Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சந்திர தரிசனம் அருளிய சந்திர ஜடாதரி!எஸ்.கண்ணன்கோபாலன்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சந்திர தரிசனம் அருளிய சந்திர ஜடாதரி!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

பெண்களை தெய்வமாக வணங்கும் சமயம், தொன்மையான நம்முடைய இந்துச் சமயம். அதனால்தான் பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கும் சக்தியை ஆதிபராசக்தி என்று நாம் போற்றுகிறோம். அனைத்துக்கும் ஆதாரமாய், ஆதரவாய் இருந்து அருளாட்சி புரியும்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அவளுக்குத்தான் எத்தனை திருநாமங்கள்! எத்தனை திருத்தலங்கள்! அத்தனை தலங்களிலும் தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது ஒரு திருத்தலம். ஆம். அந்தத் திருத்தலத்தில்தான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்தே அம்பிகை வடிவம் கொண்டாள். தன்னையே சரணடைந்து வணங்கி சதாசர்வகாலமும் தன் திருமுக தரிசனம் ஒன்றே வாழ்க்கையின் பயனாகக் கருதிய ஒரு பக்தருக்காக, அமாவாசை அன்று முழு நிலவு தரிசனம் அருளிய அதிசயம் நிகழ்த்தியதும் அந்தத் திருத்தலத்தில்தான். அந்த அதிசயத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நடைபெறும் வைபவத்தையே இப்போது நாம் தரிசிக்க இருக்கிறோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரம்யமான வடிவழகுக்கு உரியவளான அன்னை அபிராமி அருளாட்சி புரிவதும், தருமபுர ஆதீனத்துக்கு உரியதுமான திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில், ஜனவரி மாதம் 20ம் தேதி  இரவு நடைபெற்ற அந்த வைபவத்தை தரிசிக்க, நாம் 19ம் தேதியன்றே அங்கு சென்றுவிட்டோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நாம் சென்ற நேரத்தில், அருள்மிகு அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அபிஷேகம் நிறைவு பெற்று அலங்காரத் துக்காகத் திரை தொங்கவிடப்பட்டது, பிராகாரத்தில் ஆங்கங்கே மங்கல இசையுடன் வேத மந்திரங்களும் ஒலித்துக்கொண்டிருந்தன.சஷ்டி யப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற

வைபவங்கள்தான் அங்கே நடை பெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிந்து கொண்டோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஐயன் கருவறையின் தெற்குப் பிராகாரத்தில், கள்ளவாரண விநாயகர் என்ற திருப்பெயருடன் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் கணபதி. அவருக்குக் கள்ளவாரண விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியிலும் சரி, மஹாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து அன்னை அபிராமி தோன்றியதிலும் சரி... ஒரு சுவையான புராணச் சம்பவம் உள்ளது. அது பற்றிப் பிறகு தெரிந்துகொள்வோம்.

திரும்பவும் நாம் ஐயனின் சந்நிதியை அடையவும், ஈசனுக்கு தீபாராதனை தொடங்கவும் சரியாக இருந்தது. ஐயனை மனம் குளிர தரிசித்தபின், அன்றைய வைபவத்தின் நாயகியான

அன்னை அபிராமியின் ஆலயத்துக்குச் செல்கிறோம். நாம் சென்ற போது, அபிஷேகம் முடிந்து அலங்காரத்துக்காக திரை போடப் பட்டிருக்கவே, ஆலயத்தின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள நினைத்து, அலுவலகத்துக்குச் சென்று, அங்கிருந்த வயதான அர்ச்சகர் முனைவர் விஸ்வ நாத குருக்களிடம் விவரம் கேட்டோம்.

''முன்னொரு காலத்தில் அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்ததும், பிறகு அமிர்தம் வெளி வந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த அமிர்தத்தை தேவர்கள் பருக, ஒரு புனித மான இடம் வேண்டுமே! அப்போது சிவ பெருமானால் புனிதமான இடமாக அடையாளம் காட்டப்பட்ட திருத்தலம்தான் திருக்கடவூர் என்னும் திருக்கடையூர் திருத்தலம்.

இந்தத் தலத்துக்கு வந்த தேவர்கள், அமிர்த கலசத்தை ஓர் இடத்தில் வைத்துவிட்டு, சிவ

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பெருமானை தியானித்தபடி புனித நீராடச் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, தேவர்கள் வைத்த அமிர்த கலசம் போலவே எண்ணற்ற வில்வ கலசங்கள்தான் அங்கே காணப்பட்டன. அமிர்த கலசம் அங்கே இல்லை. பாற்கடலில் தோன்றிய அமிர்த கலசத்தை எடுப்பதற்கு முன்பாக தேவர்கள் விநாயகரை வழிபட மறந்ததால், விநாயகர்தான் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டாராம். அதனால்தான் இங்கு விநாயகருக்கு கள்ளவாரண விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனாலேயே இங்குள்ள விநாயகர், தும்பிக்கையில் அமிர்த கலசத்துடன் இருக்கிறார்'' என்றவர், தொடர்ந்து ''தேவர்கள் விநாயகரை வழிபட்ட பிறகு, அமிர்த கலசத்தைப் பெற்றனர். விநாயகரின் அருளால் தேவர்கள் திரும்பப் பெற்ற அமிர்த கலசத்தில் இருந்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன், மஹாவிஷ்ணு அமிர்தகடேசரை பூஜை செய்ய நினைத்தார். சிவபெருமானை பூஜிக்க வேண்டுமானால் அம்பிகையும் உடன் இருக்க வேண்டுமே! மஹா விஷ்ணு தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி வைத்துத் தியானிக்கத் தொடங்க, அந்த ஆபரணங்களில் இருந்து தோன்றியவள்தான் அன்னை அபிராமி. மஹாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றியதால், அம்பிகைக்கு அண்ணனான மஹாவிஷ்ணு அம்பிகை அபிராமிக்கு அன்னையுமான திருத்தலம் இது!'' என்று, அபிராமி தோன்றிய வரலாறு பற்றிக் கூறினார். அதேநேரம், அன்னை யின் ஆலயமணி ஒலிக்கவே, நாம் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அன்னையின் சந்நிதிக்குச் சென்றோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அடுக்கு தீப ஆராதனையில் அன்னை அபிராமி அழகே வடிவாக அருட்காட்சி தந்தாள். அண்ணனின் அழகழகான ஆபரணங்களில் இருந்து தோன்றியவள் அல்லவா அன்னை?!அவளுடைய அழகுக்குக் கேட்கவா வேண்டும்! ஆராதனை ஒளியில் அபிராமியின் எழிலார்ந்த அருள்வடிவை தரிசித்தபோதுதான், அபிராமி பட்டர் அன்னையிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்ததில் வியப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது தெரியவந்தது. அந்த அளவுக்கு அவளின் எழிலார்ந்த அருட்கோலம் நம்மையும் அவள் திருவடிக்கே வசப்படுத்திவிட்டது.

அன்னை அபிராமி சந்நிதியின் அர்ச்சகரான ஷண்முகசுந்தர குருக்களிடம், அபிராமியின் அருள்திறம் குறித்துக் கேட்டோம்.

''கேட்டதையும் கேட்காததையும் தேவை அறிந்து நமக்கு அளித்து அருள்பவள் அன்னை அபிராமி. ஒருமுறை, நானும் இன்னும் சிலரும் பெருமாளை தரிசிப்பதற்காக ஒரு வியாழக் கிழமையன்று திருப்பதிக்குச் சென்றிருந்தோம். அன்று விடுமுறை தினமாக இருந்ததால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பெருமாளை தரிசிப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்பதே தெரியாத நிலை. எனக்கோ, மறுநாள் காலையில் என் அன்னைக்கு பூஜை செய்யவேண்டுமே என்கிற அவசரம்!

இப்படி நான் தவித்துக்கொண்டிருந்தபோது, அர்ச்சகர் தோற்றத்தில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து, 'நீங்கள் எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். எதற்குக் கேட்கிறார் என்று தெரியாவிட்டாலும், 'பத்து பேர் வந்திருக்கிறோம்’ என்றேன். 'என்னுடன் வாருங்கள்’ என்று சொன்னவர், முக்கியஸ்தர்கள் செல்லும் வழியில் எங்களை பெருமாளின் சந்நிதிக்கே அழைத்துச் சென்று, சுமார் பத்து நிமிஷ நேரத்துக்குப் பெருமாளை திவ்வியமாகத் தரிசனம் செய்ய வைத்தார். வாரத்தில், வியாழனன்று மட்டும் தான் பெருமாளின் நேத்ர தரிசனம் கிடைக்கும். அதாவது, வியாழக்கிழமைகளில் பெருமாள் எந்த அலங்காரமும் இல்லாமல், திருமுகத்தில் சிறிய நாமத்துடன் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். அந்தக் கோலத்தில், பெருமாளின் திருக்கண்களை நம்மால் தரிசிக்க முடியும். அதுவே நேத்ர தரிசனம் எனப்படுகிறது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பின்னர், அந்த அர்ச்சகர் எங்களை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெருமாளுக்கு அணிவிக்கப் படும் ஆபரணங்கள் வைக்கப் பட்டிருந்தன. பிறகு, அந்த அர்ச்சகர் ஒரு பட்டு வஸ்திரத்தை எடுத்து, என் முகத்தில் ஒற்றி எடுத்தார்.பெருமாளின் முகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரத்தை ஒற்றி எடுத்த வஸ்திரம் அது என்று சொன்னார் அவர். அதைக் கேட்டதும், எனக்கு உள்ளபடியே மெய்சிலிர்த்துப் போனது.

முன்பின் தெரியாத என்னை அழைத்து அவர் இவ்வளவும் செய்ய என்ன காரணம் என்ற யோசனை எனக்குள் ஓடியது. என் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவர்போல, 'ஏனோ தெரியவில்லை, உங்களை அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏன் அப்படித் தோன்றியது என்று எனக்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை’ என்றார். நான் என்னைப் பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, 'நான் தினமும் பூஜிக்கும் அந்த அபிராமி அன்னைதான் தன் அண்ணனாம் பெருமாளை நான் தரிசிக்க வேண்டி உங்களுக்குள் அப்படி ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும்’ என்றேன். இதுபோல் பல அதிசயங்களை அன்னை அபிராமி பல பக்தர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறாள்'' என்று நெகிழ்ச்சியும் பரவசமுமாகக் கூறினார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

இதற்குள் பிற்பகல் ஆகிவிட்டது. இனி மாலை 5 மணிக்குதான் 1008 பால்குட ஊர்வலமும், அன்னை அபிராமிக்குப் பாலபிஷேகமும் நடைபெறும் என்பதை அறிந்து, கோயிலில் இருந்து புறப்பட்டோம். சரியாக 5 மணிக்குப் பால்குட ஊர்வலம் தொடங்கியது. 6 மணிக்கு அன்னை அபிராமிக்குப் பாலபிஷேகம் ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு, அபிராமிக்குச் சிறப்பான முறையில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும் என்றும், இரவு 8 மணிக்கு தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் கோயிலுக்கு வருகை தருவார் என்றும், அவர் வந்ததும், அபிராமி பட்டருக்கு சந்திர தரிசனம் அருளிய வைபவம் நடைபெற உள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து தெரிந்துகொண்டோம். அப்போது அங்கே கயிலை முத்துக் குருக்கள் என்பவர் வர, அவரிடம் இரவு நடைபெற இருக்கும் வைபவம் பற்றிய மேலதிக விவரங்களைக் கேட்டோம்.

''இந்த வைபவம், அபிராமி பட்டருக்கு அம்பிகை சந்திர தரிசனம் அருளிய சம்பவத்தை நினைவுபடுத்துவதுபோல் நடைபெறும் வைபவம் ஆகும். அபிராமி பட்டரின் இயற்பெயர் சுப்ரமண்ய பட்டர் என்பதாகும். அவர் நேரங்காலம் பார்க்காமல் எப்போதும் அம்பிகையின் தியானத்திலேயே திளைத்திருப்பவர். பெண்கள் அனைவரையும் அன்னை அபிராமியாகவே பாவித்து, மதிப்பவர். அவரைப் பிடிக்காத சிலர், எப்படியாவது அவரை கோயிலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைத்தனர்.

ஒரு தை அமாவாசை அன்று கோயிலுக்கு வந்தார் மன்னர் சரபோஜி. அவரிடம், சுப்ரமண்ய பட்டர்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பித்துப் பிடித்தவர் என்றும், அவரை கோயிலுக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். மன்னர் அவர்கள் சொல்வது சரியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, சுப்ரமண்ய பட்டரிடம், 'இன்று என்ன திதி?’ என்று கேட்டார். அப்போது அபிராமியின் சந்நிதியில், திதிநித்யா தேவி உபாசனையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய பட்டருக்கு அம்பிகையின் திருமுகம் முழுநிலவாகக் காட்சி தந்துகொண்டிருக்கவே, அதிலேயே லயித்துப்போனவராக, 'இன்று பெளர்ணமி திதி’ என்று சொல்லிவிட்டார். ஆக, அவர் பித்துப் பிடித்தவர்தான் என்ற முடிவுக்கு வந்த மன்னர், தியானம் முடிந்து சுயநினைவுக்கு மீண்ட பட்டரிடம், அவர் சொன்னது போல் அன்றைக்கு முழுநிலவு வராவிட்டால், அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைக் கேட்டு வருந்திய பட்டர், தம்மை அப்படி சொல்லச் செய்தது அபிராமிதானே, அவளே அதற்கு ஒரு முடிவைத் தரட்டும் என்று நினைத்தவராக, ஓர் இடத்தில் அக்னி வளர்த்து, அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடத் தொடங்கினார். 79வது பாடலான, 'விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடலைப் பாடி முடிக்கவும், அபிராமி அன்னை தன் தாடங்கத்தை எடுத்து வானில் வீச, அது முழு நிலவாய்ப் பிரகாசித்தது. அமாவாசை அன்று முழு நிலவு வெளிப்பட்ட அதிசயத்தைக் கண்ட மன்னர் சரபோஜி, சுப்ரமண்ய பட்டரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு ’அபிராமிபட்டர்’ என்ற பெயரையும் சூட்டி, நிறைய வெகுமதிகளும் வழங்கினார். அதையொட்டியே தை அமாவாசை அன்று அந்த வைபவம் இங்கே நடைபெறுகின்றது'' என்று விரிவாகச் சொல்லி முடித்தார் முத்துக் குருக்கள். அந்த நேரத்தில் கோயில் வாசலில் பரபரப்பாக இருக்கவே, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கோயில் வாசலுக்கு விரைந்தோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அங்கே, தருமபுர ஆதீன குருமகா சந்நிதானம் வருகை தந்திருந்தார். உரிய மரியாதைகளுடன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட குருமகா சந்நிதானம், அமிர்தகடேசரை வணங்கிவிட்டு, அம்பிகையின் சந்நிதிக்கு வந்தார். சுவாமிகள் வந்து அபிராமி அன்னையை வழிபட்டதும், அதுவரை நாம் தரிசிக்கக் காத்திருந்த வைபவம் தொடங்கியது. கோயில் அர்ச்சகர்கள் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடத் தொடங்கினர். ஒவ்வொரு பாடல் முடிந்ததும், அபிராமி அம்பிகைக்கு தீபாராதனை நடைபெற்றது. அங்கே கூடியிருந்த பக்தர்கள் அத்தனை பேரிடமும், எப்போது 79வது பாடல் வரும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் காணப்பட்டது. நமக்கும் அந்த ஆவல் இருக்கவே செய்தது. நேரம் செல்லச் செல்ல, எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போனது.

ஒருவழியாக, 'விழிக்கே அருளுண்டு’ என்று தொடங்கும் 79வது பாடலும் பாடி முடிக்கப்பட, கோயிலில் இருந்த விளக்குகள் எல்லாம் ஒளி குறையும் படிச் செய்யப்பட்டன. அந்த இடமே இருட்டாகிவிட்டது. அப்போது கொடி மரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு திரையில், அம்பிகையின் சந்நிதியில் இருந்து வந்த ஒளிக்கதிர்கள் விழுந்து, முழுநிலவாகக் காட்சி தந்தன. பக்தர்களின் பக்திப் பரவசத்துடன்கூடிய ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. பின்னர், தொடர்ந்து மற்ற பாடல்களும் பாடி முடிந்ததும், அம்பிகை அபிராமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அத்துடன் அந்த வைபவம் நிறைவு பெற்றது.

தன் பக்தருக்காக அமாவாசையன்று சந்திர தரிசனம் அருளிய அபிராமி அம்பிகையின் அருள்திறனை வியந்தபடியே ஆலயத்தைப் விட்டுப் புறப்பட்ட நம் மனதில்...

'சொல்லும் பொருளுமென நடமாடும் துணையுடன் புல்லும் யாமளை பைங்கொடியாம்’ அந்த அபிராமி அம்பிகை, நம்முடைய எண்ணமும், சொல்லும், செயலும் நல்லனவாக இருக்குமாறு செய்ய வேண்டுமே என்ற எண்ணமும், அதை அவள் நிறைவேற்றி அருள்வாள் என்ற நம்பிக்கையும் ஒருசேரத் தோன்ற, அவளை மீண்டும் ஒருமுறை வணங்கித் தொழுது, அந்தத் திருக்கோயிலை விட்டுக் கிளம்புகிறோம்.

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism