Published:Updated:

வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri

வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri
வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri

வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri

சிவனை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் சிவராத்திரி. அதுபோலவே அம்பிகையைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்தது நவராத்திரி. சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி விரதம்.

'நவ' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'ராத்திரி' என்றால் இரவு என்று பொருள்.  இவ்வாறு ஒன்பது இரவுகளைக் கொண்ட தினங்களையே நாம் 'நவராத்திரி' யாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக இரவு என்றால் இருள் என்று பொருள். ஒரு குழந்தை, இரவு வந்துவிட்டால் அம்மாவின் அணைப்பைத் தேடும். அதுபோல் இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் நாம் அகிலத்துக்கே அம்மாவான அம்பிகையை வழிபடுகிறோம். மேலும், இரவு என்னும் இருள் நம்முடைய அறியாமையையும் குறிக்கும். எனவே நமது 'அறியாமை' என்னும் இருளைப் போக்குவதற்கு அம்பிகையை வணங்குவதே நவராத்திரி ஆகும். எவ்வாறு ஒளியானது இருளை ஒரு நொடியில் போக்குகிறதோ, அவ்வாறே அம்பிகையின் அருளானது நமது அறியாமையைப் போக்குகிறது.

ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும், நவராத்திரிக்கு விளக்கம் உண்டு. புரட்டாசி பிரதமைக்கு பிறகு வருவது 'ஆச்வின மாதம்' ஆகும். இந்தச் சமயத்தில் தொற்று நோய்கள்  பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவே உலகத்துக்கே அன்னையான அம்பிகையைப் பூஜிக்கிறோம். 

இந்த ஒன்பது தினங்களும் அம்பிகைக்கு பிரத்தியேகமான நைவேத்தியத்துடன்,  நவ தானியங்களில் ஏதாவது ஒன்றில் சுண்டல் செய்து, அதையும் அம்பிகைக்குப் நைவேத்தியம் செய்து, பின்னர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய் பரவாமல் தடுக்கலாம்.

நவராத்திரி என்றாலே கொலுதான் பிரதானம். பொதுவாக நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கான முறைப்படி செய்ய வேண்டும். அப்போதே அந்த செயலானது முழுமை பெறும்.  நவராத்திரி கொலுவில் படி வைப்பதிலும் ஒரு முறை இருக்கிறது. ஒன்பது படிகள் வைப்பது சிறந்த முறையாகும். அவ்வாறு இயலாதவர்கள் ஒற்றைப் படை வரிசையில் அதாவது மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையிலும் வைக்கலாம்.

ஒன்பது படிகளில், 'முதல் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்றவற்றையும், இரண்டாம் படியில் ஈரறிவு உயிர்களான நத்தை, சங்கு முதலியவற்றையும் வைக்க வேண்டும். அதுபோல எறும்பு முதலிய மூன்றறிவு உயிர்களை மூன்றாம் படியிலும், நான்கறிவு உயிர்களான நண்டு போன்றவற்றை நான்காம் படியிலும் வைக்கவேண்டும். ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட பறவைகளையும், விலங்குகளையும், ஆறாம் படியில் ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளையும் வைக்க வேண்டும். ஏழாம் படியில்  மனிதகுலத்தை முன்னேற்ற பாடுபட்ட முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரின் பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்து எட்டாம் படியில் தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். இறுதியாக ஒன்பதாம் படியில் மும்மூர்த்திகளை அவர்களின் தேவியரோடு வைக்க வேண்டும். அவர்களுக்கு இடையில் அகிலத்திற்கே ஆதிசக்தியாக விளங்கும் அம்பிகையை வைக்க வேண்டும். அந்தப் படியில் நடுவில் கலசம் வைத்து அதில் அம்பாளை ஆவாஹணம் செய்யவேண்டும்.

(நவராத்திரி, முதல் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய தேவியையும் பற்றி  அறிய வீடியோவைப் பாருங்கள்!)

அதேபோல் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. 

நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் பொட்டுக் கோலமிடவேண்டும். அம்பாளின் பெயர் குமாரி. சுவாசிநி சைலபுத்ரி. இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை அருளும். முதல்நாள் அம்பிகைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யவேண்டும். சுண்டல் நம் விருப்பம்போலவோ அல்லது அந்தக் கிழமைக்கு எந்த கிரகம் அதிபதியோ அந்த கிரகத்துக்குப் பிரியமான நவதானியத்தில் சுண்டல் செய்து, அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, கொலுவைப் பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். இதனால் அளவற்ற நன்மைகள் நமக்கு ஏற்படும். முதல்நாள் அம்பிகையை குமாரியாக பூஜித்தால் நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் நமக்கு ஏற்படும்.

நவராத்திரியின் முதல் நாளுக்கு போடவேண்டிய கோலத்தைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த  கோலக்கலைஞர் சுபா. 

அடுத்த கட்டுரைக்கு