தமிழோடு வளர்ந்த ஆலயங்கள்...(சென்ற இதழ் தொடர்ச்சி...)
கணிகண்ணன் என்றொரு புலவர் மன்னனைப் புகழ்ந்து பாட மறுக்கவே, காஞ்சியைவிட்டுச் செல்லும்படி அரசன் அவருக்கு உத்தரவிடுகிறான். அந்தப் புலவர், திருமழிசை ஆழ்வாரின் சீடர். அவரிடம் விடைபெறுகிறார்.
''கணிகண்ணன் போகின்றான். நீயும் உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள்'' என்று உத்தரவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். சீடர், குரு இவர்களுக்குப் பின்னால் பெருமாளும் காஞ்சியை விட்டுப் புறப்படுகிறார். மன்னவன் ஓடி வந்து மன்னிப்புக் கேட்கிறான். ''கணிகண்ணன் போகவில்லை. நீ உன் பைந்நாகப் பாயை விரித்துக்கொள்'' என்று திருமழிசை ஆழ்வார் உத்தரவிட அதையும் கேட்கிறார், சொன்னவண்ணம் கேட்ட பெருமாள்.
திருவரங்கநாதன்மீது காதல்கொண்டு மாலவனை மணந்த ஆண்டாள் என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பாடிக் கொடுத்த திருப்பாவை முழங்காத வீடேது மார்கழியில்!

திருக்கோவிலூரில் ஒரு நாள் இரவு பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் ஆகியோர் ஒரு வீட்டின் இடைகழியில் ஒதுங்குகின்றனர். அந்தச் சிறிய இடத்தில் இன்னொருவர் வந்து விடுகிறார். அவர் வேறு யாருமல்ல; ''இந்த மூவரும் இங்கே வந்த பிறகு எனக்கு வேறு எங்கே வேலை?'' என்று அங்கு வந்து விடுகிறார் திருமால்.
அருணகிரிநாதரை தான் இருக்கின்ற இடமெல்லாம் வரவழைத்துத் தமிழிலே தன்னைப் பாட வைத்தான் முருகன்.
சென்னை கந்தகோட்டத்து முருகன்மீது ராமலிங்க அடிகள் பாடிய பாமாலையில் ஒன்றுதான், 'ஒருமையுடன் நினது திருமலரடி’ என்ற பாட்டு.
திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரையை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பட்டராக இருந்தார். காஞ்சிபுரம் குமரக் கோட்டத்தில் சிவாச்சாரியாராக இருந்த கச்சியப்பர்தான் கந்தபுராணம் என்ற பெருங்காப்பியத்தைப் பாடி அருளினார்.
ஒருபுறம் அறிவின் கூர்மைக்கு எடுத்துக் காட்டாக இருந்து, மறுபுறம் பக்தியையும் வளர்த்த கோயில்கள், இன்னொரு புறம் முத்தமிழையும் வளர்த்தன. ஓவியம், சிற்பம், காவியம், நாடகம் முதலிய பல்வேறு கலைகளும், கோயில்களால் ஆதரிக்கப் பெற்று வளர்ந்தன.

மாமண்டூர் குகைக் கோயிலின் வெளி மண்டபத் தூண்களிலும், தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை வெளிச் சுற்றுப்புறச் சுவர்களிலும் காணப்படும் பழைமை ஓவியங்கள் கண்டுகளிக்கத் தக்கவை. கஞ்சக்கருவி, நரம்புக்கருவி போன்ற பலவகையான இசைக் கருவிகள் கோயில்களில் இருந்தன. குடுமியான் மலை சிகாநாதர் கோயிலில் உள்ள மகேந்திரன் கல்வெட்டு, இசைக் கலையின் உண்மைகளை அறியத் துணை புரிகிறது. மதுரைக் கோயிலின் நடராஜர் சந்நிதியில் உள்ள தூண் ஒன்றில் முப்பத்தைந்து வகையான தாளங்கள் குறிக்கப் பெற்றுள்ளன.
தஞ்சைப் பெரியகோயிலில் தேவாரத் திருமுறைகளைப் பாடிய, இசைத்தமிழில் வல்ல நாற்பத்தெட்டு பேர் நியமிக்கப் பட்டிருந்தனர். தவிர, கொட்டி மத்தளக்காரர், பக்கவாத்தியர், முரலியம், வங்கியம், பாடவியம், உடுக்கை, சங்கு முதலியன வாசிப்போர் பலர் இருந்தனர். உவச்சுப் பறை, சகடை, கரடிகை என்னும் பலவகை வாத்தியங்களும் இருந்தன.
கதை தழுவி வரும் நாட்டிய நாடகம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிருத்தியம், தாளத்தை அடிப்படையாகக் கொண்ட நிருத்தம் இவற்றுடன் தொடர்பு உடைய கவுத்துவம் முதலியன கோயில்களில் வளர்க்கப்பட்டன. திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சை ஆகிய கோயில்களில் சிவன் ஆடும் நடனக் கலையின் நூற்றெட்டு கரண வகைகளும் சிறந்த முறையில் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கின்றன.

கோயில்களில் ஆடரங்கங்களும், நாடகச் சாலைகளும் இருந்தன. இசையிலும் நாடகத்திலும் வல்லவர்களான நாடமாராயன், சாக்கைக் கூத்தன், கானம்பாடி, வாத்திய மாராயன் முதலியோர் இருந்தனர். தஞ்சைப் பெரியகோயிலில் ராஜராஜேஸ்வர நாடகம், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் முதலியன நடிக்கப்பெற்றன. விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், திருவீங்கோய் வாசல் இறைவன் திருமுன்னிலையில் ஒன்பது கூத்துக்களை நடித்ததாக 'ஏழு நாட்டு நங்கை’ என்பவருக்கு நில தானம் அளித்த செய்தி இருக்கிறது.
கோயில்களில் படண மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், சொற்போர் நடக்க தருக்கர் மண்டபம் ஆகியவை இருந்தன. காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபக் கோபுரத்தின் அடியில் உள்ள விகட சக்ர விநாயகர் முன் கந்தபுராணம் அரங்கேறியது என்றும் சொல்வார்கள். பட்டினத்தார் பாடிய திருவொற்றியூர் கோயிலின் மகிழ மரத்தடி அருகே உள்ள மண்டபத்தில், பங்குனி உத்தரத் திருவிழாவின்போது, இறைவனை எழுந்தருளச் செய்து, 'ஆளுடைநம்பி’ என்னும் சுந்தரரின் புராணத்தைப் படிப்பது வழக்கம். ஒருமுறை இந்த நிகழ்ச்சிக்கு வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் அந்தப் புராணத்தைக் கேட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.
இன்றுகூட ஊரில் புயல் அடித்தால், பாதுகாப்புக்காகக் கோயிலுக்கு ஓடுவதைப் பார்க்கிறோம். பழங்காலத்திலும் அப்படித்தான். கி.பி.1152ல் சோழ நாட்டில் பஞ்சம் வந்தபோது குடிமக்கள் கோயில் மூலமாக 1022 கழஞ்சு நிறையுள்ள பொன்நகைகளும், 464 பலம் நிறையுள்ள வெள்ளி நகைகளும் கடனாகப் பெற்றதாக ஆலங்குடி கல்வெட்டுக்கள் சொல்கின்றன. பாங்குகளைப் போலவும் கோயில்கள் இருந்தன. திருப்புத்தூர் கோயில் கல்வெட்டு, தயா பஞ்சகம் என்ற மண்டபத்தில் கோயில் நிர்வாகிகள் கொடுக்கல் வாங்கல் செய்த செய்தியைச் சொல்கிறது.

பல கலை நூல்களை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பதிய வைக்கும் வேலையைக் கோயில் செய்தது. இவ்வாறு இருந்த இந்த நூல்களைச் 'சரசுவதி பண்டாரம்’ என்று அழைத்தார்கள். கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள், தமிழர்களின் அன்றைய வாழ்வைத் தெளிவாகப் பேசுகின்றன. உத்திரமேரூர் கல்வெட்டு என்றால், பள்ளியில் படிக்கும் பையனுக்கும் தெரியும் அல்லவா? தமிழ்நாட்டில் இருந்த 'குடவோலை’ முறைத் தேர்தல் பற்றிய அந்தக் கல்வெட்டு, உத்திரமேரூர் வைகுந்தப் பெருமான் கோயி லின் மேற்குச் சுவரில் இருக்கிறது.
திருவாமாத்தூர் கோயிலில் காலை, பிற்பகல், மாலை மூன்று நேரங்களிலும் திருப்பதிகம் பாடிவர, கண் தெரியாத பதினாறு பேரும், அவர்களுக்குத் துணையாக இருக்க பதினெட்டுப் பேரும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்து எண்பது கலம் நெல்லும், பதினெட்டு பொற்காசுகளும் தரப்பட்டன.
தமிழர்களின் அறிவு, உள்ளம், கலை, இசை, இலக்கியம், தொழில்துறைப் புகழ் ஆகிய எல்லாவற்றுக்கும் துணையாக நிற்கின்றன, தமிழோடு வளர்ந்த கோயில்கள்! தமிழ் உள்ளவரை உலகமெல்லாம் தமிழனின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு அவை நிமிர்ந்து நிற்கும்.
சுந்தரம்
(தகவல் உதவி: 'திருக்கோயில்’
திரு. ந.ரா.முருகவேள்)
7.1.1968 ஆனந்த விகடன் இதழில் இருந்து...