Published:Updated:

கலகல கடைசி பக்கம்

வடை மோகம்!ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

வடை மோகம்!ஓவியம்: வேலன்

Published:Updated:

குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது என்றால், நண்பருக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும், காக்கா நரி கதை சொல்கிறார் என்றால், தானே காக்காவாகவும் நரியாகவும் மாறி மாறி மோனோ ஆக்டிங் செய்தபடி கதையை விவரிப்பார். வாயில் ஈ நுழைவது தெரியாமல் குழந்தைகள் வியந்து, மகிழ்ந்து கேட்பார்கள்.

கலகல கடைசி பக்கம்

நண்பருக்குக் காக்காவிடமும் நரியிடமும் இத்தனை பரிவும் பாசமும் ஏற்பட்டது எப்படி? யோசித்ததில், நண்பருக்கு இந்த இரண்டையும்விட, இவற்றை இணைக்கும் வடை மீதுதான் அத்தனை உயிர் என்கிற விஷயம் உறைத்தது. 'நீ ஒரு பாட்டுப் பாடேன்’ என்று நரி தந்திரமாகக் கேட்க, அசட்டுக் காக்கா ஆலாபனையை ஆரம்பிக்க, வடை கீழே விழ... சம்பவம் நடந்த இடத்தில் மட்டும் நண்பர் இருந்திருந்தால், நரியை முந்திக் கொண்டு, வடையைக் கவ்வியபடி ஓட்டம் பிடித்திருப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓட்டலுக்குச் செல்லும்போதெல்லாம் நண்பர் விரும்பிச் சாப்பிடுவது இட்லி, தோசை வகையறாக்களைவிட மெதுவடை, மசால் வடை, சாம்பார் வடை, ரச வடை, தயிர் வடை, கீரை வடை என வடையறாக்களைத்தான்!

ஒருநாள் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர், அடுத்த நாள் லஸ் ஆஞ்சநேயர், இன்னொரு நாள் மந்தவெளி மசூதி தெரு ஆஞ்சநேயர் என்று டைம்டேபிள் போட்டு, அனுமன் கோயில்களுக்கு விசிட் அடிப்பார். எப்படியும் ஏதாவது ஒரு கோயிலில் யாராவது ஒரு பக்தர் ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு ஏற்பாடு செய்திருப்பார். நண்பர் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு பயபக்தியுடன் பிரசாதம் வாங்கிச் சுவைப்பார். ''சார், அனுமார் கோயில் வடைக்கு அப்படி ஒரு அலாதி டேஸ்ட் உண்டு, தெரியுமா? மிளகு வாசத்தோடு அந்த மொறமொறப்பு இருக்கே... அடாடா! சும்மா டஜன் கணக்குல உள்ளே போகும்'' என்று சிலாகிப்பார்.

ஒருநாள், ''சார், இனிமே எங்கே ராமாயணக் கதை நடந்தாலும் போயிடறதா இருக்கேன். ராமர் கதை கேட்க ஆஞ்சநேயரும் தப்பாமல் வந்து உட்காருவார்னு சொல்றாங்களே! அப்படின்னா யாராவது பக்தர் அவருக்கு வடைமாலை சாத்துவார்தானே..?'' என்று கண்கள் மின்ன நண்பர் சொன்னபோது, அவரது உச்சக்கட்ட 'வடை பிரேமை’ வெளிப்பட்டது.

'புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா:

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத்பவேத்...’

-என்ற ஸ்லோகத்தை நண்பருக்குச் சொன்னேன்.

புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையையும் தரக்கூடியவர் ஆஞ்சநேயர். ராமனுக்குப் பரம பக்தனாக இருக்கும்போதே பரம ஞானியாகவும் அவர் விளங்கியதையும், அர்ஜுனனின் தேர்க் கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை அவர் நேரில் கேட்டதையும், 'நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமனே புகழும் அளவுக்குப் பெரிய கல்விமானாக அவர் திகழ்ந்ததையும் நண்பருக்கு விளக்கினேன்.

''எல்லாம் சரி, ஆஞ்சநேயரும் என்னை மாதிரியே வடைப் பிரியராக ஆனது எப்படி? அதைச் சொல்லவே இல்லையே!'' என்று கேட்டார் நண்பர்.

ஊஹூம்... சிலரைத் திருத்தவே முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism