மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?   ஆன்மிக அமைப்புகளும், இயக்கங்களும் இன்று பல்கிப் பெருகிவிட்டன. அந்த அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதும், அதன் தலைவருக்கு பக்தராக இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதும் ஃபேஷனாகி வருகிறது. அதேநேரம், உண்மையான பக்தி மார்க்கம் தடம் புரண்டுவிட்டது.எனது இந்த ஆதங்கம் சரிதானா? தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

வை.வேங்கடகிருஷ்ணன், மதுரை1

போதுமான சிந்தனை வளம் பெறாதவர்கள், தங்களை மகான்களின் பக்தர்களாகப் பதிவு செய்துகொண்டுவிடுவார்கள். தங்களது சிந்தனையை விலக்கி, மகான்களின் சிந்தனையை கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பார்கள். அவரது வழிகாட்டுதலே, இவரது வாழ்க்கையின் தரமாக மாறிவிடும். உயர்வு  தாழ்வு என்ற பாகுபாடின்றி எதைச் செய்தாலும், நிர்பந்தமாக ஏற்கும்படியான கட்டாயம் வந்துவிடும்.

இவர்களின் ஆறாவது அறிவு செயலற்றுவிடும். தங்களின் தாழ்வு மனப்பான்மையை மறைக்க, மகானுக்கான பணிவிடையில் தனது முன்னேற்றம், மகான் வெளிப்படுத்திய அதிசயங்கள், அவரது தொடர்பில் பிறப்பின் பெருமையை எட்டிவிட்டதற்கான விளக்கவுரை ஆகியவற்றை விவரிப்பார்கள். அதேநேரம், தங்களுக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களையும், மகானின் குறைகளையும் ஜீரணித்துக் கொண்டு விடுவார்கள். எந்தக் குறிக்கோளும் இல்லாத வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

? உங்கள் கருத்துப்படி, குருமார்களைப் பின்பற்றுபவர்கள் சுய சிந்தனை இல்லாதவர்கள் என்கிறீர்களா?

தங்களது வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளை விலக்க, சுய சிந்தனையைப் பயன்படுத்தமாட்டார்கள் என்று சொல்லவருகிறோம். இப்படியானவர்கள், குருமார்களின் வழிகாட்டுதலையே எதிர்பார்ப்பார்கள்.

அவர்களுடைய சேமிப்பு, சொத்து அத்தனையும் மகானின் வழிகாட்டுதலில் விநியோகமாகிவிடும். இவரைப் போல், இவருக்கு முன்னும் பின்னும் வந்து சரணடைந்த மற்ற பக்தர்களின் குழாமே அந்த பக்தரது உலகமாக மாறிவிடும். ஒரே சிந்தனையில் இணைந்தவர்களில் நட்பு வளர்ந்து, ஒன்றுசேர்ந்து, ஒருவருக் கொருவர் உதவியைப் பரிமாறிக்கொள்வார்கள். இந்த பக்தர்கள் குழாமுக்குள் ஏற்படும் பரஸ்பர நம்பிக்கையால்... பிள்ளைகளின் திருமணம், பொருளாதார பரிமாற்றம், பந்துக்களைப் போன்று நன்மைதீமைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய அத்தனையும்  அவர்களுக்குள்ளாகவே நிறைவேற்றப்பட்டுவிடும். ஆக, பரந்துவிரிந்த சமுதாயத்தில் இருந்து விடுபட்டு, பக்தர்கள் குழாம் என்று குறுகிய வட்டமாக அவர்களின் சமூகம் சிறுத்துவிடும்.

கேள்வி - பதில்

? சமூகத்தில் இருந்து விலகி தனிமைப்பட்டு இருப்பார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

பிரசித்திப் பெற்ற கோயில்கள், பிரம்மோத்ஸவம், ரதோத்ஸவம், பண்டிகைகள் ஆகிய அத்தனையும் அவர்களுடைய கண்களுக்கு வெறும் சடங்காகவே தென்படும். அவ்வளவு ஏன்... வேறொரு மகானின் பக்தர்களைக்கூட இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள்.

தாங்கள் வழிபடும் மகானைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று நினைப்பார்கள். பிற மகான்களின் பெருமை பேசப்பட்டால் இவர்களுக்குப் பொறுக்காது. அந்த மகான்களைச் சிறுமையாக்கும் முயற்சியில் முனைந்து செயல்படுவார்கள். மாறுபட்ட மகான்களின் பக்தர்களை வேண்டாதவர்களாகவும், தங்களின் பெருமைக்கு உரிய மகானுக்கு எதிரிகளாகவுமே பார்ப்பார்கள். காலப்போக்கில் மாறுபட்ட மகான்களின் பக்தர்கள் குழாம் ஒன்றுக்கொன்று பகையை வளர்த்துக்கொள்ளும். 'எல்லா அலுவல்களில் இருந்தும் விடுபட்டு, எனது சிந்தனையில் மூழ்கியிருந்தால், உனது யோகக்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கண்ணன் சொன்ன வார்த்தைக்கு இணங்க, அத்தனை மகான்களும் தங்களுடைய பக்தர்கள் குழாமுக்கு வேலை வாய்ப்பு, பொருளாதார ஒத்துழைப்பு போன்றவற்றை தங்களுடைய அருளால் பெற்றுக்கொடுப்பார்கள். அப்போது மகான் தெய்வமாகிவிடுவார்.

? உங்கள் விளக்கத்தில் கருத்துகளுக்கு பதிலாக கேலியும் கிண்ட லுமே தொனிக்கிறதே?!

நிச்சயமாக இல்லை. ராமன், கிருஷ்ணன், சிவன், பார்வதி, முருகன், கணபதி... பலகாலமாக பண்பில் ஒட்டிக்கொண்டிருந்த தெய்வங்கள் அவர்களுடைய மனதில் இருந்து வெளியேறிவிடுவார்கள். இந்த பக்தர்களின் வாரிசுகளுக்கு, தகப்பனார் வணங்கும் மகானை ஏற்க மனம் இல்லாத நிலையில், அந்த வாரிசுகள் பக்தி எனும் பண்பை விட்டு முழுமையாகவே விலகிவிடுவார்கள்; தகப்பனாருடன் சனாதன தர்மம் அறுந்துவிடும். ஆக, தங்களின் ஆயுளுக்குப் பிறகு சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பக்த பெருமக்களும், அவர்களின் வாரிசுகளும்தான் இன்றைக்கு ஏராளம். இப்படியான ஆதங்கத்தில் விளைந்ததே மேற்கண்ட வரிகளும் விளக்கங்களும். சனாதனத்தைத் தாங்கவேண்டிய பரம்பரை, தனி மனித ஆராதனையோடு முடித்துக்கொண்டிருக்கிறது. இந்த பக்தர்கள் குழாம் தெய்வ வழிபாட்டிலோ, கதாகாலக்ஷேபங்களிலோ பங்குபெற மாட்டார்கள். வேதம் பரிந்துரைத்த அன்றாடக் கடமைகளை, சாஸ்திரம் சுட்டிக்காட்டிய செயல்பாடுகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தங்களுடைய மகானுக்கான பணிவிடைகளிலேயே அது அடங்கிவிடும் என்று நினைக்கிறார்கள்.

? நீங்கள் சொல்வது சரியென்றே இருக்கட்டும். ஆனால், இப்படி மகான்களைப் பின்பற்றும் பக்தர்கள், ஒருவித மனச்சாந்தியுடன் திகழ்வதைக் கவனித்திருக்கிறீர்களா?

அவர்களது வாழ்க்கையில் மன உளைச்சலோ, பரபரப்போ, மனத்தாங்கலோ தலைதூக்காதுதான். சிந்தனை வளம் பெற்று, அதன் காரணமாக தகவல்களை உள்வாங்கி, ஆராய முற்பட்டு, அதனால் எதிரிடையான விளைவுகளைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மேலோங்கும்போதுதான் பரபரப்பு, மனத்தாங்கல் ஆகியன உருவாக வாய்ப்பு உண்டு. சுய சிந்தனையை செயல்படுத்தும் எண்ணம் அறவே அற்றுப்போனவர்களுக்கு, மனத்தாங்கல் எப்படி தலைதூக்கும்?! தனக்கு, தன் மனைவிக்கு, புதல்வர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மகானின் வழிகாட்டுதல், எச்சரிக்கையுடன் இருப்பதால்,  கவலை தொடாத வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்துவிடும்!

மகான்களின் ஆணைகள் சாஸ்திரத்துக்கு எதிரிடையாக இருந்தாலும், அந்த ஆணைகளை வைத்து தர்மசாஸ்திரத்தின் தகவலைத் திருத்தி அமைத்து செயல்பட நினைப்பார்கள். மகானின் அபிப்ராயத்தை வெளியிட்டு, மற்றவர்களையும் தர்மசாஸ்திரக் கோட்பாடுகளில் இருந்து விடுவித்து, மகானின் வார்த்தைக்கு மதிப்பு சேர்ப்பார்கள். 'மகான் சொல்வதே வேதவாக்கு, அவரின் கட்டளையே ஆண்டவன் கட்டளை, மகானை வணங்குவது கடவுளையே வணங்குவதாகும்’  என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் பதிந்துவிடும்.  'மற்றவர்கள் வழிபடும் கடவுள் பேசாத தெய்வம்; மகான் பேசும் தெய்வம். அவரோடு சேர்ந்து வாழும் பேறுபெற்றது முன் ஜன்ம புண்ணியம். அவருடைய கட்டளைகளே வேத உரை. அவரது செயல்கள், கடவுளின் லீலைகள். மானிட உடலெடுத்த கடவுள் நம் மகான்’ என்ற நம்பிக்கையே இந்த பக்தர் குழாமிடம் மேலோங்கியிருக்கும். ஆக, சுதந்தி ரமாகப் பிறந்தவன் அடிமையாக வாழ்கிறான்.

இரண்டாவது கோணம்

அறியாமையை அகற்றுபவர்; வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவனுக்கு எளிமையான

கேள்வி - பதில்

செப்பனிடப்பட்ட வழியைக் காட்டுபவர் மகான். அவர், பிறப்பின் பயனை எட்டவைப்பவர், துயரம் தொடாத மகிழ்ச்சியை அடையாளம் காட்டுபவர்; அடிபணிந்தவனின் இன்ப வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பவர்; அவனுக்கு வரும் சங்கடங்களை முன்னதாகவே அறிந்து, அதை முளையிலேயே கிள்ளி எறிந்து வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு அளிப்பவர்.

அது மட்டுமா? பக்தனுக்கு எதிரிடையான சிந்தனை முளைக்காதவாறு அவனது சிந்தனையை நேர்வழியில் திருப்பிவிடுபவர். சுருங்கச் சொன்னால், அவனது இகபர சுகங்களை சுவைக்க வைக்கும் பொறுப்பை ஏற்ற கடவுளாகத் தென்படுபவர் மகான். அவரிடம் அடைக்கலமாகும் சந்தர்ப்பம் வாய்த்ததே, அந்த பக்தன் செய்த புண்ணிய பலனாகும்.

? அப்படியென்றால், கடவுள் எல்லாம் தேவையில்லை. மகான்களை வழிபட்டாலே போதும் என்று சொல்ல வருகிறீர்களா?

மக்களின் அல்லல்களை அகற்ற, கடவுளே மகானாகத் தோன்றியிருக்கிறார் (தெய்வம் மானுஷ ரூபேண) என்றே சொல்ல வருகிறோம்.

* ஒழுக்கத்தோடு கடமையை நிறைவேற்றும் மனம், தூய்மை பெற்று, வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிபெறும். இது சனாதனத்தின் அறிவுரை.

* அறியாமையில் உழன்று துயரத்தில் ஆழ்ந்து தவிக்காதே!

* ஆசைகள் உன்னை ஆட்டிவைக்கும். பொருள்களில் உள்ள பற்றை அகற்றிவிடு; மகிழ்ச்சி உண்டாகும்.

* காணும் பொருள் அத்தனையும் தோற்றம் தான். அதை நம்பினால் ஏமாற்றமே மிஞ்சும்; துயரத்தைத் தழுவுவாய்.

* அழியாத பொருள் ஆன்மா. அதை அறிந்து அதில் ஒன்றிவிடு. அப்போது மகிழ்ச்சி உறுதி.

* பரந்தாமனை நம்பு. பெருமாள்தான் உன்னைக் காப்பவர். அவரைச் சரணடைந்து விடு. அவர், உன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

* ஈசனை வணங்கு. அவர் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன். அடிபணிந்தவனை ஆட்கொள்வது அவர் வேலை. அவரை நம்பலாம்; மற்றவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்களல்ல.

* கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை. அவன் விளையாட்டாகவே உங்களுடைய தவற்றை மன்னித்து ஏற்றுக்கொள்வான்.

* கடவுள் பெயரைச் சொன்னால் போதும்; அவரது பெயர் உனக்குப் பேரறிவை அளித்து விடும். நீ உன் விருப்பப்படி உலக சுகத்தில் மூழ்கலாம். கடைசிக் காலத்தில் அவருடைய பெயரைச் சொன்னால் போதும்; எளிதில் முக்தி கிடைத்துவிடும்.

* பிறந்தவுடன் பற்றைத் துறந்து துறவறம் ஏற்றுவிடு. வேத வியாசரும், சுகரும் அப்படித்தான் வழிகாட்டினார்கள். ஸம்ஸாரத்தில் நுழையாதவனுக்குச் சங்கடம் இருக்காது.

* பிறந்தவுடன் ஆண்டவனைச் சரணடைந்து விடு. உன்னை சம்சாரம் பயமுறுத்தாது. உனது வாழ்க்கையை அவனிடம் ஒப்படைத்துவிடு. சரணாகதி தத்துவம் உயர்ந்தது. மறந்துவிடாதே!

* கடவுளின் பெருமையை விளக்கும் புராணங் களைப் படி. க்ஷேத்ராடனத்தை ஏற்றுக்கொள். தீர்த்தங்களில் நீராடு. உனக்கு மோட்சம் நிச்சயம்.

இப்படி ஒவ்வொரு தத்துவமும் மாறுபட்ட திசையில் ஒருவனை இழுக்கும்போது, அவன் செய்வதறியாது தவிக்க நேரிடுகிறது. அவனுக்கு இந்தப் பரிந்துரைகள் எல்லாம் வேடன் விரித்த வலையாகவே காட்சியளிக்கின்றன. இப்படியான தத்துவ விளக்கங்கள், ஏட்டுச் சுரைக்காயாகத் தோன்றுகின்றன. இந்த நிலையில், பக்தனானவன் பேசும் தெய்வமான மகானைச் சந்தித்தான்; அடைக்கலமானான். அங்கு உலக சுகங்களும் உண்டு, மோட்சமும் உண்டு. பொறுப்பில்லாத சுதந்திர வாழ்க்கை இனித்தது. அதையே கயிலாயமாக, வைகுண்டமாக எண்ணினான். மகான்கள் செய்யும் தெய்வத் திருவுருவப் பணிவிடைகளைப் பார்த்தாலே போதும்; மோட்சம் கைக்கு எட்டிவிடும். அங்கேயே கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், போஜன சாலைகள், விளையாட்டுத் திடல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என எல்லாமே உண்டு. கண்முன்னே அத்தனை தேவைகளும் நிறைவேறுவதை உணர்ந்த மக்கள், மகானை ஏற்பதில் ஆச்சர்யம் இல்லையே!

? அதற்காக, தனியொருவரின் கொள்கைகளை கருத்துகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், கடைப்பிடிப்பதும் எப்படிச் சரியாகும்?

எதிலும் குறைகளையே காணும் இனம், மகானையும் குறையாகப் பார்க்கும். இன்றைய கோலாகலமான சூழலில், மகானிடம் அடைக்கலமாவது வரப்பிரசாதம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு, பாசம் ஆகிய அனைத்தும் அற்று, வேற்று மனிதர்கள் போல் பழகும் நிலை வளர்ந்துகொண்டிருக்கிறது. அநாதைக்கு தெய்வமே துணை. பேசும் தெய்வமாகிய மகான் அவர்களுக்குத் துணையாக இருப்பது, போற்றுதலுக்கு உரியது.

குடும்பமும், சமுதாயமும் ஏறெடுத்துப் பார்க்காத நிலையில், வாரியெடுத்து அணைத்து, அடைக்கலம் அளித்து, ஆட்கொண்ட மகான் பரம்பொருள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆபத்பாந்தவனாக, அனாதரட்சகனாக தோற்றமளிக்கும் மகான்கள், இந்த கலியுகத்தின் தெய்வங்கள். அவர்களில் குறை காண்பது, காண்பவனின் மனக்கோளாறையே குறிக்கும்.

மூன்றாவது கோணம்

உங்களுடைய விளக்கத்தில் கருத்துத் திணிப்பு தென்படுகிறது. பண்டைய நாட்களில் ரிஷிகள், முனிவர்கள், மகான்கள் நிறைய இருந்தார்கள். தன்னை அண்டியவர்கள் குழாமை வாழ்நாள் முழுதும் பராமரிக்கும் பணியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அடிபணிந்தவனுக்கு ஏற்படும் இன்னல்களை துடைக்கும் பணியை அவர்கள் ஏற்கவில்லை.

? எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?

சில சான்றுகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன். குருகுலத்தில் கல்வி கற்க வந்தவர்களும், முடிந்த பிறகு வீடு திரும்புவார்கள். கண்ணனும் குசேலனும் கல்வி கற்ற பிறகு தங்கள் இடத்துக்குத் திரும்பினார்கள். குரு சுச்ருஷையில் இணைந்து, குருவே கதி என்று தங்களின் வாழ்க்கையின் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கவில்லை. பரசுராமனும் கந்தனும் மஹேசனிடம் கல்வி பெற்று வீடு திரும்பினார்கள். காட்டில் இருக்கும் முனிவர்கள், ராமன் காட்டுக்கு வந்ததை அறிந்து அவரிடம் அடைக்கலம் ஆகவில்லை. பாண்டவர்களுடைய வனவாச காலத்தில், முனிவர்கள் தினம் தினம் அவர்களுடைய குசலப்ரச்னத்தை விசாரித்துக்கொண்டு, தங்களின் சிந்தனையை அவர்களிடம் அடமானம் வைக்கவில்லை.

பிரகலாதனும், துருவனும் பகவத் பக்தியில் ஏற்றம் பெற்ற பிறகும், அரசாண்டு மக்களை வாழவைக்க தங்களது கடமையை ஆற்றினார்கள்.சரணாகதியில் உலகத்தைத் துறக்கவில்லை.

முசுகுந்தன் கண்ணனின் அருள் பெற்ற பிறகு, தீர்த்தாடனம் மேற்கொண்டும், அறக்கோட்பாடுகளை ஏற்றும், பிறரை ஏற்க வைத்தும், ஸனாதனத்தில் ஈடுபட்டும் வாழ்க்கையை நடத்தினான். ராமனைச் சரணடைந்த விபீஷணன், இலங்கை அரசை ஏற்று மக்களை நல்வழிப்படுத்தும் பணியில் மூழ்கினான். உலகை உய்யவைக்க பத்து அவதாரங்களில் மந் நாராயணன் தோன்றியபோது, ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் காட்டைவிட்டு வெளியேறி, தங்களது அன்றாடக் கடமைகளைத் துறந்து அவதார புருஷர்களிடம் அடைக்கலமாகி ஒன்றிவிடவில்லை.

? சரணாகதி தத்துவத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, குரு ஒருவரிடம் தன்னை ஒப்படைப்பதும், சரணாகதி அடைவதும் எப்படி தவறாகும்?

சரணாகதி என்பது கடவுளிடம் தன்னை, தனது செயல்களை ஒப்படைப்பது. பரம்பொருளும்கூட பொறுப்பை, கடமைகளை தட்டிக்கழித்துவிட்டு தன்னிடம் அடைக்கலமாக வருபவனை ஏற்க மாட்டார். 'வேதமும் அதை ஒட்டிவந்த ஸ்ம்ருதியும் எனது கட்டளைகள். அவற்றைத் துறந்துவிட்டு, என்னிடம் அடைக்கலம் ஆக விரும்புபவனை பக்தனாகக் கருதமாட்டேன்’ என்கிறான் கண்ணன். பகதர்கள் குழாமை தன்னோடு வாழ்க்கை நடத்த அனுமதிக்கமாட்டார்.

''கண்ணா! உனது விளக்கவுரை எனது அறியாமையை அகற்றிவிட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும், சொல்'' என்று அர்ஜுனன் கேட்டான். அவனுக்கு, ''எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்று நிர்ணயம் செய்வது சனாதனம். அது என்ன சொல்கிறதோ அதைச் செய்'' என்று பதிலுரைத்தார் கண்ணன் (தஸ்மாத்சாஸ்திரம் ப்ரமாணம் தே)

அதுமட்டுமா? ''எல்லா உயிரினங்களிலும் எனது அணுகுமுறை ஒன்றுதான். வேண்டியவன் வேண்டாதவன் என்கிற பாகுபாடு இல்லை. எந்த உயிரினங்களிலும் பகையும்  நட்பும் இல்லை'' என்று சொன்னார் கண்ணன் (ஸமோஹம்ஸர்வபூதேஷு...). தவம்  செய்து வேண்டுவது அசுரர்களாயினும் வரம் அளிப்பார். தவம் இருந்து மகிழவைக்கும் தேவர்களுக்கும் அவர் வரம் அளிப்பார். ஆக, அருகில் இருந்து பணிவிடை செய்தால் சிறப்பான அருள்; தூரத்தில் இருந்து வழிபட்டால் சாதாரண அருள் என்கிற பாகுபாடு கடவுளிடம் இல்லை.

? எல்லாம் சரிதான்! ஆனால், இதுபோன்ற அரிய விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் அல்லவா? மகான்கள் அந்தப் பணியைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்?

வேதம் மக்களின் வாழ்க்கைக் கலையை முழுமையாக அறிமுகம் செய்துவிட்டது. புத்தரில் இருந்து இன்றுவரை தோன்றிய

மகான்கள் யாவரும் வேதத்தின் தகவலைத் திருப்பிச் சொன்னவர்கள். ஆனால், தனிமனித ஆராதனையில் மூழ்கியவர்கள், தங்களுடைய மகான் சொல்வதை புதுமொழியாக ஏற்க வைக்கிறார்கள்.

'உண்மை பேசு, கடமையை நிறைவேற்று’ இது மகானின் பொன்மொழி என்பார்கள். ஆனால் அது 'சத்யம் வத தர்மம் சர’ என்கிற வேதத்தின் தமிழாக்கம். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை என்பார்கள். இதுவும் 'மாத்ரு தேவோபவ பித்ருதேவோ பவ’ என்கிற வேதத்தின் கருத்திலிருந்து உருப்பெற்றது என்று சொன்னால் மிகையாகாது. சமுதாய மாற்றத்துக்கு உகந்த சிந்தனை மாற்றத்தில் வெளிப்படும் அறக்கருத்துக்களை மகான்களால் வரையறுக்க இயலாது. புது சிந்தனைத் தாக்கம் மகான்களையும் பாதித்துவிடும். ஐயாயிரம், ஆறாயிரம் வருடங்களுக்கு முந்தைய கோட்பாடுகளை மகான்களும் கடைப்பிடிக்க முடியாது.

கால மாற்றத்தில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு சனாதனம் மறைந்து தனிமனித ஆராதனை களைகட்டி வளர்ந்தோங்கி இருக் கிறது. மகான்களை கடவுளாகப் பார்ப்பார்கள், அவருடைய பக்த கோடிகள். அவரை அண்டியவர்களுக்குக் கிடைத்த பெருமையை, இந்த பக்தகோடிகள் பெருமையுடன் வெளியிடுவார்கள். ஆக, மகான்களுக்கு பக்தர்கள் பாதுகாப்பா அல்லது பக்தர்களுக்கு மகான்கள் பாதுகாப்பா என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. இவர்களது நடைமுறைகள் சமுதாயத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. வீடுகளில் நடைமுறைப்படுத்தும் பழைய பண்பாடுகள் மறைந்துவிட்டன. அன்றாடம் செய்யவேண்டிய காலை  மாலை கடன்கள், முன்னோர் ஆராதனைகள் ஆகிய அத்தனையும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

வேதத்தையும், அதிலிருந்து வெளி வந்த சனாதனத்தையும் காப்பாற்றும் கடமையை ஏற்றவர்கள், தனிமனித ஆராதனையில் ஆழ்ந்து, வேதத்தையும் சனாதனத்தையும் மக்களின் சிந்தனையில் இருந்து விலக்கிவிட்டார்கள். மட்டுமின்றி, கடமைகளில் இருந்து தாங்கள் தவறியதுடன், அடுத்த பரம்பரையையும் அதில் ஈடுபட வழியில்லாமல் செய்வது பெரிய பக்கவிளைவு ஆகும். பெருமைக்கு உரிய கலாசாரம் மறைந்துகொண்டிருக்கிறது. புதுக் கலாசாரம் தலைதூக்கியிருக்கிறது. சனாதனம்தான் கலாசாரத்தைக் காப்பாற்றும். ஆகவே, சமுதாயத்தில் வந்துபோகும் மகான் களுக்கான பணிவிடைகள் மட்டுமே போதாது; பண்டைய அறமும் அவசியம்.

? ஆக, குருமார்கள்  மகான்களின் வழிகாட்டுதல் தேவையே இல்லை என்கிறீர்களா?

மகான்கள் ஜீவன் முக்தர்கள். அவர்களது அருள் அவசியம் வேண்டும். அவர்களைப் போற்றுவதும் கௌரவிப்பதும் நமது முன்னேற்றத்துக்கு உதவும். சமுதாய அங்கங்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் முனைந்திருப்பார்கள். அதற்காக, அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போன்று, நிரந்தர பொக்கிஷத்தை (அறம்) மறந்து, மகான்களின் பெருமைகளை மிகைப்படுத்தி புகழாரம் சூட்டி, அப்பாவி மக்களையும் பொது அறத்தில் இருந்து விலக்கிவைப்பது சிறப்பல்ல.

நமது அறம், கலாசாரம், பண்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி, பிறந்த நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். மகான்களிடம் சிந்தனையை அடமானம் வைத்து, அதையே சிறந்த அறமாகச் சித்திரித்து, பொது அறத்தைப் புறக்கணிக்கக் கூடாது.

தங்கள் சிந்தனைக்கு ஒருவார்த்தை...

அறம், ஆன்மிகம் ஆகிய இரண்டும் பாரதத்தின் அடையாளம். இரண்டும் சேர்ந்தால் வாழ்க்கை இனிக்கும். பறவை பறக்க இரண்டு இறக்கைகள் வேண்டும். தேர் பவனி வர இரண்டு சக்கரங்கள் வேண்டும். அறம், ஆன்மிகம் இரண்டும் வேதத்தில் அடக்கம். அதை கர்ம காண்டம், ஞான காண்டம் என்று சொல்வது உண்டு. கடவுள் கர்ம வடிவிலும், ஞான வடிவிலும் உண்டு. ராமர், கிருஷ்ணர் வடிவிலும் கடவுள் தோன்றுவார்; தட்சிணாமூர்த்தி வடிவிலும் தென்படுவார்.

வேதத்தின் உருவம் ஒலி. ஒலியில் உறைந்திருக்கும் ஒளி பரம்பொருள். அதன் செயல்வடிவம் அறம், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமம், கோயில்கள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள், விரதங்கள், நம்பிக்கைகள்... இவை அத்தனையும் அறத்தைப் பாதுகாக்கும் கவசங்கள்; வேதத்தில் இருந்து வெளிவந்தவை. பாமரர்கள் கையாண்டு பயன்பெற அவை தேவை. வேதத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றவன் ஏமாந்துவிட்டான். மகான்களிடம் அடைக்

கலமாகி சுயநலத்தை ஏற்றான். அவன் சித்தம் தெளிந்து, பொது நலனில் அக்கறை கொள்ள இறைவனை வேண்டுவோம்.

பதில்கள் தொடரும்...