Published:Updated:

தாமிரபரணி மகாத்மியம்-3

மருத மரத்தில் வெளிப்பட்ட மகேஸ்வரன்!எஸ்.கண்ணன்கோபாலன்

தாமிரபரணி மகாத்மியம்-3

மருத மரத்தில் வெளிப்பட்ட மகேஸ்வரன்!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

புண்யாயை புண்யபூதாயை  

புத்ர்யை மலய பூப்ருத:

ஸர்வதீர்த்த ஸ்வரூபாயை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாம்ரபர்ண்யை நமோ நம:

தாமிரபரணி தியான ஸ்லோகம்

தாமிரபரணியின் சிறப்பைக் கூறும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிய பிறகுதான் தாமிரபரணியில் ஸ்நானம் செய்யவும், தாமிரபரணி தேவியை பூஜிக்கவும் வேண்டும்.

தாமிரபரணி மகாத்மியம்-3

ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது என்பது படிப்படியாகத்தான் முடியும். அதை எடுத்துச் சொல்லுவதுபோல் அமைந்திருப்பதுதான் சாந்திராயண விரதம் எனப்படுவது. இந்த விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் கிருஷ்ணபட்சத்து பிரதமை முதல் அமாவாசை வரை விரதம் இருக்கவேண்டும். பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமை அன்று சூரியோதயத்துக்கு முன்னதாக எழுந்து, ஸ்நானம் செய்து,ஸ்ரீபுருஷஸூக்தம், ஸூக்தம் போன்ற ஸூக்தங்களோ அல்லது வேறு ஏதேனும் ஸ்தோத்திரங்களோ பாராயணம் செய்து, விரதத்தைத் தொடங்கவேண்டும்.

முதல் நாள் பதினைந்து கைப்பிடி உணவு, அடுத்த நாள் பதினான்கு கைப்பிடி உணவு என்று அமாவாசை வரை ஒவ்வொரு கைப்பிடியாக உணவைக் குறைத்துக் கொண்டே வரவேண்டும். மறுநாள், சுக்லபட்ச பிரதமை தொடங்கி பெளர்ணமி முடிய உள்ள நாள்களில், பிரதமை அன்று ஒரு கைப்பிடி உணவில் விரதத்தை ஆரம்பித்து, பெளர்ணமி அன்று பதினைந்து கைப்பிடி உணவை உண்ணவேண்டும். இப்படி உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது, நாளடைவில் நம்முடைய புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். (ஆயிரம் சாந்திராயண விரதம் அனுஷ்டிக்க வேண்டுமானால், சுமார் 85 வயது வரை விரதம் இருக்கவேண்டும்.) தாமிரபரணி தெற்கில் இருந்து வடக்காக உத்தரவாகினியாகச் செல்லும் அத்தாள நல்லூரில் உள்ள கஜேந்திரமோட்ச தீர்த்தத்தில், வைகாசி மாதம் துவாதசியிலோ அல்லது சிராவண துவாதசியிலோ ஸ்நானம் செய்தால் ஏற்படக்கூடிய ஆயிரம் சாந்திராயண விரதம் அனுஷ்டித்த பலனானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கக்கூடியது.

அத்தாளநல்லூர் கஜேந்திர வரதரை தரிசித்த பிறகு, நாம் சென்றது சேரன்மகாதேவி திருத் தலத்துக்கு. இங்கு பகவான் பக்தவத்சல பெருமா ளாக தரிசனம் தருகிறார்.

ஒருமுறை, வியாசர் இமயத்தில் இருந்து தென் திசை நோக்கிப் புறப்பட்டபோது, வியாதிகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த சில பெண்களைக் கண்டு, அவர்களிடம் இரக்கம் கொண்டவராக, ''நீங்கள் யார்? உங்களுக்கு வந்த துன்பம்தான் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், ''நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் ஆவோம். மக்கள் தங்களுடைய பாவங்களை எல்லாம் எங்களில் சேர்த்துவிடுவதால்தான், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது' என்றனர்.

தொடர்ந்து, ''நாங்கள் மஹாவிஷ்ணுவின் உத்தரவின்படி, புண்ணிய ஸ்வரூப நதியாகிய தாமிரபரணியில் வருஷம்தோறும் மார்கழி மாதத்தில் வரும் வியதிபாத தினத்தில் ஸ்நானம் செய்து, எங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்கிறோம்'' என்றனர்.

தாமிரபரணி மகாத்மியம்-3

கங்கை முதலிய நதிகள் சொல்லியதைக் கேட்ட வியாசர் தாமும் தாமிரபரணி நதியை தரிசிக்க எண்ணி, சேரன்மகாதேவி திருத்தலத்துக்கு வந்தார். தாமிரபரணி நதியில் ஸ்நானம் செய்து, மகாவிஷ்ணுவின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, தவம் இயற்றினார்.

வியாசருடைய தவத்துக்கு இரங்கி, அவருக்கு தரிசனம் தந்த பெருமாள், வியாச முனிவர் பிரார்த்தித்துக் கொண்டபடி, இத்தலத்திலேயே கோயில் கொண்டார். பக்தர்களிடம் மிகுந்த வாத்ஸல்யம் கொண்டவராக இருப்பதால் பக்தவத்சல பெருமாள் என்னும் திருப்பெயர் கொண்டார். பெயருக்கேற்ப பரம காருண்யமூர்த்தியாகத் திருக்காட்சி தந்து அருள்கிறார் பெருமாள்.

இந்தக் கோயிலையொட்டியே தாமிரபரணி சலசலத்து ஓடுகிறாள். கோயிலின் ஒரு மூலையில்

தாமிரபரணி மகாத்மியம்-3

அமைந்திருக்கும் மண்டபத்தில் உள்ள திட்டிவாசலைத் திறந்தால், தாமிரபரணியை தரிசிக்கலாம். இந்த இடத்தில், மார்கழி மாதம் வரும் வியதிபாத யோகத்தில் ஸ்நானம் செய்து, பக்தவத்சல பெருமாளை வழிபட்டால், பித்ரு தோஷம் உள்ளிட்ட சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொன்மைச் சிறப்பு கொண்ட இந்தத் திருக்கோயில் தொல்பொருள்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் மட்டும்தானா தொன்மைச் சிறப்பு கொண்டது? தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அத்தனை கோயில்களுமே தொன்மைச் சிறப்பு கொண்டவைதான்!

ஆலயங்கள் மட்டுமல்ல, உலகத்தின் தொன்மை யான நாகரிகமும்கூட தாமிரபரணி நதிக்கரையில் தோன்றிய நாகரிகம்தான் என்பதும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மை. நாகரிகத்தின் பிறப்பிடமாகத் திகழும் தாமிரபரணி பாய்ந்தோடும் தமிழகத்தில் பிறந்திருப்பதற்கு நாம் பெரும்புண்ணியமும், மாதவமும் செய்திருக்கவேண்டும்!

பரம காருண்யமூர்த்தியான பக்தவத்சல பெருமாளை தரிசித்த பிறகு, நாம் அடுத்து சென்றது திருப்புடைமருதூர் திருத்தலத்துக்கு.

முற்காலத்தில் மருதவனமாக இருந்த இப்பகுதி யில் வேட்டைக்கு வந்த வேடன் ஒருவன், ஒரு மானின் மீது அம்பு எய்தான். மான் ஓடிச் சென்று, ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டது. வேடனின் அம்பு அந்த மரத்தில் பாய, ரத்தம் பீறிட்ட நிலையில் சிவலிங்கம் வெளிப்பட்டது.

தனது அடாத செயலுக்கு வருந்திய வேடன், ஈசனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த இடத்திலேயே சிவபெருமானுக்கு ஆலயம் அமைத் ததுடன், கோமதி அம்பிகையையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

தாமிரபரணி மகாத்மியம்-3

ததீசி முனிவரிடம் இருந்து அவருடைய உயிர்த் தியாகத்தால் பெற்ற முதுகெலும்பையே வஜ்ராயுதமாகக் கொண்டு, தன்னை எதிர்த்துப் போரிட வந்த விருத்திராசுரனைக் கொன்ற தேவேந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, குருபகவானின் ஆலோசனைப்படி, தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து, அந்தப் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டான். அதே நேரம், இந்திராணியும் தன் கணவனின் பாவம் நீங்கவேண்டி, தேவலோகத்தில் இருந்து வெண்ணாவல் மரக்கிளையைக் கொண்டு வந்து, மித்திர முனிவரின் ஆசியுடன் திருப்புடை மருதூரில் நட்டுவைத்து, அதன் அடியில் சிவ பெருமானைக் குறித்து தவம் இயற்றினாள். இந்திரனும் இந்திராணியுடன் சேர்ந்து இறை வனைப் பிரார்த்தித்தான்.

இருவரின் தவம் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தைப்பூச நட்சத்திரத்தில் குருஹோரையில் இறைவியுடன் அவர்களுக்குக் காட்சி தந்து வாழ்த் தினார். அவர்களின் பிரார்த்தனையின்படி திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில் நீராடி, அங்கு அருள்புரியும் நாறும்பூநாதரையும், கோமதி அம்பிகையையும் வழிபடுபவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும் என்று வரம் அளித்தார் சிவபெருமான்.

திருப்புடைமருதூர் இறைவனை தரிசித்த மனநிறைவுடன் நாம் அடுத்துச் செல்ல இருப்பது பாபநாசம் திருத்தலத்துக்கு.

அங்கே நாம் கண்ட காட்சி..?!

நதி தவழும்...

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism