Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம்!

இ.லோகேஸ்வரி

Published:Updated:

 லகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் இருப்பவர் சிவபெருமான். இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னும் இருந்தவன்; பின்னும் இருப்பவன்; எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவன்; எல்லாவற்றையும் கடைத்தேற்றும் கடவுளும் அவனே என்று சிவபெருமானின் சிறப்பைப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

இப்படி, யாதுமாகி நிற்கும் ஈஸ்வரனுக்குத்தான் எத்தனை எத்தனை திருநாமங்கள்? அவை அத்தனைக்கும் பொருந்துவது போலவே இருக்கின்றன, அவனது அருளாடல்கள்!

இங்ஙனம் அருள்சுரக்கும் திருப்பெயர் களும், அந்தந்தப் பெயருக்கு ஏற்ற இறைவனின் அருளாடல்களும் நிறைந்த ஆலயங்கள் இந்த அவனியில் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் ஒரு திருத்தலத்தையே இந்த இதழ் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் தரிசிக்கப் போகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கீழப்பந்தல் கிராமத்தில் அருளாட்சி நடத்திவரும் எம்பெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்பது திருநாமம்.

இந்தப் பகுதியில் மழை பொய்த்துப் போகும் காலங்களில் எல்லாம், கருவறையை தண்ணீரால் நிரப்பி, மூலவரை ஜலத்தில் மூழ்கடித்துவிடுவார்களாம். அப்படி தண்ணீர் கொண்டு நிரப்பியதில் இருந்து 48 நாட்களுக்குள் ஊரில் ஏகபோகமாக மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். அப்படி, தண்ணீரால் ஓர் ஊரையே செழிக்கச் செய்யும் எம்பெருமானுக்கு, 'ஜலகண்டேஸ்வரர்’ என்ற திருநாமத்தைவிட வேறு என்ன பெயர்தான் பொருத்தமாக இருக்க முடியும்?!

ஆலயம் தேடுவோம்!

ஆனால், பக்தர்களின் குறை நீக்கி அருளும் எம்பெருமானுக்கு தினப்படி பூஜைகளும், விழாக்களும், விசேஷங்களும் அமர்க்களப்பட வேண்டும்தானே? ஆனால், இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. சாதாரண நித்தியப்படி பூஜைகூட நடக்காமல் இருக்கிறது எம்பெருமானுக்கு!  

ராஜேந்திர சோழன் வடக்கு நோக்கிப் பயணித்த போது, மேல்கொடுங்கலூரில் ஆரம்பித்து பிரம்ம தேசம் வரை ஒரே நேர்க்கோட்டில் 11 கோயில் களைக் கட்டினான். அவற்றில் ஒன்று இந்தத் திருக்கோயில். ஒருகாலத்தில் வருடம் முழுதும் உத்ஸவங்களால் களைகட்டிய கோயிலின் தற்போதைய நிலை நெஞ்சைப் பதற வைக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் பராமரிக்கப்படாமல் போனதால், இருபது அடிக்கும் மேல் பூமிக்குள் புதைந்துவிட்டது. கோயிலின் உள்ளே நுழைவதற்குக்கூட வழி இல்லாமல் காடு போல செடிகள் வளர்ந்தும், கோயிலின் உள்ளே முட்புதர்கள் நிறைந்தும், நமது மனதை பதைபதைக்கச் செய்கின்றன.

அம்பாள் மற்றும் ஸ்வாமி மட்டுமின்றி, விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன்,

ஆலயம் தேடுவோம்!

நந்திகேஸ்வரர் ஆகியோரின் மூர்த்தங்களையும் இங்கே தரிசிக்க முடிகிறது. இவை தவிர, வேறு தெய்வங்களின் சிலைகள் எதுவும் இருந்ததா என்று ஊர் மக்கள் யாருக்கும் தெரியவில்லை. 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். ஆனால், இந்தக் கோயில் கோபுரத்தைத் தரிசிக்க முடியாதபடி, கோயில் விமானங்கள் பழுதடைந்து, புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன.

நம்மையெல்லாம் காத்து ரட்சிக்கும் இறைவ னின் திருக்கோயிலுக்கு இத்தகைய நிலைமையா ஏற்படவேண்டும்? நினைக்கவே நெஞ்சம் பாறையாய் கனக்கிறது!

தற்போது, ஊர்மக்கள் ஒன்றிணைந்து, எம்பெருமானின் திருக்கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக் கிறார்கள். அதற்காக, திருக்கோயில் பெயரில் திருப்பணி அறக்கட்டளை  ஆரம்பித்து, முதற்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

ஆலயம் தேடுவோம்!

திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும் ரங்கராஜன், 'வழிபாடு இல்லாததால், முற்றிலுமாகச் சிதிலமடைந்து இருந்த ஆலயத்தை மீண்டும் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய நினைத்தோம். ஆனால், கோயில் புதுப்பிக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்து இருந்த காரணத்தால், பாலாலயம் செய்துவிட்டு, கோயிலை புதிதாகவே எழுப்புவதென்று முடிவு செய்தோம். முதற்கட்டமாக பூமி பூஜை செய்து, திருப்பணி வேலைகளைக் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் துவக்கினோம். கோயில் கருவறை, விமானம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் துவாரபாலகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வமூர்த்தங்களின் சிலைகளையும் புதிதாகச் செய்து வைக்கவேண்டும். இதற்கெல்லாம் பக்தர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை' என்று கூறினார்.

கீழப்பந்தல் கிராமத்தின் மேற்கு திசையில் பெருமாள் கோயில் ஒன்றும் இருக்கிறது. ஹரியும் சிவனும் அருகருகே கோயில் கொண்டு காட்சி தருவது இவ்வூரின் மற்றொரு சிறப்பு. இந்த ஊரில் கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக ஸ்ரீராமநவமி கொண்டாடப்பட்டு வருகிறது.

வயது முதிர்ந்த ராம பக்தர் ஒருவர் காஞ்சி மகா பெரியவாளிடம் சென்று, 'ஸ்வாமி, எனக்கு வயதாகிவிட்டது. இனி என்னால் இந்த ராம விக்கிரகத்துக்குப் பூஜைகள் செய்ய முடியாது. இதை நீங்கள் யாரிடமாவது கொடுங்கள்’ என்று வேண்டினார். பரமாச்சார்யரும் தமது அணுக்கத் தொண்டர்களை அனுப்பி, வட ஆற்காடு பகுதியில் எங்கெல்லாம் ஸ்ரீராமநவமி கொண்டாடுகிறார்கள் என்று விசாரித்து வரச் சொன்னார். அதன்படி விசாரித்தபோது, வாழப்பந்தல் மற்றும் கீழப்பந்தல் கிராமங்களில் ஸ்ரீராமநவமி கொண்டாடுவதாகத் தெரிய வந்தது.

ஆலயம் தேடுவோம்!

பெரியவா உடனே அந்த ராமர் விக்கிரகத்தை கீழப்பந்தல் கிராமத்தினரிடம் ஒப்படைக்குமாறு ராம பக்தரிடம் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். அடுத்து, கீழப்பந்தல் கிராமத்தினரை அழைத்த மகா பெரியவா, 'உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிலைகளை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். அதில் ஆஞ்சநேயரின் விக்கிரகம் மட்டும் பின்னமடைந்துள்ளது. அதை மட்டும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, புதிதாக மாற்றிவிட்டு வழிபடுங்கள்’ என்று கூறி, ஆசி வழங்கினார். அதன்படியே, ராமனுக்குக் கோயில் எழுப்பி, வழிபட்டு வருகின்றனர் கிராமத்தினர். தொடர்ந்து ராமநவமி உத்ஸவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, ருத்ராம்சமான ஆஞ்சநேயருக்குக் கிழக்கு நோக்கி ஒரு புதிய கோயிலும் கட்டியிருக்கிறார்கள்.

அதேபோல், சிதிலம் அடைந்திருக்கும் எம்பெருமானின் திருக்கோயிலையும் எப்படியும் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டு, முழுமூச்சாக கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஊர்மக்கள்.

கீழப்பந்தல் கிராம மக்களின் கோயில் கட்டும் இந்தப் புனிதத் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். அது அந்த ஈசனுக்கான காணிக்கையாக அமைந்து, நம்மை யும் நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி...

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

எங்கே இருக்கிறது?

ஆலயம் தேடுவோம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில்  இருந்து முக்கூர் வழியாக ஆரணி செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ தொலைவில்  அமைந்திருக்கிறது கீழப்பந்தல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism