கான்களின் வார்த்தைகளும் சரி, மந்திரங்களின் சக்தியும் சரி... ஒருக்காலும் பொய்ப்பதில்லை. சத்தியவானின் உயிருக்கு  ஆபத்து என்று தெரிந்ததுமே, நாரத முனிவரின் யோசனையின்படி சாவித்திரி எப்போது மங்களகெளரி விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கினாளோ, அந்தக் கணமே சத்தியவானின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது. அதேபோல், பாபா எப்போது மலன்பாயின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லி அபயம் அளித்துவிட்டாரோ, அந்த விநாடியே அவள் காப்பாற்றப்பட்டுவிட்டாள். பின்பு எதற்காக, சத்தியவானின் உயிரை யமன் கவர்ந்து சென்றதும், சாவித்திரி யமனிடம் வாதாடி, தன் கணவனின் உயிரைத் திரும்பப் பெற்றதும் நடந்திருக்கவேண்டும்? அதேபோன்று, மலன்பாய் காப்பாற்றப்படுவாள் என்று பாபா அபயம் தந்த பிறகும் அவள் இறந்து, பின்னர் பாபாவினால் காப்பாற்றப்பட்டதாக அவள் சொல்ல நேரிட்டதும் எதனால்? 

ஸ்ரீசாயி பிரசாதம் - 9

சாவித்திரியின் விஷயத்திலும் சரி, மலன்பாயின் விஷயத்திலும் சரி... இரண்டு அடிப்படையான உண்மைகள் பொதிந்து இருக்கின்றன. அவைதான், பாபா நமக்கெல்லாம் தாரக மந்திரமாக உபதேசித்துச் சென்றிருக்கும் 'நிஷ்டா’, 'ஸபூரி’  ஆகியவை. அதாவது, நம்பிக்கை மற்றும் பொறுமை என்னும் இரண்டு உண்மைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பிக்கை, பொறுமை இரண்டும் உறுதியாக இருக்கவேண்டும். எத்தகைய சோதனைகள் வந்தாலும், கொஞ்சமும் உறுதி குறையாமல் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட உறுதி சாவித்திரிக்கும், மலன்பாய்க்கும் இருக்கவே செய்தது. அந்த உறுதியைச் சோதிப்பதுபோல் அமைந்தவைதான் சத்தியவானும் மலன்பாயும் இறந்துபோனதாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள்.

தான் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்று பாபா அருளிய வார்த்தைகளில் மலன்பாய் பூரண நம்பிக்கை கொண்டுவிட்டாள். ஆனால், அவளுடைய உறவினர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம், அந்த அளவுக்கு மலன்பாய் மிக உயிராபத்தான நிலையில் இருந்தாள். ஆனால், அந்த நிலையிலும் அவள் பாபாவின் வார்த்தைகளில் அசாத்தியமான நம்பிக்கை கொண்டு இருந்தாள். அவளுடைய நம்பிக்கையின் உறுதியைச் சோதிக்கவும், அவளுடைய உறவினர் களுக்கு தன்னிடத்தே நம்பிக்கை ஏற்படச் செய்யவும்தான், மலன்பாய் இறந்து, பின்பு அவளை மீண்டும் உயிர் பெறச் செய்து, அதை மலன்பாயின் வாய்மொழியாகவே வெளிப்படச் செய்யும்படியான லீலைகளை நிகழ்த்தினார் பாபா.

ஒப்பற்ற மகானாக விளங்கி, தம்மைச் சரண் அடைந்த பக்தர்களின் வாழ்க்கையில் சந்தோஷமும் சாந்தியும் நிலவச் செய்த பாபாவின் பிறப்பு பற்றி ஒருவருக்கும் தெளிவாகத் தெரியாது.

1950களின் தொடக்கத்தில்,ஸ்ரீநரஸிம்ம ஸ்வாமிஜி அவர்கள் சாயிநாதரின் அஷ்டோத்திர சத நாமாவளியை சம்ஸ்கிருதத்தில் அருளியதுபோலவே,

1990களின் தொடக்கத்தில், தம்முடைய நாமாவளிகள் தமிழிலும் இருக்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட சாயிநாதர், குமார் பாபா அவர்களின் மூலமாக 'அன்ன பாபா 108 போற்றி’ என்று ஓர் அஷ்டோத்திர சத நாமாவளியை நமக்கு அருளியிருக்கிறார். அந்த நாமாவளிகளில் ஒன்று, 'ஓம் வெங்கூசாவின் சீடரே போற்றி ஓம்’ என்பதாகும். இந்த நாமாவளியின் பின்னணியில், பாபாவின் பிறப்பு பற்றிய ஒரு செய்தி நமக்குத் தெரிய வருகிறது.

முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமிய

ஸ்ரீசாயி பிரசாதம் - 9

குடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க

இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்கு மாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான்

நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.

குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத் தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.

சில வருடங்கள் கடந்தன. பக்கீரின் உடல்நலம் குன்றியது. தாம் இனி நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பக்கீர், அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை யாரிடம்

ஒப்படைப்பது என்று யோசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவரான ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்பவர்தான் சட்டென அவர் நினைவுக்கு வந்தார். உடனே பக்கீர் தன் மனைவியை அழைத்து, 'இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தம் தரத்தான் செய்யும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். இனி, நான் சில நாள்களே உயிருடன் இருக்க முடியும். நான் மறைந்ததும், நீ நம் மகனைஅழைத்துக்கொண்டு, சேலு என்ற இடத்தில் வசித்து வரும் கோபால்ராவ் தேஷ்முக் என்னும் வெங்கூசாவிடம் சென்று, அடைக்கலம் கேள். பிராமண குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும், தர்மசிந்தனை கொண்டவராகவும்  விளங்கும் அவர் உங்களுக்கு அடைக்கலம் தருவார்'' என்றார். அது போலவே, அடுத்த சில நாள்களில் அவர் மறைந்ததும், அவருடைய மனைவி, வெங்கூசாவிடம் சென்று

அடைக்கலம் கேட்டாள். பெரும் ஞானியான அவருக்கு அந்தச் சிறுவன் உண்மையில் யார் என்பது விளங்கிவிட்டது. அவர் அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பக்கீரின் மனைவிக்கும் தனியாக ஓர் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, அவளுடைய வாழ்க்கைக்கும் வழி செய்துகொடுத்தார்.

இப்படியாக, பிராமண குடும்பத்தில் பிறந்து, சில வருடங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மறுபடியும் பிராமணரான வெங்கூசாவிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறுவன்தான், 16 வயது பாலகனாக ஷீர்டி கிராமத்தின் எல்லையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தவராக கிராம மக்களுக்குக் காட்சி தந்த ஸ்ரீசாயிநாதர்.

வெங்கூசாவினால் அடைக்கலம் கொடுக்கப் பட்ட அந்தச் சிறுவன், ஏன் அவரைப் பிரிந்து ஷீர்டிக்கு வரவேண்டும்? அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?

பிரசாதம் பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism