Published:Updated:

மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துக்கு ஆதார சக்திகள் யார் யார்?

மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துக்கு ஆதார சக்திகள் யார் யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ம்பிகைக்கு உகந்த நவராத்திரியில் ஆதார சக்திகள் மகிமைகளை அறிந்துகொள்வோம். காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று கொண்டாடப்படுகிறார்கள். பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே சாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள். மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்களின்போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று 'முண்டமாலா தந்திரம்' என்ற நூல் கூறுகிறது.

காளி: காலத்தை நிர்ணயிப்பவள் என்பதாலும், கருப்பு நிறத்தைக் கொண்டவள் என்பதாலும் 'காளி" என்று அழைப்படுகிறாள். கத்தி , சூலம், கபால மாலை தாங்கி மயானத்தில் வசிக்கும் இந்த தேவி அச்சமூட்டும் வடிவம் கொண்டவள். துர்சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவள்.தட்சிண காளி என்ற வடிவில் உக்கிரம் குறைந்தவளாக சிறுவாச்சூர் மதுரகாளி, திருவக்கரை வக்கிர காளியம்மன் என தமிழகத்தில் பல இடங்களில் காளியம்மன் ஆலயங்கள் உள்ளன.

தாரா: ஆலகாலம் உண்ட சிவனைத் தாங்கிய தேவி இவள். உலக இச்சையை கத்தரிக்கும் இந்த தேவியின் உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும் வல்லமை கொண்டது. தாரா தேவி தாய்மையின் வடிவமாக போற்றப்படுகிறாள். தாராவின் சாந்த வடிவமான துர்கை பேரூர் பட்டீஸ்வரம், விஜயவாடா கனகதுர்க்கை, மைசூர் சாமுண்டீஸ்வரி என பல ஆலயங்களில் காட்சி தருகிறாள்.

ஸ்ரீவித்யா: ஸ்ரீவித்யா என்ற இந்த மூன்றாவது சக்தி ஷோடசி, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை என்றெல்லாம் போற்றப்படுகிறாள். சக்திகளில் பேரழகு கொண்ட இவள் மோட்சம் அளிப்பவள். மாயைகளைக் கட்டவிழ்க்கும் மகாசக்தி. அறியாமை விலக்கி அருள் செய்யும் தேவி இவள். திருமீயச்சூர் லலிதாம்பிகை, திருவான்மியூர் திரிபுர சுந்தரி என பல ஆலயங்களில் ஸ்ரீவித்யா அம்பிகையாக அருள் செய்கிறாள்.

புவனேஸ்வரி: அகிலத்தை தாங்கும் ஆதிசக்தி இவள். உலகின் உருவாக்கத்துக்கு காரணமான மகா சக்தியாக விளங்குகிறாள். தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் புவனேஸ்வரி விளங்குகிறாள். கேட்கும் வரங்களை அளிக்கும் தீனதயாபரி என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. புதுக்கோட்டை புவனேஸ்வரி, யாழ்ப்பாணம் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி என பல இடங்களில் பல ரூபங்களில் கொலுவிருக்கிறாள்.

பைரவி: பைரவ மூர்த்திக்கு இணையாக வடிவம் கொண்ட சக்தி இவள். தீய அரக்கர்களையும், கொடிய சக்திகளையும் சம்ஹாரம் செய்யவென்றே தோன்றிய இவள் சித்த பைரவி, சைதன்ய பைரவி, ருத்ர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சண்ட பைரவி, வீர பைரவி என பதினாறு வடிவங்கள் கொண்டவள். இவளை வழிபட மரண பயம் நீங்கும் என்பர். பூரியில் உள்ள விமலா மந்திர், சேலம் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள லிங்க பைரவி சந்நிதி, அம்பிகை சிவானந்தவல்லி பைரவி அம்சமாக விளங்கும் திருக்கோவலூர் வீரட்டநாதர் கோயில் பிரசித்தி பெற்ற பைரவி ஆலயங்களாகும். 

ஸ்ரீ சின்னமஸ்தா: தன் சிரத்தினை தானே அறுத்து கையிலேந்தி, மறு கரத்தில் வாள் ஏந்திக் காட்சி தரும் பயங்கர கோலமுடையவள். பிரசண்ட சண்டிகா என்ற பெயரில் அகோரிகள் வழிபடும் தேவி இவள். தீயசக்திகளை வசப்படுத்த இவளை சாக்த வழிபாட்டில் வழிபட்டனர்.இவளுக் கென்று தனி ஆலயம் இல்லை என்றாலும் மாந்திரீகர்களின் வழிபாட்டில் இருக்கிறாள்.

தூமாவதி: அமங்கலமான தேவியாக இவள் வர்ணிக்கப்படுகிறாள். அரிய வித்தைகளின் குருவாகவும், வரங்களைத் தருபவளாகவும், தூமாவதியை கூறினாலும் வறுமை, நம்பிக்கை யின்மை ஆகியவற்றின் குறியீடாக இந்த தேவி இருக்கிறாள். ஜேஷ்டா தேவி என்றும் வழங்கப்படும் இந்த தேவிக்கு வாராணாசி, கௌஹாத்தி காமாக்யா ஆலயம், அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஒரு சிலை என்று பல இடங்களில் இருந்தாலும் வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. 

ஸ்ரீ பகளா முகி: "பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி" என்ற பெயரில் வணங்கப்படும் இவள், மஞ்சள் ஆடை உடுத்தி, இளம்பிறை சூடி காணப்படுகிறாள். மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவள் இவள் என்பதால் சித்தர்கள் பலர் இவளை வணங்கி பேறு பெற்றுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம் தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ராஜகாளி கோயிலின் எதிரே பகளாமுகி கோயில் அமைந்துள்ளது.


 

ஸ்ரீ ராஜமாதங்கி: மதங்க முனிவரின் மகளாக அன்னை பார்வதி தோன்றியதால் மாதங்கி என்று பெயர் பெற்றாள். சியாமளா தேவி என்றும் இவளை வணங்குகிறார்கள். நீலம் கலந்த பச்சை நிறத்தில் காட்சி தரும் தேவி சகல செல்வங்களையும் அருளக் கூடியவள். மதுரை மீனாட்சியே மாதங்கியின் அம்சமாக போற்றப்படுகிறாள். விரிஞ்சிபுரம் தலத்தில் உள்ள மரகதவல்லி தாயார் ஸ்ரீ ராஜமாதங்கி எனும் சியாமளா தேவி வடிவாக காட்சி தருகிறாள்.

கமலாத்மிகா: மகாலட்சுமியின் வித்யா வடிவமே கமலாத்மிகா என்று வணங்கப்படுகிறது.இவளே திருமாலின் போக சக்தி என்று போற்றப்படுகிறாள். ஆதிசங்கரருக்கு தங்க நெல்லிக்கனிகளை வழங்கியவள் இந்த கமலாத்மிகா என்று கூறப்படுகிறது. திருமகள் குடி கொண்டிருக்கும் எல்லா ஆலயங்களுமே கமலாத்மிகா அன்னையின் அருள் நிறைந்த திருத்தலங்கள்தான். 

இந்த தசமகா தேவியர்கள் ஞானிகள், முனிவர்களால் உக்கிரம் குறைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறார்கள். தசமகா வித்யா தேவியர் அருளால் அஞ்ஞானம் அழித்து ஞானம் பெற பிரார்த்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு