Published:Updated:

வேலும் மயிலும் துணை!

’அன்பின் அடையாளம் வேல்!’வி.ராம்ஜி

வேலும் மயிலும் துணை!

’அன்பின் அடையாளம் வேல்!’வி.ராம்ஜி

Published:Updated:

''வேல் மாறல் பாராயண பூஜையைச் செய்யறதும், பூஜைல கலந்துக்கிட்டு முருகப்பெருமான்கிட்ட வேண்டிக்கறதும் ரொம்பவே விசேஷம்! சில பூஜைகள் மட்டுமே நமக்குத் தெரியுது; சில வழிபாடுகளை மட்டுமே நாம எடுத்துக்கறோம். இந்த வேல்மாறல் பாராயண பூஜையை வீட்லயும் செய்யலாம்; கோயில்லயோ மண்டபத்துலயோகூட செய்யலாம். எங்கே செஞ்சாலும், கந்தனோட கடாட்சம் நமக்குக் கிடைக்கும்கிறது உறுதி!'' என, வேல் மாறல் பாராயண பூஜை குறித்து மிக எளிமையாக விவரித்தார் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். 

சென்னை, பெசன்ட்நகர்அறுபடைவீடு முருகன் கோயிலில், கடந்த 23.11.14 அன்று சக்திவிகடன் சார்பில் வேல்மாறல் பாராயண பூஜை நடைபெற்றது, நினைவிருக்கிறதுதானே! அதையடுத்து, கடந்த 23.1.15 வெள்ளிக்கிழமை அன்று காரைக்குடியில், வேல்மாறல் பாராயண பூஜை சிறப்புற நடைபெற்றது.

தேரோடும் வீதியில், தெற்குத் தெருவில் உள்ள காரைக்குடி நாட்டார் ஆனந்த மடத்தின் நிர்வாகிகள் அனைவரும், அங்கே பூஜை நடப்பதற்கு ஏகமனதுடன் ஒத்துழைத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காரைக்குடி என்றதும், நினைவுக்கு வருபவர்கள் நகரத்தாரும் நாட்டாரும்தான். சென்னையில் நகரத்தார் கட்டிய கோயிலில் பூஜை நடந்தது. இப்போது, நாட்டார் மக்களின் உதவியுடனும் ஒருங்கிணைப்புடனும் காரைக்குடியில் பூஜை நடைபெறுகிறது. மேலும், இந்தப் பகுதி மக்கள் பழநிக்குப் பாதயாத்திரை யாகச் செல்ல விரதமிருக்கிற காலம் இது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன், சங்கல்பம் செய்து பூஜையைத் துவக்குவோம்'' என்று வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் சொல்ல, வந்திருந்த அனைவரும்  மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள். லண்டன் உட்பட பல நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் அனுப்பி வைத்திருந்த பிரார்த்தனைக் கூப்பன்கள் வாசிக்கப்பட்டு, வேலுக்கு அருகில் வைக்கப்பட்டன.

வேலும் மயிலும் துணை!

அதையடுத்து, ஆரம்பமானது வேல்மாறல் பாராயண பூஜை. நாட்டார் காவடிக்குழுவினரின் வெள்ளிவேல் அலங்கரிக்கப்பட்டிருக்க, அதற்கு மாலை அணிவித்து, வலையப்பேட்டை கிருஷ்ணனும் அவரின் மகள் பவ்யாவும் வேல் மாறல் பாராயணப் பாடலை ராகத்துடன் பாட, வாசகர்கள் அனைவரும் அதை அடியொற்றி கோரஸாகத் திரும்பச் சொல்ல, ஆனந்தமடம் முழுவதும் ஓர் ஆனந்த அதிர்வலை பரவியது!

பூஜை நிறைவுறவும், சிறப்பு விருந்தினரான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவும் சரியாக இருந்தது. மேள தாளங்களுடன் வாசலில் இருந்து அவரை வரவேற்று அழைத்து வந்தார்கள் நாட்டார் காவடிக்குழுவினர். பழநி பாதயாத்திரை அன்பர்களும் கலந்துகொண்டு, அடிகளாரை வரவேற்றனர். அதன்பின், வேலுக்குப் பூக்களால் அர்ச்சனை நடந்தது. கூடவே, ராஜ அலங்காரத்தில், மேடையில் முருகப்பெருமான் அழகு ததும்பக் காட்சி தந்தது, பக்தர்களுக்குக் கிடைத்த கூடுதல் சந்தோஷம்!

'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா'  எனும் கோஷங்கள் அதிர, வேலுக்கு தீபாராதனை காட்டப் பட்டது. அதையடுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் சிறப்புரை துவங்கியது.

''இறைவன், ஒப்பற்ற பரம்பொருள். அண்டசராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அதனால்தான் மாணிக்கவாசகர், ஆவுடையார்கோவிலில் ஒரு கற்கோயில் எழுப்பினார். கூடவே, சொற்கோயில் ஒன்றையும் எழுப்பினார். அதுதான் திருவாசகம். கற்கோயிலையும் சொற்கோயிலையும் எழுப்பிய மாணிக்கவாசகப் பெருமான், இறைவனை எல்லா இடங்களிலும் தரிசித்து, 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...’ என்று உருகிப் பாடினார்.  

வேலும் மயிலும் துணை!

ஆலயங்கள், இறைவனுக்கு மட்டுமா? மனிதர்கள் யாவரும் கூடிக் கலந்து வாழ்வதற்குத்தான் ஆலயங்கள்!  அதனால்தான், வேல்மாறல் பாராயணம் மாதிரியான பூஜைகளை ஒன்றுகூடி நடத்திவருகிறோம்.

ஆயிரமாயிரம் கவலைகளுடனும், கண்களில் கண்ணீருடனும் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறோம். நமது பிரார்த்தனை பல நேரங்களில் நிறைவேறாமல் போகிறதே, ஏன்?  காரணம்... தன்னுள் இருக்கிற நலம். அதாவது, தன்னலம். ஊரும் உலகும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதே பொதுநலம்.

காசிக்குப் போனோம், கங்கையில் குளித்தோம், பாவங்களைத் தொலைத்தோம், காரைக்குடி வந்தோம்... இன்னும் பக்கத்து வீட்டுக்காரன் நன்றாகவா இருக்கிறான் என்று கேட்டால், அந்த இதயத்தில் எப்படி அருட்தன்மை வாய்க்கும்?'' என்று அடிகளார் கேட்க, பலத்த கரவொலி எழுப்பினார்கள் அன்பர்கள்.

''ஒருவர் ஆண்டவனிடம், 'இப்போதுதான் நிலத்தை உழுதிருக்கிறேன். நல்ல மழையைக் கொடு’ என்று கேட்டார். அதையடுத்து இன்னொருவர், 'தை மாதம் வரப்போகிறது. பொங்கலுக்கு எல்லோரும் பானை வாங்குவார்கள். நான் மண்ணை ஊறவைத்திருக்கிறேன். காய வைக்க வேண்டும். மழை வராதிருக்க வேண்டும்’ என்று வேண்டினார்.

பாவம், என்னதான் செய்வார் இறைவன்? நெல்லுக்கு மழை தருவாரா? மண் காய, மழை தராமல் இருப்பாரா? பிரார்த்தனை எனும் பெயரில் பேரங்கள் நடப்பதை அறிந்து குழம்பித் தவித்தார் கடவுள். இவர்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்வது, எங்கே செல்வது என்று யோசித்தார்.

வேலும் மயிலும் துணை!

'இமயமலைக்குச் செல்லலாம்’ என்று ஒருவர் யோசனை சொன்னார். உடனே கடவுள், 'இப்போதெல்லாம் அங்கே போர்க் கருவிகளுடன் மனிதர்கள் வருகிறார்கள். அது ஆபத்து!’ என்றார். 'சந்திர மண்டலத்தில் ஒளிந்து கொள்ளலாமே..?’ என்றார் இன்னொருவர். 'வேண்டாம். பல வருடங்களுக்கு முன்பே அங்கு கால் பதித்து விட்டானே மனிதன்’ என்றார்.  எங்கே ஒளிவது என்று தெரியாமல், குழப்பத்துடன் யோசித்தார்.

அப்போது பூலோகத்தில் ஓர் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். 'பணத்தை எங்கே வைத்தாலும் பையன் எடுத்துவிடுகிறான். பீரோவில் வைத்தேன்; மேஜை டிராயரில் வைத்தேன். எப்படியோ,  எங்கு வைத்தாலும் எடுத்து விடுகிறான்’ எனப் புலம்பினாள் அம்மா. 'ஓர் உபாயம் சொல்கிறேன். இனிமேல் பணத்தை, பையனின் பாடப் புத்தகத்தில் வைத்துவிடு. அதைத்தான் அவன் திறக்கவே மாட்டான்’ என்றார் அப்பா. இதைப் பார்த்துக்கொண்டிருந்த இறைவன் குஷியாகி, 'ஆஹா! எனக்கும் பத்திரமானதொரு இடம் கிடைத்துவிட்டது. இனி நான் மக்களின் மனங்களிலேயே சென்று குடியேறப் போகிறேன். என்னை அவன் தேடாத இடம் அவனுடைய மனம்தான்!’ என்று முடிவு எடுத்தாராம். ஆம், மனிதர்கள் தங்கள் மனதைத் தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று அடிகளார் சொல்ல, வியந்து, ஆர்ப்பரித்தது கூட்டம்.

''தர்மத்தைக் காக்கவே ஆயுதம் தாங்கியிருக் கிறான் கந்தபெருமான். நீதியை நிலைநாட்டவே வேலாயுதம் வைத்திருக்கிறான். மற்றபடி, வேலவன் அன்பானவன். அருளாளன். அவன் கையில் இருக்கிற வேல், அன்பின் அடையாளம்'' என்று முடித்தார் அடிகளார்.

அடிகளாரின் சிறப்புரை நிறைவு பெற்றதும், குன்றக்குடி அடிகளாருக்கும் வலையப்பேட்டை கிருஷ்ணனுக்கும் நாட்டார் காவடிக்குழுவினரின் சார்பில் பொன்னாடை அணிவித்தார் துரைசிங்கம். அதன் பிறகு, காவடி பூஜையும், வேலுக்கு அபிஷேகமும் சிறப்புற நடைபெற்றன.

பிறகு, பழநி பாதயாத்திரை பக்தர்களும் காவடிக் குழுவினரும் நடத்திய திருமுருக பஜனை துவங்கியது. வாத்தியக் கருவிகளும் கோரஸ் முழக்கங்களுமாக பஜனை அமர்க்களப்பட, கருப்பர் பாடலின்போது, அங்கே இருந்த ஆறேழு பக்தர்களுக்கு 'அருள்’ வந்து ஆடியது பூஜையை மேலும் சிலிர்ப்பாக்கியது; சிறப்பாக்கியது.

பஜனையின் நிறைவில், வலையப்பேட்டை கிருஷ்ணனும் பவ்யாவும் மங்கலம் பாடி நிறைவு செய்தார்கள். 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ எனும் கோஷம் முழங்க, அலங்கார முருகப்பெருமானுக்கு, தீபாராதனை காட்டப் பட்டது. பிறகு வந்திருந்த வாசகர்கள் அனைவருக்கும் கேசரி, இட்லி, பொங்கல், போண்டா, சாம்பார், சட்னி, குருமா என உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

''சக்தி விகடன், இந்த வேல்மாறல் பூஜையை எல்லா ஊர்களிலும் நடத்த வேண்டும்!'' என்று வாசகர்கள் பலரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கோரிக்கை விடுத்தனர்.

குன்றக்குடி குமரனுக்கு அரோகரா! குறைகள் தீர்க்கும் வேலவனுக்கு அரோகரா!

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism