மானும் கானல் நீரும்!பி.என்.பரசுராமன்
பரந்த மணல் வெளி. ஒரு மான் தாகத்தால் தவித்து, நீரைத் தேடி ஓடியது. தூரத்தில் நீர் இருப்பது போலத் தெரிய, அந்த இடம் நோக்கி விரைந்து ஓடியது மான். ஆனால், அங்கு நீர் இல்லை. பார்த்தால், இன்னும் சற்று தூரத்தில் நீர் இருப்பது போலத் தெரிந்தது. மான் அந்த இடத்தை நோக்கி ஓடியது. ஆனால், அங்கும் நீர் இல்லை. அப்படியென்றால், மான் தண்ணீரைப் பார்த்ததே, அது எப்படி?
அது நீரல்ல; கானல் நீர்! மணல்வெளியின் வெப்ப ஆவி, அவ்வாறு நீர்ப்பரப்பைப் போலப் பொய்த் தோற்றம் காட்டும். அதைப் பார்த்துதான் தண்ணீர் என்று ஏமாந்து, ஓடி ஓடி உருக்குலைந்து போனது மான்.
இந்தக் கானல் நீர்க் கதையில், மான் என்பது நாம். மான் எப்படித் தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள, ஓட்டமாய் ஓடுகிறதோ, அதுபோல நாமும் நமது ஆசையைத் தீர்த்துக் கொள்ளப் பல வழிகளிலும் ஓடுகிறோம். மான் எப்படிக் கானல் நீரை உண்மையான நீர் என்று தவறாக எண்ணி ஏமாந்ததோ, அதுபோல நாமும் எந்த இடத்திலும் நமது ஆசை தணியாமல் மயங்கி, ஏமாந்து போகிறோம்.
இதன் பொருளை மட்டும் ஆத்மார்த்தமாக நாம் உணர்ந்தால் போதும்; கைவல்லிய நவநீத ஆசிரியரின் எண்ணம் நிறைவேறும். நாம் தெய்வமாக ஆகிறோமோ இல்லையோ, மனிதனாக வாழலாம்.
பளபளத்த கானல் நீரைப் பார்த்த மான் அதை நோக்கி ஓடியதைப் போலவே, நாமும் பகட்டாகப் பளபளப்பதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். முதலில், மனதால் ஓடுகிறோம்; பிறகு, உடம்பால் ஓடுகிறோம். நம்மிடமே ஆயிரம் இருந்தாலும், நம் புத்தி அடுத்தவரின் பளபளப்பையே நாடுகிறது; நம் மனம் அதை விரும்புகிறது; உடம்பு அதை அடையத் துடிக்கிறது.
நம்மைக் கவர்ந்து இழுக்கும் அடுத்தவரின் பளபளப்பு பொன், பொருள், பதவி, வீடு, வாகனம், புகழ், பெருமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 'ஹூம்! அதுமட்டும் என்கிட்ட இருந்துதுன்னா, இந்நேரம் நான்
எங்கேயோ போயிருப்பேன்’ எனப் புலம்பவும் செய்திருப் போம். 'அது மட்டும் எனக்குக் கிடைச்சுதுன்னா, மகிழ்ச்சிக் கடல்ல மிதந்திருப்பேன்; வானத்துல பறந்திருப்பேன்’ என்றெல்லாம் நினைப்போம். ஆனால், அது உண்மையாக இருந்தால், இப்போது அந்தப் பொருள் யாரிடம் இருக்கிறதோ, அவர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து, வானத்தில் பறக்க வேண்டுமே! ஆனால், யதார்த்தத்தில் அப்படியா இருக்கிறது? இல்லையே! அவரோ தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு, வேறு ஏதோ ஒரு பளபளப்பை, ஜொலிக்கும் கானல் நீரைத் தேடியல்லவா ஓடிக் கொண்டிருக்கிறார்?!
உலகெங்கும் இதே நிலைதான்! அதனால்தான் தொடக்கத்திலேயே 'கானல் நீர்’ எனக் குறிப்பிடுகிறது கைவல்லிய நவநீதம்.
இந்தக் கானல் நீர் கலக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
குருநாதர் ஒருவர், சீடனுக்குப் பாடம் சொல்வதாகப் பார்த்தோம் அல்லவா? அப்படிப்பட்ட சற்குருவைத் தேடிப் போகவேண்டும்.

''எப்படிக் கானல் நீரை, நீர் எனக் கருதினோமோ, அதே போல...'' என்று தொடங்கிய குருநாதர், ''ஒன்றை மற்றொன்றாகக் கற்பிதத்தால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அனைத்தும் ஒன்றேயான அந்தப் பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்டவையே..!'' என்று விவரிக்கத் தொடங்குகிறார்.
ஒரே பரம்பொருள், பலவிதமான வடிவங்களில் தோன்றுவதை விரிவாகவே சொல்கிறார் அவர்.
மின்விசிறி, மின் அடுப்பு, குளிர்சாதனம், கணினி எனச் சாதனங்கள் பலவாக இருந்தாலும்,

உருவத்திலும் கொடுக்கும் பலன்களிலும் வேறு வேறாக இருந்தாலும், அவை அனைத்துக்கும் அடிப்படை மின்சாரம்.
அதுபோல், ஒரே பரம்பொருள்தான் பலவிதமான வடிவங்களில் தோன்றுகிறது. இதைத் தத்துவார்த்தமாகச் சொல்லும் குருநாதர், மேலே தொடர்கிறார்.
'தத்துவ விளக்கப் படலம்’ எனும் இந்த முதல் பகுதி, பெயருக்கேற்றாற்போல் பெரிய பெரிய தத்துவங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. இருந்தாலும், இயன்றவரை எளிமையாகப் பார்ப்போம். கைவல்லிய நவநீதத்தை ஓரளவுக்கா வது சாமான்ய மக்களிடம் கொண்டு செல்வதே இத்தொடரின் நோக்கம்.
குருநாதரின் அருள் உபதேசம் சிருஷ்டியில் இருந்து தொடர்கிறது.
ஜீவராசிகளுக்கு எல்லாம், போக சாதனம் (அனுபவம்) உண்டாவதற்காக, வெளிப்பட்ட படைப்புகளைச் சொல்கிறார். அவற்றைத் தன்மாத்திரைகள் என்று கூறுவார்கள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்துவிதமான மூலப் பொருட்களும் தன்மாத்திரைகள் எனப்படும். அவற்றில், ஓசையைத் தன்னகத்தே கொண்ட ஆகாயம் உண்டாகும். அந்த ஆகாயத்தில், ஸ்பரிசத்தைத் தன்னகத்தே கொண்ட வாயு உண்டாகும் (இந்த இரண்டுக்கும் உருவம் கிடையாது). அடுத்ததாக வாயுவில், ரூபத்தைத் தன்னகத்தே கொண்ட அக்னி உண்டாகும். அக்னியில், ரசத்தைத் தன்னகத்தே கொண்ட நீர் உண்டாகும். நீரில், கந்தத்தை (வாசனையை) தன்னகத்தே கொண்ட பூமி உண்டாகும்.
ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி இவை பஞ்சபூதங்கள் எனப்படும். இவை எதுவும் நம்மில் யாருக்கும் கட்டுப்படாது.
தொடரும்