Published:Updated:

திருமால் திருப்பணி...

மாலவனுக்காக மாணிக்க மாலை!இ.கார்த்திகேயன்

திருமால் திருப்பணி...

மாலவனுக்காக மாணிக்க மாலை!இ.கார்த்திகேயன்

Published:Updated:

''கடைல ஒரு மாலை வாங்கி, அதை ஸ்வாமிக்கு சாத்தறதுக்குக் கொடுப்போம். அப்படிச் சாத்தும்போது, 'அட, நேர்த்தியா, சரியான அளவுல, அழகான மாலையைத்தான் வாங்கியிருக்கோம். பகவானுக்கு எவ்ளோ பாந்தமா இருக்கு!’ன்னு சந்தோஷப்படுவோம், இல்லியா? அப்படியொரு மாலையை நாமே நம்ம கையால தொடுத்து, அது கடவுளுக்கு அணிவிக்கப்படுதுன்னா, அது இன்னும் எத்தனை பெரிய சந்தோஷம்! எத்தனை பாக்கியம் நமக்கு! பெருமாளுக்கு இப்படியொரு கைங்கர்யத்தை பரம்பரை பரம்பரையா செஞ்சிட்டிருக்கோம் நாங்க!'  நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லிச் சிலிர்க்கிறார் முத்தும்பெருமாள். 

உலகப் பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாப ஸ்வாமி திருத்தலம், 108 திவ்விய தேசங்களில் குறிப்பிடத்தக்கது. இங்கு அருளோச்சும் பெருமாளுக்கு குறிப்பிட்ட திருவிழாக்களில் மாலை கட்டிக்கொடுக்கிற கைங்கர்யத்தைச் செய்து வருகிறார் இவர். பரம்பரை பரம்பரையாகச் செய்து வரும் இந்தக் கைங்கர்யம், மூன்றாவது தலைமுறை யிலும் தொடர்கிறது.

குமரி மாவட்டம் தோவாளை யில் வசித்து வரும் முத்தும் பெருமாள் இது குறித்துப் பேசி னாலே, சிலிர்ப்பும் வியப்புமாகத் தான் பேசுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமால் திருப்பணி...

''பெருமாளுக்கு அணிவிக்கக் கூடிய மாணிக்கமாலையை எப்படிக் கட்டுறதுன்னு என் பாட்டி சண்முகத்தம்மாள்தான் என் அப்பா மாடசாமிக்குக் கத்துக்கொடுத்தாங்க. அப்பா, ஜனாதிபதி கையால் விருது வாங்கியிருக்கார்.

திருமால் திருப்பணி...

பாட்டி காலத்துல, தோவாளைல தயாராகும் மாலை, பத்மநாபபுரம் அரண்மனைக்குப் போயிடும். பிறகு அங்கேருந்து கோயிலுக்கு எடுத்துட்டுப் போவாங்க. இப்படியொரு கைங்கர்யம் பண்ற தைப் பாராட்டுறவிதமாவும், ஊக்கப்படுத்தற விதமாவும் பத்மநாபபுரம் ராஜா, பூக்கட்டுற வங்களுக்கு நிறைய உதவி பண்ணியிருக்கார். இப்ப மாதிரி வாகன வசதியெல்லாம் அப்ப கிடையாது. தோவாளைல மாலை கட்டி, ஒரு ஓலைப்பெட்டில பத்திரமா வைச்சு, நாகர்கோவில் வரைக்கும் தலைச்சுமையா ஒருத்தர் எடுத்துட்டுப் போவார். அப்புறம் தக்கலை வரைக்கும் இன்னொருத் தர்; அதையடுத்து, பத்மநாபபுரம் அரண்மனை வரைக்கும் வேறஒருத்தர்னு எடுத்துட்டுப் போவாங் களாம்.

ஒருநாள், என் பாட்டி கட்டின மாலையைப் பார்த்து, 'இதை யார் செஞ்சது?’ன்னு விசாரிச்சார் மன்னர். 'அவங்களைக் கையோடு கூட்டிட்டு வாங்க’னு உத்தரவு போட்டார். பாட்டி பயந்து நடுங்கி,

அவர் எதிர்ல போய் நின்னாங்க. அவங்ககிட்டே, 'இந்த மாலையை எப்படிக் கட்டினீங்க? மாணிக்கத்தைப் பதிச்ச மாதிரி அவ்வளவு அழகாவும் நேர்த்தியாவும் இருக்கு’னு ஆர்வமும் வியப்புமா விசாரிச்சிருக் கார் மன்னர்.  பாட்டி, பூத்தொடுத்து மாலை கட்டுற விதத்தை விளக்கினப்ப ஆச்சரியம் பொங்கப்பாராட்டினாராம் மன்னர்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் முத்தும்பெருமாள்.

திருமால் திருப்பணி...

தொடர்ந்து, ''இன்னிலேருந்து கோயில்ல நடக்கிற முக்கியமான திருவிழாக்களின்போதெல்லாம், இதேபோல மாலை கட்டி எடுத்துட்டு வந்து கோயிலுக்குக் கொடுக்கணும். நீ மட்டுமில்லாம, உனது அடுத்தடுத்த தலைமுறைன்னு இதைப் பரம்பரை பரம்பரையா செய்யுங்க. உங்க வம்சமே தழைச்சிருக்க, பெருமாள் அருள்புரிவார்’னு மன்னர் பரம்பரையினர் சொல்ல, அன்னிலேருந்து நாங்க இதை எங்க பாக்கியமா நினைச்சு செய்திட்டிருக்கோம்'' என்கிறார்.

தை, மாசி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பத்மநாப ஸ்வாமி கோயிலில் திருவிழாக்கள்

திருமால் திருப்பணி...

நடைபெறும், அப்போது 5, 8, 9 மற்றும் 10ம் நாள் விழாவில், தோவாளையில் இருந்து கொண்டு வரப்படும் மாணிக்க மாலை தவறாமல் பெருமாளுக்குச் சாத்தப்படுகிறது. கோயிலில் கொடியேற்று விழாவுக்கு ஒரு வாரம் முன்பாகவே தகவல் சொல்லிவிடுவார்களாம்.  

''பாட்டிக்குப் பிறகு அப்பா, அவருக்குப் பிறகு சித்தப்பா, சித்தப்பாவுக்குப் பிறகு நான்னு தொடர்ந்து இதைச் செய்துட்டு வரோம். எனக்கு மூணு பொண்ணுங்க. மூணு பேருக்கும் கல்யாணமாயிடுச்சு.அவங்களுக்கும் மாணிக்க மாலை எப்படிப் பின்றதுன்னு சொல்லிக் கொடுத்திருக்கேன். பேரன் பேத்திகளுக்கும் கூட இதைக் கத்துக் கொடுத்திட்டேன். அதனால, எனக்குப் பிறகும் வம்சாவளியா மாணிக்கமாலை செய்ய ஆள் இருக்கு. அந்த மாலை பெருமாளுக்குப் போய்ச் சேரும் கறதே பெரிய நிம்மதி, சந்தோஷம் எனக்கு!'' என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கச் சொல்கிறார் முத்தும் பெருமாள்.

திருமால் திருப்பணி...

அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த முத்தும்பெருமாளின் மனைவி தமிழரசி, ''நவ ரத்தினங் களில் மாணிக்கம் பதித்தால், அது தனிப் பொலிவோடு காட்சியளிக் கும். மாணிக்கக் கல் எடுப்பாகத் தெரியும். அது மாதிரி, பூமாலையில் நொச்சி இலை, சிவப்பு மற்றும் வெள்ளை அரளின்னு கலந்து கட்டித் தொடுத்துப் பாத்தா, மாணிக்கக் கல்லைப் பதிச்சதுபோல அம்சமா இருக்கும். பொதுவா, மூணு நார் வைச்சு, ஒரு சுற்று நார் மூலமா பூவை வைச்சு, சுத்திச் சுத்திக் கட்டுறதுதான் வழக்கம். ஆனா, மாணிக்க மாலைங்கறது பின்னல் முறை. நாலு நார் வைச்சுப் பின்ன ணும். நாலு நாரையும் முடிச்சுப் போட்டு இணைச்சு, ரெண்டு ரெண்டா சேர்த்து, நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல், பெருவிரல்னு படபடன்னு மாத்தி மாத்தி இயக்கித் தொடுக்குறதே தனி அழகுதான்! இதை ஒரு வேலையா பாக்காம, கடவுளுக்குச் செய்ற புண்ணியமா, கடமையாத்தான் பாக்கறோம்'' என்று நெக்குருகிச் சொல்கிறார்.

''விழா ஆரம்பிச்சு முடியற அந்தப் பத்து நாளும் விரதம் இருந்துதான் பூமாலை கட்டுவோம். சாமியை வேண்டிக்கிட்டுதான் மாலை கட்டத் தொடங்குவோம். அந்த நேரத்துல, யாரும் யாரோடவும் பேசிக்கக்கூட மாட்டோம். சுப்ரபாதமோ, பெருமாள் பாட்டோ கேட்டுக்கிட்டே மாலை தொடுப்போம்.

திருமால் திருப்பணி...

இப்படி சிரத்தையோடயும் பக்தியோடயும் மாலை கட்டிக் கொடுத்ததாலதான், மண் வீட்டுல இருந்த எங்களை இவ்ளோ பெரிய வீட்டுல அமர்த்தி வைச்சிருக்கார் பெருமாள்!'' என்று நெகிழ்ந்து சொல்லும் தமிழரசி, பூத்தொடுத்து மாலையாக்குவதில் மாநில விருது வாங்கியிருக்கிறார்.

இவர்களின் மகள் வனிதாஸ்ரீ, கல்லூரியில் பி.டெக் படிக்கும் போது, திருவிழாக் காலத்தில் லீவு போட்டுவிட்டு, மாலை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

திருமால் திருப்பணி...

'பத்மநாப சுவாமிக்கு நாங்க மாணிக்க மாலை அனுப்புறதைக் கேள்விப்பட்ட ஒருத்தர், 'நான் திருப்பதியில் ஹோட்டல் வச்சிருக் கேன். திருப்பதி பிரம்மோற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானுக்கு மாணிக்க மாலை கட்டித்தரணும்’னு கேட்டுக்கிட்டார். அதன்பேரில் திருப்பதிக்கும் நாலு வருஷமா கட்டிக் கொடுத்துட்டிருக்கேன்.

தவிர, நாகர்கோவில் நாகராஜா கோயில், குமாரகோவில், சுசீந்திரம் தாணுமாலயன் ஸ்வாமி கோயில், நெல்லையப்பர் கோயில்னு எல்லா ஸ்வாமிகளுக்கும் மாணிக்க மாலை பின்னிக்கொடுக்கிறோம். இந்த வேலையும் வாழ்க்கையும் பெருமாள் போட்ட பிச்சை!''  கண்கள் கசியச் சொல்கிறார் முத்தும்பெருமாள்.

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism