பாபாவைப் பொறுத்தவரை, அவர் சொல்வதே வேதம்; அவர் சொல்வதே வைத்தியம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நமக்கு விசித்திரமாகத் தோன்றக்கூடும். ஆனால், அதனால் நன்மையே விளையும்! 

ஸ்ரீசாயிநாதரின் அருளாடல்கள் எல்லாமே நம்மை அதிசயிக்க வைப்பவை! அவருடைய லீலைகளும் சரி, உபதேசங்களும் சரி... பெரும்பாலும் மறைபொருள் கொண்டவையாகவே இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் பரிபூரணமாக அவரிடம் சரண் அடையவேண்டும்.

'சாமாவும் பாபாவிடம் சரண் அடைந்தவர்தானே! அப்படியிருக்க, பாம்பு கடித்து விஷம் உடலில் பரவிய நிலையில், பாபாவின் அருள் வேண்டி துவாரகாமாயிக்குச் சென்றபோது, பாபாவின் வசைமொழிகளைக் கேட்டு அவர் ஏன் அவநம்பிக்கை கொள்ளவேண்டும்?’ என்ற சந்தேகம் நமக்குத் தோன்றக்கூடும். உயிராபத்தான நிலையில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஷ்டமான நிலையில் இருக்கும் யாருக்குமே இறைவனிடம் அவநம்பிக்கை ஏற்படுவது இயல்புதான். ஆனால், சாமாவுக்கு பாபாவிடம் அவநம்பிக்கை ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது. 'பாபாவாலேயே தன்னைக் காப்பாற்ற முடியாதபோது, வேறு யாரால் நம்மைக் காப்பாற்றமுடியும்?’ என்ற எண்ணம்தான் அவருக்கு ஏற்பட்டது.

ஸ்ரீசாயி பிரசாதம் - 8

உண்மையில், பாபா கடுமையான வசைமொழிகளால் திட்டியது சாமாவை அல்ல; சாமாவின் உடலில் பரவிக்கொண்டிருந்த விஷத்தைதான்! பாபாவின் அந்த வசை மொழிகளே மந்திர மொழிகளாக மாறி, சாமாவின் உடலில்ஏறிக்கொண்டிருந்த விஷத்தை இறக்கி, சாமாவைக் காப்பாற்றின. பாபாவைப் பொறுத்தவரை, அவர் சொல் வதே வேதம்; அவர் சொல்வதே வைத்தியம்! மேலோட்ட மாகப் பார்க்கும்போது, இது நமக்கு விசித்திரமாகவும், விபரீதமாகவும்கூடத் தோன்றக்கூடும். ஆனால், அதனால் நன்மையே விளையும் என்பதற்குச் சாட்சியாக, அவருடைய திவ்வியமான சத்சரிதத்தில் எத்தனையோ லீலைகள் காணப்படுகின்றன.

காகாமஹாஜனி என்பவர் எப்போதும் பாபாவுடனே இருப்பதிலும், அவருக்குப் பணிவிடைகள் செய்வதிலும் தம்மை சிரத்தையுடன் ஈடுபடுத்திக்கொண்டவர். ஒருமுறை, அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்றுப்போக்கு பல நாட்கள் நீடித்த நிலையிலும், அவர் மருத்துவரிடம் செல்லவும் இல்லை; சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. எதுவானாலும் பாபாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று, தன் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும் பொறுப்பை பாபாவிடமே மானசீகமாக ஒப்படைத்துவிட்டார். மற்றபடி, தன்னுடைய நிலைமையை பாபாவிடம் அவர் சொல்லவும் இல்லை.

ஸ்ரீசாயி பிரசாதம் - 8

இந்நிலையில், ஒருநாள் துவாராகமாயியில் தளம் போடும் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. காகாமஹாஜனி வழக்கம்போல் பாபாவுக்கு அருகில் அமர்ந்துகொண்டு, பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். வயிற்றுப்போக்கின் காரணமாக, இடையிடையே வெளியில் செல்வதும், திரும்பிவந்து பாபாவின் கால்களைப் பிடித்துவிடுவதுமாக இருந்தார்.

திடீரென்று பாபா கடும் கோபம்கொண்டவராக, தம்முடைய சட்காவை (பாபா வைத்திருக் கும் பிரம்பு) கையில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்து ஆவேசமாகத் திட்டத் தொடங்கிவிட்டார். பாபா அந்த அளவுக்குக் கோபம் கொண்டு அதுவரை யாருமே பார்த்ததில்லை. எனவே, பாபாவின் செயலைக் கண்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் பயந்துபோய், போட்டது போட்டபடி ஓட்டம் எடுத்தனர். காகாமஹாஜனியும் ஓட நினைத்து எழுந்தார். உடனே, அவருடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய பாபா, தமக்குப் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். பாபாவுக்குப் பக்கத்தில் யாரோ ஒருவர் விட்டுச்சென்ற சிறிய பை இருந்தது. அதைக் கையில் எடுத்த பாபா, அதற்குள் இருந்த வேர்க்கடலைகளை எடுத்து, தோலை நீக்கி காகாமஹாஜனியிடம்கொடுத்து, உண்ணும்படி சொன்னார். தாமும் சில கடலைகளை வாயில் போட்டுக்கொண்டார். இடையிடையே வசைமாரியும் தொடர்ந்து கொண்டிருந்தது.

பையில் இருந்த வேர்க்கடலை மொத்தமும் காலியான பிறகு, குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வருமாறு மஹாஜனியிடம் சொன்னார். மஹாஜனியும் தண்ணீர் கொண்டு வந்தார். தாம் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார். அதன் பிறகே, திட்டுவதை நிறுத்தி சாந்தம் அடைந்தார் பாபா. பிறகு மஹாஜனியைப் பார்த்து, ''இனி கவலைப்பட வேண்டாம். உன் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது'' என்று சொன்னார். அதேபோல், வயிற்றுப்போக்கு நின்று மஹாஜனி பூரண குணம் அடைந்தார்.

மருத்துவரீதியாகப் பார்த்தால், வேர்க்கடலை சாப்பிடுவது வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தவே செய்யும். ஆனால், பாபா தம்முடைய திருக்கரங்களால் கொடுத்த வேர்க்கடலை களோ மஹாஜனியின் வயிற்றுப் போக்குக்கு மருந்தாக மாறி, விந்தை புரிந்துவிட்டன.

இதேபோல் மற்றும் ஒரு நிகழ்ச்சி...

பாபாவின் பக்தரான பூட்டி என்பவர், காலரா நோயால் கடுமையாக

பாதிக்கப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. நாளாக நாளக நோய் அதிகமாகிக்கொண்டுதான் இருந்ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. வீடு முழுக்க மருந்துகளே நிரம்பி இருந்தன. தாகம் வேறு அவரை வாட்டி எடுத்தது. இறுதியாக, உறவினர்கள் அவரை பாபாவிடம்  அழைத்துச் சென்று, முறையிட்டனர்.

காலராவால் பாதிக்கப்பட்டிருக்கும் பூட்டிக்குக் குடிப்பதற்கு காபி கொடுப்பதா, தேநீர் கொடுப்பதா என்று பாபாவிடம் கேட்டதற்கு, ''பால் கொடுங்கள். அதுவும் பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சேர்த்துக் காய்ச்சிய பாலைக் கொடுங்கள். நொய்யரிசியும் பருப்பும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியை உணவாகக் கொடுங்கள்'' என்று சொன்னார் பாபா.

வந்தவர்களுக்குத் திகைப்பு! காரணம், பாபா பூட்டிக்குச் சொன்ன உணவு முறையானது காலராவை அதிகப்படுத்தவே செய்யும். இருந்தா லும், அவர்களுக்கு பாபாவிடம் இருந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் காரணமாக, அவர் சொன்னபடியே செய்தனர். அடுத்த சில நாளில், பூரண குணம் அடைந்தார் பூட்டி.

பாபாவின் வார்த்தைகள் ஒருபோதும் பொய்த்துப் போனது கிடையாது! அப்படி இருக்க, காச நோயால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த மலன்பாய் இறக்கமாட்டாள் என்று பாபா சொன்ன வாக்கு மட்டும் எப்படிப்பொய்யானது? அவள் ஏன் இறக்கவேண்டும்? பிறகு, பாபா அவளை ஏன் உயிர்ப்பிக்க வேண்டும்? இந்த லீலையின் பின்னணியில் உள்ள ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உண்மையில் மலன்பாய் இறக்கவில்லை. பாபா எப்போது மலன்பாய் இறக்கமாட்டாள் என்று கூறினாரோ, அப்போதே அவளுடைய ஆயுள், காலனின் கணக்கில் நீட்டிக்கப்பட்டு விட்டது. பின் எதற்காக மலன்பாய் இறந்துபோகும்படியாகச் செய்து, அவளுடைய உறவினர்களுக்குத் தன்மேல் அவநம்பிக்கை ஏற்படுமாறு செய்யவேண்டும்?

பாபாவின் இந்த லீலையின் பின்னணியில் உள்ள உண்மைதான் என்ன?

பிரசாதம் பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism