Published:Updated:

சக்தி சங்கமம்

‘எப்போதும் நிகழ்காலம்தான்..!'சுவாமி சுகபோதானந்தா

சக்தி சங்கமம்

‘எப்போதும் நிகழ்காலம்தான்..!'சுவாமி சுகபோதானந்தா

Published:Updated:
சக்தி சங்கமம்

னசை லேசாக்கிக் கொள்வதில்தான் நம் சந்தோஷமும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது என்பதால், 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ என்று மனசுக்கு வேண்டுகோள் விடுத்த சுவாமி சுகபோதானந்தாவைச் சந்திக்க ராஜசேகரன், இளஞ்செழியன், பழனிக்குமார், சுகுமாரன், இமயம், சாந்தி, லீலா, குமுதா, எல்.பாண்டி, சிவநாதன், சுந்தரம், ஜி.பாண்டி ஆகிய 12 வாசகர்கள் உற்சாகத்துடன் வந்திருந்தனர்.

'பல்வேறு வகையான மக்களைச் சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் எனர்ஜி தரும் விஷயம். அந்த வகையில் உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்!' என்று முகம் மலர அனைவரையும் வரவேற்றார் சுவாமி சுகபோதானந்தா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, அந்தத் தத்துவத் தித்திப்பு உரையாடல்!

சுகபோதானந்தாவுடன் நேரில் உரையாடியவாசகர்கள் மட்டுமல்ல, அந்த உரையாடல் தொகுப்பைப் படிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம்.

வாசகர் ராஜசேகரன், உரையாடலைத் தொடங்கி வைத்தார்.

? 'கர்மா என்பதுதான் இன்ப, துன்பங்களா? அப்படியெனில், இந்தப் பிறவியிலேயே அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வழிகள் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார் அவர்.

'முதலில் கர்மா என்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, ப்ராரப்த கர்மா என சாஸ்திரங்கள் சொல்கின்றன. சஞ்சித கர்மா என்பது கிட்டத்தட்ட ஃபிக்ஸட் டெபாசிட் மாதிரி.  இது, அப்பா, தாத்தாவோட பாவபுண்ணியங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்து, ஆகாம்ய கர்மா. இந்த ஜென்மத்தில் நாம் செய்கிற பாவ புண்ணியக் கணக்கு இது. இதெல்லாம் ஒருகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குப் போய் விடும். அதையடுத்து, ப்ராரப்த கர்மா. அப்படியென்றால், நாம் செய்யும் நல்ல செயல், கெட்ட செயல் எதுவாக இருந்தாலும், அது அங்கே போய் மொத்தக் கணக்கில் சேர்ந்துவிடும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், முக்கால்வாசி பேர் மனச்சாட்சிக்குப் பயப்படுகிறவர்கள்தான். அப்படியிருக்க, இந்தக் கணக்குகளின்படி நமக்குப் பெரிய கெடுதல்கள் ஏதும் நேர்ந்துவிடாது. இவை இன்னும் தொடராமல் இருக்க, குறிப்பாக நம் சந்ததியை இவை தொடராமல் இருக்க, நல்ல நல்ல விஷயங்களை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

கரடுமுரடான சாலைகளை நடந்து கடக்கவேண்டிய சூழ்நிலை. அப்போது காலில் ஷூ போட்டுக்கொண்டால், அந்த மோசமான சாலையை நம்மால் மிக எளிதாகக் கடந்துவிடமுடியும் அல்லவா! அப்படித்தான் இதுவும். நிகழ்காலத்தில் நாம் செய்யும் நல்லதுகள் நம்மை அரணெனக் காக்கும். அப்படிச் செய்வதற்கு ஒரு பக்குவம் தேவை. அந்தப் பக்குவத்தைத் தருவதே ஞானம். அந்த ஞானத்தை அடைவதற்குத்தான் மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்கிற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.'

? 'அப்படியென்றால், மனதைப் பக்குவப் படுத்துவதற்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு உண்டா?'  இது வாசகர் இளஞ்செழியனின் கேள்வி.

சக்தி சங்கமம்

''ஆமாம். ஆன்மிகம் என்பது ஒரு வழி. இறைவனிடம் பக்தி செலுத்து என்கிறது இந்துமதம். கிருஷ்ணா கிருஷ்ணா என்றோ, ராமா ராமா என்றோ, உனக்குப் பிடித்தமான ஒரு கடவுளின் மீதோ பக்தி செலுத்து என்கிறது. சந்தோஷமோ, துக்கமோ வரும்போது, இப்படி இறைவனைப் பற்றி நினைக்கத் துவங்கிவிட்டால், மந்திர ஜபங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், மனது ஒரு கட்டுக்குள் வந்துவிடும்தானே! ஒரு நிதானத்தை அடைந்துவிடும் அல்லவா! மனதில் நிதானம் வந்துவிட்டால், அங்கே அமைதி குடிகொள்ளத் துவங்கிவிடும். அமைதி குடிகொண்டால், புத்தி தெளிவாகும். சிந்தனை சீராகும். எடுக்கும் முடிவுகள் பலிதமாகும். இதுவொரு மார்க்கம்; வழி!

தியானம் என்பது அடுத்த வழி. மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மேற்கொள்ள வேண்டும். இன்னொரு வழியும் இருக்கிறது. அது, கர்ம யோகம். கடவுளை வழிபட வேண்டிய அவசியமில்லை. கண்மூடி தியானம், யோகமெல்லாம் செய்யத் தேவையில்லை. நன்மை செய்; எல்லோருக்கும் நன்மை செய். முடிந்த அளவுக்கு தான தருமம் செய். அப்படிச் செய்வதாலும் மனது அமைதியை அடையும். உள்ளே ஒரு நிம்மதி பரவும்.

இவை எல்லாவற்றிலும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. அதாவது, ஓர் ஒழுங்குக்கு நாம் வருவதற்கு இவை அனைத்துமே உதவி செய்யும். காலையில் 4 மணிக்கு எழுந்து, ஜபம் செய்யவேண்டும், 6 மணிக்கு கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும், இந்த நாளில், இந்தக் கிழமையில் இப்படியொரு தான தருமம் செய்யவேண்டும் என்கிற ஓர் ஒழுங்குக்கு நாம் வருவதற்கு இவை அனைத்துமே உதவுகின்றன.

நீங்கள் தினமும் வாக்கிங் அல்லது ஜாகிங் போகிறீர்களா? அதுவொரு ஒழுங்கு! மந்திரம் ஜபிப்பதும், இசையில் லயிப்பதும் ஓர் ஒழுங்கில் நம்மைச் சேர்க்கும். அவற்றில் ஆழ்ந்தோமானால், ஓர் இனிய அதிர்வு நம்மைச் சூழும். நம் எண்ணங்களின் அதிர்வுப்படியே நம் இன்ப துன்பம் அமைகிறது.''

? 'சம்பூரணம், பரிபூரணம் என்றெல்லாம் சொல்கிறோமே... கொஞ்சம் விளக்குங்களேன்’ என்று கேட்டார் பழனிகுமார்.

''மிக அருமையான விஷயம் இது. இதை விளக்குகிற ஸ்லோகமே இருக்கிறது.பூரணம் என்பது நிகழ்காலம்.ஆனால், நம் மனம் என்ன செய்கிறது தெரியுமா? ஒன்று, கடந்த காலத்தையே நினைத்து நின்றுகொண்டிருக்கிறது. அல்லது, எதிர்காலத்தை நோக்கி ஓடிவிடுகிறது! முன்னதில் தேங்கி நின்றுவிடுகிறோம்; பின்னதில் ஓடிப் போகிறோம். இதற்கிடையில் நிகழ்காலம் என ஒன்று இருப்பதை அடியோடு மறந்துவிடுகிறோம். நம்மில் பெரும்பாலோர் இப்போது, இந்த நிமிஷ வாழ்க்கையைக் கொண்டாடுவதே இல்லை.

'எனக்குக் கல்யாணமானதும் நானும் சந்தோஷமா இருப்பேன்’, 'எங்கிட்டஇப்போ ரெண்டு லட்சம் ரூபாய் இருக்கு. அது அஞ்சு லட்சமாகும்போது உற்சாகமா இருப்பேன்’ என்றெல்லாம் ஒரு கணக்கு வைத்துக்கொண்டு, நம் சந்தோஷத்தை நாமே தள்ளிப் போட்டு விடுகிறோம்.

நிகழ்காலத்தைப் பொறுத்தவரை நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இல்லை என்று ஒரு குருட்டுத்தனமான முடிவுக்குள் இறங்கிவிடுகிறோம்.

எதிர்காலம் என்று இப்போது சொல்வதை நெருங்கும் நேரத்தில், அது நிகழ்காலமாகி விடுகிறதுதானே! அதுவும் நமக்கு வழக்கம்போல் நிம்மதியற்றதாகவே தெரிகிறது. இப்படியேதான் மாரீச மான் போல் நமக்குப் போக்குக் காட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது காலம்.

ஆக, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் உணர்ந்து, தெளிந்து, அனைத்திலும் நிறைவு காண்பதே பூரணத்துவம். நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டால், எல்லா காலமும் பூரணமாகிவிடும் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆக, இந்த நிகழ்காலத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழப் பழகுவதுதான் உண்மையான பரிபூரணம்!''

'கோயிலிலும் மற்ற இடங்களிலும் யாகம் வளர்க்கிறார்கள்; பூஜை செய்கிறார்கள். இதற்கு உண்டான சக்தியை, இவற்றைச் செய்வதால் நிகழும் நல்ல விஷயங்களைச் சொல்லுங் களேன்?' என்று வாசகர் சுகுமாரன் கேட்டார்.

''அக்னி என்பது தூய்மையானது. மகா சக்தி கொண்டது. தீயவை என்று எவையெல்லாம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அழிக்கும் சக்தி அக்னிக்கு உண்டு. அதனால்தான் யாகம் வளர்த்து பூஜிக்கிறோம். பிறந்ததில் இருந்து இறக்கும் வரையிலான காலகட்டங்களில், முக்கியமான நிகழ்வுகளுக்கு இப்படி ஹோமம் வளர்க்கச் சொல்லி, வேதம் பரிந்துரைப்பது மனிதர்களுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அடுத்து, அக்னியை கவனித்திருக்கிறீர்களா? சிறியதோ பெரியதோ... எதுவாக இருந்தாலும், அக்னி

சக்தி சங்கமம்

எப்போதும் மேல்நோக்கியே எரிந்துகொண்டிருக்கும். நம் சிந்தனையும் செயலும், எண்ணமும் வாழ்க்கையும் இப்படி மேல்நோக்கியே இருக்க வேண்டும்.

தவிர, அக்னி என்பது ஞானத்தின் குறியீடு. அதனால்தான் 'ஞானாக்னி’ என்று வர்ணிக்கிறார் பகவான் கிருஷ்ணர். ஒருவருக்கு ஞானம் இருந்துவிட்டால், இங்கே உள்ள சொந்த பந்தங்களிடமும், உற்றார் உறவுகளிடமும் அன்பாக நடந்து கொள்வார். அதே நேரம் யாருக்கும் அடிபணிந்தும் இருக்கமாட்டார். எல்லோரிடமும் நமக்கு ஒரு 'லவ்’ இருக்கவேண்டும்; ஆனால் 'அட்டாச்மென்ட்’ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், மனித வாழ்க்கையில் பிரச்னைதான் விஸ்வரூபமெடுக்கும்!'

''கனவுகள் ஏன் வருகின்றன? கனவுகளுக்குப் பலன் உண்டா?' என்று வாசகி இமயம் கேட்டார்.

''உங்கள் வாழ்வில் எப்போதோ நடந்த ஒரு சம்பவம்தான் வேறொரு விதமாக உங்கள் கனவில் வருகிறது. அதேபோல், உங்கள் வாழ்வில் இதெல்லாம் நடந்தால்  நன்றாக இருக்கவேண்டும் என நீங்கள் ஆழ்ந்து நினைத்ததும் கனவாக வெளிப்படும். உள்மன வெளிப்பாடுதான் கனவு. 'ட்ரீம் தெரபி’ என்றே இருக்கிறது. மிகப்பெரிய அளவில் இதுகுறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.  

நம்முடைய மூளைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. நாம் தூங்கும்போதும் அது விழித்துக்கொண்டு, மறுநாள் நாம் என்னென்ன வேலையைச் செய்யவேண்டுமோ, அதுகுறித்த திட்டமிடலுடனும் தேடலுடனும் இருக்கும். சில தருணங்களில், நான் மேடையில் பேசுவதற்கான விஷயங்கள்கூட, இப்படித் தூக்கத்தில், கனவில் எனக்கு வந்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நிகழக்கூடியதுதான்!'' என்றார் சுகபோதானந்தா.

? 'அகங்காரம், ஈகோ என்றெல்லாம் சொல்கி றோமே... அவற்றில் இருந்து எப்படி விடுபடுவது?' என்று  வாசகி சாந்தி கேள்வி எழுப்பினார்.

? ஐந்தறிவு விலங்குகளையும் நாம் வழிபடுகிறோமே... அவற்றுக்கு, அப்படியென்ன முக்கியத்துவம்?

இதுபோன்று வாசகர்களின் பல கேள்விகளும் சுவாமியின் சுவாரஸ்ய பதில்களும்...

அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism