Published:Updated:

சாம்பவியிடம் சரணடைந்தால் மாங்கல்ய பாக்கியம் மலரும்-நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

சாம்பவியிடம் சரணடைந்தால் மாங்கல்ய பாக்கியம் மலரும்-நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri
சாம்பவியிடம் சரணடைந்தால் மாங்கல்ய பாக்கியம் மலரும்-நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

நாடெங்கிலும் நவராத்திரி வைபவம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுதோறும் கொலு வைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பதும், கொலு பார்க்க வரும் சிறு பெண்களைப் பாடச்சொல்லி அவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதும், கொலு பார்க்க வருபவர்களுடன் ஆன்மிக விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும் என்று ஊரெங்கும் நவராத்திரி கோலாகலம்தான். அம்பிகைக்கு விழா எடுப்பது என்றாலே அத்தனை கொண்டாட்டம் நமக்கு!

கடந்த ஆறு தினங்களாக வழிபடவேண்டிய நவராத்திரி தேவியரைப் பற்றியும் அவர்களை வழிபடுவதால், நாம் பெறக்கூடிய பலன்களைப் பற்றியும் பார்த்தோம். இன்று நாம் நவராத்திரி ஏழாம் நாள் வைபவத்தைப் பற்றியும், நவராத்திரி விரத மகிமை குறித்தும் பார்ப்போம்.

நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி. ஏழாவது நாளில் நாம் சரஸ்வதி தேவியை சாம்பவியாக வழிபடவேண்டும். சாம்பவியை வழிபடும் ஏழாவது நாளுக்கு உரிய குமாரி - சாம்பவி; மந்திரம் - ஓம் சாம்பவ்யை நம:; சுவாசிநியின் பெயர் - காலராத்ரி; மந்திரம் - ஓம் காலராத்ர்யை நம:; மலர் -பன்னீர் இலை; வாத்தியம் - கும்மி; ராகம் - புன்னாகவராளி; நைவேத்தியம் - எலுமிச்சை சாதம்.

(நவராத்திரி, ஏழாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)  

இன்றைய தினம் எட்டு வயது பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கவேண்டும். இப்படி வழிபட்டால் என்றும் நிலைத்த புகழ் கிடைக்கும்.

அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரி நாள்களில் அம்பிகையை விரதமிருந்து வழிபட்டால், வேண்டிய வரங்கள் அனைத்தையும் அருள்வாள் அம்பிகை.

(நவராத்திரி ஏழாம் நாள் கோலம்)

நவராத்திரி வழிபாட்டின் மகிமையை விளக்கும் ஒரு கதையை இன்று பார்ப்போம்.

முற்காலத்தில் ஆங்கீரஸ முனிவர் என்பவர் வனத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது. அழுகைச் சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு குடிசையில் ஒரு பெண் தன் கணவரை மடியில் கிடத்தி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட முனிவர் வெளியில் இருந்தபடியே குரல் கொடுத்தார். முனிவரின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள்.

அந்தப் பெண்ணின் முகத் தோற்றத்தில் இருந்து அவள் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்று புரிந்துகொண்டார். அவளைப் பற்றிய விவரம் கேட்டார்.

அவள் தான் அந்த நாட்டின் அரசி என்றும், சதிகாரர்கள் என் கணவரை ஏமாற்றி ராஜ்யத்தைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டதாகவும், தன் கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப் பதாகவும் தெரிவித்தாள். தன் கணவர் நலமடைய வேண்டும் என்று முனிவரைப் பிரார்த்தித்தாள். மேலும் தாங்கள் இழந்த ராஜ்யம் திரும்பக் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு ஓர் ஆண்குழந்தை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.

அவளுடைய நிலைக்கு மனம் வருந்திய முனிவர், ஒன்பது தினங்கள் அம்பிகைக்கு பூஜை செய்யுமாறு கூறியதுடன், பூஜைக்கான முறைகளையும், மந்திரங்களையும் கூறினார். அவர்களுக்கு தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்று கூறிய முனிவர், அவர்களை தமது ஆசிரமத்திலேயே தங்கச் செய்தார்.

முனிவர் உபதேசித்தபடியே நவராத்திரி விரதம் அனுஷ்டித்து, தேவியை வழிபட்டாள். அவளின் பூஜையினால் மனம் மகிழ்ந்த தேவி, அவளுடைய கணவருக்கு பூரண ஆரோக்கியத்தையும், தேக வலிமையையும் தந்தாள். சில நாள்களிலேயே அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது. அவனுக்கு 'சூரிய பிரதாபன்' என்னும் பெயர் சூட்டிய முனிவர், அவனுக்கு சகல கலைகளையும் கற்பித்தார். தேவியின் அருளால் தங்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தில் இருந்து அரசி ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தாள்.

திறமையும், அறிவுக்கூர்மையும் மிக்க சூரிய பிரதாபன் இளம் வயதிலேயே போர்க்கலை உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். அதன் பிறகே முனிவர் அவனுடைய பெற்றோர்கள் பற்றியும், அவர்கள் சூழ்ச்சியினால் ராஜ்யத்தை இழந்தது பற்றியும் கூறினார். உடனே அவன் தன் நாட்டின் மீது தனக்கு உள்ள உரிமையைப் பெற போருக்குப் புறப்படத் தயாரானான். முனிவரும், பெற்றோரும் அவனுக்கு ஆசி வழங்கி அனுப்பினர். அவன்தான் தங்கள் இளவரசன் என்பதைத் தெரிந்துகொண்ட நாட்டு மக்கள் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அம்பிகையின் அருளால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றான். வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க ஆசிரமத்துக்கு விரைந்தான்.

அவனுடைய வெற்றிச் செய்தியைக் கேட்ட ஆங்கீரஸ முனிவர், அவனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டார். அவனையும் அவனுடைய பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்று ஒரு நல்ல நாளில் அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பெற்றோரையும் தன் நாட்டு மக்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான்.

முனிவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படியே நவராத்திரி விரதம் இருந்ததால், அவளுக்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, இழந்த ராஜ்ஜியம் அனைத்தும் கிட்டியது. இவ்வாறே நாமும் நவராத்திரி விரதம் மேற்கொண்டு அம்பிகையின் அருளைப் பெற்று நம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று மகிழ்வோம்!

அடுத்து எட்டாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகையைப் பற்றி நாளை பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு