நினைத்த மாத்திரத்தில் பல உயிரினங்கள் தோன்றின (பஹுஸ்யாம்ப்ரஓயோயேதி). இறைவன் உயிரினங்களைப் படைத்து, அவற்றில் ஊடுருவி நடைமுறைப்படுத்துகிறான்; ஆட்கொள்ளுகிறான் (அஹம் வைச்வானரோபூத்வா ப்ராணினாம் தேஹ மாச்ரித:). இதையே நம் முன்னோர், 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்றார்கள்.

எல்லாம்வல்ல இறை சக்தியை, ஊடுருவிய கண்ணுக்கு எட்டாததாகவும் (சூட்சும வடிவம்), கண்ணுக்குப் புலப்படுவதாகவும் (ஸ்தூல வடிவம்), உயிரினங்களிலும் சிலை வடிவங்களிலும் பார்க்கி றோம். 'கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலத்திலும் (தூணிலும்), கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமத்திலும் (துரும்பிலும்) இருப்பார்’ என்று பிரகலாதன் சொல்வான். 'அணுவில் அணு வடிவாக, கண்ணுக்குப் புலப்படாத நிலையில் இருப்பான். மிகப்பெரிய பொருளில் பெரிய பொருளாக இருப்பான்’ என்கிறது உபநிடதம் (அணோரணீயான் மஹதோ மஹீயான்).

? எல்லாமும் அவனே எனும்போது பல உருவங்கள் எதற்கு?

கேள்வி - பதில்

இறையுருவங்கள் பலவாறாகத் தோன்றுவதற்கு ஒரு காரணம் உண்டு. இறையுருவங்கள் எல்லாம் மாறுபட்ட பெயர்களில் அறிமுகமானாலும், நாம் வழிபடும் பரம்பொருள் அதில் காரண வடிவில் உறைந்து இருப்பதால், நமது வழிபாடு சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து, நமது வேண்டுகோள் நிறைவேறிவிடும். விருப்பத் துக்கு இணங்க சுதந்திரமாக வழிபடும் முறையை ஸனாதனம் பரிந்துரைக்கிறது. விருப்பத்துக்கு இணங்க இறையுருவத்தைத் தேர்ந்தெடுத்து வழிபட ஏதுவாக, எண்ணிலடங்கா இறையுருவங் களைத் தந்திருக்கிறது ஸனாதனம். பிறரது கட்டுப்பாடு இல்லாமல் சுய கட்டுப்பாட்டில் தன்னிச்சையாக வழிபாட்டைச் செயல்படுத்தி, விருப்பத்தை எட்ட ஸனாதனம் தந்த பரிசு அது.

இரண்டாவது கோணம்..

ஊண், உறக்கம், உறைவிடம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு நமக்கு நேரம் போதவில்லை. எல்லாவற்றிலும் பற்றாக்குறையோடு வாழ வேண்டியிருக்கிறது. இதில், கடவுள் வழிபாட்டை வேறு சுமத்துகிறீர்கள். ஆனால், கடவுள் யார், அவரை வழிபடுவது எதற்கு என்பதை விளக்கி, பாமர மக்களின் மனதில் பதியவைக்க இயலவில்லை. கடவுளை உணராத மனம், அவரை எப்படி வழிபடும்? முன்பின் பார்த்திராத, பரிச்சயம் இல்லாத ஒருவரை ஏற்பதில் மனம் தயங்கும். ஆகவே, பாமர மக்களின் மனதில் பதியவைக்க இயலாத ஒரு தத்துவத்தை அவர்களில் திணிப்பது வீண்!

? மனதில் பதியவைக்க இயலாத தத்துவம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

மனித இனம் ஒன்றுதான் உலகமா? விலங்கினங் கள் தங்களது வாழ்நாளை முழுமையாகச் சுவைத்து மகிழ்கின்றனவே?!

அவை பேசா மடந்தைகள். எனினும் ஊண், உறக்கம், உறைவிடம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் பெறுகின்றன. அவற்றுக்கெல்லாம் கடவுள் தத்துவம் தெரியாது. எனினும், வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தேவையில்லாத ஒன்றை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?!

மனிதனுக்கு அறிவுப் புலன்கள் உள்ளன. அவன், பொருளின் தரத்தைப் புரிந்துகொள்கிறான். செயல் புலன்கள் உள்ளன; தேவையானவற்றைச் செயல்படுத்தி, ஏற்றுக்கொள்கிறான். மகிழ்ச்சியை உணர அவனுக்கு மனம் உண்டு; துயரத்தைத் துறந்து, மகிழ்ச்சியை ஏற்கிறான். பேசும் திறன் உள்ளது; உரையாடல் மூலம் எண்ணத்தைப் பரிமாறிக் கொள்கிறான்.

பகையைத் துறந்து, அன்பை வளர்த்துக் கொள்கிறான். நுகர் பொருளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது இயற்கை. அவற்றைப் புலன்களால் அறிந்து, தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அனுபவத்தின் மூலம் விலக்க வேண்டியதைப் புரிந்துகொள்கிறான்; ஏற்கவேண்டியதையும் தெரிந்துகொள்கிறான்.

பரிணாம வளர்ச்சியில் புதுப்புது ஆசைகள் தாமாகவே மனதில் உருவாகும். அவற்றைப் பெறுவதற்கு அறிவுப் புலன் களும் செயல்புலன் களும் தயார் நிலையில் செயல்பட்டு, தேவைகளைப் பூர்த்திசெய்து முழுமையை எட்டவைத்துவிடும். அப்படியிருக்க, மூன்றாவதாக ஒருவரின் தேவை எழவில்லை. உணர மனம் உண்டு; ஈட்டித் தருவதற்குப் புலன்கள் உண்டு. ஆகவே, மனிதன் வாழ்வதற்கு இன்னொருவர் தேவையில்லை; பரம்பொருள், கடவுள், இறைவன், தெய்வம்... இப்படிப் பல பெயர்களைப் பட்டியலிட்டு, மனிதனிடம் திணிக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை என்பதே எங்கள் கருத்து.

? எனில், உயிர்கள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றின, செயல்படுகின்றன எனச் சொல்ல வருகிறீர்களா?

ஆறாவது அறிவு காத்திருக்கிறது. அலசி ஆராயத் திறமை இருக்கிறது. துயரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியை ஏற்க புத்தி இருக்கிறது. அதை உணர மனம் இருக்கிறது. அவனது வாழ்வுக்கு மற்றொருவரின் ஒத்துழைப்பில் வாழ வேண்டிய நிலையை இயற்கை ஏற்படுத்தவில்லை. தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உடல் உறுப்புகளை இணைத்துப் படைத்திருக்கிறது, இயற்கை.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஒருவன். வழியே போகிறவனை வம்புக்கு இழுத்தான் இன்னொருவன். ''நீ வீட்டிலிருந்து அவல் எடுத்து வா! நான் அதோடு உமியைக் கலந்துவிடுகிறேன். இருவரும் சேர்ந்து, அதிலிருக்கும் உமியை ஊதி ஊதிக் களைந்து அவலை உட்கொள்வோம்'' என்றானாம் மற்றொருவன்.

மேய்ந்துகொண்டிருக்கும் மாட்டை, அதை நக்கிக்கொண்டிருக் கும் மாடு கெடுத்துவிடும். நக்கிக் கொண்டி ருக்கும் தறுவாயில், அதில் மனம் ஈடுபட்டு, இந்த மாடு மேய்வதை நிறுத்திவிடும். அதுபோல், மனிதனின் தெளிந்த மனதில் ஆசையை இணைத்துக் கலக்கமுறச் செய்துவிட்டார்கள். மனிதனால் எட்டமுடியாத பேராசையை அவனில் இணைத்துவிட்டால், அதை அவனால் எட்ட முடியாத நிலையில், சந்தர்ப்பம் பார்த்து, 'உனது விருப்பம் எதுவானாலும் அதை நிறைவேற்றிவைக்க ஒருவர் காத்திருக்கிறார். அவர்தான் கடவுள். அவரை வழிபடு; நீ ஆசைப்பட்டது கிடைத்துவிடும்’ என்று போதனை நடக்கும். இந்த நிலையில், மனக் கலக்கத்தால் சிந்தனை வளத்தை இழந்து, ஆசையின் உந்தலில் தன்னையும் மறந்து, வேறு வழியின்றி கடவுளை மனம் ஏற்றுக்கொண்டுவிடும்.

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைபோல், எதேச்சை யாக ஆசை நிறைவேறிவிட, நம்பிக்கை பிறந்துவிட்டது. புலப் படாத கடவுளை மனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இப்படியான அனுபவத்தை ஏற்றவன் தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள... பார்க்காத கடவுளை ஏற்கும் எண்ணம் மேலோங்கி, இறைத் தத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. சான்று உண்டா என்று ஆராய முற்படாமல், பல விஷயங்களை வாழ்க்கையில் இணைத்துக்கொண்டிருக்கிறது மனித மனம். அதில் ஒன்றுதான் இறைத் தத்துவம். உலகத்தில் இருக்கும் மாறுபட்ட மனிதகுலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் இறை வழிபாட்டைக் கண்ணுற்ற மனம், அதைத் துறக்கத் துணிவதில்லை. இனம் தெரியாத பயத்தில், அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. காலம் வரும்போது மனம் தெளிவடையும்; உண்மை புலனாகும்.

மூன்றாவது கோணம்...

உடல், புலன்கள், மனம், உடல் உறுப்புகள் ஆகிய அத்தனையும் பூத உடலில் உண்டு. ஆனால், ஜீவாத்மா வெளியேறிவிட்டால், உடல் செயல்படும் தகுதியை இழந்துவிடும். வெளியில் காற்று நிறைந்திருக்கிறது. அது மூக்கு வழியே சென்று வெளிவரலாமே? இயக்கம் தொடரலாமே? ஏன் தொடரவில்லை?

உடலை இயக்குவது காற்று அல்ல; ஜீவாத்மா! அதாவது, பரம்பொருளின் அம்சம். அவனின்றி

கேள்வி - பதில்

அசையாது. அவன் தொடர்பில் (அருளில்) இயங்கிக் கொண்டிருந்தது உடல். உடலை வழிநடத்திச் செல்பவனே அவன்தான். அவன் இருந்தால்தான் நீயும் இருக்கிறாய்; 'நான் இருக்கிறேன்’ என்று சொல்லவைத்தது அவன். 'இருக்கிறேன்’ என்பது நீயல்ல; அவன்தான். அவனையே 'நான்’ என்று சொல்கிறாய். அப்போது, 'இருக்கிறேன்’ என்பது உண்மையாகும். 'நான் இல்லை’ என்று சொல்ல இயலாது. அதாவது, கடவுள் இல்லை என்று சொல்ல இயலாது.

? எனில், 'கடவுள் இல்லை’ என்பவர்களின் கருத்தும் வாதங் களும் ஏற்கத்தகாதவையா?

அறியாமையின் உச்சகட்டம் நம்மை அப்படிச் சொல்லவைத்தது. மசியோ, ரீஃபில்லோ இல்லாத பேனாவால் எழுத இயலுமா? சைதன்யம் இல்லாத உடலை இயக்க இயலுமா? நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கேயே கடைசியில் அடைக்கலமாக வேண்டும். தோன்றிய இடம் பரம்பொருள்; ஒன்றவேண்டிய இடமும் அதுதான். தோன்றிய இடம் உனக்குத் தெரியவில்லை என்றால், நீ அசடு. சேரவேண்டிய இடமும் தெரியவில்லை என்றால், நீ வடிகட்டிய அசடு!

உடல் பஞ்ச பூதங்களில் இருந்து தோன்றிற்று. அழகான உடல் அமைப்பு தானாக உருவாகாது; உருவாக்கும் கலைஞன் வேண்டும். அதுதான் பரம்பொருள். உருவாக்கி, அதில் தன்னையும் இணைத்துக்கொண்டு செயல்படவைத்து, வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி அடையச்செய்து, கடைசியில் தன்னோடு இணைத்துக் கொள்கிறான். 'அவனின்றி நீ இல்லை’ என்று இருக்கும்போது, 'மூன்றாவது ஒருவன் தேவை இல்லை’ என்பது எவ்வளவு அறியாமை? முதல்வனை மூன்றாமவனாகப் பார்ப்பது அறியாமை அல்லவா? அதையே உணராதவர்கள் எப்படி சீர்திருத்தவாதியாக நடமாட முடியும்?

? உங்களின் கருத்தை சரியென்றே வைத்துக்கொள்வோம். எனினும், கடவுள் தத்துவத்தையும் காரண காரியம் இன்றி, கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது அல்லவா?

கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டதல்ல கடவுள் தத்துவம். அது, அனுபவித்து அறியவேண்டியது.

மண், தானாகவே குடமாக உருவெடுக்காது. அதை உண்டுபண்ண ஒரு கலைஞன் வேண்டும். உலகம் தானாக உருவெடுக்காது. செடி கொடிகளும், மரமும், நதியும், மலையும், மண்ணும், கடலும், காயலும்... இப்படிப் பல வடிவங்கள் தோன்ற ஒரு கலைஞன் வேண்டும். அவன்தான் பரம்பொருள். மண்ணில் இருந்து உருவான உடல் மண்ணிலேயே இணைந்துவிடுகிறது. 'உடலிலிருந்து விடுபட்ட ஜீவாத்மா, தனது தோற்றத்துக்குக் காரணமான பரமாத்மாவில் சேர்ந்துவிடுகிறது. பரமாத்மாவில் இருந்து ஆகாசம்

தோன்றியது. ஆகாசத்திலிருந்து காற்று தோன்றியது. காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரில் இருந்து நிலம், நிலத்திலிருந்து பயிர்கள், பயிர்களிலிருந்து உணவு, உணவிலிருந்து மனிதன்’  இப்படி மனிதனது தோற்றத்தை வரையறுக்கிறது உபநிடதம்.

'சோற்றால் அடித்த சுவரு... அது சோறில்லா விட்டால் போகுமே உசுரு’ என்கிற பாட்டு இந்தத் தத்துவத்தைத் திருப்பிச் சொல்கிறது. 'மனிதன் ஆட்டம் ஆடி ஓய்ந்தவுடன் சோறு, பயிர், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், ஆன்மா... இந்த வரிசையில் ஒவ்வொன்றிலும் அடைக்கலமாகி, கடைசியில் பரமாத்மாவில் ஒன்றிவிடுவான்’ என்று உபநிடதத்தின் விளக்கம் அறிவுறுத்துகிறது.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மக்கள் விழித்துக்கொண்டுவிட்டால், சீர்திருத்தவாதி மறைந்துவிடுவான். தத்துவ விளக்கம் பாமரர் காதுகளில் எட்டாமல், எத்தனை நாள் விழித்துக்கொண்டு கண்காணிக்க இயலும்?

இப்படியானவர்கள், தாங்கள் இருக்கும் வரையிலும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பாமரர்களைப் பாமரர்களாகவே வைத்துக் கொண்டு இருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு யார் கண் காணிப்பார்கள்? சீர்திருத்தவாதியின் ஜீவாத்மாவும் பரம்பொருளில் லயித்துவிடும். தனது தோற்றம், முடிவு இதை அறியாத ஒருவன், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு சீர்திருத்தவாதியாக வளைய வருவது பரிதாபத்துக்கு உரியது.

? நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவே இறை அம்சம் என்றால், வெளி வழிபாடுகளும் ஆராதனைகளும் எதற்கு?

சமணர்களின் 'தீர்த்தங்கரர்’ என்ற பதத்துக்குத் தமிழாக்கம் கடவுள். கட உள். கடவில் இருந்து உள்ளே இறங்கினால் தீர்த்தம் நீர் இருக்கும். அதை வணங்குவது, நீராடுவது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. நீரில் அத்தனை தேவதைகளும் உறைந்திருப்பார்கள். அதன் தொடர்பில் நாம் புனிதமாகிவிடுவோம். நமக்காக நமது உடல் முழு இயக்கத்துடன் செயல்பட்டு சிறப்புப் பெற, உள்ளிருக்கும் பரம்பொருளின் அம்சமான ஜீவாத்மாவை (இயக்குநரை) வழிபடுகிறோம். அவர் அருளில் (சேர்க்கையில்) நோய் நொடியின்றி இன்பத்தை முழுமையாகச் சுவைத்து மகிழ, கடவுள் வழிபாட்டைக் கையாள்கிறோம். அவர் படைத்த பொருளையே அளிக்கிறோம். அத்தனை பொருள்களையும் நாமே திரும்பப் பெற்று, அவற்றைச் சுவைக்கிறோம்.

நீடூழி வாழ வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். இறப்பு என்றால், எல்லோரிடமும் பயம் தொற்றிக்கொண்டுவிடும். இறப்பு என்றால், உள்ளிருக்கும் ஜீவாத்மாவின் (பரம்பொருள்) வெளியேற்றம் என்று பொருள். நம்முள்ளே வீற்றிருக்கும் ஜீவாத்மா வெளியேறிவிடாமல் நிலைத்திருக்கச் செய்யும் நிகழ்வுகளே ஆண்டவனுக்கான பலவிதமான ஆராதனைகள். அவர் உள்ளே இருந்தால், வாழ்வு வளமாகத் தொடரும்; அவர் வெளியேறினால் சூன்யம் ஆகிவிடும். நமது வளமான வாழ்க்கையை உறுதி செய்ய வழிபாடு உதவுகிறது.

ஆண்டவனை மறுப்பவனுக்கும், தொடர்ந்து அவன் பல காலம் தனது கொள்கையைப் பரப்பிக் கொண்டிருப்பதற்கு, அவனுக்குள் உறைந்திருக்கும் ஜீவாத்மா (பரம்பொருள்) உடலில் இருந்து வெளியேறாமல் இருக்கவேண்டும். அவன் வாய் மட்டும் மறுக்கிறது; உள் மனம் ஜீவாத்மா வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறது. ஆண்டவன் அருளால் 10 மாதம் கருவறையில் இருந்து வெளிவந்தான். வெளிவந்தவன் கடவுளை மறுத்து, கூத்தாடிக் கூத்தாடி உடலை வருந்தவைத்து, ஜீவாத்மாவை வெளியேற்றினான். இப்படியொரு தகவல் பழைய பாட்டில் உண்டு. 'நந்தவனத்தில் ஓராண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதை கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!’

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

வேலியில் மாட்டிக்கொண்டதால் வாலை இழந்த குள்ள நரி ஒன்று, மற்ற குள்ள நரிகளைப் பார்த்துத் தத்துவ விளக்கம் அளித்தது. ''நான் பலநாள் சுமையான வாலை வைத்துக்கொண்டு ஓட முடியாமல் தவித்தேன். எதிரியிடமிருந்து வெளிவர மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். வாலைத் துறந்தவுடன், நான் சுமை குறைந்தவனாக உணருகிறேன். இப்போது புதுத் தெம்பும், பலமும் பெற்று, பயமில்லாமல் எதிரியோடு பொருதுகிறேன்'' என்றது. இதைக் கேட்ட அத்தனை குள்ள நரிகளும் தங்கள் வால்களைத் துறந்தன. வாலை இழந்த குள்ள நரியும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டதாம்!

கடவுள் சுமையை இறக்கிவைக்கும் பரிந்துரை ஏற்கத்தக்கதல்ல. கடவுள் வடிவம் ஒளிப்பிழம்பு. ஒளிக்கு கனம் இருக்காது. லேசாகத்தான் இருக்கும். சுமையான உணர்வு தோன்றாது. அது உள்ளே இருப்பதை அறிவதே சிறப்பு!

பதில்கள் தொடரும்...