Published:Updated:

பசுவை போற்றுவோம்...2

குலம் காக்கும் கோமாதா!ரெ.சு.வெங்கடேஷ்

பசுவை போற்றுவோம்...2

குலம் காக்கும் கோமாதா!ரெ.சு.வெங்கடேஷ்

Published:Updated:

'சூரியகேது நாடி’ என்ற நரம்பு, சூரிய ஒளி சக்தியை முழுமையாக கிரகித்து, ரத்தத்தில்கலந்து பால் வடிவில் நமக்கு அமிர்தமாகக் கிடைக்கச் செய்கிறது.

இரவி எழுமுன் காலத்தில்

எழுந்துஓர் பிடிபுல் பறித்துஅன்பால்

பரவி அரிய சுரபிகட்குப்

பரிந்து கொடுத்து பெருந்தவத்தோர்

விரவும் வறுமை யாவைகளும்

விரவாது ஒழிந்தே வெண்மதியும்

அரவும் அணியும் மணிமுடியோன்

அமரும் சிவலோகத்து அடைவார்.

சிவபுண்ணியத் தெளிவு

(திருவாவடுதுறை ஆதீனம்)

சூரியன் உதிக்குமுன் எழுந்து ஒரு கைப்பிடி புல் எடுத்து மனிதனோடு வாழும் தெய்வமான பசுவுக்கு அன்போடு கொடுப்பது எனும் பெருந்தவம் மேற்கொள்பவருக்கு... அவரைப் பீடித்த வறுமை ஒழியும்; பிறைசூடிய பெருமான் உரையும் திருக்கயிலையை அடையும் பாக்கியம் கிடைக்கும் என்று விளக்குகிறது மேற்கண்ட பாடல்.

இதுபோன்று புராணங்களால், ஞான நூல் களால், மகான்களால் சிறப்பிக்கப்படும் பசுவின் மகிமைகள் ஏராளம்! பசுவில் நிறைய வகைகள் உண்டு. அவற்றில் 'நாட்டு  மாடுகள்’ அதீத விசேஷம் வாய்ந்தவை. அவைதான் நமது பாரம்பரியத்துக்கு உரியவை. அவற்றின் முக்கியச் சிறப்பு  மேல் பகுதியில் உள்ள திமில்!

பசுவை போற்றுவோம்...2

அந்தத் திமிலில் உள்ள 'சூரியகேது நாடி’ என்ற நரம்பு, சூரிய ஒளி சக்தியை முழுமையாக கிரகித்து, ரத்தத்தில் கலந்து பால் வடிவில் நமக்கு அமிர்தமாகக் கிடைக்கச் செய்கிறது. ஆகவே, நாட்டுப் பசுவின் பாலைப் பருகி வந்தால், தேக ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழலாம். மேலும் இந்தப் பசுக்கள் இடும் சாணத்தில்  33 கோடி நுண்ணுயிரிகள் இருப்பதாகவும், அவை நல்ல பாக்டீரியாக்கள் என்றும் வியப்புடன் விளக்குகிறார்கள் அறிவியலாளர்கள்.

அதேபோல், கோவின் பாதம் பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு என்கின்றன புராணங்கள். காலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக மந்தைக்குச் செல்லும்போதும், மாலையில் மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும் போதும் (இதை கோதூளி நேரம் என்பர்) அவற்றின் குளம்படிகள் மண்ணில் பட்டு கிளம்பும் புழுதியில் கலந்துவரும் நுண்ணியிரிகள் நம்முள் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம். ஆகவேதான், கோதூளி நேரத்தில் பசுக்களின் குளம்படி பட்ட மண்வாசனையை சுவாசிப்பது அவ்வளவு விசேஷம் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

பசுவை போற்றுவோம்...2

இப்படி, பசுக்களின் மேன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு புராணச் சம்பவங்கள் மூலமாகவும், ஞான விளக்கங்கள் வாயிலாகவும் விளக்கிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். ஆனால், நாம் நம் முன்னோரின் அந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டோமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது!

ஆமாம்! மகிமைகள் பல நிறைந்த நம் பாரம்பரிய நாட்டுப் பசு மாடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதாக ஓர் அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் ஒருசில வருடங்களில் இன்றியமையாத 'நாட்டு மாடுகளை’ நாம் மறந்துவிட வேண்டியதுதான் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.

அது தரும் புள்ளிவிவரம்...

ஒர் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் மேலான மாடுகள் தமிழ் நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கும்,  வெளிநாடுகளுக்கும் அடிமாடுகளாகச் செல்கின்றனவாம். நாட்டு மாடுகளின் மாமி சத்துக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு என்பதால், அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கிறார்களாம். இன்னும் ஒரு தகவலைக் கேட்டால் நம் உள்ளம் துடிதுடித்துப் போகும்.

ஆமாம்! கன்றின் மிருதுவான சதைக்காக வயிற்றில் கருவோடு இருக்கும் பசுக்கள் கொல்லப்படுவது கொடுமையின் உச்சம்!

இந்த நிலையை மாற்ற வேண்டாமா? நாம் தெய்வமாகக் கருதி வணங்கி வழிபடும் பசுக்களை,

ஈவு இரக்கமற்ற மனிதனின் ருசிக்கும் பசித் தேவைக்கும் காவு கொடுக்காமல் காப்பாற்ற வேண்டாமா? காப்பாற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றனர், காங்கேயம் அருகில் கடையூரில் இயங்கி வரும் 'கொங்க கோசாலை’ அமைப்பினர்.

''நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் நாட்டு மாடுகளை மனசாட்சியை விற்று ஏன் பலி கொடுக்கிறீர்கள்? எக்காரணம் கொண்டும் மாட்டைவிற்காதீர்கள். அப்படியொரு நிலை வந்தால் எங்களை அணுகுங்கள்'' என்கின்றனர் இந்த அமைப்பினர். சுமார் 50 தன்னார்வலர்களின் பங்கோடு இயங்குகிறது கொங்க கோசாலை அமைப்பு. இவர்களின் முக்கிய நோக்கம் நாட்டு மாடுகளைக் காப்பதே. வதைக்கு செல்லும் பசு மாடுகளை விலைக்கு வாங்கி, அவற்றை முறையாக பராமரித்து வருகிறார்கள்.

இந்த கோசாலையை துவங்கிய சிவகுமார், 'கொங்கு மண்டலத்தில் எங்கு மாட்டுச் சந்தைகள் நடந்தாலும் சென்று விடுவோம். எங்களால் முடிந்த அளவுக்கு, கசாப்புக் கடைகளுக்கு செல்ல இருக்கும் மாடுகளை விலைகொடுத்து வாங்கி வருவோம். அவ்வாறு காப்பாற்றப்பட்ட மாடுகளை முறையாக நாங்களே பராமரித்தும் வருகிறோம். இதுவரை சுமார் 300  பசு மாடுகளை வதையில் இருந்து காப்பாற்றி இருக்கிறோம்' என்கிறார்.

பசுவை போற்றுவோம்...2

இந்த அமைப்பின் செயல் பாட்டை அறிந்து, பசுமாட்டைப் பராமரிக்கவும் இயலாமல் அடிமாடாக விற்கவும் மனசில்லாமல் தவிக்கும் அன்பர்கள் பலரும், இவர்களிடம் தங்கள் மாட்டை ஒப்படைத்திருக்கிறார்கள். உதவும் மனம் கொண்ட அன்பர்கள், இப்படியான மாடுகளை வாங்கவும் பராமரிக்கவும் இந்த அமைப் பினருக்கு உதவுகிறார்களாம். மேலும், இவர்களிடம் இந்த மாடுகளை விலைக்கு வாங்கி பராமரிக்க விருப்பம் உள்ளவர் களுக்கு, வாங்கிய அதே விலைக்கு பசுக்களைத் தருகிறார்கள். அதே நேரம், இந்த விஷயத்தில் இடைத் தரகர்கள் ஏமாற்றக்கூடும் என்பதால், பசுக்களை வாங்க அணுகுபவர்கள் மாட்டை சரியாக வளர்ப்பாரா, இந்த பசுக்களைப் பராமரிப்பதில் உண்மையிலேயே ஆர்வம் உள்ளவரா என்பதை அறிந்தபிறகே கொடுப்பார்களாம்.ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் ஆறுமாதம் வரையிலும் இவர்களின் கோசாலையில் சேவை செய்ய வேண்டுமாம்.

''ஒவ்வொரு பசுவையும் சந்தை யில் இருந்து காப்பாற்றும்போது, கடவுள் நம் முன் நின்று நம்மை வழிநடத்துவதை நன்கு அறிய முடியும்;

நாம் வெறும் கருவி மட்டுமே என்று உணர முடியும்'' எனக்கூறும் சிவகுமார் தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

நம் மனதை நெகிழச் செய்யும் அந்த அனுபவத்தையும், மண்ணின் காமதேனுவான பசுக்களைக் காப்பது குறித்த இன்னும் பல தகவல்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

அடுத்த இதழில்...

படங்கள்: கே.குணசீலன், தே.தீட்ஷித்