Published:Updated:

துங்கா நதி தீரத்தில் - 23

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

துங்கா நதி தீரத்தில் - 23

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

Published:Updated:

ஸ்ரீஆதிசங்கரரின் அவதார ஸ்தலமான காலடி க்ஷேத்திரத்தில் ஆதிசங்கரருக்கும் ஸ்ரீசாரதாம்பிகைக்கும் ஆலயம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்து வைத்த நிறைவுடனும், தமக்கு முன்னதாக ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த ஆசார்ய ஸ்வாமிகளைப் பற்றிய நினைவுகளுடனும் சிருங்கேரிக்குத் திரும்பினார் ஸ்ரீசச்சிதானந்த சிவ அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள். 

ஸ்ரீசாரதாம்பிகையின் அருளாலும், ஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தாலும் சாத்தியமான காலடி க்ஷேத்திர வைபவத்துக்குப் பிறகும் ஸ்வாமிகளின் மனம் சாந்தம் அடையாமல் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. 'தாம் என்னதான் சாஸ்திரங்கள் தழைக்கவும், தர்மங்கள் செழிக்கவும் அநேக கார்யங்களைச் செய்திருந்தபோதிலும், மக்களிடையே இறை பக்தியும், ஆசார அனுஷ்டானங்களும் குறைந்துகொண்டே வருகிறதே’ என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டு, சாரதாம்பிகைதான் இதற்கு நல்லதொரு வழி ஏற்படுத்தவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளவும் செய்தார்.

சந்தோஷம் குறைந்து, மனதில் சஞ்சலம் குடிபுகுந்த நிலையில், வேதாந்த சாஸ்திர பாடம் சொல்லுவதில்கூட ஸ்வாமிகளின் மனம் ஈடுபடவில்லை. விரைவிலேயே இந்தப் பிரபஞ்சத்தை விட்டுவிடவேண்டும் என்று நினைத்து, அதற்காக அம்பாளிடம் உத்தரவும் கேட்டார். தம்முடைய குருநாதரின் அதிஷ்டானத்தில், 'நான் சதாசிவ பிரம்மேந்திரர் மாதிரி ஆவேன் என்று சொன்னீர்களே? நான் இன்னமும் அந்த நிலையை அடையவில்லையே?’ என்று கேட்டார். எல்லா பந்தங்களையும் துறந்து விட்டு, ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் போல் சஞ்சாரம் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டார். அனைத்து பந்தங்களையும் துறந்துதானே சந்நியாசம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்? அப்படியிருக்க, இன்னும் என்ன பந்தத்தை அவர் துறக்கவேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துங்கா நதி தீரத்தில் - 23

நம் நலனுக்காக ஸ்ரீசாரதாம்பிகையை அனுதினமும் பிரார்த்திக்கும் ஸ்ரீசாரதா பீடாதிபதி என்ற ஒரு பந்தம் அவருக்கு இருக்கிறதல்லவா... அந்த பந்தத்தையும் அவர் துறந்துவிடத் திருவுள்ளம் கொண்டார். மேலும், அவருடைய ஆரோக்கியமும் குன்ற ஆரம்பித்துவிட்டது. உடல் நலிவுற்று இருந்த அந்த நிலையிலும்கூட, ஸ்வாமிகள் தம்முடைய நித்திய அனுஷ்டானங்களில் இருந்து ஒரு சிறிதும் தவறவேயில்லை. அதன் காரணமாக, உடல் மேலும் மேலும் நலிவுற்றது.

சரீர உபாதையினால் மிகவும் சிரமப்படும் நிலையில், பத்மாசனத்தில் அமர்ந்து, நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவார் ஸ்வாமிகள். பிராரப்த கர்மம் என்பது சரீரத்தைதானே பாதிக்கும்? சரீர நினைவே அற்றுப்போய்விடும் நிஷ்டை நிலையில் பாதிப்பு எப்படித் தெரியும்?

விரைவிலேயே தமக்கு அடுத்தபடியாக ஒருவரை ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதி பதியாக நியமித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஸ்வாமிகள் வந்துவிட்டார்.

சில வருஷங்களுக்கு முன்பே, தமக்கு அடுத்தபடியாக ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதி பொறுப்பை சிருங்கேரி கோபால சாஸ்திரிகளின் பிள்ளையான நரஸிம்ம சாஸ்திரிகள்தான் ஏற்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டிருந்த ஸ்வாமிகள், தம்முடைய எண்ணத்தை மைசூர் சமஸ்தான மன்னருக்குத் தெரிவித்து வரும்படியாக குனிகல் ராமசாஸ்திரிகளை பெங்களூருக்கு அனுப்பிவைத்தார்.

சில தினங்கள் சென்றன. 20.3.1912 அன்று வழக்கம்போலவே ஸ்வாமிகள் கிரமப்படி ஸ்நானம் முதலியவற்றை முடித்துவிட்டு, பூஜைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்வாமிகளுக்குச் சரீர உபாதை அதிகமாக இருந்தது. அதனால் பத்மாசனமிட்டு அமர்ந்து, சமாதி நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். காலை 7 மணிக்கு அப்படி நிஷ்டையில் அமர்ந்தவர் 9 மணிக்குப் பிறகே நிஷ்டை கலைந்து எழுந்தார். அதற்காகவே காத்திருந்ததுபோல், ஸ்வாமிகளை இருமல் தொந்தரவு செய்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியாகி, மறுபடியும் ஸ்வாமிகள் பத்மாசனமிட்டு நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். சுமார் அரைமணி நேரம் அசையாமல் அப்படியே இருந்தவர், தாம் உள்ளுக்குள் அனுபவித்துக்கொண்டு இருந்த பரமானந்தத்தை, மந்தகாசமாகத் தம்முடைய திருமுகத்தில் வெளிப்படுத்தியபடியே, எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்துடன் ஒன்றி விட்டார். ஸ்வாமிகளின் சரீரம் தானாகவே தரையில் சாய்வதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தாங்கிக்கொண்டு, ஸ்வாமிகளின் திருமேனியை பூமியில் படுக்கவைத்தார்கள். அரை மணி நேரம் சென்றதும்தான், ஸ்வாமிகள் விதேஹ முக்தி அடைந்துவிட்டார்கள் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரியவந்தது.

துங்கா நதி தீரத்தில் - 23

என்ன புரிந்து என்ன பயன்? பிரபஞ்சத்தை விட்டு பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஸ்வாமிகள் திரும்பவா போகிறார்? மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோருமே தவித்துப்போயினர். தங்களுக்கெல்லாம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த ஸ்வாமிகள் இப்போது தங்களிடையே உயிரும் உணர்வுமாக இல்லையே என்ற நினைப்பு அவர்களைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தியது. அந்தப் பிரதேசமே சோகத்தில் மூழ்கிவிட்டாற்போன்று நிச்சலனமாக இருந்தது. மரக்கிளைகளில் இருந்த பறவைகள்கூட ஆரவாரம் ஏதும் இல்லாமல் பெரும் துக்கத்தில் ஆழ்ந்ததுபோல் அமைதியாக இருந்தன. எதிர்பாராமல் ஏற்பட்ட இழப்பு அல்லவா ஸ்வாமிகளின் இழப்பு? துக்கமும் வேதனையும் இருக்கத்தானே செய்யும்?

ஆனாலும், கடமை என்று ஒன்று இருக் கிறதே! அந்தக் கடமையின் காரணமாக ஓரளவுக்குத் தங்களைத் தேற்றிக் கொண்ட ஸ்ரீமடத்து சீடர்களும் பரிவாரங்களும், அன்று பிற்பகலுக்கு மேல் நரஸிம்ம வனத்தில் ஆசிரமத் துக்கு அருகிலேயே ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானம் அமைத்து, அதன் மேலாக, ஸ்வாமிகளின் ஆக்ஞையின் பேரில், அவர் தினமும் இரவு வேளையில் ஆராதித்து வந்த பாண லிங்கத்தை வைத்து பூஜைகள் செய்தார்கள்.

பெங்களூருக்குச் சென்றிருந்த குனிகல் ராமசாஸ்திரிகளும் நரஸிம்ம சாஸ்திரிகளும் சிருங்கேரிக்கு மறுநாள் வந்து சேர்ந்தார்கள்.

ஸ்வாமிகளின் திருவுள்ளப்படியே நரஸிம்ம சாஸ்திரிகளுக்கு 7.4.1912 அன்று, மைசூர் ராஜ பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீ மடத்து அதிகாரிகள் முன்னிலையில் சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதியாக, 'ஸ்ரீ சந்திரசேகர பாரதி’ என்ற திருப்பெயருடன் பீடாரோஹண வைபவம் நடைபெற்றது.

''சிஷ்யனுக்கு என்று சில தகுதிகள் இருப்பது போலவே, குருவுக்கும் சாஸ்திரங்களில் இலக்கணம் சொல்லப்பட்டு இருக்கிறது. 'சுரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்’ என்று முண்டகோபநிஷத் கூறுவதுபோல், ஒரு குருவானவர் பிராமணராகவும், வேத அத்யயனங்களை முறைப் படி கற்றவராகவும், ஆசார அனுஷ்டானங்களை முறைப்படி கடைப்பிடிப்பவராகவும், எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்து

இருப்பவராகவும் இருக்கவேண்டும்' என்று தாம் உபதேசித்தது போலவே, நடைமுறையில் அனுசரித்தும் காட்டிய ஸ்வாமிகளின் பிரார்த்தனை யின்படியே, ஸ்ரீ சாரதா தேவியின் பரிபூரண அருள் கடாக்ஷத்தால், ஸ்வாமிகளுக்கு அடுத்து ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்து வரும் ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள், தமக்கு அடுத்த பீடாதி பதியாக ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகளை ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ சாரதா தேவியின் அருளினாலே, ஜகத்குரு ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சாரதா பீடத்தின் பாரம்பர்யம் மிக்க ஆசார்ய பரம்பரை தொடர் கின்றது; ஆசார்ய ஸ்வாமிகளின் அருளாசி களுடன் ஸ்ரீ சாரதாம்பிகையின் அனுக்கிரஹமும் தொடர்கின்றது.  

  நிறைவுற்றது

தொகுப்பு: க.புவனேஸ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism