Published:Updated:

துங்கா நதி தீரத்தில்

பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

துங்கா நதி தீரத்தில்

பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

Published:Updated:

காலடி திருத்தலத்தில் ஸ்ரீஆதிசங்கரருக்கும் ஸ்ரீசாரதாம்பிகைக்கும் ஆலயம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்த மனநிறைவுடன் திரும்பிய ஸ்வாமிகளின் மனதில், தமக்கு முன் ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த ஆசார்ய ஸ்வாமிகளைப் பற்றிய எண்ணம் தோன்றிப் பரவசப்படுத்தியது. 

ஆதிசங்கரர் தொடங்கி தம்முடைய குருநாதரான ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் வரை ஒவ்வொரு ஆசார்யராக அவருடைய மனத்திரையில் தோன்றிய அந்த மகான்களில் சிலர்...

ஆதிசங்கரருக்கு அடுத்து ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்தவர் ஸ்ரீசுரேஸ்வராசார்யார் ஆவார். பூர்வாச்ரமத்தில் மண்டனமிஸ்ரர் என்ற பெயருடன் திகழ்ந்தவரை ஸ்ரீசங்கரர்வாதத்தில் வெற்றி கொண்டதும், சங்கரரின் சீடராகி, அவரிடமே சந்நியாசம் பெற்றுக்கொண்டு, சுமார் 14 ஆண்டுகள் ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதியாகத் திகழ்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவருக்குப் பின் வந்த பல மகான்களைத் தொடர்ந்து ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதி யாகத் திகழ்ந்தவர் ஸ்ரீவித்யாரண்யர் ஆவார். இவருடைய காலத்தில்தான் சிருங்கேரி ஆசார்ய ஸ்வாமிகளை 'ராஜ ரிஷிகள்’ என்று போற்றப்படும் மரபு ஏற்பட்டது. அதன் பின்னணியாக அமைந்திருந்தது விஜயநகர சாம்ராஜ்யத்தின் தோற்றம். அந்த வரலாறு...

கி.பி.12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அந்நிய தேசத்தவர்கள் வட இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டதுடன், இந்து ஆலயங்களையும் இடித்து அட்டகாசம் செய்து வந்தார்கள். இந்து மன்னர்களிடையிலும் ஒற்றுமை நிலவாத காலம் அது. நாளடைவில் இந்த நிலைமை தென்னிந்தியாவுக்கும் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற ஒரு போரில், சங்கம வம்சத்து மன்னர்களான ஹரிஹரபுக்க சகோதரர்கள் தோல்வி அடைந்தனர். தென்பாரதத்தில் எந்த ஓர் இந்து ராஜ்யமும் இல்லாத அந்தச் சூழ்நிலையில்,ஹரிஹரபுக்க சகோதரர்கள் ஒரு கனவினால் தூண்டப்பட்டு, மதங்க மலையில் தவத்தில் ஈடுபட்டிருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதியான ஸ்ரீவித்யாரண்யரைச் சென்று தரிசித்தார்கள். அவருடைய அருளாசிகளின் பயனாக, இரண்டாவது போரில் ஹரிஹர புக்கர் வெற்றி பெற்றனர். ஸ்ரீவித்யாரண்யர் தம்முடைய குருநாதரான ஸ்ரீவித்யாதீர்த்தரின் அனுக்கிரஹத்துடன் ஹரிஹரபுக்க சகோதரர்களைத் தூண்டி, ஒரு புதிய இந்து சாம்ராஜ்யத்தை தோற்றுவிக்கச் செய்தார். ஹரிஹர ராயனுக்கு ஸ்வாமிகள் தாமே முன்னின்று பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

துங்கா நதி தீரத்தில்

இவருடைய அருளாசிகளின் காரணமாக, தென்பாரதத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஹரிஹரபுக்க சகோதரர்கள் தங்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். பட்டாபிஷேக வைபவத்தின்போது ஸ்வாமிகளை பக்தியுடனும் விநயத்துடனும் பூஜித்து, ஸ்வாமிகளுக்குத் தங்க சிம்மாசனம், பல்லக்கு, குடை, சாமரம், மணி, பட்டுக் கொடி, மகர தோரணங்கள், நவரத்தினங்கள் இழைத்த பாதுகைகள் போன்ற ராஜ சின்னங்களை வழங்கியதுடன், தங்களுடைய ராஜ்யத்தையே ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் அர்ப்பணம் செய்தனர். அன்றுமுதல் சிருங்கேரியின் ஜகத்குருக்கள், 'வித்யா நகர மஹா ராஜதானி’, 'கர்நாடக சிம்மாசன பிரதிஷ்டாபனாசார்ய’, 'மத் ராஜாதி ராஜகுரு’, 'பூமண்டலாசார்ய’ எனப் பல விருதுகளால் போற்றப்படும் உன்னத நிலை உண்டானது.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதியாக 1770 முதல் 1814 வரை அருளாட்சி புரிந்தவர் 3வதுஸ்ரீசச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள். இவருடைய காலத்தில், மைசூரின் அரசராக இருந்த ஹைதர் அலி, ஸ்வாமிகளிடத்தில் தனக்கு இருந்த மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக,ஸ்ரீமடத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும் என்று தனக்குக் கீழ் இருந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

துங்கா நதி தீரத்தில்

ஹைதர் அலியின் காலத்துக்குப் பிறகு, மைசூரின் மன்னராக திப்பு சுல்தான் பொறுப் பேற்றுக்கொண்டார். இவருடைய காலத்தில் நடைபெற்ற போரில், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. நடந்த அட்டூழியம் குறித்துக் கேள்விப்பட்டுப் பதறிய திப்பு, ஸ்வாமிகளுக்கு எழுதிய கடிதத்தில், 'இப்படி ஒரு பரம பவித்ரமான க்ஷேத்திரத்துக்கு அபசாரம் செய்தவர்கள் அதற்குரிய பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்’ என்று குறிப்பிட்டு, தமது வருத்தத்தைத் தெரிவித்தது மட்டுமல்லாமல், ஸ்ரீசாரதா கோயிலையும் ஸ்ரீமடத்தையும் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்வதற்காக தங்க நாணயங்களையும், பல்லக்குகள், யானைகள் போன்றவற்றையும் காணிக்கையாக அனுப்பி இருந்தார்.

திப்புவுக்குப் பிறகு மைசூர் ராஜ்யத்தின் நியாயமான உரிமையாளரான மும்மடி கிருஷ்ணராஜ உடையார் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவர் வயதில் சிறியவராக இருந்த தால், அவருடைய பிரதிநிதியாக திவான் பூர்ணையன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஹைதர் அலியிடமும் திப்புவிடமும் அமைச்சராக இருந்தபோது, அவர்கள் இருவரும் சிருங்கேரி ஆசார்ய ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததுடன், ஏராளமான பொருளுதவியும் செய்ததை அறிந்திருந்தார். அப்போதே அவருக்கு அதில் அவ்வளவாகச் சம்மதம் இல்லாமல்தான் இருந்தது. இப்போது ஆட்சிப் பொறுப்பு தன் கைக்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, ஸ்வாமிகளை எப்படியும் களங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து, தகுந்த நேரத்துக்குக் காத்திருந்தார்.

ஸ்வாமிகள் ஒருமுறை மைசூருக்கு வந்திருந்தபோது, அதுதான்  தக்க தருணம் என்று கருதிய பூர்ணையன், பண்டிதர் சபை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்தச் சபையில், ஆஸ்தான பண்டிதர்களில் பெரியவரான ஒரு பண்டிதரிடம் ஆசார்ய ஸ்வாமிகள் வாதம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார். மிகுந்த சாத்விகியான ஸ்வாமிகள் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், சந்நியாச தர்மப்படி யாருடனும் தாம் நேருக்கு நேர் வாதிடுவது முறையாகாது என்பதால், இருவருக்கும் நடுவில் ஒரு திரை இருக்கவேண்டும் என்று கூறினார்.

துங்கா நதி தீரத்தில்

விவாதம் தொடங்கியது. சில மணி நேரம் சென்றதும், திரைக்குப் பின்னால் இருந்து ஸ்வாமிகளின் குரலுக்குப் பதிலாக ஒரு பெண்ணின் குரல் கேட்பதுபோல் தோன்றியது பூர்ணையனுக்கு. ஆர்வம் தாங்காமல் திரையைச் சற்றே விலக்கிப் பார்த்தார். அங்கே மனித உருவில் ஸ்ரீசாரதா தேவியே அமர்ந்து வாதம் செய்வதையும், அதே வடிவம் மெள்ள மெள்ள ஸ்வாமிகளாக மாறுவதையும் கண்டு மிகவும் வியப்பு அடைந்தார். உடனே திரையை விலக்கிவிட்டு, ஆசார்ய ஸ்வாமிகளின் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து,அறியாமல் தான் செய்த அபசாரத்தை மன்னித்து அருள் புரியவேண்டும் என்று பணிவுடன் மன்றாடி வேண்டிக்கொண்டார். அன்றிலிருந்து அவரும் ஆசார்ய ஸ்வாமிகளுக்குச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வந்தார்.

இப்படியாக, ஸ்ரீசச்சிதானந்த சிவா அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு முன்பாக ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த மகான்களின் அருளாடல்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அடுத்த இதழில் நிறைவுறும்

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism