மூன்று வகை சரீரங்கள்!பி.என்.பரசுராமன்
பஞ்ச பூதங்களின் சிருஷ்டியைப் பற்றிச் சொன்ன குருநாதர் ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் என்பவை பற்றிச் சொல்லத் தொடங்குகிறார்.
ஸ்தூலம், சூக்குமம் என்றவுடன், என்னவோ ஏதோ என்று குழம்பவேண்டாம். இதை மிகவும் எளிமையாக விளக்குகிறார் வாரியார் ஸ்வாமிகள்.
''கார் எப்படி ஓடுது? நாலு சக்கரங்கள்ல ஓடுது. சக்கரங்கள்ல என்ன இருக்கு? டயர் இருக்கு. டயருக்குள்ள ட்யூப், ட்யூபுக்குள்ள காத்து. கண்ணுக்குத் தெரியற டயர், ஸ்தூல உடம்பு; டயருக்குள்ள இருக்கிற ட்யூப், சூட்சும உடம்பு; ட்யூபுக்குள்ள இருக்கற காத்து, காரண உடம்பு...'' எனப் பக்குவமாக விளக்குகிறார்.
காற்றின் உதவியால்தான், சக்கரத்துடன் இணைந்த டயர் சுழல்கிறது; கார் நகர்கிறது. ஆனால், காற்றை நம்மால் காண முடியவில்லை. சுழலும் டயரை மட்டும்தான் நம்மால் காண முடிகிறது.
டயர் என்பது ஸ்தூல உடம்பு.
நம் எல்லோருக்குமே அவரவர் உடம்புதான் தெரியும்.
'அதைச் செய்யணும். இதை அனுபவிக்கணும். ஹேப்பியா லைஃபை என்ஜாய் பண்ணணும்’ என்று பல இடங்களிலும் சுற்றிச் சுழன்று ஓடுகிறோம், இந்த டயரைப் போல!
இப்படி வேகமாகச் சுழலும் இந்த வாழ்க்கை முறையில், ஏதோ ஒன்றிரண்டு நமக்குக் கிடைத்துவிடுகிறது.
'ஹா... புடிச்சுட்டேன்! சாதிச்சுட்டேன்! இனிமே எந்தக் கொம்பனாலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது!’ என்று நமது வெற்றியில் நாமே திளைத்து, விரும்பியவற்றைத் திகட்டத் திகட்ட அனுபவித்து முடித்த கையோடு, அழித்தும்விடுகிறோம்.

பிறகு, அது அலுத்துப் போய்விட, அடுத்த தேடலை நோக்கி ஓடுகிறோம், இந்த டயரைப்போல.
அந்த ஓட்டத்துக்கு ஒரு சில விநாடிகளாவது இடைவேளை விட வேண்டாமா? சற்று இளைப்பாறுவோம், வாருங்கள்!
கொஞ்சம் யோசிப்போம்... அப்படி எதைத் தேடி அலைகிறோம்? எதற்காக அலைகிறோம்?
தெரியவில்லை. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துப் பல இடங்களிலும் படர்ந்த நம் பார்வையில், இறுதியில் எங்கு பார்த்தாலும் இருள்தான் தென்படுகிறது.
நம் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படுபவர் களைப் பார்த்தால், எரிச்சலும் கோபமும் உண்டாகி, ஏற்கெனவே நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
திசை தெரியாமல் தடுமாறுகிறோம். நிம்மதியின் சிறு ஒளிக்கீற்றாவது கண்ணில் படுமா எனப் பரிதவிக்கிறோம்.
அவ்வாறு தவிப்பவர்களின் கரங்களில் ஞான ஒளி வீசும் ஒரு பெரும் தீப்பந்தத்தையே கொடுத்தால், இருள் விலகி, முன்னேறுவார்கள் அல்லவா?
ஞான ஒளி வீசும் அந்தத் தீப்பந்தம்தான், 'கைவல்லிய நவநீதம்’.
'பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? பயணம் நடத்திவிடு, மறைந்திடும் பாவம்’ என்று கண்ணதாசன் பாடியதைப் போல, பயணிக்கலாம், வாருங்கள்!
மிகப் பெரிய தீய குணமான பயத்தை விட்டுவிட்டு வாருங்கள்!
நல்லனவற்றைப் பார்க்கவிடாமல், உணரவிடாமல், தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்கவிடாமல், அறியாமை எனும் இருள் நமது கண்களை அனுதினமும் மறைக்கிறது. அதாவது, தெளிவை அருளும் ஞான திருஷ்டியை மறைக்கிறது.
ஊன்நிறை உயிர்கள் உள்ளின்
உணர் விழிக் குருடாம் வண்ணம்
வான் நிலம் திசைகள் மூடும்
மழை நிசி இருள் போல் மூடும் (கை.நவநீதம்42)
இப்பாடலில் வான், நிலம், திசைகள் என மூன்றைச் சொல்லியிருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். மிகவும் அபூர்வமான சொற்பிரயோகம் இது.
அறியாமை நம் கண்களை மறைத்துத் துயரத்தில் ஆழ்த்தும்போது, 'என்னை வாட்டும் துயரத்தில்

இருந்து விடுபட வழி தெரிய வில்லையே!’ என்று ஆகாயத்தைப் பார்போம்.
துயரம் தாங்காமல் தலை குனியும். தரைதான் தெரியுமே தவிர, துயரத்தில் இருந்து விடுபட வழி தெரியாது.
யாராவது உதவ மாட்டார்களா என்று நாலா பக்கங்களிலும் பார்ப்போம்.
இப்படி ஆகாயம், பூமி, திசைகள் என எங்கு பார்த்தாலும், அறியாமைதான் இருள் கூட்டமாகத் தெரிகிறதே தவிர, ஞானத்தின் ஒரு சிறு கீற்று வெளிச்சம்கூடத் தெரியவில்லை.
அப்படி இருக்கும்போது, நம்மை நாம் அறிவது எப்படி?
நம்மையே நமக்குத் தெரியாதபோது, மகிழ்ச்சி, சந்தோஷம்... அனைத்துக்கும் மேலாக ஆனந்தம் என்பனவற்றையெல்லாம் அடைவது எப்படி?
நம்மைப் படைத்தது கடவுள்; அதுவும் எந்த விதமான துயரமும் வில்லங்கமும் இல்லாத பரம்பொருள் எனும்போது...
நமக்கு மட்டும் ஏன் இத்தனை துயரங்கள்? நம்மைச் சுற்றி ஏன் இத்தனை வில்லங்க வலைகள்?
இரும்பில் ஒரு பொருள் செய்தால், அதுவும் இரும்புதான். தங்கத்தில் ஓர் ஆபரணம் செய்தால், அந்த ஆபரணமும் தங்கம்தானே?!
அதுபோல, நம்மைப் படைத்தது கடவுள் என்றால், அந்தக் கடவுளுக்கு உள்ள தன்மைகள் எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டுமல்லவா?
ஆனால், அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே! மனித வாழ்வில் தொடரும் இந்த பேதம் ஏன்..?
தொடரும்